தேவ நற்கருணை வாங்குதலின் பேரில்.

245. தேவநற்கருணை வாங்க கிறிஸ்தவர்களுக்கு கடமை உண்டோ? 

ஆம். புத்திவிபரம் அறிந்த சகல கிறிஸ்துவர்களுக்கும் கடமை உண்டு.


246, பிள்ளைகள் புத்தி விபரம் அடைத்தவுடனே தேவநற்கருணை வாங்க வேண்டியதேன்? 

புத்திவிபரம் அடைந்தவுடனே பிள்ளைகளுடைய ஆத்துமத்திற்கு திவ்விய போசனம் அவசரமாயிருக்கிறதல்லாமல், சிறுவர்களும் திருச்சபையின் கட்டளைகளை அனுசரிக்க வேண்டியதினாலேதான்


247. தங்கள் பிள்ளைகள் புத்தி விபரம் அடைந்தவுடனே நன்மை வாங்கும்படி தாய் தகப்பன்மார்கள் கவனிக்க கடமைப்பட்டிருக் கிறார்களா? 

ஆம். கண்டிப்பான கடமையுள்ளவர்களாயிருக்கிறார்கள்.


248, தேவநற்கருணை வாங்கும் கடமையை எப்போது நிறைவேற்ற வேண்டும்? 

வருடாவருடம் பாஸ்குக் காலத்திலும், மரணத்தருவாயிலும் அதிகமாய் நிறைவேற்ற வேண்டும்.


249. அடிக்கடி தேவநற்கருணை வாங்குவது நலமோ?

ஆம். தங்கள் நன்மையை விரும்பித்தேடுகிறவர்களுக்கு அதிக நலமும் பிரயோசனமுமாயிருக்கும்.


250. தினந்தோறும் முதலாய் கிறிஸ்துவர்கள் யாவரும் நன்மை வாங்கலாமா? 

ஆம். ஆத்துமகுருவின் ஆலோசனைக் கேட்டு, சாவான பாவமில்லாத கிறிஸ்தவர்கள் யாவரும் சுத்த கருத்துடன் தினந்தோறும் நன்மை வாங்கலாம்.


251. சுத்தக் கருத்து ஆவதென்ன?

வாடிக்கை. முகத்தாட்சணியம். முதலிய உலகியல் கருத்துக்களை முற்றிலும் அகற்றி, சர்வேசுரனுக்குப் பிரியப்படுவது, தேவசித்தத்திற்கு அமைவது, ஆத்துமத்துக்குப் பிரயோசனமடைவது இவை முதலியவைகளே சுத்தக் கருத்தாம்.


252. தேவநற்கருணை வாங்குவதற்கு எத்தனைவகை ஆயத்தம் வேண்டியது? 

ஆத்தும ஆயத்தம், சரீர ஆயத்தம் ஆகிய இரண்டு வகை ஆயத்தம் வேண்டியது.


1253. ஆத்தும ஆயத்தம் ஆவதென்ன?

ஆத்துமம் சாவான பாவம் இல்லாமல், பரிசுத்தமாயிருக்கத்தக்கதாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்திருக்க வேண்டியது.


254. அடிக்கடி நன்மை வாங்குகிறவர்கள் நன்மை வாங்கும் போதெல்லாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா? 

சாவான பாவமில்லாதவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சாவான பாவ அந்தஸ்தில் இருக்கிறவர்களோ அவசியமாய் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும்.


255. சரீர ஆயத்தம் ஆவதென்ன?

நன்மை வாங்குவதற்கு முன் மூன்று மணிநேரம் போசனப் பதார்த்தம் போன்ற திடப்பொருள் ஒன்றும் சாப்பிடாமலும், போதையான பானங்கள் பருகாமலும், ஒரு மணிநேரம் போதையில்லாப் பானங்கள் கூட அருந்தாமலும் இருக்க வேண்டியது, கர்த்தர் பிறந்த திருநாள், பெரியசனி இவை போன்ற நாட்களில் இரவில் நன்மை வாங்குவதற்குக் கூட மேற்கூறிய உபவாசம் தேவை, தண்ணீர் எப்போதும் குடிக்கலாம். அதனால் உபவாசம் முறிவதில்லை .


256, தேவநற்கருணையை வாங்கினவுடன் கோயிலை விட்டுபோகலாமா? 

கூடாது. சற்றுநேரமாவது யேசுநாதரை ஆராதித்து அவருக்கு நன்றியறிந்த தோஸ்திரம் செய்யவேண்டும்.


257. ஆசை நன்மை ஆவதென்ன?

தேவநற்கருணை வாங்க முடியாத சமயத்தில் யேசுகிறிஸ்துநாதர் தன்னிடத்தில் எழுந்தருளிவரும் படியாக விரும்பி வேண்டிக் கொள்வது தான்.


258. பிரதான கோயில்களில் தேவ நற்கருணையை வைத்துக்காப்பது ஏன்? 

வியாதிக்காரருக்கு திவ்விய நன்மை கொடுப்பதற்காகவும், கிறிஸ்துவர்கள் தேவநற்கருணையை சந்தித்து யேசுநாதரை ஆராதிக்கும் படியாகவுந்தான்,


259. தேவநற்கருணைக்கு எவ்வித ஆராதனை செலுத்த வேண்டும்? 

தேவனுக்குரிய மேலான ஆராதனை செலுத்தவேண்டும்.