வீண் சாஸ்திரம்

1. வீண் சாஸ்திரம் ஆவதென்ன?

ஒரு காரியத்தை உண்டாக்கும்படி அல்லது பெற்றுக் கொள்ளும்படி, சர்வேசுரனாலாவது, திருச்சபையாலாவது ஏற்படுத்தப்படாத வழிவகைகளை அல்லது சுபாவ சக்தியால் வெற்றிபெற இயலாத வழிமுறைகளைப் பயன்படுத்தச் செய்யும் குருட்டு பக்தியே வீண் சாஸ்திரமாகும்.


2. வீண் சாஸ்திரம் பார்க்கிறவன் நம்புவதென்ன? 

ஒரு காரியம் தன் சுபாவ சக்தியினாலாவது, சர்வேசுரன் அல்லது திருச்சபை அளித்திருக்கும் ஞான சக்தியினாலாவது, உண்டாக்கக் கூடாத பலனை அது உண்டாக்குமென்று நம்புவான்.


3.  ஞானஸ்நானத்தால் ஆத்துமம் சுத்திகரிக்கப்படும் என்று விசுவசிப்பது வீண் சாஸ்திரமா?

ஆத்துமத்தைச் சுத்தப்படுத்துவதற்கான விசேஷ சக்தியை ஞானஸ்நானத்துக்குச் சர்வேசுரன் அளித்திருக்கிறபடியால், அது ஆத்துமத்துக்கு தேவ இஷ்டப்பிரசாதத்தைக் கொடுத்து அதைச் சுத்தப்படுத்தும் என்று விசுவசிப்பது வீண் சாஸ்திரமல்ல.


4. தீர்த்தம், உத்தரியம், சுரூபங்கள் முதலியவைகளை உபயோகிப்பது வீண் சாஸ்திரமா?

திருச்சபை அங்கீகரிக்கிற தீர்த்தம், உத்தரியம், சுரூபங்கள் முதலியவைகளுக்கு விசேஷ பலனுண்டென்று நம்புவது வீண் சாஸ்திரமல்ல.  ஏனென்றால், திருச்சபை இந்தப் பொருட்களுக்கு இவ்வித பலனை அளிக்கிறது.


5. இன்னின்ன செபத்தை, இந்நாளிலே, இந்நேரத்திலே, இத்தனை விசை சொல்வதினால் ஒரு விசேஷ நன்மை தப்பாமல் பெற்றுக் கொள்ளப்படும் என்று நம்பலாமா?

அப்படிப்பட்ட ஞானப் பலன் அச்செபத்துக்குத் திருச்சபையினால் (அதாவது, பாப்பரசரால், அல்லது ஒரு மேற்றிராணியாரால், அல்லது தமது மேற்றிராணியாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குருவால்) அளிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், அப்படி நம்புவது வீண் சாஸ்திரமாகும்.  


6. அர்த்தமில்லாத வார்த்தைகளைப் பிள்ளைகளின் கழுத்திலாவது கருப்பு நூல் கயிற்றைக் கணுக்கையிலாவது கட்டலாமா?

கட்டக் கூடாது.  அது வீண் சாஸ்திரமாகும்.  ஏனென்றால் இப்படிப்பட்ட காரியங்கள் தங்கள் சுபாவ சக்தியினால் யாதொரு நன்மையையும் உண்டாக்க முடியாது.


7. வீண் சாஸ்திரங்களில் முக்கியமானவை எவை?

(1)  சில அடையாளங்களாலாவது அபிஷேகம் பண்ணப் பட்ட ஞானக் காரியங்களினாலாவது, (மேற்றிராணிமாரின் அனுமதி பெறாதவர்கள்) குணப்படுத்த முயற்சி செய்தல்.

(2)  தற்செயலாய் உண்டான சங்கதியைப் பார்த்து அதிர்ஷ்டம் துர் அதிர்ஷ்டம் அறிய முயலுதல்.


8.  கிறீஸ்தவர்கள் சில சமயங்களில் எப்படி வீண் சாஸ்திரம் பார்க் கிறார்கள்?

(1)  அர்த்தமில்லாத வார்த்தைகளைத் தாயத்தாக கழுத்திலாவது கணுக்கையிலாவது கட்டுவது, அல்லது உடம்பில் தரித்துக் கொள்வது; 

(2)  இரும்பு வளையங்களைக் காலில் போட்டுக் கொள்வது;

(3)  சில கிழமைகள், உதாரணமாக: வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்ட நாள் என்று நம்பி, அன்று பிரயாணம் செய்யாமலும், புதிய வேலை ஆரம்பிக்காமலும், கடன் கொடுக்காமலும், அல்லது கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்காமலும் போவது;

(4)  பல்லி கத்துவதை நம்புவது;

(5)  பிரயாணம் செய்யும்போது யாதொரு மிருகம் அல்லது பறவை குறுக்கே போனால் அதிர்ஷ்டம் துர் அதிர்ஷ்டம் என்று சொல்வது;

(6)  தேள், விஷப்பூச்சி கடித்தால் விசுவாசப் பிரமாணத்தைத் தலைகீழாகச் சொல்வது, அல்லது பாதியைச் சொல்லி, பாதியைச் சொல்லாமல் விட்டுவிடுவது;

(7)  இத்தனை தடவை சிலுவை வரைந்தால், இத்தனை தடவை ஓர் விசேஷ மந்திரம் சொன்னால் அல்லது விசுவாசப் பிரமாணத்தில் “பாதாளங்களிலே இறங்கி” என்கிற  வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தினால் நிச்சயமாய்ச் செளக்கியம் வரும், அநுகூலம் கிடைக்கும் என்று எண்ணுவது, சங்கிலி செபங்களை நம்புவது;

(8)  ஒவ்வொருவனுடைய விதி அவனவனுடைய தலையில் எழுதியிருக்குமென்றும், அதற்கு யாரும் தப்பித்துக் கொள்ள முடியாதென்றும் நம்புவது;

(9)  கண்திருஷ்டிக்குப் பயந்து மிளகாயைச் சுற்றி எறிவது, ஆரத்தி எடுப்பது, பெரிய பொம்மையையாவது அல்லது சுண்ணாம்பு அடித்து, கரிப்பொட்டு இட்ட சட்டி பானையையாவது தோட்டங்களிலும் வயலிலும் வைப்பது, இவை முதலானவைகளைச் செய்வதினால், அநேக கிறீஸ்தவர்கள் வீண் சாஸ்திரம் அனுசரித்து வருகிறார்கள்.


9. வீண் சாஸ்திரம் அனுசரிப்பது எப்பேர்ப்பட்ட பாவம்?

(1)  கண் திருஷ்டி கழிக்கும்படி ஆரத்தி எடுத்தல் சாவான பாவமாகும். ஏனெனில், அது பசாசுக்குப் பலி ஒப்புக்கொடுக்கிறதற்கு ஒப்பாயிருக்கின்றது.

(2)  அஞ்ஞான வேத வசனம் அடங்கிய தாயத்து தரித்துக் கொள்வது கனமான பாவம்தான்.

(3)  மற்ற அனுஷ்டானங்களோவென்றால் பெரும்பாலும் சாவான பாவமாகாது.


10. கிறீஸ்தவர்கள் வீண் சாஸ்திரங்களினின்று காப்பாற்ற திருச்சபை எவ்விதம் ஏவுகிறது?

சேசுநாதர் தந்த வல்லமையால், தான் ஏற்படுத்தியிருக்கும் அநேக அருட்கருவிகளை உபயோகித்து வரும்படியாக ஏவுகிறது.  உதாரணமாக: தீர்த்தம், விசேஷித்த செபங்கள், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள், ஆசீர்வாதங்கள் முதலியன.


சரித்திரம்

அதிக வயதான ஒரு கிழவி கடின வியாதியாய் விழுந்தாள். அவளுடைய மகள் வியாதிக்காரியை அண்டி, “அம்மா, நீங்கள் வியாதியாயிருக்கிறீர்களே! சுவாமியாரை அழைத்து வரட்டுமா?” என்றாள்.  அதற்குக் கிழவி, “வேண்டாம், வேண்டாம்.  நான் இதற்குள் சாகமாட்டேன்; சும்மா இரு” என்றாள். தன் தாய்க்கு வியாதி அதிகரிப்பதைக் கண்ட மகள் விசனப்பட்டு, அயல் வீட்டுக்காரியிடம் தன் தாயிடம் போய்க் குருவானவரை வரவழைத்து, கடைசித் தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்றுக் கொள்வது நலமாயிருக்குமென்று அவளுக்குச் சொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.  அப்படியே அந்தப் பெண் கிழவி கிட்டப் போய் “பாட்டி, குருவானவரை வரவழைக்கலாமா?” என்றதைக் கேட்ட கிழவி, “சாகப் போகிறவர்களுக்குத்தானே அவஸ்தை தேவை?  நான் இன்னும் 12 வருஷம் பிழைத்திருப்பேன்.  நேற்றுத்தானே ஒரு குயில் அடுத்த மரத்தில் உட்கார்ந்து 12 தடவை கூ, கூ என்று கூவிற்று; யாராவது வியாதியாயிருக்கும்போது குயில் எத்தனை விசை கூவுமோ அத்தனை வருஷம் உயிரோடு இருப்பார்கள் என்பது உனக்குத் தெரியாதா?” என்றாள்.  அப்படி இருந்தும் கிழவியின் மகள் குருவானவரை வரவழைத்தாள். சுவாமியார் வாசற்படியில் கால் வைக்கவே கிழவி பேச்சு வார்த்தையற்றுக் கொஞ்ச நேரத்துக்குப் பின் உயிர் விட்டாள் (னி.மூ.னி. V. ஹிலி. 293).