1. சேசுநாதர் எந்த வயதிலே தம்மை வெளிப்படுத்தத் தொடங்கினார்?
தமது முப்பதாவது வயதில்தான்.
2. எவ்விதமாய்த் தம்மை வெளிப்படுத்தினார்?
யோர்தான் நதியில் அர்ச். ஸ்நாபக அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெறும்போது.
3. அர்ச். ஸ்நாபக அருளப்பர் யார்?
தேவமாதாவின் உறவினளான அர்ச். எலிசபெத்தம்மா ளுடைய குமாரன். அவர் சேசுகிறீஸ்துநாதருடைய வருகையைப் பற்றியும், அவருடைய வேலையைப் பற்றியும் போதிக்கும்படியாக சர்வேசுரனால் அனுப்பப்பட்ட கிறீஸ்துநாதருடைய முன்னோடி.
4. அர்ச். ஸ்நாபக அருளப்பர் கொடுத்த ஞானஸ்நானம் எப்படிப் பட்டது?
அது ஒரு சடங்காயும், கர்த்தர் ஸ்தாபித்த ஞான ஸ்நானத்தின் அடையாளமாயுமிருந்ததேயயாழிய, நாம் பெறும் ஞானஸ்நானம் நமக்குத் தேவ இஷ்டப்பிரசாதத்தைக் கொடுப்பது போல் அது கொடுக்கவில்லை. அதற்குத் தவ ஞானஸ்நானம் என்று பெயர்.
5. ஞானஸ்நானம் பெற்றபின் சேசுநாதர் எங்கே போனார்?
வனாந்தரத்துக்குப் போய் அங்கே நாற்பது நாள் இடைவிடாமல் ஜெபம் செய்து உபவாசமாயிருந்து, கடின தபசு செய்தார்.
6. ஏன் நாற்பது நாள் உபவாசமாயிருந்து தபசு செய்தார்?
(1) தபசு நமக்கு எவ்வளவு அவசியம் என்று காட்டும் படியாகவும்,
(2) நாம் யாதொரு பெரும் வேலையைத் தொடங்கு கிறதற்கு முன்னும், நமது சீவியத்தின் அந்தஸ்தைத் தெரிந்து கொள் வதற்குமுன்னும் செபத்தாலும், ஒரு சந்தியாலும் நாமும் தேவ உதவியைத் தேடவேணுமென்று நமக்குப் படிப்பிக்கும் படியாகவும் தான்.
7. நாற்பதாம் நாள் சேசுநாதருக்குச் சம்பவித்ததென்ன?
பசாசு அவரைச் சோதிக்க வந்தது.
8. பசாசினால் சோதிக்கப்பட ஏன் சித்தமானார்?
(1) மனிதர் எவ்வளவு நல்லவர்களாகவும், புண்ணிய வாளராகவும் இருந்தபோதிலும், பசாசு சகலரையும் பற்பல விதமாய்ச் சோதிக்கிறதென்றும்,
(2) சோதனை நம்முடைய மனதிற்கு விரோதமாய் வரும் பட்சத்தில் அதில் பாவம் ஒன்றுமில்லையயன்றும்,
(3) அப்படிப் பசாசு நம்மைச் சோதிக்கும்போது, அச்சோதனைக்கு உட்படாமல், அதைத் தள்ளிப் போட்டுச் ஜெயிக்கத் தக்கதாய் நாம் செய்ய வேண்டிய உபாயங்கள் எவையென்றும்,
(4) கிறீஸ்தவர்கள் பசாசுக்கு இடங்கொடுத்தாலன்றி அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய அதனால் முடியாதென்றும்,
(5) அவர் பசாசை ஜெயித்ததுபோல் நாமும் சர்வேசுர னுடைய உதவியால் அதை ஜெயிக்கலாமென்றும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறதற்காகவும்,
(6) நாம் படும் துன்பங்களில் அதிக வருத்தமானதா யிருப்பதைத் தமது அநுபவத்தால் அறியும்படியாகவும் சேசுநாதர் பசாசின் சோதனையை அநுபவிக்கச் சித்தமானார் (எபி.4:15).
9. வனாந்தரத்திலிருந்து வந்தபின் சேசுநாதர் என்ன செய்தார்?
தம்முடைய முதல் சீடர்களைச் சேர்க்கத் தொடங்கினார் (அரு.1:35-51). சில மாதத்துக்குப் பிறகு மாத்திரம் அவர் களில் பன்னிருவரைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார் (லூக். 6:13).
10. அப்போஸ்தலர் என்பதற்கு அர்த்தம் என்ன?
கிரேக்க மொழியில் தூரத்தில் அனுப்பப்பட்டவர் என்று அர்த்தமாம்.
11. சேசுநாதர் தாம் தெரிந்து கொண்ட 12 சீடர்களுக்கு ஏன் இப்படிப்பட்ட பெயரிட்டார்?
தமக்குப் பதிலாய் உலகம் எத்திசையிலும், வேதத்தைப் பிரசங்கிக்க, அவர்களை அவர் அனுப்பச் சித்தமாயிருந்தபடியால்தான்.
12. அப்போஸ்தலர்களுடைய பெயரென்ன?
1. இராயப்பர் என்று அழைக்கப்பட்ட சீமோன்,
2. அவருடைய சகோதரனாகிய பிலவேந்திரர் (அந்திரேயாஸ்)
3-4. செபதேயுவின் மக்களாகிய இயாகப்பரும், அருளப்பரும்,
5. பிலிப்பு,
6. பர்த்தலோமேயு,
7. தோமையார்,
8. ஆயக்காரரான மத்தேயு,
9. அல்பேயுவின் குமாரனான சின்ன இயாகப்பர்,
10. ததேயு,
11. செலோத்தேஸ் (தீவிரவாதி) எனப்பட்ட சீமோன்,
12. துரோகியான யூதாஸ் இஸ்காரியோத் (லூக். 6:14-16).
13. அவர்கள் நம்மைப் போல் வெறும் மனிதர்களா?
வெறும் மனிதர்கள்தான்.
14. அவர்கள் எப்பேர்ப்பட்ட மனிதர்கள்?
அவர்கள் கல்வி சாஸ்திரிகளும், செல்வந்தர்களும், பிரபுக்களுமாயிராமல் அவர்களில் பெரும்பாலோர் எழுத்து வாசனை தெரியாத ஏழைச் செம்படவர்கள்தான் (அப். நட. 4:13).
15. ஏன் சேசுநாதர் தமது அப்போஸ்தலராக விசேஷமாய்த் தொழிலாளிகளைத் தெரிந்து கொண்டார்?
சர்வேசுரனுடைய அலுவல் சுபாவத்துக்குரிய எதையும் சார்ந்திராதபடியாகத்தான் (1 கொரி. 1:27,28).
16. இந்த 12 அப்போஸ்தலர்களை சேசுநாதர் எதற்காகத் தெரிந்து கொண்டார்?
இவர்கள் தாம் போதிக்கும் போதனையைக் கேட்டு அறிந்து, தமக்குப்பின் உலகத்துக்கு வேதசத்தியத்தைப் போதிக்கும் படியாகவும், தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையை ஆளும் படியாகவும், அவர்களைத் தெரிந்து கொண்டார்.
17. சேசுநாதர் படிப்பித்த போதனைகளையயல்லாம் அப்போஸ்தலர்கள் கேட்டார்களா?
அவர்கள் சேசுநாதரோடு மூன்று வருஷ காலமாய் இரவும் பகலுமாகச் சஞ்சரித்துக் கொண்டு அவர் போதித்த போதனைகளை யெல்லாம் கேட்டார்கள்.
18. சர்வேசுரன் ஆதித்தாய் தகப்பனை உண்டாக்கினபோது, வேதம் சார்ந்த சத்தியங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையா?
அவர்களுக்குப் பற்பல வேதசத்தியங்களைக் கற்றுக் கொடுத்தார்.
19. அவைகள் என்ன?
கர்த்தர் ஒரே ஒருவரென்றும், அவர் ஒன்றுமில்லாமை யிலே நின்று உலகத்தை உண்டுபண்ணினவரென்றும், மரணத் துக்குப் பின் மனிதன் தீர்வையிடப்பட்டுச் சாவான பாவமில்லாமல் இறந்து போகிறவர்களுக்கு நித்திய மோட்சமும், சாவான பாவத் துடன் செத்துப்போகிறவர்களுக்கு நித்திய நரகமும் கிடைக்கு மென்றும் அவர்களுக்கு அறிவித்தார். மேலும் அவர்களுடைய இருதயத்தில் தமது கற்பனைகளை வரைந்து, அவைகளை நிறைவேற் றத்தக்கதாய் வேண்டிக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லி கடைசியாய் உலகத்துக்கு ஒரு இரட்சகர் வருவாரென்றும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
20. சேசுநாதர்சுவாமி ஆதிமனிதர்களுக்குச் சர்வேசுரன் அறிவித்திருந்த சத்தியங்களைத் தள்ளிப்போட்டு, ஒரு புது வேதத்தைப் போதித்தாரா?
அவர் ஒரு புது வேதத்தைப் போதிக்கவில்லை. ஆனால் சர்வேசுரன் ஆதிமனிதனுக்கு அறிவித்திருந்த வேத சத்தியங்களை உறுதிப்படுத்திக் காப்பாற்றி, புது சத்தியங்களைப் போதித்ததால் ஆதியிலிருந்த வேதத்தைத் தெளிவித்துக் காட்டி, மனிதர்கள் மோட்சத்தை அடைவதற்கான வழியைச் செப்பனிட்டார். “வேதப் பிரமாணத்தை... அழிக்கிறதற்கல்ல, நிறைவேற்றுவதற்காகவே வந்தேன்” என்று சேசுநாதர் வலியுறுத்தினார் (மத். 5:17).
21. இது இப்படியிருக்க நம்முடைய வேதம் எப்போது துவக்கி இருக்கிறது?
உலகத்தின் துவக்க முதற்கொண்டு இருக்கிறது.
22. சேசுநாதர் புதிதாய் அறிவித்திருக்கிற முக்கியமான சத்தியங் களுக்குள்ளே சிலவற்றைச் சொல்லு.
(1) சர்வேசுரன் சுபாவ வகையிலே ஒருவராயிருந் தாலும் ஆள்வகையிலே மூவராயிருக்கிறாரென்றும்,
(2) இம்மூன்று பேருக்குள்ளே ஒருவர் மனிதனாகி, நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுபட்டாரென்றும்,
(3) மனுஷாவதாரம் செய்த ஏக திரித்துவத்தின் இரண்டாமாளாகிய சர்வேசுரன் தாம்தான் என்றும்,
(4) சர்வேசுரனை முன்னிட்டுப் பிறரைச் சிநேகித்து, தன் விரோதியையும் கூட நேசிக்க வேண்டுமென்றும் சேசுநாதர் புதிதாய் நமக்கு அறிவித்துப் போதித்தார்.
23. சேசுநாதர் உலகமெங்கும் போய் வேதத்தைப் போதித்தாரா?
இல்லை. அவர் யூதேயா, கலிலேயா தேசங்களில் மாத்திரமே போதித்தாரல்லாமல் வேறே தேசத்தில் போதித்ததில்லை.
24. சேசுநாதர் உலகமெங்கும் போகாமல் ஏன் கலிலேயா, யூதேயா தேசங்களில் மாத்திரம் வேதத்தைப் போதித்தார்?
“இஸ்ராயேல் கோத்திரத்தினின்று சிதறிப்போன ஆடுகளிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயொழிய மற்றப்படியல்ல” என்று வசனித்திருக்கிறார் (மத். 15:24).
25. சேசுநாதர் பெரும்பாலும் எவ்விதமாய்ப் பிரசங்கித்தார்?
அவர் தாம் போதிக்கிற சத்தியத்தை விளக்கிக் காட்டும்படி பெரும்பாலும் உவமைகளைக் கொண்டு பிரசங்கித்தார்.
26. உவமை என்றால் என்ன?
இயல்பினின்று அல்லது மனித சீவியத்தின் சம்பவங்களினின்று எடுக்கப்பட்ட ஒப்புமையாம்.
27. ஏன் சேசுநாதர் உவமைகளைக் கொண்டு பிரசங்கித்தார்?
(1) உவமைகளைக் கொண்டு பேசுகிறது கீழ்த்திசை களில் வழங்கும் வழக்கம்.
(2) தீர்க்கதரிசிகள் வசனித்த தீர்க்கதரிசனங்கள் (சங். 77:2, மத். 12:35) நிறைவேறும்படியாகவும்,
(3) தாம் போதிக்கும் போதனைகளைச் சாஸ்திரி களுக்கும் கல்வி அறிவில்லாதவர்களும் கண்டுபிடிக்கக் கூடியவர் களாயிருக்கும்படியாகவும்,
(4) பாவத்தில் மூர்க்கராயிருந்தவர்கள் தங்கள் பாவத் திற்கு நீதித் தண்டனையாகவும், நல்லவர்கள் தேவ வாக்கியத்தை ஆசை யோடு கேட்டுத் தெளிந்து மனந்திரும்பும்படியாகவும், (மாற். 4:12; மத். 13:15),
(5) மேலும் தமது போதனைகளைப் போதிக்கும் படியாக மாத்திரமல்லாமல், சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பற்றியும், திருச்சபை, அதன் தன்மை, விதி, ஏற்படுத்தல்களைப் பற்றியும், தீர்க்கதரிசனம் செய்யும்படியாகவும் சேசுநாதர் அவ்வித மாய்ப் பேசினார்.
28. அவைகளில் சிலவற்றைச் சொல்லு.
திருச்சபையானது கடுகு விதைக்குச் சமானம் என்றார் (லூக். 13:18). மோட்ச இராச்சியமானது வயலில் அகப்பட்ட பொக்கிஷத்துக்குச் சமானம் என்றார் (மத். 13:44). ஐந்து விவேகமும் ஐந்து அவிவேகமுமுள்ள கன்னியருடைய உவமையை விவரித்தார் (மத். 21:1). ஊதாரிப்பிள்ளை உவமையை அறிவித்தார் (லூக். 15:11). ஆடுகளின் உவமை (அரு. 10:23), திராட்சைத் தோட்டத்தின் உவமை (மத்.20:1, 21:33), விதை விதைப்பவன் உவமை (மத். 13:3), காணாமற்போன ஆட்டின் உவமை (லூக். 15:3), இன்னும் அநேக உவமைகளைச் சொல்லி வேத சத்தியத்தை விளங்கச் செய்தார்.
29. சேசுநாதர் சகல புண்ணியங்களும் செய்து கொண்டு வந்தாரா?
சேசுநாதர் இவ்வுலகத்தில் இருந்தபோது சகல புண்ணியங்களையும் உத்தமமான விதமாய் அநுசரித்து வந்தார்.
(1) சர்வேசுரனை அளவற்ற விதமாய் நேசித்து, அவராலே கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் சம்பூரணமாய் நிறைவேற்றினார் (அரு. 14:31; 19:28).
(2) தம் மகிமையைத் தேடாமல் தமது பிதாவின் மகிமையை மாத்திரம், வைராக்கிய பக்தியோடு தேடிவந்தார் (அரு.2:17, 8:50, லூக். 19:45).
(3) ஓயாமல் வேண்டிக் கொண்டார் (லூக். 6:12).
(4) பாவிகளுக்கும், தரித்திரர்களுக்கும், துன்பப்படுகிற வர்களுக்கும், உருக்கமான நேசப்பற்றுதலும் இரக்கமும் காண்பித்தார் (மாற். 1:41, லூக்.7:12,13, 10:30, 19:9; அரு.4:6,8:5).
(5) சாந்தமும், மனத்தாழ்ச்சியுமுள்ளவராயிருந்தார் (மத். 11:29, அரு.13:5).
(6) மரியம்மாளுக்கும், சூசையப்பருக்கும் (லூக். 2:5) மோயீசனுடையவும் (மத். 5:17), செசாருடையவும் (மத்.22:21), சட்டங்களுக்கும் சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்து நடந்தார் (பிலிப். 2:8).
(7) சகல வேதனைகளையும் பொறுமையோடு அநுபவித்து தமது மரணத்துக்குக் காரணமானவர்களையும் பொறுத்துக் கொண்டு அவர்களுக்காக வேண்டிக் கொண்டார் (மத். 27, லூக். 23:34).
(8) நம்மை மிகுதியாக நேசித்து நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார் (கலாத். 2:20).
30. சேசுநாதர்சுவாமி எவ்விதம் சகல புண்ணியங்களையும் செய்து கொண்டு வந்தார்?
அவர் தம்முடைய சீவியகாலத்தில் சகல மனிதருக்கும் எல்லாப் புண்ணியங்களிலும் திவ்விய மாதிரிகை காண்பித்தார். அவைகளையும் எவ்ளவு பரிபூரணமாய்ச் செய்தாரென்றால், “நான் செய்ததுபோல் நீங்களும் செய்ய உங்களுக்கு முன்மாதிரிகையா யிருந்தேன்” என்று உண்மையில் சொல்லக் கூடியவராயிருந்தார்.
31. சேசுநாதர்சுவாமி புதுமைகளைச் செய்தாரா?
முன்சொன்னபடி மெய்யாகவே சேசுநாதர் தாம் போன இடமெல்லாம் கணக்கில்லாத அரிய பெரிய புதுமைகள் செய்தருளினார்.
32. சுவிசேஷத்தில் சேசுநாதரால் செய்யப்பட்ட புதுமை களில் எத்தனை குறிக்கப்பட்டிருக்கின்றன?
41 புதுமைகள் அல்லது புதுமைகளின் தொகுதிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
61. அவர் செய்த பிரதான அற்புதங்கள் எவை?
குருடருக்குப் பார்வையும், செவிடருக்குச் செவியும், நானாவிதப் பிணியாளிகளுக்கு ஆரோக்கியமும், மரித்தவர்களுக்கு உயிரும் அவர் கொடுத்ததுமல்லாமல், கடைசியிலே தம்மைத் தாமே கல்லறையில் நின்று உயிர்ப்பித்தார்.
1. சேசுநாதர் செய்த முதல் புதுமை என்ன?
கானாவூரில் சேசுநாதர் தம்முடைய தாயாரோடும், சீஷர்களோடும் ஒரு கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது தண்ணீரை இரசமாக மாற்றினார் (அரு.2:1).
2. ஏன் அந்தப் புதுமை செய்தார்?
தாம் புதுமை செய்யும் காலம் இன்னும் வராதிருந்தாலும் (அரு.2:4) சேசுநாதர் தம்மைப் பெற்ற பரிசுத்த தாயார் மன்றாட்டுக்கு இரங்கி, அவர்களுக்குப் பிரியப்படும்படியாக இந்தப் புதுமையைச் செய்தருளினார்.