மூன்றாம் தேவ இலட்சணம்

1. மூன்றாம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் சரீரமில்லாமலிருக்கிறார்.” 


2. சர்வேசுரன் சரீரமில்லாமலிருக்கிறார் என்பதற்கு அர்த்த மென்ன?

நமக்குக் கண்டிப்புள்ள உடம்பு இருப்பதுபோல், சர்வேசுரனுக்கு எவ்வித உடம்பும் இல்லையயன்று அர்த்தமாம்.


3. சரீரம் இல்லாவிட்டால் அவர் எப்படியிருக்கிறார்?

முன் சொன்னபடியே சுத்த அரூபியாயிருக்கிறார்    (ஞா. வினா. 11 காண்க).


4. எப்படி சுத்த அரூபியாயிருக்கிறார்?

அவர் அசரீரிகளுக்கு இருக்க வேண்டிய பகுத்தறிவு, மனச்சுதந்திரம், நேசம் முதலிய சக்திகளைக் கொண்டிருக்கிற படியால் அசரீரியாயிருக்கிறார்.  மேலும் அவர் அளவில்லாதவ ராகையால், அவருக்குச் சரீரம் இருக்கக் கூடாது.


5. சரீரமில்லாதது ஒரு இலட்சணமா?

ஆம்.  ஏனெனில், சரீரத்தில் பல பாகம் இருக்கின்றமை யால் அது பகுக்கப்படவும், குறைக்கப்படவும், அழிக்கப்படவும் உரியதாயிருக்கிறது. அப்படியே மனிதனுடைய கை, கால் அறுக்கப்படவும், வியாதியால் அவனுடைய புத்தி குறைந்து போகவும் கூடும்.  ஆகையினாலே சரீரத்தோடு இருப்பது இலட்சண பங்கம் தான்.  அது ஒரு குறைவுதான்.


6. சர்வேசுரனுடைய சுபாவம் ஒரு சரீரத்தோடும் ஒன்றிக்க முடியுமா?

சர்வேசுரன் முழுதும் கண்டிப்பற்றவரும், சுத்த அரூபியு மாயிருக்கிறதினாலே, அவருடைய தேவ சுபாவம் ஒரு சரீரத்தோடும் ஒன்றிக்க முடியாது.


7. இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் தம்மை மனித சரீரத்தோடு ஒன்றிக்கவில்லையா?

இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் மனித சுபாவத்தைத் தம்மோடு சேர்த்துக் கொண்டபோது, மனித சுபாவமானது தமது தேவ சுபாவத்தோடு ஒன்றுபட்டுக் கலந்துகொள்ளவுமில்லை.  அது அதில் மூழ்கி மறைந்துபோகவுமில்லை.  ஆனால் வெவ்வேறாகத் தனிப்பட்டிருந்தது.  அவர் மெய்யான மனிதனாகவும், மெய்யான தேவனாகவும் இருந்தார்.


8. சர்வேசுரன் சில சமயங்களிலே ஓர் உருவத்தை எடுத்துக் கொண்டு தம்மை மனிதருக்குக் காண்பித்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம்.  அந்தச் சமயங்களிலே சர்வேசுரன் ஒரு சரீரத்தோடு ஒன்றிக்க வில்லையா?

ஒன்றிக்கவில்லை. சர்வேசுரன் இவ்வித உரூபம் கொண்டிருப்பதுபோல் தோன்று தம்மைக் காண்பித்தாரொழிய, அவ்வித உரூபம் அவருடைய சுபாவத்தோடு ஒன்றிக்கப் படவில்லை, சொந்தமாயாக்கப்படவில்லை.


9. இதிப்படியிருக்க, வேதாகமங்களில் சர்வேசுரனுடைய கண், காது, கை முதலிய அவயவங்களைக் குறித்து ஏன் எழுதி யிருக்கின்றது?

மனுஷர் பேசும் வழக்கத்தையொட்டி இவ்விதம் எழுதியிருக்கிதொழிய இதனால் அவருக்குச் சரீரம் உண்டென்று சொல்வதில்லை.  சர்வேசுரன் மெய்யாகவே உலகத்தை நடத்தி வருகிறாரென்றும், அவர் சர்வ ஞானம் சர்வ வல்லபமுள்ளவ ரென்றும் நமக்குக் காட்டும்படி வேதாகமங்களில் அப்படிச் சொல்லியிருக்கிறது.  இப்படியே, கண், காது என்பதால் சகலத்தையும் அறியும் தேவ அறிவையும், கை என்பதால் எல்லாம் செய்யக் கூடிய தேவ வல்லபத்தையும், சர்வேசுரனுடைய பல வேறு சக்திகளையும் குறிக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.  இந்த முகாந்திரங்களைப் பற்றித்தான், பிதாவாகிய சர்வேசுரன் மனிதரைப் போல உடலுள்ளவராகப் படங்களில் சித்தரித்துக் காட்டப்படுகிறார்.