"எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" (யோவான் 6:56).
உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இறை இயேசுவில் பிரியமானவர்களே! நாம் தினமும் ஆலயத்தில் காணும் நற்கருணைநாதர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். நாம் திருப்பலியில் உட்கொள்ளும் நற்கருணையால் என்னற்ற அற்புதங்களும், அதிசயங்களும் நடந்துள்ளதை இனி வரும் நாட்களில் இந்தப் பக்கத்தில் நற்கருணைநாதரின் மூம் நடந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் நீங்கள் காணலாம்.
பிரியமானவர்களே! நற்கருணை வடிவில் தன்னை நமக்காகக் கொடுத்த இறைவன், எனது தசையை உண்டு, என் கருணைக் கடலில் மூழ்கிடு என்று கூறுகிறார். நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசு உயிருள்ளவர். நமது உற்றத் தோழனாக என்றும் எப்போதும் நம்மைச் சந்திக்கிறார். இயேசு கொடுத்த கொடைகளில் தலை சிறந்த கொடை நற்கருணைதான். மாட்சிமை நிறைந்த நிறைவாழ்வின் முன்சுவை இயேசு. நமது நிலைவாழ்வில் நிறைவு தருவது நற்கருணைதான். புனிதர்கள் பெற்ற பேறு, நாம் பெற்றிட, நம்மை வழிநடத்துவது நற்கருணையே.
அன்பே உருவான இறைவன், மானிடராகிய நம் மீது கொண்டுள்ள அன்பினால், நம்மை பாவத்திலிருந்து மீட்க திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி நம் நடுவில் பிரகாசமாய் வீற்றிருக்கிறார். ' இது என் உடல், இது என் இரத்தம், இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்று திருப்பலியில் அருள்தந்தையர்களால் கூறப்படும் வார்த்தையால், தன் உடலோடும், ஆன்மாவோடும், தெய்வீகத்தோடும் இந்த திவ்ய நற்கருணையில் நம் நடுவில் வந்துதிக்கிறார் நம் இயேசு. நம்மீது கொண்டுள்ள அன்பை, தாகத்தை வெளிப்படுத்துகிறார். அந்த அன்பு நிரந்தரமானது என்பதைக் காண்பிக்க நற்கருணையை ஏற்படுத்தி, நம் நடுவில் வாழ்கிறார் நம் இறைமகன் இயேசு.
நமது பாவங்களை விட்டு விட்டு தினமும் திருப்பலியில் கலந்து கொண்டு நற்கருணை உட்கொண்டு நமது உள்ளத்தில் இயேசுவை வரவேற்று அவரை ஆராதிப்போமா? திவ்ய நற்கருணையின் மகத்துவத்தை உணர்ந்து, அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற நற்கருணைநாதரின் பாதம் சரணடைவோம், அவர் நம் வாழ்வை சிறப்புற வழிநடத்துவார்.