1. சர்வேசுரன் வெளிப்படுத்தின வேத சத்தியங்களெல்லாம் வேதப் புஸ்தகங்களில் மாத்திரம் அடங்கியிருக்கின்றனவா?
சர்வேசுரன் வெளிப்படுத்தின சத்தியங்கள் எல்லாம் வேதப் புஸ்தகங்களில் அடங்கியிருக்கிறதில்லை. இப்படியே தேவத் திரவிய அநுமானங்களின் தொகை, சிலுவை அடையாளத் தின் உபயோகம், கன்னிமரியாயின் அமலோற்பவம் முதலியவை வேதபுஸ்தகங்களில் அடங்கியிருக்கிறதில்லை.
2. வேதசத்தியங்கள் எல்லாம் வேதப் புஸ்தகங்களில் அடங்கி யிருக்கிறதில்லையென்று நமக்கு எப்படித் தெரியும்?
(1) சேசுநாதர் பிரசங்கித்தாரென்று அநேக விசை சுவிசேஷத்தில் சொல்லியிருந்தாலும், அந்தச் சமயங்களிலே என்ன சொன்னார் என்று சுவிசேஷகர் அறிவிக்கிறதில்லை. “அவர் அநுதினமும் தேவாலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார்” என்று (லூக். 19:47) அர்ச். லூக்காஸ் எழுதிவைத்தார். இப்படியே சேசுநாதர் சிக்காரென்னும் சமாரியா நாட்டிலுள்ள ஊருக்கு வந்து, அங்கே இரண்டு நாள் தங்கினாரென்று அர்ச். அருளப்பர் அறிவித்திருந்தாலும், அவ்வூராருக்கு என்ன சொன்னாரென்று நமக்கு அறிவித்ததில்லை (அரு.4:48, அப். நட. 1:3, லூக். 20:1, 22:37, 13:10, மத். 4:23 காண்க.)
(2) மேலும் வேதசத்தியங்களெல்லாம் தாங்கள் எழுதின புஸ்தகங்களிலே அடங்கியிருக்கிறதாகச் சுவிசேஷகர் சாதிக்கிறதில்லை. தன் சுவிசேஷத்தில் எழுதப்படாத வேறநேக அற்புதங்களையும், காரியங்களையும் சேசுநாதர் செய்தாரென்று அர்ச். அருளப்பர் எழுதியிருக்கிறார் (அரு. 20:30, 21:21).
3. வேத புஸ்தகங்களில் அகப்படாத வேதசத்தியங்கள் எதில் அடங்கியிருக்கின்றன?
பாரம்பரியமான போதனைகளில் அடங்கியிருக் கின்றன.
100. பாரம்பரியப் போதனை ஆவதென்ன?
அப்போஸ்தலர்கள் காலம் முதல் தலைமுறை தலைமுறை யாக வாய்மொழியில் திருச்சபையில் படிப்பிக்கப்பட்ட வேத சத்தியங் களேயாம்.
1. பாரம்பரியமான போதனை உண்டென்று நாம் எப்படி அறிவோம்?
(1) சேசுநாதர் சுவாமி வேதசத்தியங்களையெல்லாம் வாய்மொழியாகவே கற்றுக் கொடுத்து, தமது போதகங்கள் பரம்பு வதற்காகவும், உலக முடியுமட்டும் தப்பறையின்றி நிலை கொண் டிருக்கிறதற்காகவும் ஒன்றும் எழுதி வைக்கவில்லை. ஆனால் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு இஸ்பிரீத்துசாந்துவின் ஒத்தாசையைக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினார்.
(2) சர்வேசுரன் தாம் இஸ்ராயேலரோடு பண்ணின உடன்படிக்கையை அவர்கள் ஒருக்காலும் மறந்து போகாதபடி, மோயீசனை நோக்கி, அதை எழுதி வைக்க வேண்டுமென்று கற்பித்தார்.
சேசுநாதரோ அஞ்ஞான இராச்சியங்களில் தமது திரு வேதத்தைத் தெரிவிப்பதற்குத் தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்பினபோது பிரசங்கிக்கவும், ஞானஸ்நானம் கொடுக்கவும், இவை முதலிய தேவ ஊழியக் கடமைகளைச் செலுத்தவும் அவர்களுக்குச் சாதாரணமாய்க் கட்டளையிட்டாரொழிய வேதாகமங்களை எழுத கட்டளையிட்டவரல்ல.
(3) அப்போஸ்தலர்கள் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்ற பிற்பாடு, சேசுநாதர் அவர்களுக்குக் கற்பித்த பிரகாரம் உலக எப்பக்கத்திலும் போய், ஆதிக் கிறீஸ்துவர்களுக்கு வாய்மொழியில் போதித்தார்கள். அர்ச். சின்னப்பர் திமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில்: “நீர் என்னிடத்தில் அநேக சாட்சிகள் முன்பாக கேட்டறிந்தவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத் தக்க பிரமாணிக்கமுள்ள மனிதர்களுக்கு ஒப்புவிப்பீராக” என்று கற்பித்தார் (2 திமோ. 2:2). இந்த வசனத்தைக் கொண்டு நாம் அறிய வேண்டியதென்ன?
அர்ச். சின்னப்பர் வேதசத்தியங்களையெல்லாம், சேசுநாதருடைய திருவாயினின்றே கற்றுக் கொண்டதுபோல் அவரும் அந்தச் சத்தியங்களை வாய்மொழியாகவே திமோத்தேயு வுக்கும், மற்றவர்களுக்கும் போதித்தார். வாய்மொழியாகத் தம்மிடத்தில் கற்றுக்கொண்ட சத்தியங்களை மற்றவர்கள் போதிக்க அவருக்குக் கற்பிக்கிறார். இதில் ஏதாவது எழுதவும், ஏதாகிலும் எழுத்தினால் போதிக்கவும் கற்பிக்கிறதில்லை.
(4) ரோமைய இராச்சியத்தில் சத்தியவேதம் பரம்பின பிறகு, சுவிசேஷகர்கள் தங்கள் சுவிசேஷத்தை எழுதினார்கள். அவர்கள் எழுதும்போது பாரம்பரியமான போதனையை நீக்கி அதற்கு பதில் வைக்க வேண்டுமென்று கருதியிருந்ததில்லை. வாக்கினாலாவது, எழுத்தினாலாவது போதிக்கப்பட்ட பாரம்பரி யங்களை வித்தியாசமொன்றின்றி ஒரே தன்மையாய்க் காப்பாற்றி அவைகளில் நிலைத்திருக்க வேண்டுமென்று அர்ச். சின்னப்பர் கற்பித்திருப்பது அதற்கு அத்தாட்சி (2 தெச. 2:14). ஆனால் சேசுநாதருடைய சீவியத்தின் பிரதான வரலாறுகள் மறக்கப்பட்டுத் தவர்ந்து போகாதபடிக்கும், கிறீஸ்தவர்களுக்குள் சிலர் நியம அதிகாரமும், வேண்டிய நுணுக்கமுமில்லாமல் நமதாண்டவருடைய வருத்தமானங்களை எழுதத் துணிந்ததினால், அச்சம்பவங்களின் நிச்சயமான ஒரு வரலாற்றைத் தெரிவிக்கும்படிக்கும் (லூக். 1:1) சுவிசேஷகர் தங்கள் சுவிசேஷத்தை எழுதக் கருதினார்கள். மேலும் தாங்கள் எழுதின சுவிசேஷத்திலாவது நிருபங்களிலாவது எல்லா வேதசத்தியங்களும் சேசுநாதர் செய்த சகலமும் அடங்கியிருக்கிற தென்று எங்கும் எழுதிச் சொன்னவர்களல்ல.
2. பாரம்பரிய போதனையில் அடங்கியிருக்கிற வேத சத்தியங்கள் என்ன?
சேசுநாதர் சுவாமியாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும், அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவர்களால் எழுதப் படாமல், வாய்மொழியில் தலைமுறை தலைமுறையாக இக்கால மட்டும் திருச்சபையில் வழங்கிவந்திருக்கும் வேதசத்தியங்களேயாம்.
3. எழுதப்படாத பாரம்பரிய போதனைகளைச் சேர்ந்த வேத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு உறுதியோடே விசுவசிப்பது கடனா?
பழைய ஏற்பாட்டிலுள்ளதும், புது ஏற்பாட்டிலுள்ளது மான எழுதப்பட்ட சத்தியங்களை விசுவசிப்பதுபோல், பாரம்பரிய சத்தியங்களெல்லாவற்றையும் தத்தளிக்காமல் ஏற்றுக்கொண்டு உறுதியாய் விசுவசிக்க வேண்டும். ஏனென்றால் இரண்டும்தான் தேவ வாக்கு.
4. பாரம்பரிய போதனைகள் எப்படி நமக்கு வருகின்றது?
பல வழிகளுண்டு.
(1) முந்தமுந்த அர்ச். பாப்பானவரும், திருச்சபையின் பொதுச்சங்கங்களும் செய்கிற தீர்மானங்கள் தவறாத விதமாய்ப் பாரம்பரிய சத்தியங்களை நமக்குத் தெரிவிக்கின்றன.
(2) அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணம், நீசே என்னும் விசுவாசப் பிரமாணம் இவை முதலியவைகள் பாரம்பரிய போதனைகளைச் சுருக்கமாய்க் குறிக்கின்றது.
(3) திருச்சபையின் திருச்சடங்கு ஆசாரங்களும் இந்தப் போதனைகளை வெளிப்படுத்துகின்றன.