இயேசுவின் அப்பம் பலுகுதல் அருள் அடையாளத்துக்குப் பின் மக்கள் பெரும் திரளாக இயேசுவைத் தேடி அலைக்கின்றனர். அப்போது இயேசு ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். (யோவான்.6:27) என வாழ்வு தரும் உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறார்.
அவ்வாறெனில் வாழ்வு தரும் உணவு ஏது? எவ்வாறு அதைக் கண்டு கொள்வது?
“வாழ்வு தரும் உணவு நானே” என்று இயேசு தன்னையே உணவாக அடையாளப் படுத்துகிறார். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்று சமாரியப் பெண்ணிடம் இயேசு கூறியது போல, பசியும், தாகமும் தராத உணவும், நீரும் தருவதற்காகத் தன் உடலையும், இரத்தத்தையும் பலியாக அளிக்கிறார்.
மீண்டும் அதை வலியுறுத்துகிறார் இயேசு. “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்.” மேற்கூறிய வார்த்தைகளின் மூலம் தனது சதையையே வாழ்வு தரும் உணவாகத் தருவதாக உறுதி கூறுகிறார்.
அந்த உணவை தந்தையே அருளுவதாக இயேசு பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல, வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.
வாழ்வு தரும் உணவான இயேசுவின் உடலும், இரத்தமும் நிலைவாழ்வைத் தரும் என நம்புவோர்க்கு, அவை வாழ்வு தரும் உணவாக மாறுகிறது. இயேசுவின் உடல் என்று அப்பத்தையும், இயேசுவின் இரத்தம் என்று திராட்சை இரசத்தையும் விசுவசித்து நாம் உண்ணும் போதும், பருகும் போதும் நமக்கு அது நிலைவாழ்வைத் தருகிறது.
மானிட மகனின் சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நாம் வாழ்வு அடைய முடியாது.
“எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு. எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். ஆகவே நாம் வாழ்வு பெற, நிலைவாழ்வு பெற இயேசுவின் உடலை உண்ணவேண்டும், இரத்தத்தைப் பருகவேண்டும்.
இது நாம் நம்புவதற்குத் தடையாய் இருக்கும் என்பதை இயேசு ஏற்கனவே அறிந்திருந்தார். அதனால் தான் “தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது” என்று சீடர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறார். நம்ப இயலாத, ஏற்க இயலாதச் சீடர் பலரும் இயேசுவை இதன் காரணமாக விலகிச் செல்கின்றார்கள்.
புனித பவுலும் இயேசுவின் உடல் வாழ்வு தரும் என்பதை உறுதி செய்கிறார். ஒவ்வொரு முறையம் நாம் அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும் போது ஆண்டவரின் சாவை அறிக்கை இடுகிறோம். ஏன் நாம் இயேசுவின் சாவை அறிக்கையிட வேண்டும்? ஏனெனில் இயேசுவின் சாவுத் தான் நமக்கு மீட்பு தந்தது. அதை அறிக்கையிட நமக்குக் கடமை உள்ளது.
நாம் ஏன் இயேசுவின் உடலை உண்ண வேண்டும்?
1. இயேசுவின் உடல் தான் வாழ்வு தரும் உணவு. எனவே நிலைவாழ்வு பெற நாம் இயேசுவின் உடலை உண்ண வேண்டும்.
2.இயேசு வரும் வரை இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் நாம் அறிக்கையிட வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் இயேசுவின் அப்பத்தை உண்டு, இரத்தத்தைப் பருகி இயேசுவின் மரணம் உயிர்ப்பை அறிக்கையிட வேண்டும்.
இவ்வாறு தியானிக்கும் வேளையில் இயேசுவின் உடலும் இரத்தமும் மறுமையை நோக்கி மட்டும் வழிநடத்துகிறதா? என்ற கேள்வி எழும். தினசரி கிறிஸ்தவ வாழ்வுக்கும், அப்ப இரசத்திற்கும் என்ன தொடர்பு? கிறிஸ்துவ வாழ்வு! -இவ்வுலக வாழ்வு வாழ எவ்வாறு துணை செய்கிறது? இதற்கான பதிலை புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் நமக்குத் தருகிறார்.
1 கொரிந்தியர் 11:26-31 இதன்படி நாம் வலுவுடன் வாழவும், உடல் நலத்தோடு இருக்கவும் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருக வேண்டும். இயேசுவின் உடலை உண்டு, இரத்தத்தைப் பருகி வாழ்வு பெறுவோம் இம்மைக்கும், மறுமைக்குமாக. ஆமென்.