மனிதாவதாரத்தின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, நம் வாசகர்கள் மனதில் தெளிவாகப் பதித்துக்கொள்ள வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி நாம் இங்கு விளக்க விரும்புகிறோம்.
ஏனெனில் இந்தக் காரியத்தை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிடில், தொடர்ந்து நீங்கள்; வாசிக்க இருக்கும் காரியங்களைப் புரிந்துகொள்வது மிகக் கடினமாக இருக்கும்.
இது வரை, மனிதாவதாரத்தைப் பற்றி தமத்திரித்துவ சர்வேசுரனுடைய தெய்வீக மனதில் “ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியும்” (சீராக்.24:14) இருந்த திட்டத்தைப் பற்றித்தான் நாம் இது வரை தியானித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய தியானத்தின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் இன்னும் முதல் மனிதன் படைக்கப்படவில்லை, மனிதன் படைக்கப்பட வேண்டும் என்பது இன்னும் கடவுளின் திட்டமாக மட்டுமே இருக்கிறது என்பதை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
முதல் மனிதனான ஆதாமும், முதல் பெண்ணான ஏவாளும் இனிமேல்தான் உலகில் படைக்கப் பட இருக்கிறார்கள். தேவ மனிதன் உலகில் வந்து பிறப்பதற்கு, முதலில் உலகில் மனித இனம் தோன்ற வேண்டும். ஏனெனில் ஒரு மனிதப் பெண்ணிடமிருந்துதான் வார்த்தையானவர் தம்முடைய மனித சுபாவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும், பெற்றுக்கொள்ள வேண்டும். இது நிகழாவிடில் தேவ மனிதன் என்னும் முதல் சிருஷ்டியைத் தோற்றுவிக்க இஸ்பிரீத்துசாந்துவானவரால் இயலாது!
இந்த தேவ-மனிதரை நாம் முதல் சிருஷ்டி என்று அழைக்கக் காரணம் என்ன? ஏனெனில் அவரே தெய்வீக மனதில் தோன்றிய முதல் சிருஷ்டியாக இருக்கிறார். அவர் வழியாகத்தான் உலகம் உண்டாக்கப்பட்டது. அவருக்காகத்தான் மனுக்குலம் உண்டாக்கப்பட்டது.
அவர் மாசற்றவர்களாகிய மனிதர்கள் நடுவில் வந்து பிறந்து, தமத்திரித்துவ சர்வேசுரனுக்கு உகந்த, தகுதியான, உத்தமமான ஆராதனையையும் மகிமையையும் செலுத்த வேண்டும், இந்த ஆராதனையையும் மகிமையையும் செலுத்துவதில் தேவ-மனிதரோடு தங்களை இணைத்துக்கொள்ளும் மனிதர்களும் தகுதியுள்ள வழிபாட்டைக் கடவுளுக்குச் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் மனுக்குலம் உலகில் படைக்கப்பட்டது.
இந்த நோக்கத்திற்காக உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதனாகிய ஆதாமிடம் இரண்டு உயிர்கள் இருந்தன.
முதலாவது உயிர் சுபாவ உயிராகும் (Natural Life). இந்த உயிரைக் கொண்டு மனித ஆத்துமம் இனி நித்தியத்திற்கும் உயிர் வாழும். அதற்கு இனி அழிவே கிடையாது.
இரண்டாவது உயிர் சுபாவத்திற்கு மேற்பட்ட உயிராகும் (Supernatural Life). இது மனிதனுக்கு சர்வேசுரனால் தரப்பட்ட அவருடைய சொந்த உயிராகும் (Divine Life).
இந்த உயிரே தேவ இஷ்டப்பிரசாத உயிர் (Sanctifying Life) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிர்தான் மனிதனைக் கடவுளின் குழந்தையாகவும், கடவுளை முகமுகமாய்த் தரிசிக்கவும், அவருடைய பரலோக இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளவும் வல்;லவனாகவும் ஆக்குகிறது.
மேலும், மனிதன் தன் பரிசுத்த ஜீவியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் இந்த இரண்டாவது உயிர் இன்றியமையாததாகும். இந்த தேவ உயிராகிய தேவ இஷ்டப்பிரசாதம் இல்லாவிடில் ஆத்துமம் ஒருபோதும் மோட்சத்தை அடைந்துகொள்ளவே இயலாது.
பாவத்தால் மட்டுமே ஆத்துமத்திலிருந்து இந்த உயிரைப் போக்க முடியும். அப்படி இந்த உயிரைப் போக்கடிப்பதற்கு அந்தப் பாவம் சாவான பாவமாக (Mortal Sin) இருக்க வேண்டும். அதாவது,
(1) ஒரு கனமான காரியத்தில ((in a grievous matter),
(2) முழு மன சம்மதத்தோடும் (with full consent of mind)
(3) முழு அறிவோடும் (with full knowledge that it is a sin) செய்யப்படும் பாவம் ஆத்துமத்திற்கு சாவு ஆன பாவமாக, ஆத்துமத்திலுள்ள தேவ உயிரை அகற்றி, கடவுளின் பார்வையில் அதைக் கொல்லுகிற சாவான பாவமாக இருக்கிறது.
இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று குறைவுபட்டாலும் அது சாவான பாவமாகாது. அதாவது அது ஆத்துமத்தைக் கொல்லாது, எனவே அது அற்பப் பாவம் (Venial Sin) எனப்படுகிறது. இந்த அற்பப் பாவம் ஆத்துமத்தைக் கொல்வதில்லை.
ஆயினும் நம் கட்டுரையின் இந்த இடத்தில் இன்னும் மனிதன் படைக்கப்படவில்லை என்பதையும், அதன் காரணமாக, இன்னும் பாவம் உலகில் பிறக்கவில்லை என்பதையும் மனதில் இருத்திக்கொண்டு தொடர்ந்து இக்கட்டுரையை வாசியுங்கள்.
மேலும், மீண்டும் சொல்கிறேன்: கட்டுரையின் இந்த இடத்தில், தேவ-மனிதன் இன்னும் தெய்வீக மனத்தின் திட்டத்தில் மட்டுமே இருக்கிறார், அவர் இன்னும் உலகில் பிறக்கவில்லை என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்;.