கிறீஸ்து ஏற்படுத்திய திருச்சபைக்கு எதிராகத் தீய சக்திகள் செயல்படும் என்று கிறீஸ்து ஏற்கெனவே எச்சரித்துள்ளார் (மாற்கு 13:22 - 23).
பைபிளுக்குத் தவறான விளக்கங்கள் தரப்படும் என்று புனித இராயப்பரும் (2 பேதுரு 1:20; 2 பேதுரு 3:16), புனித பவுலும் 2 திமோ. 4:3-4) எச்சரித்துள்ளார்கள்.
பசாசுக்கும் பைபிள் தெரியும் (மத். 4:6). ஏரோதுக்கும் பைபிள் தெரியும் (மத். 2:1-6). ஆனால் இருவருமே ஏசுவைத் துன்புறுத்தினார்கள்.
ஏசுவைத் துன்புறுத்துவதும், திருச்சபையைத் துன்புறுத்துவதும் ஒன்றேதான் (அப். பணி. 9:5). எனவே திருச்சபை யின் அதிகாரபூர்வப் போதனைகளுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும் (மத்.18:17).
திருச்சபையிலிருந்து ஆடுகளைத் திருடிச் செல்வோர் முதலில் சில கேள்வி களை எழுப்பியே மக்களைக் குழப்ப முயலுவார்கள். அந்த விஷயங்கள் இவைதான்!
நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?
இப்படி ஒருவர் கேட்பாரென்றால், நிச்சயமாகச் சொல்லலாம், அவர் இரட்சிக்கப்படவுமில்லை , இரட்சிப்பைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஏனெனில் பைபிள் கூறுகிறது, மனிதன் எந்நேரமும் தவற வாய்ப்புள்ளது என்று (1 கொரி. 10:12; 1 பேதுரு. 5:8).
இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று சொல்பவன் ஏமாற்றப்பட்டவன் என்றும், இயேசுவைப் பழிப்பவன் என்றும் கூறுகிறது (1 யோவான் 1:8, 10).
எனவே நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்; வேதம் தெரியாதவர்கள்! இரட்சிப்பு என்பது கடைசி மூச்சு வரை போராடிப் பெற வேண்டிய ஒன்று (பிலி. 3:12).