குருத்துவத்தின் தெய்வீக மகத்துவத்தை நாம் புரிந்து கொள்வோம் என்றால், பூசையின் அளவற்ற மேன்மையை நாம் அதிக முழுமையாகப் புரிந்துகொள்வோம்.
வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார், குருத்துவமே உண்டாக்கப்பட்ட சகல மகிமைகளிலும் அதிக பக்திக் குரிய மகிமையாக இருக்கிறது என்று கூறுகிறார்.
அர்ச். எஃப்ரேம் அதை ஓர் அளவற்ற மேன்மை என்று அழைக்கிறார்.
கடவுளின் குரு சகல உலக அரசர்களுக்கும் மேலாகவும், சகல பரலோக சிகரங்களுக்கு மேலாகவும் உயர்த்தப்பட்டுள்ளார் என்றும், அவர் கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்தவர் என்றும் காஸ்ஸியன் கூறுகிறார்.
குருவானவர் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நடுவில் வைக்கப்பட்டிருக்கிறார்; கடவுளை விடத் தாழ்ந்தவ ராகவும், மனிதனுக்கு மேலானவராகவும் இருக்கிறார் என்று பாப்பரசர் மூன்றாம் இன்னோசென்ட் கூறுகிறார்.
அர்ச். டெனிஸ் குருவானவரை ஒரு தெய்வீக மனிதர் என்றும் குருத்துவத்தை ஒரு தெய்வீக மகத்துவம் என்றும் அழைக்கிறார்.
குருத்துவ மேன்மை என்னும் கொடை மனித புத்திக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று அர்ச். எஃப்ரேம் கூறுகிறார்.
இதன் காரணமாக அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர், ஒரு குருவானவருக்கு சங்கை செலுத்துபவன், கடவுளுக்கே சங்கை செலுத்துகிறான், குருவை அவமதிக்கிறவனோ, கிறீஸ்துநாதரையே அவமதிக்கிறான் என்று கூறுகிறார்.
அர்ச். அமிர்தநாதர் குருத்துவ அலுவலை ஒரு தெய்வீக அலுவல் என்று அழைத்திருக்கிறார்.
அர்ச். பிரான்சிஸ் சலேசியார் ஒரு பரிசுத்த துறவிக்கு குருப்பட்டம் வழங்கிய பிறகு, தேவாலய வாசல் வரைக்கும் சென்றவர், தமக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த புதிய குருவுக்கு வழிவிடும்படி ஒதுங்கி நின்றார். அப்படி அவர் நின்றதன் காரணம் என்ன என்று அவரிடம் கேட்ட போது அவர் இப்படிப் பதிலளித்தார்: ''இந்தப் புதிய குருவின் காவல் தூதரைக் காணும் பாக்கியத்தைக் கடவுள் எனக்குத் தந்தார். இவர் குருப்பட்டம் பெறும் வரை அவருடைய காவல் தூதர் அவருக்கு முன்னாலோ, அல்லது அவருக்கு வலது பக்கத்திலோதான் எப்போதுமே இருந்தார். ஆனால் அவர் குருப்பட்டம் வாங்கிய வினாடியிலிருந்து சம்மனசானவர் அவரது இடதுபுறத்தில் நடந்து வருகிறார். அவருக்கு முன்னால் செல்ல அவர் மறுக்கிறார். அவரோடு ஒரு பரிசுத்த போட்டியில் ஈடுபடும்படியாகவே நானும் இந்த நல்ல குருவுக்குப் பின்னால் வரும்படி வாசலில் நின்று விட்டேன்!''
அர்ச். அக்குயினாஸ் தோமையாரைப் பொறுத்த வரை, குருத்துவத்தின் மகத்துவம், சம்மனசுக்களின் மகத்துவத் திற்கும் அப்பாற்பட்டது.
சம்மனசுக்களும் கூட குருத்துவத்திற்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்று அர்ச். நாஸியான்ஸன் கிரகோரியார் சொல்லியிருக்கிறார்.
மோட்சத்திலுள்ள சம்மனசுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், ஒரேயொரு பாவத்தைக் கூட அவர்களால் மன்னிக்க முடியாது. காவல் தூதர்கள் தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஆத்துமங்களின் பாவங்களை ஒரு குருவானவர் மன்னிக்கும்படி, அவரிடம் அந்த ஆத்துமங்கள் தஞ்சமடையத் தேவையான வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தருகிறார்கள்.
அர்ச். பிரான்சிஸ் அஸிஸியார், "நான் ஒரு சம்மனசானவரையும், ஒரு குருவானவரையும் ஒரே சமயத்தில் கண்டால், முதலில் குருவுக்கும், அதன்பின் சம்மனசானவருக்கும் முன்பாக முழந்தாளிடுவேன்" என்று கூறுவது வழக்கம்.
பரலோகத்தையும், பூலோகத்தையும் படைப்பதை விட ஒரு பாவியை மன்னிப்பது பெரிய வேலை என்று அர்ச். அகுஸ்தீனார் கூறுகிறார்!
ஒரேயொரு பாவத்தையும் மன்னிப்பதற்கு, கடவுளின் சர்வ வல்லபம் தேவைப்படுகிறது. குருவானவரின் வல்லமையைப் பாருங்கள்.
அர்ச். லிகோரியார்: “ஒரேயொரு குருவானவர் ஒரே யொரு பூசை வைப்பதன் மூலம் கடவுளுக்குத் தரும் மகிமையை, முழுத் திருச்சபையும் அவருக்குத் தர முடியாது, அவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியாது. இதன் காரணமாக, சேசுக் கிறீஸ்துநாதரை திவ்விய பலியாகத் தாம் ஒப்புக்கொடுக்கிற ஒரேயொரு பூசை நிறைவேற்றுவதன் மூலம், எவ்வளவு பெரிய மகிமையை ஆண்டவருக்குத் தருகிறார் என்றால், சகல மனிதர்களும் கடவுளுக்காக மரித்து, தங்கள் அனைத்து உயிர்களையும் பலியாக அவருக்கு ஒப்புக் கொடுத்தாலும், அத்தகைய மகிமையை ஆண்டவருக்குத் தர முடியாது.
சேசுக்கிறிஸ்துநாதருடைய மெய்யான சரீரத்தின் மீது குருக்களுக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்த வரை, அவர்கள் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் போது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவத்திரவிய அனுமானப் பொருட்களின் தோற்றத்தின் கீழ் அவர்களுடைய கரங் களுக்குள் வருவதை அவதரித்த வார்த்தையானவர் தம்முடைய கடமையாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்.''
வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் : குருக்கள் திருச்சபையின் மகிமையாகவும், அதன் தூண்களாகவும், மோட்சத்தின் வாசல்களாகவும், அதன் வாயிற்காப்பவர் களாகவும் இருக்கிறார்கள்.
அர்ச். லிகோரியார் : நம் இரட்சகர் ஒரு கோவி லுக்குள் இறங்கி வந்து ஒரு பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு பாவசங்கீர்த்தனத் தொட்டியில் ஒரு குரு அமர்கிறார். தம்மிடம் பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு பாவி யிடமும் சேசுநாதர் ஏகோ தே அப்ஸால்வோ (நான் (உன் பாவங்களிலிருந்து) உன்னை விடுவிக்கிறேன்.) என்று சொல் வார். குருவும் அதே வார்த்தைகளைத் தம்மிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும் ஆத்துமங்களிடம் சொல்வார். இவர்கள் இருவரிடமும் செல்லும் பாவிகள் அனைவருமே சமமான முறையில் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறார்கள். இவ்வாறு, குருத்துவ மகிமை என்பது உலகில் அனைத்திலும் அதிக மேன்மையுள்ள பதவியாக இருக்கிறது.
குருத்துவம் அனைத்து அரசர்கள், பேரரசர்கள், சம்மனசுக்களின் மகிமைக்கும் அப்பாற்பட்ட மகிமையைக் கொண்டுள்ளது என்றும், பொன் தன்னுடைய மதிப்பில் ஈயத்தை விட மிகவும் மேம்பட்டிருப்பது போலவே, குருத்துவ மகிமையும் அரசர்களின் மகிமைக்கு மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது என்றும் அர்ச். அமிர்தநாதர் கூறுகிறார்.
கடவுளின் உண்மையான உணர்வைக் கொண்டுள்ள அனைவரும், குருத்துவப் பட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தபோது, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, பயந்து நடுங்கினார்கள் என்று அர்ச். சிப்ரியன் கூறினார்.
ஒரு குருவாக அபிஷேகம் செய்யப்பட மனதாயிருந்த ஒருவரையும் தம்மால் கண்டுபிடிக்கமுடியவில்லை, காரணம், இவ்வளவு தெய்வீகமான ஒரு மகத்துவ மேன்மையைப் பற்றி அவர்கள் அச்ச நடுக்கம் கொண்டிருந்தார்கள் என்று அர்ச். எப்பிஃபானியுஸ் எழுதுகிறார்.
அர்ச். சிப்ரியனின் சரித்திரத்தை எழுதியவரான அர்ச். நாஸியான்ஸன் கிரகோரியார் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடு கிறார். அர்ச். சிப்ரியனை ஒரு குருவாக்க அவருடைய மேற்றிராணியார் நினைக்கிறார் என்பதை இந்த அர்ச்சியசிஷ்டவர் கேள்விப்பட்டதும், தாழ்ச்சியின் காரணமாக, தம் மேற்றிராணியார் தம்மைக் காண முடியாதபடி அவர் ஓடி ஒளிந்து கொண்டார் என்று அவர் எழுதுகிறார்.
அர்ச். அமிர்தநாதர் குருவாக அபிஷேகம் செய்யப்பட தாம் சம்மதிப்பதற்கு முன்பு, நீண்ட காலம் அதை மறுத்து வந்ததாக அவரே எழுதியிருக்கிறார்.
அர்ச். பிரான்சிஸ் அஸிஸியார் ஒரு குருவாக அபிஷேகம் செய்யப்பட ஒருபோதும் சம்மதிக்கவேயில்லை.