மெய்விவாகத்தின் பேரில்.

308, மெய்விவாகம் ஆவதென்ன?

சமுசாரியாகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதத்தையும், அவர்கள் தர்மவழியில் நடக்கவும், தங்கள் பிள்ளைகளை தக்க பிரகாரமாய் நடப்பிக்கவும், வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவத்திரவிய அனுமானம். 


309, இதில் சொல்லப்பட்ட சமுசாரிகள் யார்?

திருச்சபை ஆசாரத்தின்படியே வார்த்தைப்பாடு கொடுக்கும் பெண்ணும் மாப்பிள்ளையுமாம். 


310, சமுசார நிலைமை யாராலே ஏற்படுத்தப்பட்டது?

ஆதியிலே சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. பின்னிட்டு யேசுகிறிஸ்து நாதரால் ஒரு தேவத்திரவிய அனுமானமாக ஏற்படுத்தப்பட்டது,


311. திருச்சபை ஆசாரத்தின் படியே செய்த கலியாணத்தை எவராவது உடைக்கக் கூடுமோ? 

எவரும் உடைக்கக் கூடாது. ஏனெனில், சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவான் என்று யேசுநாதர் சொல்லியிருக்கிறார்.


312. மெய்விவாகத்துக்கு பிரதான விக்கினங்கள் எவை?

மூன்றாங்கால் மட்டும் இரத்த உறவு. இரண்டாங்கால் மட்டும் கலியாண சம்பந்தம். ஞான உறவு, குறைந்த வயது. இதர மதம் இவைகளாம்.


313. இந்த விக்கினங்களோடு செய்யப்பட்ட கல்யாணம் கிறிஸ்துவர்களுக்கு மெய்யான கல்யாணம் ஆகுமோ? 

இல்லை. இப்பேர்ப்பட்ட கல்யாணம் மெய்யான கல்யாணம் அல்ல.


314. திருச்சபை உத்தரவில்லாமல் தாலிகட்டி கல்யாணம் செய்தால் மெய்விவாகம் ஆகுமோ? 

இல்லை. இப்பேர்ப்பட்ட கல்யாணம் வெறும் தாறுமாறு ஆகுமேயொழிய மெய்விவாகம் ஆகாது.


315, புருஷன் தன் மனைவி மட்டில் கொண்டிருக்கிற கடமை என்ன? 

புருஷன் தன் மனைவிக்குப் பிரமாணிக்க முள்ளவனாய் அவளை விட்டுப் பிரியாமலிருக்கவும். பாதுகாத்து, அவளுக்கு நன்மாதிரியாய் நடந்து நற்புத்தி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறான்,


316. மனைவி தன் புருஷன் மட்டில் கொண்டிருக்கிற கடமை என்ன? 

புருஷனுக்குப் பதிவிரதையாய், அவனை விட்டுப்பிரியாமலிருக்கவும், அவனை நேசிக்கவும். பொறுமையாயும் பட்சமாயும் அவனுக்கு கீழ்படிந்து பணிவிடை செய்யவும் கடமைப்பட்டிருக்கிறாள்.