பிரான்ஸ் தேசத்தில் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சேர்ந்த ஒரு கோவிலில் பீடத்தை விலையேறப்பட்ட வஸ்திரங்களினால் அலங்கரித்து தேவநற்கருணையை இரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய பாத்திரத்தில் எல்லோரும் காண ஸ்தபித்திருந்த்து . பீடத்தின் மேல் எரிகிற மெழுகுதிரிகளுள் ஒன்றின் சுவாலை அங்கே கட்டியிருந்த துணியில் பற்றிக்கொண்டு தீ வரவர வெவ்வேறு பொருட்கள் மேல் தாவி எரிகிறபோது அங்கே இருந்தவர்கள் அதைக்கண்டு தீயை அணைக்க முயற்ச்சித்தனர் . ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் நெருப்பு அதிகம் பற்றிக் கொண்டதால் அந்த கோவிலும் , அதிலுள்ள தட்டுமுட்டு சாமன்களும் எரிந்து சாம்பாலாய்ப் போயின . இதெல்லாம் இப்படி எரிந்து போனாலும் தேவநற்கருணையிலிருந்த கதிர்ப்பாத்திரம் உருகிப் போகாதிருந்த்து.
அது திவ்ய நற்கருணையோடு புதுமையாக நெருப்பெல்லாம் கடந்து எரிகிற சுவாலைக்கப்பால் ஆகாயத்தில் நின்றது . இப்படி மூன்று நாள் நின்றது . அந்த மூன்று நாளைக்குள்ளாக இந்த அதிசயமான புதுமையைப் பார்க்க ஏறக்குறைய இரண்டு லட்சம் மக்கள் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் .பார்த்தவர்களுள் பதிதர்கள் சிலர் இதைக் கண்டு தேவநற்கருணையில் இயேசுநாதர் எழுந்தருளியிருக்கிறாரென்று விசுவசித்தார்கள் . இதல்லாமல் மூன்று நாளைக்குப் பிறகு ஒரு குருவானவர் பீடத்தின் மேல் பூசைப்பாத்திரத்துணியை விரித்தவுடன் ஆகாயத்தில் நின்ற அந்த தேவநற்கருணையின் கதிர்ப்பாத்திரம் மெள்ள இறங்கி எல்லோரும் ஆச்சரியப்பட ஆகாயத்தில்தானே சற்று நின்று கடைசியாய் அந்தத் துணிமேல் வந்து இறங்கிற்று . பின் குருவானவர் அந்தத் திவ்யநற்கருணையை அந்தக் கதிர்ப்பாத்திரத்தின்று எடுத்து மற்றோர் பாத்திரத்தில் வைத்து ஆடம்பரத்தோடு அதை வேறு கோவிலின் தேவநற்கருணைப் பெட்டியில் கொண்டுபோய் வைத்தார் .
கிறிஸ்தவர்களே ! மோகமென்னும் அக்கினியால் அநேகம் ஆத்துமங்கள் வெந்துபோகிறது .இதற்கு அர்த்தம் ஏதென்றால் , அந்தப் பாவத்தினால் அநேகம் ஆத்துமங்கள் நரகத்தில் போய் எப்போதும் அதில் வேகிறதென்று அர்த்தமாகும். ஆனால் இதில் நீங்கள் வேறு ஒரு காரியம் அறியவேண்டும் . அதாவது , இப்போது சொன்ன புதுமையில் நெருப்புக்குள் இருந்த தேவநற்கருணை புதுமையாகநெருப்பைக் கடந்து ஆகாயத்தின் மேல் நின்றாதுபோல் சில பேர்கள் தங்கள் சரீரத்தில் அடிக்கடி மோக அக்கினி எரிகிறபோது தாங்கள் வாங்கின தேவநற்கருணைப் பலத்தால் அவர்கள் ஆத்துமத்துக்கு மோசமில்லாமல் கற்பில் உயர்ந்து போகிறதற்குச் சந்தேகமில்லை .
சில பேர்கள் நன்மை வாங்குகிறபோது வாடிக்கையாக வாங்குகிறதேயல்லாமல் தங்களிடத்தில் எரிகிற மோக அக்கினி அமரவேண்டுமென்கிற எண்ணத்தில் வாங்குவதில்லை . இதனால் அவர்களிடத்தில் உள்ள போக அக்கினி அமராமல் எரிகிறது . ஆகையால் நீங்கள் இப்படிப்பட்டவர்களைப்போல் நடவாமல் ஆசையோடு நன்மை வாங்குவதோடு , உங்களிடத்தில் மோக அக்கினி எரிந்தால் அதை அமர்தத்தக்கதாக நன்மை வாங்குகிற சமயத்திலேயும் மற்றச் சமயங்களிலேயும் மிகுந்த பக்திச் சுறுசுறுப்போடு வேண்டிக் கொள்ள வேண்டும் .