ப்ரசெல்ஸ் நகரில் ஒரு யூதன் வீட்டில் ஒரு கிறிஸ்தவ வேலைக்காரி இருந்தாள் . அந்த யூதனின் துர்புத்தி கேட்டு அவள் யூத மதத்தில் சேர்ந்ததுமல்லாமல் தேவநற்கருணையில் இயேசுநாதர் இல்லையென்று நினைத்திருந்தாள் . அவளுடைய எசமான் ஒருநாள்அவளைப் பார்த்து " மற்ற கிறிஸ்தவர்களைப்போல் நீயும் உண்மையான கிறிஸ்தவள் போல் நடித்துக் கோவிலுக்கு போய் நன்மை வாங்க வேண்டும் . அந்தத் திவ்ய நற்கருணையை நீ உட்கொள்ளாமல் உடனே எடுத்து எனக்கு கொண்டு வர வேண்டும் " என்று சொன்னான் .
அதற்கு அவள் சம்மதித்து கோவிலுக்குப் போய்த் தேவநற்கருணை வாங்கினாள் . அவளுடைய நாவில் குருவானவர் தேவநற்கருணையை வைத்தவுடனே அவள் அந்தத் தேவநற்கருணையை எடுக்கத் துணிந்தாள். உடனே அவளுடைய ஈரற்குலையில் கடினமான வலி ஏற்பட்டதினால் அவஸ்தைகாரிபோல் இருந்தாள் . அவள் தன் பாவத்துக்கு தண்டணையாக அந்த வேதனை வந்தது என்று நினைத்து அதை மற்றவர்கள் அறியாத படிக்குத் தான் வாந்தி பண்ணுகிறாப்போல்நடித்து வெளியிலே வந்து கோவிலருகிலிருக்கிற கிணற்றினருகே போய் சற்று நின்றாள் . இப்படி நின்றபோது அவளுக்குமீண்டும் அகங்காரம் ஏற்படவே தேவநற்கருணையைக் கிணற்றுக்குள்ளே போட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போனாள் .
கிணற்றில் நற்கருணை விழுந்ததின் பயனாக அநேகப் புதுமைகள் நடந்தன . அந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடித்ததால் வியாதிக்காரர்கள் குணமடைந்தனர் . இதனால் அந்த ஊரிலுள்ள அநேகம் வியாதிக்காரர்கள் இந்தக் கிணற்றினிடம் திரண்டு வந்தார்கள் . இதையெல்லாம் கண்ட அந்தவேலைக்காரி தான் செய்த தூரோகத்திற்கு மனஸ்தாபப்பட்டு நடந்த சேதியெல்லாம் மற்றவர்கள் அறியப் பண்ணிணாள் . குருக்களும் மற்றவர்களும் இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனைப் பண்ணி அந்தக் கிணற்று தண்ணீரெல்லாம் வெளியில் இரைத்து விட்டு கிணற்றைப் பார்க்கிறபோது வெகு நேர்த்தியான பாடுபட்ட சுருபம் ஒன்று அதிலே இருக்கிறதைக் கண்டார்கள் . அதை வெளியில் எடுத்து மகா மகிமையோடு கோவிலில் வைத்தார்கள் . அந்தச் சுருபத்தின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்தன .
இறைமக்களே ! இப்போது சொல்லப்பட்ட பெண் துர்ப்புத்திக் கேட்டதினால் கெட்டுப்போனாள். ஆகையால் பதிதர்களும், பாவிகளும் சொல்லுகிற துர்ப்புத்திக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டாம். தேவநற்கருணையை நல்ல ஆயத்தத்தோடு நீங்கள் வாங்கின பிறகு அதில் இருக்கிற இயேசுநாதரைப் பார்த்து எங்கள் ஆத்துமத்துக்கு ஞான வைத்தியரே , எங்களிடத்தில் கோபமும், ஆங்காரமும், காய்மாகரமும், போசனபிரியமும் தேவகாரியங்களில் சோம்பலும் இவைமுதலான வியாதிகள் இருக்கின்றன என்று சொல்லிக் காட்டி " தேவரீர் அந்த வியாதிகளை நீக்கி எங்களுக்கு ஞான சஞ்சீவியாய் இரும் " என்று மன்றாடவேண்டும் . நீங்கள் இப்படி கெஞ்சினால் அவர் உங்கள் வியாதியைத் தீர்க்க வந்திருப்பதால் உங்கள் ஆத்துமத்தின் வியாதி நீங்கிப் போவதற்கு அவர் அருள் புரிவார் .