கி.பி. ஐந்நூற்று ஐம்பத்திரண்டாம் வருடத்தில் கோன்ஸ்டாண்டினோப்பிள் பட்டணத்தில் ஒரு அதிசயமான புதுமை தேவநற்கருணை வழியாக நடந்தது . அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்குத் தேவநற்கருணை கொடுத்த பிறகு மீதியிருந்த அப்பத் துண்டுகளை மாசற்ற சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமிருந்தது .
அப்படி பிள்ளைகளுக்குத் தேவநற்கருணைத் துண்டுகளைக் கொடுக்கும் போது , கண்ணாடி வேலைக்காரனாகிய ஒரு யூதனுடையபிள்ளை கிறிஸ்தவப் பிள்ளைகளோடு கலந்து தேவநற்கருணை வாங்கினான் . அவனுடைய தகப்பன் அந்தச் சேதியை அறிந்து கோபம் கொண்டு நெருப்பு நிறைந்த கண்ணாடிச் சூளையிலே தன் பிள்ளையைப் போட்டு சூளை வாயை மூடிவிட்டான் .
அந்த பிள்ளையினுடைய தாய் தன் பிள்ளை எங்கே இருக்கிறதென்றும் எப்படிப் போனதென்றும் தெரியாமல் அழுது புரண்டால் இரண்டுநாளாக தேடிக்கொண்டுடிருந்தாள் . மூன்றாம்நாள் அவள் சூளையினருகில் இருக்கும்போது சூளைக்குள்ளே குழந்தையின் சத்தத்தைக் கேட்டாள் . கேட்டவுடனே சூளையின் வாசலைத் திறந்து பார்க்கும் போது அதில் தன்னுடைய பிள்ளை நெருப்பின் நடுவில் யாதொரு பொல்லாப்புமின்றி இருப்பதைக் கண்டாள் .
அந்தப் பிள்ளை வெளியில் வந்தவுடன் தாய் அந்த நெருப்பில் எப்படியிருந்தாயென்று கேட்டதற்குப் பிள்ளை " சூளையின் வாயில் மூடப்பட்டவுடன் மகா நேர்த்தியான உடையணிந்து பிரகாசமுள்ள ஒரு பெண் சூளையிலே காட்சி தந்து நெருப்பை அணைக்கவும் எனக்கு சாப்பாடு கொண்டுவரவும் அடிக்கடி வந்து பிழைக்கச் செய்தாள் " என்று சொன்னான் .
அவன் சொன்னதைக் கிறிஸ்தவர்களும்கேட்டு அவனுக்குக் காணப்பட்டவள் தேவமாதாவென்று கண்டு சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும்நன்றி செலுத்தினார் . தாயும் பிள்ளையும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள் . தகப்பனோ மனந்திரும்பாமலிருந்ததால் அரசனால் சாவுக்குத் தீர்வையிடப்பட்டான் .
கிறிஸ்தவர்களே ! அக்காலத்தில் புத்தி விவரம் அறியாத பிள்ளைகளுக்கு மீதியான தேவநற்கருணைத் துண்டுகளைக் கொடுத்து வந்தார்களென்று கேட்டீர்களே . அந்த சிறு வயதில் ஞானஸ்நானத்தில் அடைந்த அருளுயிரையும் , பரிசுத்தத்தனத்தையும் பிள்ளைகள் காப்பாற்றி வருவதால் தேவநற்கருணையை அவர்களுக்கு கொடுத்தது ஞாயந்தானே .
இதனால் நீங்கள் அறியவேண்டியதாவது . நீங்கள் தேவநற்கருணை வாங்குவதற்கு ஞானஸ்நானம் பெற்ற குழந்தையைப் போல் சுத்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் . பாவத்தினால் அருளுயிரை இழந்துபோயிருந்தால் தேவநற்கருணை வாங்குமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து , மறுபடி அருளுயிரை அடையவேண்டும் .