ஜான் ஒரு பிரெஞ்சுக்காரன் ; வயது பதினைந்து இருக்கும். துடுக்குள்ளவன்; எப்பொழுதும் சந்தோஷ மாகவும், சிரித்த முகத்துடனும் காணப்படுவான். நன்றாகப் பாடும் திறமையுள்ளவன்.
அவன் பங்கில் உள்ள பாடகர்களில் அவனே சிறந்தவன். ஓர் நாள் சினிமா கூட்டத்திலுள்ளவன் ஒருவன் படத்தில் நடிக்க ஆள் சேர்க்கும்படி ஜான் இருந்த கிராமத்திற்கு வந்தான். நன்றாகப் பாடக்கூடிய ஒருவன் அவனுக்குத் தேவையா யிருந்தது.
ஜானைப் பற்றிக் கேள்விப்பட்டான். அப் பொழுது ஜான் அருகிலுள்ள புல்வெளியில் ஓர் குடியான வனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். சினிமாக்காரன் அவனைத் தேடிக்கொண்டு போன பொழுது , ஜான் மிகச் சந்தோஷத்துடன் பாடிக் கொண்டிருந்தான்.
அந்த இனிய குரலைக் கேட்டவுடன், "ஆ, என்ன அருமையான குரல்! எக்காளத்தைப் போல் துலக்கமாயும், வலிமையுள்ளதாயும் இருக்கின்றதே; இதுவே எனக்கு ஏற்றது'' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஜானிடம் சென்று கேட்டான்: "தம்பி, இங்கு என்ன செய்கிறாய்?"
"ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறேன்.” ''உன் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?''
''எனக்குத் தகப்பனார் கிடையாது. போன சண்டையில் அவர் இறந்தார். என் தாயார் வீட்டில் இருக்கிறார். அவள் வியாதியாய் இருப்பதால் அவளால் வேலை செய்ய முடியாது.''
"உனக்கு வேறு சகோதரர்கள் உண்டா ?''
"இல்லை . நான் ஒரே மகன்.'' "பின் எவ்வாறு ஜீவனம் செய்கிறீர்கள்?”
“இப்படி ஆடு மேய்த்தால் எனக்கு இரண்டு காசுகள் கிடைக்கும்.''
"அது போதுமா?”
"ஓ, போதவே போதாது. எத்தனையோ முறை எங்களுக்குச் சாப்பாடு கிடையாது. அதனால் நானும் என் தாயாரும் மிக எளிமையாய் ஜீவிக்கிறோம்.''
"உனக்கு வேறு வேலை பார்க்க ஆசை இல்லையா?'' "ஆம், ஆனால் எப்படி?”
''சரி, நான் உனக்கு வேலை கொடுக்கிறேன். வெகு நல்ல வேலை. மாசத்தில் நூற்றுக்கணக்கில் சம்பாதிக்க லாம்.'' பையனின் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசித்தன. உடனே "அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான்.
"நீ என்னோடு பாரிஸ் பட்டணத்துக்கு வந்து அங்கு பாட வேண்டும், அவ்வளவுதான்.""
“நான் என்ன பாடவேண்டும்? கோவில் பாட்டுகளா?"
"அதுவல்ல; ஆனால் வேறு பாட்டுக்கள்.”
பின் அந்த சினிமாக்காரன் ஜான் சினிமாக் கொட்டகையில் பாட வேண்டும் என்று சொன்னான். பையன் அதைக் கேட்டவுடன் தன் ஆத்துமத்திற்கு அது நல்லதல்ல என்பதைக் கண்டு கொண்டான். இதுவரையில் பாவத்தினின்று தன் ஆத்துமத்தைக் காப்பாற்றி வந்தான்; இனியும் அவ்வாறே செய்ய வேண்டுமென்று உறுதி செய்தான். "முடியாது ஐயா; உம்மோடு நான் வர மாட்டேன்'' என்றான். அம்மனிதன் இவ்வித பதிலை எதிர்பார்க்கவில்லை; ''ஓர் முட்டாளாக இருக்காதே'' என்றான் ஜானைப் பார்த்து .
ஆனால் ஜான் உறுதியாய் நின்றான். "ஐயா என்னைக் கட்டாயப்படுத்துவதில் பிரயோசனமில்லை; நான் வரமாட்டேன்."
அம்மனிதனுக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. பின் அவனைப் பார்த்து சொல்லுவான்: "நான் உன் அம்மாவைப் பார்க்கப் போகிறேன். உன் வீடு எங்கே?''
ஜான் அவனுக்கு வீட்டைக் காட்டினான். அவன் வீட்டிற்குப் போனான். கால் மணி நேரம் கழித்துத் திரும்பி வந்து ஜானை அவன் தாயார் கூப்பிடுவதாகச் சொன்னான். இருவரும் ஒன்றுசேர்ந்து வீடு சென்றார்கள். ஜான் வீட்டிற்குள் நுழைந்தவுடனே அவன் தாயார் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தாள். "ஜான், இதோ பார், நாம் ரொம்ப ஏழைகளாயிருக்கிறோம். இம்மனிதனுடன் போ. நீ ரொம்ப பணம் சம்பாதிப்பாய். நாம் சுகமாக வாழ்வோம்.''
''அம்மா எனக்கு அங்கே போக இஷ்டமில்லை" என்று ஜான் பதில் சொன்னான்.
பின் அம்மனிதன் தன் தந்திரத்தைக் காட்ட ஆரம்பித்தான். தன் பையினின்று நூற்றுக்கதிகமான பணத்தை எடுத்து மேசைமேல் வைத்து தாயாரைப் பார்த்துச் சொல்லுவான்: "உன் மகனை என்னோடு வர விட்டால், இப்பொழுதே இந்தப் பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.''
அந்த ஏழைப் பெண் இதற்குமுன் இவ்வளவு பணத்தைப் பார்த்ததில்லை. அது அவளுக்கு மிகப் பெரி தாக இருந்தது.
''போ ஜான், போ. இது ஓர் அதிர்ஷ்ட ம்; இது ஓர் பெரும் பொக்கிஷம்" என்று கத்தினாள்.
பையன் சத்தம் ஒன்றும் செய்யாது நின்றுகொண் டிருந்தான். பின் மெதுவாகச் சொல்லுவான்: "அம்மா, என்னிடத்தில் வேறொரு பொக்கிஷம் உண்டு. அதை நான் காப்பாற்ற வேண்டும்; பணத்தைவிட அது மேலானது. அது என் கற்பு. நான் போகவே மாட்டேன்.''