41. ஏதேனும் ஒரு செயல் கெட்டது என்று அறியாமல் அதைச் செய்தால், அது அவர்களுக்குப் பாவம் ஆகுமா?
அந்தச் செயல் கெட்டது தான். ஆனால் சுத்த அறியாமை அல்லது களங்கமற்ற தன்மை, அந்தச் செயலுக்கு காரணமானது பற்றி, அது அவர்களுக்குப் பாவம் ஆகாது.
42. களங்கமற்ற தன்மை என்றால் என்ன?
ஓருவன் ஏதேனும் ஒரு செயலைச் செய்யும் பொழுது அது கெட்டதாயிருந்தாலும், அவன் அதை அறியாமல் உண்மையில், தான் செய்வது சரியானது என்று மனதில் எண்ணி, மனதுக்கு வஞ்சகமில்லாமல் செய்வதுதான் களங்கமற்ற குணம் எனப்படும்
43. சுத்த அறியாமை என்பது யாது?
தன்னுடைய அறியாமையைச் சற்றேனும் அறியாத தன்மைதான் சுத்த அறியாமை என்பது. அத்தகைய மனிதன் மெய்யாகவே. உண்மையை அறியவில்லை. ஆனால் தன் உள்ளத்தில் அது தனக்குத் தெரியுமென்று நினைக்கிறான்.
44. தான் செய்வது தவறாயிருக்கலாம் என்கிற சந்தேகத்தோடு ஒருவன் அதைச் செய்தால் அது பாவம் ஆகுமா?
பாவந்தான்; ஏனெனில் சந்தேகம் ஏற்பட்டவுடன் சந்தேகத்தை நீக்கிக்கொள்ளவேண்டிய கடமை அவனுக்கு உண்டு. மற்றவர்களிடம் கலந்து பேசி உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
45. சந்தேகம் ஏற்பட்டபோது, அதைப்பற்றி விசாரியாமல் இருப்பது பாவமா?
ஆம். அந்தப் பாவம் அசட்டைத்தனம் எனப்படும். இவ்விதம் விசாரித்து அறியாத குறையினால் ஏற்படும் சகல குற்றங்களுக்கும் அவன் பொறுப்பாளியாகிறாள். ஏனெனில், நம்மில் ஒவ்வொருவரும், நமக்கு தெரிந்திருக்கும் நியாயப்படி நடப்பதுமன்றி, நமக்குத் தெரியாதவைகளை ஆராய்ந்து அறியவும் கடமை உண்டு.
46. ஒருவன் தான் செய்வது சரி என்று நினைத்து ஒரு தீயசெயல் செய்கிறான்; செய்தபின் அது தவறு என்று தெரியவருகிறது. அதற்கு அவன் பொறுப்பாளியாவானா?
கடந்து போன அந்த செயலுக்கு அவன் பொறுப்பாளியல்ல; ஆனால் அதே செயலை மீண்டும் செய்வானாகில் அந்தக் குற்றம் அவனைச் சாரும்.
47. மனவஞ்சகமின்றி அல்லது சுத்த அறியாமையினால் செய்த தீய செயலுக்காகக் கடவுள் தண்டிப்பாரா?
அவர்களுடைய அறியாமை நீங்காதிருக்கும் வரை செய்த செயல்களுக்காக அவர்களைத் தண்டிக்க மாட்டார். தவறு என்று தெரிந்ததும் மனதாரச் செய்யும் தீச்செயலுக்காக மட்டுமே கடவுள் தண்டிப்பார்.