பில்லிசூனியம்

1. பில்லிசூனியம் ஆவதென்ன? 

மந்திரங்களினாலும், பலிப்பூசைகளினாலும், பசாசின் உதவியைக் கொண்டு பிறருக்கு வியாதி, பொருள், நஷ்டம் முதலிய துன்பங்களை வருவிக்கிறதும், அவர்களுக்குப் பகை, சிநேகம் மூட்டுகிறதும் பில்லிசூனியமாம்.


2. பில்லிசூனியம் செய்கிறது பாவமா? 

இது மகா பாவம் ஆகும்.  ஏனென்றால், இது நியாயத்துக்கும், பிறர்சிநேகத்துக்கும் விரோதமான பாவமாயிருக்கிறதுமன்றி, பேயின் உதவியால் நடைபெறுகிறபடியால், இதில் பேயாராதனையைச் சேர்ந்த பாவமும் அடங்கியிருக்கிறது.


3. பில்லிசூனியத்தை எப்படி எடுக்க வேண்டும்?

(1) அஞ்ஞானிகள் பசாசைக் கொண்டே பசாசைத் துரத்துவார்கள்.  அப்படியே சிலர் சூனியத்தைக் கொண்டு சூனியத்தை நிவிர்த்தி செய்கிறதுண்டு. இது சர்வேசுரனுக்கு ஏற்காத பாவம். ஆகையினால், சூனியத்துக்குப் பதிலாய்ச் சூனியம் போடவும், அல்லது பசாசுக்கடுத்த காரியம் செய்யவும் ஒருக்காலும் கூடாது.

(2)  முதன்முதல் சூனியமாக வைக்கப்பட்ட எலும்பு, ரோமம் முதலிய பொருளைத் தேடி தென்பட்டால், இவைகளை நாமே எடுத்து அழித்துவிட வேண்டும்.

(3)  நம்மாலே முடியாவிட்டால், வேறொருவன் அஞ்ஞானக் காரியங்கள் செய்யாமல் எடுத்தெரியும்படி பணம் கொடுக்கலாம்.

(4)  விசேஷமாய்த் திருச்சபை பேயோட்டும்படி ஏற்படுத்தின மந்திரங்களாலும், மந்திரிக்கப்பட்ட அர்ச். ஆசீர்வாதப்பர் சுரூபம் போடுவதாலும், தரிப்பதாலும், திவ்ய பூசையாலும், தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுவதாலும் பசாசைத் துரத்த வேண்டும்.


4. தலைவலி, மயக்கம், இளைப்பு, வலிப்புப் போன்ற வியாதிகள் உண்டானால், அது பசாசால் வந்ததாக நினைக்க ஆதாரம் உண்டா?

அப்படி அநேக புத்தியில்லாத மக்கள் வீணாய் நினைப்பார்கள். ஆனால் இவைகள் சுபாவ நரம்பு வியாதிகள்.  ஆகையால்,  தக்க மருந்து சாப்பிடவேண்டுமொழிய, வீண் பயத்துக்கு இடங் கொடுக்கக் கூடாது.