123. (61) நல்லவர்கள் மோட்சத்தில் அநுபவிக்கிற பாக்கியம் என்ன?
சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசித்து எப்போதைக்குஞ் சகல பேரின்ப பாக்கியங்களையும் அநுபவிக்கிறார்கள்.
1. மோட்சம் ஆவதென்ன?
அர்ச்சியசிஷ்டவர்கள் சம்மனசுக்களோடு சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசித்து, அவரைச் சுகித்தனுபவித்து, சுபாவத்துக்கு மேலான நித்திய பேரின்ப பாக்கியத்தைச் சம்பூரணமாய் அடைந்திருக்கும் ஸ்தலமாம்.
2. மோட்சபாக்கியமானது “சுபாவத்துக்கு மேலான பாக்கியம்” என்று சொல்லுவதேன்?
(1) சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசித்தல் அவருடைய பிள்ளைகளுக்கு உரியதாயிருக்கின்றது. ஆனால் சர்வேசுரனால் தமது பிள்ளையாகச் சுவீகரிக்கப்படுகிறது மனித சுபாவத்துக்கு மேலானதாயிருக்கின்றது.
(2) சர்வேசுரனைத் தரிசிப்பதால் “சர்வேசுரனுடைய வீட்டாருமாயிருக்கிறோம்” (எபே. 2:19). “அவருடைய இராச்சியத் துக்கு சுதந்தரவாளிகளும், அவரது நன்மைக்கும், பாக்கியத்துக்கும் பங்காளிகளுமாகிறோம்” (உரோ. 8:17). அப்படிப்பட்ட உரிமைகள் மனித சுபாவத்துக்கு மேலானதாயிருக்கின்றன.
(3) சர்வேசுரன் “அரூபியாயிருக்கிறார்” (1 திமோ. 1:17). “அவர் ஒருவரே எட்டாத ஒளியில் வசிக்கிறார், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்” (1 திமோ. 6:16). சுபாவ சக்தியினால் அவரைக் காண முடியாத தினால், அவரைத் தரிசிப்பது மனித சுபாவத்துக்கு மேலானதா யிருக்கின்றது.
3. மோட்சம் உண்டென்பது நிச்சயமா?
மோட்சம் உண்டென்பது விசுவாச சத்தியம். அந்த சத்தியத்தை வேதாகமத்திலிருந்தும், பாரம்பரியத்திலிருந்தும் எண்பிக்கலாம்.
4. பழைய ஏற்பாட்டில் மோட்சத்தைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறதென்ன?
(1) அரசனாகிய அர்ச். தாவீது மோட்ச பாக்கியம் எதில் அடங்கியிருக்கிறதென்று விவரித்திருக்கிறார் (சங். 25:9).
(2) தீர்க்கதரிசியான இசையாஸ் மோட்சத்தைப் பற்றிப் பேசும்போது, அவ்விடத்தில் “பசி தாகம் வரமாட்டா” என்றார் (இசை. 49:10).
(3) யோபு “என் இரட்சகர் உயிரோடிருக்கிறார்... என் மாமிசத்திலிருந்து என் தேவனைக் காண்பேன்” என்றார் (யோபு. 19:25,26).
(4) சர்வேசுரன் அபிரகாமை நோக்கி, “நாம்தான் உனக்குச் சம்பாவனையாக இருப்போம்” என்று திருவுளம்பற்றினார் (ஆதி. 15:1).
5. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறதென்ன?
(1) சேசுநாதர் மலைமீது பண்ணின பிரசங்கத்தில் “அகமகிழ்ந்து அக்களியுங்கள்; ஏனெனில், பரலோகத்தில் உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கிறது” என்று வசனித்தார் (மத். 5:12).
(2) ஆண்டவர் பொதுத் தீர்வையின் முடிவிலே நல்லவர்களைப் பார்த்து, “ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள், உங்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று உரைப்பார் (மத்.25:34).
6. திருச்சபையின் போதனை என்ன?
மோட்சம் உண்டென்று விசுவசிக்க வேணுமென்று திருச்சபை நமக்குக் கற்பிக்கிறது.
7. மோட்சம் எங்கே இருக்கிறது?
நிச்சயமாய் நமக்குத் தெரியாது. ஆனால் எல்லா வான மண்டலங்களுக்கு மேல் இருப்பதாக நினைக்கிறதற்கு வேதாகமத்தில் ஆதாரமுண்டு. அர்ச். சின்னப்பர் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் சொன்னதாவது, “எல்லா வானமண்டலங்களுக்கு மேலாக சேசுநாதர் ஏறினார்” (எபே. 4:10). மேலும் அவர் தம்மைப் பற்றிக் கொரிந்தியருக்கு எழுதினதாவது: “கிறீஸ்துவினிடமான ஒரு மனுஷனை நான் அறிவேன். அவன் பதினான்கு வருஷத்துக்கு முந்தி மூன்றாம் வானமண்டலமட்டும் உயர்த்தப்பட்டானென்று அறிந்திருக்கிறேன்” (2 கொரி. 12:2).
8. மோட்சவாசிகள் பெரும் பாக்கியத்தை அனுபவிக்கிறார்களா?
மோட்சவாசிகள் சகலவித பாக்கியங்களையும், சந்தோஷங்களையும் சம்பூரணமாய் அநுபவிக்கிறார்களென்று நாம் சொல்லக் கூடுமேயல்லாமல், அந்த மோட்ச பாக்கியத்தைப் பற்றி எவ்வளவுதான் வருணித்துப் பேசினபோதிலும், அது எப்படிப் பட்டதென்று உண்மையில் கண்டுபிடிப்பது இவ்வுலகில் கூடாத காரியம்.
9. இவ்விஷயத்தைப் பற்றி அர்ச். சின்னப்பர் எழுதி வைத்திருப்பதென்ன?
“சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை; காது கேட்டது மில்லை; மனிதருடைய இருதயத்திற்கு அவைகள் எட்டினது மில்லை” (1 கொரி. 2:9).
10. மோட்சவாசிகளின் பாக்கியங்களுக்குள் மேலான பாக்கியம் எது?
இடைவிடாமல், எப்போதும் நித்தியகாலம் சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிப்பதே, சகல பாக்கியங்களுக்குள் அவர்களுக்கு மேலான பாக்கியம். இதுதான் பேரின்ப தரிசனை என்று சொல்லப்படும்.
11.மோட்சவாசிகள் சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிப்பார்கள் என்று எப்படி நமக்குத் தெரியும்?
வேதாகமம் அதற்கு அத்தாட்சி.
“ஏக மெய்யான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப் பினவராகிய சேசுகிறீஸ்துவையும் அவர்கள் அறிந்து கொள்வதே நித்திய சீவியம்” (அரு. 17:3). “பிதாவே... நீர் எனக்குத் தந்தருளின மகிமையை நீர் எனக்குத் தந்தருளினவர்களும் காணும்படியாக, நான் இருக்கிற இடத்தில் அவர்களும் என்னோடிருக்க வேண்டு மென்று மனதாயிருக்கிறேன்” (அரு. 17:24). “இப்பொழுது நாம் கண்ணாடியில் மங்கலாய்க் காண்கிறோம். அப்பொழுது முகமுக மாய்க் காண்போம்” (1கொரி. 13:12). “அவர் இருக்கிற மாதிரியே அவரைத் தரிசிப்போம்” (1 அரு. 3:2). “வெள்ளம் போன்ற உமது இன்பங்களில் அவர்கள் தாகத்தைத் தீர்ப்பீர்; ஏனெனில் சீவியத்தின் சுனை உம்மிடத்திலிருக்கின்றது; உமது வெளிச்சத்தில் நாங்கள் வெளிச்சத்தைக் காண்போம்” (சங். 35:9,10).
12. பேரின்ப தரிசனை ஏன் சகல பாக்கியங்களுக்குள் மேலானதாயிருக்கிறது?
அதிலிருந்துதான் சந்தோஷமும், தேவசிநேகமும் உண்டா கிறது. மோட்ச ஆனந்தத்தின் பிரதான ஊற்று புத்தியில்தான் அடங்கியிருக்கிறது. புத்தியே மனிதனை மனிதனாக ஆக்கு கிறதால், புத்தி சர்வேசுரனைப் பிரத்தியட்ச தரிசனமாய்ப் பார்த்து, அவருடைய அளவற்ற நன்மைத்தனத்தை தரிசித்து, நேருக்கு நேராய்க் கண்டறியும்போது, ஆத்துமத்தில் பேரின்ப பாக்கியம் சம்பூரணமாய் உண்டாகிறது. இன்னும் இந்தத் தேவ தரிசனை யினால் நாம் ஒருவிதத்தில் உன்னத மேரையாய்த் தேவ சுபாவத் துக்குத் தானே பங்காளிகளாகிறோம். “அவருக்கு ஒப்பாயிருப் போம்; ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப் போம்” (1 அரு. 3:2).
13. சர்வேசுரனுடைய பிரத்தியட்ச தரிசனையல்லாமல் வேறு வகையான பாக்கியம் மோட்சவாசிகளுக்கு உண்டா?
(1) மோட்சவாசிகளின் பிரதான பாக்கியமான தேவ தரிசனை அவர்கள் புத்தியின் வழியாக உண்டாகிறதென்றாலும், சர்வேசுரனுடைய அளவற்ற அழகு சவுந்தரியத்தையும், நன்மைத் தனத்தையும் சுபாவத்துக்கு மேலான விதமாய் அவர்கள் சிநேகிப் பதால், அவர்களுடைய மனதுக்கும் வாக்குக்கெட்டாத சந்தோஷம் உண்டாகும்.
(2) மோட்சவாசிகள் தங்களுடைய முழு இருதயத் தோடு சர்வேசுரனைச் சிநேகிக்கிறதுமல்லாமல் சர்வேசுரனும் அவர்களை அளவில்லா நேசத்தோடு சிநேகிக்கிறார்.
(3) சர்வேசுரன் அவர்களுக்கு உடைமையாயிருப்பார். அவர்கள் எப்படிச் சர்வேசுரனுக்கு முழுதும் சொந்தமாயிருக்கிறார் களோ, அதுபோல் அவரும் அவர்களுக்கு முழுதும் சொந்த மாகிறார்.
(4) மகிமையுள்ளவராய் ஜீவிக்கும் சேசுநாதருடைய அர்ச்சிக்கப்பட்ட மனுUகத்தை அறிந்து, தரிசிப்பது ஒருக்காலும் வற்றாத பேரின்ப ஊற்றாயிருக்கும்.
(5) மோட்ச இராக்கினியாகிய அர்ச். தேவமாதாவின் ஆச்சரியத்துக்குரிய மகிமையையும், அவர்களுடைய வல்லமை, நன்மைத்தனம், தயாளம் முதலியவைகளையும் தரிசிப்பது, அவர் களுக்கு எவ்வளவோ ஆனந்த பாக்கியத்தைக் கொடுக்கும்.
(6) உயிர்த்தபின் சரீரத்துக்கும் அளிக்கப்படும் விசேஷ மகிமையும், சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்கள், சிநேகிதர், சொந்தக்காரர் முதலானோருடைய சகவாசமும் மேலான சந்தோஷத் துக்குக் காரணமாயிருக்கும்.
(7) கடைசியாய் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் அவர் விரும்பக் கூடிய சகல நன்மைகளையும் கைப்பற்றி தீமை வரும் என்னும் பயமின்றி அவைகளைக் கொண்டிருந்து, தங்களுடைய பாக்கியம் முடிவில்லாத காலம் நீடித்திருக்கும் என்று நிச்சயித்துக் கொண்டு சொல்லமுடியாத சுகத்தை அனுபவிப்பார்கள்.
14. மேற்சொன்ன பாக்கியமின்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷித்த மகிமை இருக்குமா?
ஒவ்வொருவரும் பூலோகத்திலும் செய்த சில விசேஷித்த புண்ணியத்துக்குத் தக்கவாறு ஒரு விசேஷித்த மகிமையும் இருக்கும். இப்படியே வேதசாட்சிகள் வேதசாட்சி மகிமையையும், (அரு. காட்சி. 7:14) கன்னியர் கன்னித்துவ மகிமையையும் அநுபவிப்பார்கள் (அரு. காட்சி. 14:4).
15. மோட்சவாசிகள் எல்லாரும் நித்திய பாக்கியத்தை ஒரே அளவில் அநுபவிக்கிறார்களா?
இல்லை. “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலம் உண்டு” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (அரு.14:2). ஆகையால் சிலர் உச்சித பாக்கியம் அநுபவிக்கிறார்கள். அது அவனவனுடைய பேறுபலன்களுக்கு ஒத்த விதமாயிருக்கும்.
16. குறைந்த பாக்கியமுள்ளவர்கள் அதிகமான பாக்கியமுடையவர்களின் பேரில் காய்மகாரப்படுகிறார்களா?
இல்லை. மோட்சத்தில் ஆசாபாசங்கள் ஒன்றும் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் அநுபவிக்கக்கூடிய சகல பாக்கியத்தைப் பூரணமாய் அடைந்துகொண்டு வருவதால், சம்பூரண பாக்கியம் அநுபவிப்பார்கள். விருந்து சாப்பிடுகிற இருவரில் ஒருவன் மற்றவனைவிட அதிகமாய்ச் சாப்பிட்டாலும், இருவரும் தங்களுக்குப் போதுமான அளவுக்கு சாப்பிடுவதால் திருப்தி அடைகிறார்கள். அப்படியே மோட்சவாசிகளின் பாக்கியத்தில் பல படிகளிருந்தாலும், எல்லோரும் பரிபூரண ஆனந்தம் கொண்டிருக்கிறார்கள்.