1. கெட்ட நினைவுகளுக்கும், கெட்ட ஆசைகளுக்கும் இடங்கொடாமல் அவைகளைத் தைரியத்துடனும் பிரமாணிக்கத்துடனும் தள்ளியிருந்தால், அவைகளைப் பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்த வேண்டுமா?
இவ்வாறு தள்ளினதினிமித்தம் பாவம் ஒன்றும் இல்லாததினால் அவைகளைப் பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்த வேண்டியதில்லை. ஆனாலும் அவைகளைத் தள்ளத் தாமதித்திருந்தால், அந்த விஷயத்தை வெளிப்படுத்துவது தகுதி.
2. கெட்ட நினைவுக்கு இடங்கொடுத்திருந்தால், அப்பாவத்தை எப்படிப் பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்த வேண்டும்?
கற்புக்கு விரோதமான பாவம் கட்டிக்கொள்ள ஆசைப் படாமல் நினைவில் மாத்திரம் மனம் பொருந்தி யோசித்திருந்தால், அந்த நினைவின் விவரங்களைப் பாவசங்கீர்த்தனத்தில் வெளிப் படுத்த வேண்டியதில்லை. கெட்ட நினைவு நினைத்தேனென்று சொல்லுகிறது போதும்.
3. கெட்ட ஆசைக்கு இடம் கொடுத்திருந்தால், எப்படிச் சொல்ல வேண்டும்?
அவைகளின் வகையையும், வகையை மாற்றுகிற விசேஷங் களையும் எல்லாம் அறிவிக்கவேண்டும். உதாரணமாக: திருமண மான ஒருவன் தனக்கு உறவுமுறையான திருமணமான ஒருத்தியுடன் மோக பாவம் செய்ய வேண்டுமென்ற ஆசைக்கு இடம் கொடுத் தால், இந்த விவரங்களை அறிவிப்பது கடமை. ஏனெனில், இந்த ஒரு ஆசையிலே நான்கு சாவான பாவங்கள் அடங்கியிருக்கின்றன.
4. கற்புக்கு விரோதமாய்ச் செய்த கிரிகைகளைப் பாவசங்கீர்த்தனத்தில் எப்படி வெளிப்படுத்த வேண்டும்?
இத்தனை தடவை கற்புக்கு விரோதமாய்ப் பாவம் கட்டிக் கொண்டேன் என்று பொதுவில் மாத்திரம் சொல்வது போதாது. கட்டிக்கொண்ட வெளிப்பாவங்கள் எவையென்றும், அவைகளின் தன்மையை மாற்றும் ஆள், இடம், பொருள் முதலிய விவரங்கள் எவையென்றும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியே பிறரோடு பாவம் கட்டிக்கொண்டிருக்கிறவன் எந்த அந்தஸ்துடைய ஆளோடு பாவம் கட்டிக்கொண்டானென்றும் சொல்லவேண்டும். ஆனாலும் மகா மரியாதையோடும், வெகு சுருக்கமாயும் அவை களைச் சொல்லவேண்டும்.
5. செயலால் பாவம் செய்திருந்தால், கற்புக்கு விரோதமான நினைவு நினைத்தேனென்று, அல்லது ஆசைக்கு இணங்கினேன் என்று அல்லது கெட்ட பார்வை பார்த்தேனென்று மாத்திரம் சொன்னால் போதுமா?
செயலால் பாவம் செய்திருந்தால், செயலால் பாவம் கட்டிக்கொண்டேனென்று விபரமாகச் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லாமல் கெட்ட நினைவு நினைத்தேனென்று அல்லது கற்புக்கு விரோதமான ஆசைக்கு இணங்கினேனென்று அல்லது கெட்ட பார்வை பார்த்தேனென்று மாத்திரம் சொல்லுகிறவன் தேவ துரோகமான கள்ளப்பாவசங்கீர்த்தனம் செய்கிறான்.