வலேன்சியா என்கிற இராச்சியத்தில் அல்பொராக என்னும் ஊரில் இருந்த குருவானவர் மரணபடுக்கையிலிருந்த ஒரு வியாதிக்காரனுக்குத் தேவநற்கருணை கொண்டுபோகும் போது வழியில் இருந்த ஆற்றில் இறங்கி போகையில் அந்த இரவில் மழை அதிகம் பெய்ததால் அவர் அந்தத் தண்ணீரில் வழுக்கி விழுந்தார் . தேவநற்கருணை பாத்திரமும் தண்ணீரில் விழுந்து போயிற்று இதனால் குருவானவர் மிகவும் கஷ்டப்பட்டார் . தண்ணீருக்குள்ளே விழுந்த தேவநற்கருணை பாத்திரத்தை எவ்வளவோ பிராயசையோடு தேடிபார்த்தும் காணாததினால் அவர் மிகவும் சங்கடப்பட்டு அந்த ஆற்றின் அருகிலிருக்கிற ஊரிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இச் செய்தியை அறிவித்தார் . அவர்கள் எல்லோரும் வந்து வலைகளை வீசி தேடினபோது , திறந்த பாத்திரம் மட்டுமே அகப்பட்டது . அதற்குள்ளே இருந்த தேவநற்கருணை காணாமற்போயிற்று. இதனால் அவர்கள் எல்லோரும் முன்பைவிட அதிக துயரம் அடைந்தனர் .
இப்படியிருக்கையில் தண்ணீருக்குள்ளே இருந்த இரு மீன்கள் தலையெடுத்து வாய் திறந்து வெளியில் நீட்டின நாக்கின் மேல் , காணாமற்போன தேவநற்கருணை இருக்கிறதை அவர்கள் கண்டு ஆச்சரியப்பட்டு குருவானவருக்கு அறிவித்தார்கள் . அவர் திவ்ய பலிபூசை ஆயத்தத்தை அணிந்து தேவநற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தவுடனே அந்த ஆற்றின் நடுவிலிருந்த அந்த மீன்கள் கரையின் ஓரத்திற்கு வந்து தண்ணீரை விட்டுப் பூமியின் மேல் வாயைத் திறந்து கொண்டு நின்றன . குருவானவர் அந்த மீன்களுடைய நாக்கின் மேல் இருந்த தேவநற்கருணையை எடுத்து பார்க்கிறபோது கொஞ்சமும் ஈரம் படாமலிருப்பதைக்கண்டு அவரும் மற்ற எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். குருவானவர் தேவநற்கருணையைப் பாத்திரத்திற்குள்ளே வைத்தவுடன் முன் சொல்லப்பட்ட மீன்கள் தண்ணீருக்குள்ளேபோயின .
கிறிஸ்தவர்களே ! நீங்கள் இப்போது கேட்ட புதுமையில் மீன்கள் தங்கள் வாயில் தேவநற்கருணை வந்தவுடன் தங்கள் தலையைத் தண்ணீரில் அமிழ்ந்தாமல் தங்கள் வாயில் தேவநற்கருணை இருக்கும் வரை தண்ணீரின் மேல் தலையை வைத்திருந்தன என்று கேட்டீர்களே , அவ்வாறு நீங்கள் தேவநற்கருணை வாங்கின பிறகு இயேசுநாதர் உங்கள் உள்ளத்திலே இருக்குமட்டுமாகிலும் உங்களுடைய நினைவு ஆறாகிய இந்த உலகத்தின் பற்பல விசாரங்களுக்குள்ளே இறங்காமல் மேலான பக்திவிஷயங்களை நினைக்க வேண்டும் .