1. முதல் கற்பனையைச் சொல்லு.
“உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.”
2. “கர்த்தர்” என்பதற்கு அர்த்தம் என்ன?
சகலத்தையும் படைத்து, அவைகளின்மேல் சர்வ அதிகாரம் உடையவர் என்று அர்த்தமாம்.
3. “இல்லாமல் போவதாக” என்றால் என்ன?
இருக்கலாகாது என்பது.
4. “உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே” என்று சர்வேசுரன் பத்துக் கற்பனையின் துவக்கத்தில் சேர்த்துச் சொல்லியிருப்பதேன்?
ஏனெனில் தாம் சர்வேசுரனாகவும், ஆண்டவராகவும் இருக்கிறபடியால் நமக்குக் கட்டளை கொடுக்கத் தமக்குப் பூரண அதிகாரம் உண்டென்றும், அந்தக் கட்டளைகளை அனுசரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோமென்றும் நம்மை எச்சரிக்க அவ்வார்த்தைகளை முதலில் சேர்த்துச் சொல்லுகிறார்.
127. முதல் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிற தென்ன?
தம்மை ஏக கர்த்தர் என்று சொல்லி, தம்மை விசுவசிக்கவும், நம்பவும், சிநேகிக்கவும், ஆராதிக்கவும் வேண்டுமென்று கற்பிக்கிறார்.
1. முதல் கற்பனையில் எத்தனை காரியங்கள் கற்பிக்கப் படுகின்றன?
1-வது. நாம் சர்வேசுரனை விசுவசிக்க வேண்டுமென்றும்,
2-வது. அவரிடத்தில் நம்பிக்கையாயிருக்க வேண்டுமென்றும்,
3-வது. அவரை முழு இருதயத்தோடு சிநேகிக்க வேண்டுமென்றும்,
4-வது. அவர் ஒருவரை மாத்திரம் ஆராதிக்க வேண்டுமென்றும் கற்பிக்கப்படுகின்றன.
2. முதல் மூன்று கடமைகளை நாம் எப்படி நிறைவேற்றுகிறோம்?
இம்மூன்று கடமைகளைத் தேவசம்பந்தமான புண்ணியங்களை அனுசரிக்கிறதினாலே நிறைவேற்றுகிறோம்.
குறிப்பு: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் இம்மூன்றும், தேவ சம்பந்தமான புண்ணியங்களைப் பற்றிய விளக்கத்தில் விவரித்துக் காட்டப்படும். (6-ம் பிரிவைக் காண்க.)