1. தேவதுரோகம் ஆவதென்ன?
தேவ காரியங்களை அவசங்கைப்படுத்துவதே தேவ துரோகமாம்.
2. எத்தனை வகை தேவ துரோகம் உண்டு?
ஆட்களைச் சார்ந்த தேவதுரோகம், இடங்களைச் சார்ந்த தேவதுரோகம், பொருட்களைச் சார்ந்த தேவதுரோகம் ஆகிய மூன்று வகை உண்டு.
3. “ஆட்களின் தேவதுரோகம்” என்றால் என்ன?
தலைப்பட்டம் பெற்று சர்வேசுரனுடைய ஊழியத்துக்காகத் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும், மூன்று வார்த்தைப்பாடு கொடுத்த சந்நியாசி, கன்னியாஸ்திரீ முதலியவர்களையும், அக்கிரமமாய் அவமதிக்கிறது ஆட்களைச் சார்ந்த தேவதுரோகமாகும்.
4. அப்பாவத்தைக் கட்டிக் கொள்பவர்கள் யார்?
(1) அவர்களோடு கற்புக்கு விரோதமான பாவம் கட்டிக் கொள்ள இச்சை வந்து அதற்கு இணங்குகிறவர்கள்;
(2) அவர்களை அவமரியாதை செய்து அடிக்கக் கை ஓங்குகிறவர்கள்;
(3) அவர்களை உலக அதிகார நீதிஸ்தலத்துக்கு அழைக்கிறவர்கள்.
5. “இடங்களின் தேவதுரோகம்” ஆவதென்ன?
திருச்சபையின் வெளியரங்கமான அதிகாரத்தால் தேவ ஊழியத்துக்காக அபிஷேகம் பண்ணப்பெற்ற அல்லது மந்திரிக்கப் பெற்ற இடங்களை, அதாவது: கோவில்களையும் கல்லறைகளையும் அநாசாரப்படுத்துவது இடங்களைச் சார்ந்த தேவதுரோகமாம்.
6. “திருச்சபையின் வெளியரங்கமான அதிகாரத்தால்” என்று சொல்லுவானேன்?
பொது மக்களுக்குத் திறக்கப்படாத செபக்கூடத்தை அவசங்கைப் படுத்துகிறது கனமான பாவமானாலும் தேவதுரோகமல்ல.
7. ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.
(1) கோவிலிலாவது, மந்திரிக்கப்பட்ட கல்லறையிலாவது கற்புக்கு விரோதமான வெளிப்பாவம் செய்கிறது;
(2) அவ்விடங்களில் அப்பாவங்களைச் செய்ய ஆசிக்கிறது, கொலை செய்கிறது, கன்னமிடுகிறது;
(3) திருச்சபையால் சபிக்கப்பட்டவர்களையும், அஞ்ஞானிகளையும் மந்திரிக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்கிறது.
8. “பொருட்களின் தேவதுரோகம்” ஆவதென்ன?
தேவ ஊழியத்துக்காகக் குறிக்கப்பட்ட பொருட்களை அவசங்கைப்படுத்துகிறது, பொருட்கள் சார்ந்த தேவதுரோகமாம்.
9. ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.
(1) தேவ ஊழியத்துக்காக உபயோகிக்கப்படும் பூசைப் பாத்திரம், உடுப்புகள் முதலிய தட்டுமுட்டுகளை அவசங்கையாய்த் தொடுகிறது, திருடுகிறது;
(2) கோவிலுக்குச் சொந்தமான நிலபுலம், வீடு முதலிய சொத்துகளையும், உண்டிப் பணத்தையும், பொருத்தனை, வத்திகளையும், பூசைக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் அபகரிப்பது.
(3) அர்ச்சியசிஷ்ட பண்டங்களையும், திருப்படங்களையும், சுரூபங்களையும் அவமானப்படுத்துகிறது, அவைகளைத் துன்மார்க்கமாய்க் கிழிக்கிறது, உடைக்கிறது;
(4) தேவத்திரவிய அனுமானங்களை அயோக்கியமானவர்களுக்குக் கொடுக்கிறது, அவைகளைத் தகாத விதமாய்ப் பெறுகிறது, தேவ நற்கருணையை அவசங்கைப்படுத்தி அவமானப்படுத்துகிறது இவை போன்றவைகளாம்.
10. தேவ ஊழியத்துக்காக உபயோகிக்கப்படும் சாமான்கள் யாவையும் தொடவே கூடாதா?
(1) விசேஷ உத்தரவில்லாமல் பூசைப் பாத்திரத்தையும், பூசையில் உபயோகித்தபிறகு தேவநற்கருணையை நேராய்த் தொடும் துணிகளையும் தொடுவது பாவமாகும்.
(2) மற்ற சாமான்களைத் தொடுவதற்குத் தடையில்லை.
11. கோவிலில் செய்யப்படும் திருட்டு எப்போதும் தேவ துரோகமா?
திருடப்பட்ட காரியம் வேறொரு மனிதனுடைய சொந்தப் பொருளாயிருந்தால், இத்திருட்டு கோவிலில் நடந்தபோதிலும், திருட்டாகிய பாவமாகுமொழிய தேவதுரோகமாகாது.
12. தேவதுரோகம் கனமான பாவமா?
தேவதுரோகம் தன்னிலேயே சாவான பாவமாயிருந்த போதிலும், சொற்ப விஷயத்தில் அற்பப்பாவமாயிருக்கக் கூடும். உதாரணமாக: ஒரு ரூபாய் பெறுமான (மிகக் குறைந்த மதிப்புள்ள) பொருளைத் திருடினால் அற்பப்பாவமாயிருக்கும்.
சரித்திரம்
சர்வேசுரன் மோயீசன் மூலமாய்க் கற்பித்தபடி ஆரோனும் அவரது மக்களும் மாத்திரமே தேவபெட்டகத்தைக் கையால் தொடக்கூடும். ஒருநாள் அத்திருப் பெட்டகத்தை ஒரு இரதத்தின் மேல் ஏற்றி, ஜெருசலேமுக்குக் கொண்டு போகும் போது, மாடுகள் மிரண்டு பெட்டியைச் சாயச் செய்ததைக் கண்டு, ஆரோனின் குடும்பத்தைச் சேராத ஓஸா என்பவன் அதைக் கையாலே பிடித்துத் தாங்கினான். “அப்பொழுது கர்த்தருக்கு ஓஸாவின்மேல் கோபம் மூண்டது; அவனுடைய துணிகரத்தைக் கண்டு அவர் அவனைச் சாகடித்தார். ஓஸா பெட்டகத்தின் பக்கத்தில் விழுந்து செத்தான்” என்று வேதாகமத்தில் சொல்லியிருக்கிறது (2 அரசர். 6:7).