அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - பரிசுத்ததனத்தின் விலையேறப்பெற்ற கைக்குட்டை

கைக்குட்டைகளைப் பற்றிய கனவு அசுத்த சோதனைகளை எதிர்த்துப் போராடுவதில் விரைவாயிருக்க நம்மை எச்சரிக்கிறது. அசமந்தமாக நிலைத்திருப்பது ஒருவனைப் பாவத்திற்குள் தள்ளி விடும். வீடு முழுவதும் தீப்பற்றி எரியும்போது யாரால் நெருப்பை அணைக்க முடியும்?

சோதனையின் காற்று வீசுகிறதா? உடனடியாக வலப்பக்கம், அதாவது மாமரியிடம் உதவிக்காகத் திரும்பு. தங்களிடமுள்ள புண்ணியங்களின் இராக்கினியின் கைக்குட்டைகளைக் காற்றுக்கும், மழைக்கும், ஆலங்கட்டி மழைக்கும் திறப்பாக வைத்திருக்கும் விவேகமற்ற சிறுவர்கள், சீக்கிரத்தில் அவற்றில் ஓட்டைகள் விழுந் திருப்பதையும், அவை உருவிழந்து, எந்த அழகுமின்றி இருப்பதையும் கண்டார்கள்.

மோட்ச இராக்கினிக்கு அருகில் இருந்த மனிதர்களில் ஒருவர், “வலப்பக்கம் திரும்புங்கள்” என்று சத்தமிட்டார். கிட்டத் தட்ட அவர்கள் எல்லோருமே அவருக்குக் கீழ்ப்படிந்து வலப்பக்கம் திரும்பினார்கள். அதாவது, அவர்கள் நல்ல பாவசங்கீர்த்தனம் செய் தார்கள். ஆகவே அவர்கள் தங்கள் கைக்குட்டைகளை சரிசெய்து கொண்டார்கள். 

ஆனால் இப்போது அந்தக் கைக்குட்டைகள் ஒட்டுப்போடப்பட்டு, சரிசெய்யப்பட்டிருந்தாலும், அவற்றில் மேற்கொண்டு ஒழுங்கான அமைப்பு இருக்கவில்லை. கடவுள் மன்னிக்கிறார், ஆனால் இயற்கை தண்டிக்கிறது! அசுத்தப் பழக்கங்கள் எப்போதுமே மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும். 

காலமும், நல்ல சித்தமும், கடவுளின் வரப்பிரசாதமும் மட்டுமே சேதங்களைச் சரிசெய்ய முடியும். அதற்கு ஒருவன் தேவ பக்தியையும், தாழ்ச்சியையும், பரித்தியாக உணர்வையும் வளர்த்துக் கொள்வதோடு, இயேசுக்கிறிஸ்துவின் அன்பிற்காக நற்செயல்கள் செய்யவும் வேண்டும். தீய பழக்கங்களில் தொடர்ந்து நிலைத்திருப்பவர்கள் நித்திய சாபத்தின் பெரும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

ஜூன் 14 இரவில், நான் உறங்கத் தொடங்கியதுதான் தாமதம், யாரோ ஒரு பலகையைக் கொண்டு என் படுக்கையின் சட்டத்தில் ஓங்கி அடித்தது போல, ஒரு பலத்த அடியால் நான் திடுக்கிட்டு விழித்தேன். நான் துள்ளி எழுந்தேன். என் படுக்கையைத் தாக்கியது மின்னல்தான் என்று நான் அச்சமயத்தில் நினைத்தேன். 

நான் சுற்றிலும் பார்த்தபோது, வழக்கத்துக்கு மாறான எதையும் காணவில்லை. நிச்சயமாகக் கனவுதான் கண்டிருக்கிறேன் என்ற முடிவோடு நான் மீண்டும் உறங்க முயன்றேன். கண்ணயர்ந்து போகத் தொடங்கிய போது, மீண்டும் ஓர் இரண்டாவது அடி என்னைத் திடுக்கிட வைத்தது. இந்த முறை நான் படுக்கையிலிருந்து எழுந்து, எல்லா இடங்களிலும் - படுக்கைக்குக் கீழும், எழுது மேஜைக்குக் கீழும், அறையில் மூலைகளிலும் - தேடினேன். 

ஆனால் வித்தியாசமான எதையும் நான் காணவில்லை. ஆகவே கடவுளின் பாதுகாவலுக்கு என்னை ஒப்புக்கொடுத்து விட்டு, பரிசுத்த தீர்த்தத்தால் என்னை மந்திரித்துக் கொண்டு, படுக்கச் சென்றேன். அதன்பின்தான் என் மனம் அங்குமிங்கும் அலையத் தொடங்கியது. நான் இப்போது சொல்லப் போவதை நான் கண்டேன். 

ஓரு பிரமாண்டமான பள்ளத்தாக்கு

நான் நம்முடைய கோவில் போதக மேடையில், பிரசங்கம் செய்யத் தயாராயிருப்பது போலத் தோன்றியது. சிறுவர்கள் அனைவரும் தங்கள் வழக்கமான இடங்களில் அமர்ந்து, தலை நிமிர்ந்து பார்த்தபடி காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதைப் பற்றிப் பிரசங்கம் செய்வது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. 

என் மனம் முற்றிலும் வெறுமையாயிருந்தது. சற்று நேரத்திற்கு நான் எதுவும் பேசாமல், திகைத்துப் போனவனாக நின்று கொண்டிருந்தேன். இது போன்ற ஒன்று, என் குருத்துவ ஊழியத்தின் இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட நிகழ்ந்ததில்லை. அப்போது திடீரென்று சுவர்களும், சிறுவர்களும் மறைந்து போக, கோவில் ஒரு பிரமாண்டமான பள்ளத்தாக்காக மாறியது. நான் தனியே இருந்தேன், என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. “இது

என்ன? ஒரு கணத்திற்கு முன்பு நான் கோவிலின் போதக மேடையில் இருந்தேன். ஆனால் இப்போது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறேனே! நான் கனவு காண்கிறேனா? எனக்கு என்ன நடக்கிறது?” என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன்.

நடந்து கொண்டேயிருக்க நான் முடிவு செய்தேன். வழியில் யாரையாவது சந்திக்கலாம், நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நான் நம்பினேன். சற்று நேரத்திற்குப் பிறகு, கம்பீரமான ஓர் அரண்மனைக்கு நான் வந்து சேர்ந்தேன். அதன் முகப்பு மாடிகளும், அகன்ற மொட்டை மாடிகளும் அந்தக் கட்டடத்தோடும், அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதியோடும் அழகாகப் பொருந்தின. 

அந்த அரண்மனைக்கு முன் ஒரு பெரிய திறப்பான பகுதி இருந்தது. வலப்பக்கத்தில், ஒரு மூலையில், பல சிறுவர்கள் ஒரு இராக்கினியைச் சுற்றிக் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த இராக்கினி ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒன்றாக கைக்குட்டைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். தத்தம் கைக்குட்டைகளைப் பெற்றுக்கொண்டதும், சிறுவர்கள் மொட்டை மாடிக்கு ஏறிச் சென்று, அதன் கைப்பிடிச் சுவர் நெடுக வரிசையாக நின்று கொண்டார்கள். 

நான் அந்த இராக்கினியை நெருங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் ஒவ்வொரு சிறுவ னிடமும் ஒரு கைக்குட்டையைத் தரும்போது: “காற்றடிக்கும் போது இதை விரிக்காதே. ஆனால் காற்றை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக நீ உணர்ந்தால், உடனே வலப்பக்கம் திரும்பு, ஒருபோதும் இடப்பக்கம் திரும்பி விடாதே” என்று சொல்வதை நான் கேட்டேன்.

புயல்

நான் தொடர்ந்து அந்தச் சிறுவர்களைப் பார்த்துக் கொண் டிருந்தேன். ஆனால் உடனடியாக அவர்களில் யாரையும் நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

கைக்குட்டைகள் எல்லாம் விநியோகிக்கப்பட்டு முடிந்த போது, சிறுவர்கள் முழு அமைதியில் மொட்டை மாடியில் வரிசை யாக நிறுத்தப்பட்டார்கள். நான் கவனித்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறுவன் தன் கைக்குட்டையை வெளியே எடுத்து, அதை விரித்தான். அவன் செய்வதைக் கண்டு மற்றவர்களும் தங்கள் கைக்குட்டைகளை விரித்தார்கள். 

விரைவில் எல்லோருமே தத்தம் கைக்குட்டைகளை வெளியே எடுத்திருந்தார்கள். அந்தக் கைக்குட்டைகள் மிகப் பெரியவையாகவும், பொன்னால் மிக அற்புதமாக நூற்பின்னல் வேலைகள் செய்யப்பட்டவையாகவும் இருந்தன. அவை ஒவ்வொன்றின் மீதும், நீளவாக்கில் பொன் எழுத் துக்களில், “ரெஜினா விர்த்தூத்தும் - புண்ணியங்களின் இராக்கினி” என்று எழுதப்பட்டிருந்தது.

திடீரென வடக்கிலிருந்து, அதாவது இடப்பக்கத்திலிருந்து ஒரு மெல்லிய தென்றல் வீசியது. படிப்படியாக அது பலம் பெற்றது; அதன்பின் அது பலத்த காற்றாக மாறியது. சில சிறுவர்கள் உடனடி யாகத் தங்கள் கைக்குட்டைகளை மடித்து, அவற்றை மறைத்துக் கொள்ள, மற்றவர்கள் விரைவாக வலப்பக்கம் திரும்பினார்கள். ஆனால் வேறு பல சிறுவர்கள் அதற்குப் பதிலாக, தங்கள் கைக்குட்டைகளைக் காற்றுக்குத் திறப்பாக வைத்திருந்தார்கள். 

அவை படபட வென அடித்துக்கொள்ள விட்டுவிட்டு அலட்சியமாக இருந்தார்கள். இதனிடையே அந்தக் காற்று மேலும் வலிமை பெற்றது. அதே வேளையில், அச்சுறுத்தும் இருண்ட மேகங்கள் வானத்தில் திரண்டு, அதை இருளச் செய்தன. மின்னல் வெட்டியது, நடுங்க வைக்கும் இடி முழக்கங்கள் வானங்களின் குறுக்கே உருண்டோடின, இவற்றைத் தொடர்ந்து ஆலங்கட்டி மழையும், மழையும், பனியும் பொழிந்தன. 

நம்ப முடியாத வகையில் பல சிறுவர்கள் தங்கள் கைக்குட்டைகளை இந்தப் புயலில் படபடக்கும்படியாக திறப்பாகவே வைத்திருந்தார்கள். ஆலங்கட்டிகளும், மழையும், பனியும் அவற்றை இரக்கமின்றி தொடர்ந்து தாக்கின. வெகு விரைவில் அவை பொத்தல்கள் விழுந்து போயின, அடையாளம் காணமுடியாத அளவுக்குக் கிழிந்து போயின.

நான் இச்சமயத்தில் என்ன செய்வதென்று அறியாமல் மலைத்துப் போனேன். என்றாலும் இன்னும் அதிகப் பெரிதான ஓர் அதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. நான் சிறுவர்களை நெருங்கிச் சென்று அவர்களைக் கூர்ந்து கவனித்த போது, அவர்களில் ஒவ்வொருவனையும் அடையாளம் கண்டுகொண்டேன். அவர்கள் என் சொந்த ஆரட்டரியைச் சேர்ந்த சிறுவர்கள்தான். ஆகவே நான் அவர்களில் ஒருவனிடம் அவசரமாகச் சென்று, அவனிடம், “நீ என்ன தான்செய்து கொண்டிருக்கிறாய்? நீ இன்னான்தானே?” என்றுகேட்டேன்.

"ஆம், நான்தான்” என்று அவன் பதிலளித்தான். அதன்பின் வேறு பலரைச் சுட்டிக் காட்டி, “இன்னின்னாரும் இங்கே இருக் கிறார்கள்!” என்றான்.

அப்போது நான் கைக்குட்டைகளை விநியோகித்த அந்த இராக்கினியிடம் சென்றேன். அவர்களைச் சுற்றிப் பல மனிதர்கள் இருந்தார்கள்.

“இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று நான் அந்த மனிதர் களிடம் கேட்டேன்.

அந்த இராக்கினியே என் கேள்வியைக் கேட்டு, என்னிடம் திரும்பினார்கள்: “கைக்குட்டைகளில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தை களை நீ பார்க்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டார்கள்.

“ஏன், ஆம், என் எஜமானியே, ரெஜினா வீர்த்தூத்தும் என்று எழுதியிருக்கிறது” என்று நான் பதிலளித்தேன்.

“இப்போது உனக்குப் புரிகிறதா?”

“ஆம், புரிகிறது!” 

ஜெபத்திடம் துரிதமாகத் தஞ்சமடைதல்

எல்லாச் சிறுவர்களும் சோதனையின் காற்றுக்குத் தங்கள் பரிசுத்ததனத்தைத் திறந்து வைத்திருந்தார்கள். சிலர், ஆபத்தை உணர்ந்ததும், உடனடியாக அதிலிருந்து தப்பித்து ஓடிப் போனார்கள். அவர்கள்தான் தங்கள் கைக்குட்டைகளை மடித்து, மறைத்துக் கொண்டவர்கள். மற்றவர்கள், காற்றைக் கண்டு திகைத்துப் போய், தங்கள் கைக்குட்டைகளை மடிக்க முடியாமல், வலப்பக்கம் திரும்பினார்கள். இவர்கள் ஆபத்தில் இருக்கும்போது ஜெபத்திடம் துரிதமாகத் தஞ்சமடைந்தவர்கள், இவர்கள் தங்கள் எதிரிக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிக் கொண்டார்கள். ஆனால் மற்றவர்களோ சோதனையின் முழுத் தாக்குதலுக்கும் தங்கள் கைக்குட்டைகளைத் திறப்பாக வைத்திருந்து, பாவத்தில் விழுந்தார்கள்.

இந்தக் காட்சியாலும், என் சிறுவர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களைப் பரிசுத்தமாகக் காத்துக் கொண்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் துயருற்றவனாக, நான் கிட்டத்தட்ட கதறியழும் நிலையில் இருந்தேன். மீண்டும் என்னையே கட்டுப்படுத்திக் கொள்ள என்னால் முடிந்தபோது, “மழைத்துளிகளும், பனித் திவலைகளும் கூட கைக்குட்டைகளை ஏன் கிழித்தன? அவை அற்பப் பாவங்களின் அடையாளங்கள் அல்லவா?” என்று நான் கேட்டேன்.

அந்த மனிதர்களில் ஒருவர் பதிலுக்கு, “பரிசுத்ததனத்தைப் பொறுத்த வரை, நோன் தாத்துர் பார்வித்தாஸ் மாத்தேரியே - கனமானது என்று கருதப்படாத காரியம் எதுவுமில்லை என்பது உமக்குத் தெரியாதா? ஆயினும், தைரியமிழக்காதீர்; வந்து பாரும்” என்றார்.

அவர் நகர்ந்து முகப்பு மாடிக்குச் சென்று, தமது கரத்தால் சிறுவர்களுக்குச் சைகை காட்டி, உரத்த சத்தமாக: “வலப்பக்கம் திரும்புங்கள்!” என்றார். கிட்டத்தட்ட எல்லோரும் கீழ்ப்படிந்தனர்; ஆனால் ஒருசிலர் அசையவேயில்லை. அவர்களுடைய கைக் குட்டைகள் கந்தலாகியிருந்தன. வலப்பக்கம் திரும்பியவர்களின் கைக் குட்டைகள் சுருங்கியிருந்ததையும், ஒட்டுக்கள் போடப்பட்டிருப் பதையும் கூட நான் கவனித்தேன். அவற்றில் பொத்தல்கள் இல்லை, என்றாலும் அவை பரிதாபமான முறையில் உருவிழந்திருந்தன.

“இந்தச் சிறுவர்கள் தங்கள் பரிசுத்ததனத்தை இழக்கும் துர்ப் பாக்கியத்திற்கு உள்ளானார்கள். ஆனாலும் பாவசங்கீர்த்தனத்தின் வழியாக அவர்கள் கடவுளின் வரப்பிரசாதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். சற்றும் அசையாத அந்த சிலர் பாவத்தில் நிலைத் திருப்பவர்கள், அவர்கள் ஒருவேளை அழிவுக்குச் செல்வார்கள்'' என்று அந்த இராக்கினி விளக்கினார்கள். இறுதியாக அவர்கள் என்னிடம்: “நேமினி தீச்சித்தே, செத் தாந்த்தும் அத்மோனே - யாரிடமும் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லாமல், ஒரு பொது எச்சரிக்கை மட்டும் கொடு” என்றார்கள்.