தமியான் இராயப்பர் பிறந்து சிறிது காலத்திலேயே தம் தந்தையையும் தாயையும் இழந்து விட்டார். ஆகவே அவரது சகோதரர்களில் ஒருவர் அவரை சுவீகரித்துக் கொண்டு, மிகக் கடுமையாக அவரை நடத்தத் தொடங் கினார். தமியான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. போதிய உணவோ, உடலை மூடவும், குளிரைத் தாங்கவும் போதுமான உடைகளோ அவருக்குக் கிடைக்கவில்லை.
ஒருநாள், தமியான் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்டெடுத்தார். அவரைப் பொறுத்த வரை அது ஒரு பெரிய புதையல்தான். அந்த நாணயத்துக்கு சொந்தக்காரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தமியான் அதை எந்த மனவுறுத்தலுமின்றி தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நண்பன் ஒருவன் ஆலோசனை கூறினான்.
தமக்கு எது அதிகமாகத் தேவைப்படுகிறது என்று கண்டுபிடிப்பதுதான் தமியானின் ஒரே பிரச்சினையாக இருந்தது. ஏனெனில் அவரிடம் பல அத்தியாவசியமான பொருட்கள் இல்லாதிருந்தன.
இதுபற்றி அவர் தம் சிந்தித்துக் கொண்டிருந்த போது, இதைவிட மிகவும் நல்ல வேறு ஒரு காரியத்தை அந்த நாணயத்தை வைத்து செய்யலாம், அதாவது உத்த ரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆன்மாக்களுக்காகவும், விசேஷமாக தன் பிரியமுள்ள பெற்றோரின் ஆன்மாக்களுக் காகவும் பூசைக்குப் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணம் திடீரென அவருக்கு வந்தது. உடனே, ஒரு பெரும் பரித் தியாக உணர்வோடு, அவர் இந்த எண்ணத்தைச் செயல்படுத்தலானார். பூசையும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
உடனே அவருடைய வாழ்வில் ஒரு முழுமையான மாற்றம் வந்தது!
அவருடைய மூத்த அண்ணன் திடீரென்று தமியான் வசித்த வீட்டிற்கு வந்தார். அங்கே சிறுவன் அனுபவித்த வந்த மிருகத்தனமான கொடுமைகளைக் கண்டு மனம் பதைத்துப் போன அவர், உடனடியாக, சிறுவனைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். தம் வீட்டிற்கு அழைத்து வந்து, அவருக்கு நல்ல துணிமணிகள் தந்து, தம் சொந்தப் பிள்ளையைப் போல அவரைப் பராமரித்தார்.
பள்ளிக்கு அனுப்பினார், மிகவும் பாசத்தோடு அவரைக் கவனித்துக் கொண்டார். அடுத்தடுத்து ஆசீர்வாதங்கள் பொழியத் தொடங்கின. தமியானின் அற்புதமான திறமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. விரைவில் குருமடத்தில் சேர்ந்து, குருத்துவ அபிஷேகம் பெற்றார்; சிறிது காலத்திற்குப் பிறகு, மேற்றிராணியாராக உயர்த்தப்பட்டார், இறுதியாக ஒரு கர்தினால் ஆனார்.
அவருடைய மாபெரும் அர்ச்சிய சிஷ்டதனத்துக்கு அவருடைய புதுமைகள் சாட்சியம் கூறின. இதனால் தமது மரணத்துக்குப் பிறகு அவர் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்றதோடு, திருச்சபையின் வேதபாரகர் என்ற மகிமையையும் பெற்றுக் கொண்டார். இந்த அற்புதமான வரப்பிரசாதங்கள், ஒரு நீரூற்றிலிருந்து பொங்கி வழிவது போல, அந்த ஒரே ஒரு பூசையிலிருந்து அவர் மீது பொழியப்பட்டன.