43. இப்படிக் கெட்டுப்போன மனுஷனைச் சர்வேசுரன் கைவிட்டு விட்டாரோ?
இல்லை; அவன் பேரில் மனமிரங்கி ஒரு இரட்சகரை அனுப்பு வதாக வாக்குக் கொடுத்தார்.
1. ஒரு இரட்சகரை அனுப்புவதாகச் சொன்ன சர்வேசுரன் முதல் விசை யாருக்கு, எப்போது வாக்குக் கொடுத்தார்?
ஆதித்தாய் தகப்பன் பாவம் கட்டிக்கொண்டபின் சர்வேசுரன் அவர்களைச் சிங்காரத் தோட்டத்தினின்று துரத்தி விடுகிறதற்கு முன், அவர்களைப் பசாசின் அடிமைத்தனத்தினின்று மீட்டு, மோட்ச வாசலைத் திரும்பத் திறக்கும்படியாக மெசையா என்று அழைக்கப்படும் ஒரு இரட்சகரை அனுப்புவதாக அவர் அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார் (ஆதி. 3:15).
2. ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்கைப் பின்னால் அவர் ஸ்திரப்படுத்தினாரா?
பிற்காலத்தில் அவ்வப்போது பிதாப்பிதாக்களிடம், தீர்க்கதரிசிகளிடம், புண்ணியவான்களிடமே சர்வேசுரன் அந்த வாக்கை ஸ்திரப்படுத்தினார் (ஆதி. 22:18, 26:24, 28:14, 49:10; உபா. 18:15).
3. இரட்சகரின் வருகையை முன் அறிவித்தவர்கள் யார்?
இரட்சகரின் வருகையைக் குறித்து சர்வேசுரனால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகள் முன் அறிவித்தார்கள்.
4. அவர்கள் முன் அறிவித்த வியங்கள் எத்தன்மையானவை?
மெசையா தாவீது வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும், எந்தக் காலத்தில் (தானி. 9:24), பெத்லகேம் ஊரில் (மிக். 5:2), ஒரு கன்னிகையின் உதரத்தினின்று பிறப்பார் என்றும், (இசை. 7:14), அவர் அநேக புதுமைகளைச் செய்து, மரணத்தை அடைந்து (தானி. 9:26) உயிர்ப்பார் என்றும் (சங். 15:10) உலகம் எங்கும் அவருடைய தெய்வீக வேதம் பரம்பும் என்றும் (தானி. 2:44) அநேக வருங்களுக்கு முன்னே தீர்க்கதரிசிகள் முன் அறிவித்திருந்தார்கள்.
5. சர்வேசுரன் மனிதருக்குத் தயை காட்டியிராவிட்டால் அவர்களுடைய கதி என்னவாயிருந்திருக்கும்?
சகல மனிதரும் தங்கள் சொந்தப் பிரயாசையால் மோட்ச கதவைத் திறக்கக்கூடாதவர்களாயிருந்து, நித்திய பாதாளத்துக்கு ஆளாயிருந்திருப்பார்கள்.
44. மனிதன் தானே தன்னை இரட்சித்துக் கொள்ள முடியுமோ?
தன்னை இரட்சித்துக் கொள்ள, அதாவது பாவத்தினால் சர்வேசுரனுக்கு வந்த அவமானத்திற்குத் தகுந்த பரிகாரம் செய்ய மனிதனால் முடியவே முடியாது.
45. ஏன் முடியாது?
பாவமானது சர்வேசுரனுக்கு அளவில்லாத துரோகமானதால், அதற்குத் தகுந்த பரிகாரம் செய்ய அளவுள்ள வஸ்துவாகிய மனிதனால் முடியாது.
1. தகுந்த பரிகாரம் என்றால் என்ன?
செய்யப்பட்ட துரோகத்தின் அளவுக்கு ஈடான பரிகாரமாம்.
2. ஏழை ஒருவன் ஒரு பெரிய சக்கரவர்த்திக்கு மகா அவமானம் செய்திருந்தால் அதற்கு முழுப் பரிகாரம் செய்ய அவனால் கூடுமா?
அவன் ஒருவித பரிகாரம் செய்யக் கூடும் என்றாலும் இராயனுடைய மகிமைக்கு முழு பரிகாரம் செய்ய அவனாலே முடியாது.
3. ஏன் முடியாது?
அவனுக்கும் அந்த சக்கரவர்த்திக்கும் மகா தூர வித்தியாசம் இருக்கிறபடியால், முழுப்பரிகாரம் இருக்கும்படியாக, சக்கரவர்த்திக்கு ஈடான வேறொரு சக்கரவர்த்தி மேற்படி குற்றத்திற்குப் பரிகாரம் செய்தால்தான் அதற்கு முழுப் பரிகாரமாகும்.
4. பாவத்துக்குச் செய்யப்படும் பரிகாரம் தகுந்த பரிகாரமா யிருக்கும்படி, அது எப்பேர்ப்பட்டதாயிருக்க வேண்டியது?
சர்வேசுரன் அளவறுக்கப்படாதவர். ஆனதால் அவருக்கு விரோதமாய்க் கட்டிக் கொண்ட சாவான பாவம் அளவில்லாத துரோகமாயிருக்கிறது. ஆதலால் பாவத்துக்குச் செய்ய வேண்டிய பரிகாரம் அளவில்லாத பரிகாரமாயிருக்க வேண்டியது.
5. தகுந்ததும், அளவில்லாததுமான பரிகாரம் மனிதனாலே செய்யக் கூடுமா?
மனிதன் அளவுள்ள வஸ்து ஆனதால், அவனாலே அளவில்லாத பரிகாரம் செய்ய முடியாது. மேலும் மனிதனுக்கும் சர்வேசுரனுக்கும் ஈடு ஒன்றுமில்லை.
6. தேவமாதாவினாலும், சம்மனசுகளாலும் பாவத்துக்குப் பரிகாரம் செய்ய முடியாதா?
அவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பிரயாசப்பட்டாலும், பாவத்தைப் பரிகரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் சர்வேசுரனுக்கு ஈடானவர்களல்ல.
7. இது இப்படியிருக்க பாவத்துக்குத் தகுந்த பரிகாரம் யாராலே செய்யக் கூடுமாயிருந்தது?
ஒரு தேவ மனிதரால் செய்யக் கூடுமாயிருந்ததொழிய மற்றப்படியல்ல. ஆகையால் ஒரு தேவ ஆள் மனுஷாவதாரம் செய்ய முழுதும் அவசியமாயிருந்தது.
8. இரட்சகரின் வருகைக்கு முன்பு இருந்த மனிதர்கள் இரட்சணியம் அடையக் கூடியவர்களாயிருந்தார்களா?
இரட்சகர் பேரிலும், அவருடைய பேறுபலன்கள் பேரிலும் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தாலும், தேவ சிநேகத் தாலும் அவரோடு ஐக்கியமான மனிதர்கள் இரட்சணியம் அடையக் கூடியவர்களாயிருந்தார்கள்.