208. செபம் என்பது என்ன?
மனிதன் சர்வேசுரனை தியானித்து அவரை ஆராதித்துத் தோத்திரிப்பதும், தனக்கு வேண்டிய வரங்களை கேட்பதும் செபம் எனப்படும்.
209. எத்தனைவகை செபம் உண்டு?
மனச் செபம், வாய்ச் செபம் ஆக இரண்டு வகைச் செபமுண்டு.
210. அடிக்கடி செபம் செய்ய வேண்டுமோ?
வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.
211. விசேஷமாய்.. எப்போது செபம் செய்ய வேண்டும்?
காலை மாலையிலும், பாவச்சோதனை சமயத்திலும், மரணத்தருவாயிலும் விசேஷமாய் செபம் செய்யவேண்டியது.
212. நாம் செய்யும் கிரியைகள் எல்லாம் செபம்போல் ஆகும்படி செய்ய வேண்டியதென்ன?
நமது கிரியைகளையெல்லாம் சுத்தக்கருத்துடன் செய்து தேவ தோத்திரத்திற்காகவும் நமது ஆத்தும நன்மைக்காகவும் ஒப்புக் கொடுக்கவேண்டும்.
213. செபம் செய்யும்போது நாம் சர்வேசுரனைப் பார்த்து கேட்க வேண்டியதென்ன?
தேவ தோத்திரத்திற்கு ஏதுவானவைகளையும், நமது ஆத்தும நன்மைக்குத் தேவையானவைகளையும் முக்கியமாய் கேட்க வேண்டும்.
214. உலகியல் நன்மைகளையும் கேட்கலாமோ?
ஆம், கேட்கலாம். ஆனால் தேவசித்தத்துக்கு அமைந்த மனதோடு கேட்க வேண்டும்.
215. எல்லா செபங்களிலும் சிறந்தவை எவை?
1-வது யேசுகிறிஸ்துநாதர் தாமே கற்பித்த செபம்.
2-வது மங்களவார்த்தை செபம்.
216, கர்த்தர் கற்பித்த செபத்தில் அடங்கிய மன்றாட்டுகள் எவை?
முதல்பாகத்தில் சர்வேசுரனுடைய தோத்திரத்துக்கு ஏதுவான வைகளும். இரண்டாம் பாகத்தில் நமது அவசரங்களுக்குத் தேவையானவைகளுமான மன்றாட்டுகள் அடங்கியிருக்கின்றன.
217. மங்களவார்த்தை செபத்தில் அடங்கி இருக்கிறதென்ன?
முதல்பாகத்தில் தேவமாதாவைப் பார்த்து கபிரியேல் சம்மனசு சொன்ன மங்கள வாழ்த்துதலும், இரண்டாம் பாகத்தில் நாம் திவ்விய தாயாரிடம் கேட்கும் மன்றாட்டும் அடங்கியிருக்கின்றன.