86. புறணி என்றால் என்ன?
(புறம் = வெளி) பிறனுக்குப் பின்னாலேயும், அவனுக்குத் தெரியாமலும், அவன் பேரில் குற்றங்குறைகளைச் சொல்லி அவனுடைய கீர்த்தியைக் கெடுப்பது புறணி எனப்படும்.
87. எத்தனைவிதமாகப் புறணி பேசக்கூடும்?
(1) பிறர் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்துவதினாலும்,
(2) அவனுடைய இரகசியமான குற்றங்களைத் தெரியாதவர்களுக்கு வெளியாக்குவதாலும் புறணி பேசக்கூடும்.
88. ஒருவன் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்துவது எப்படிப்பட்ட பாவம்?
அது பிறர் சிநேகத்துக்கும். நீதிக்கும் விரோதமான பாவந்தான். ஆனால் அவனுக்குக் கனமான நஷ்டம் அல்லது அவகீர்த்தி உண்டானால் கனமான பாவமாகும்.
89. பிறர்மீது பொய்யான குற்றங்களைச் சொன்னவர்கள் செய்யவேண்டியதென்ன?
(1) அவர்கள் தங்கள் குற்றத்துக்குப் பரிகாரமாகத் தாங்கள் பிறர் மீது சாட்டியது பொய்யென்று அனைவரும் அறியும்படி தெரிவிக்கவேண்டும்.
(2) பிறருக்கு விளைவித்த தஷ்டத்தைத் தங்களால் கூடியமட்டும் ஈடுசெய்யவேண்டும்.
90. ஒருவனிடம் உண்மையாகவே குற்றங்குறைகள் இருக்கும் போது அவைகளை வெளிப் படுத்தலாமா?
அதைப்பற்றித் தெரியாதவர்களுக்கு. அவைகளை ஏற்ற காரணமின்றி வெளிப்படுத்தக்கூடாது அவைகளை வெளிப்படுத்துகிறவன், அநியாயமாய் பிறருடைய கீர்த்தியைக் கெடுப்பதால், நீதிக்கும், பிறர்சிநேகத்துக்கும் விரோதமான பாவம் கட்டிக்கொள்கிறான்.
91. இது எப்போது கனமானதாக அல்லது அற்பமானதாகும்?
(1) பிறர் செய்த குற்றம் கனமானதாயிருந்து, அதை தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்தினபடியால், அதன் பொருட்டு அவனுக்குக் கனமான நஷ்டம் அல்லது அவமானம் உண்டானால் கனமான பாவமாகும்.
(2) கவனக் குறைவினால் பிறருக்கு விரோதமாகப் பேசினால் அல்லது பேசின விஷயம் அற்பமானதாக இருந்தால் அற்பப்பாவமாகும்.
92. பிறருடைய ரகசியமான குற்றங்களை வெளியாக்குதல் எப்போதும் பாவமாய் இருக்குமா?
குற்றம் செய்தவனுக்கு நன்மை செய்யக்கூடியவரிடத்திலும். குற்றத்தை வெளிப்படுத்தாவிட்டால் நஷ்டப்படுகிற வனிடத்திலும், குற்றத்தை அறிவிப்பது பாவம் அல்ல. உதாரணமாக ஒருவன் கெட்ட வழியில் நடக்கிறானென்று வைத்துக்கொள்வோம்; அதை அவனுடைய தகப்பனாருக்கு அறிவித்தால் நன்மை விளையுமென்று தெரியும்போது, அவரிடம் அதைப்பற்றி தெரிவிக்கலாம்.
93. பிறருடைய இரகசியமான குற்றத்தை வெளியாக்குவது நமது கடமையாக இருக்கக் கூடுமா?
சிலசமயங்களில் இருக்கக்கூடும். எப்போதென்றால், பொது நன்மைக்கோ, தமது அல்லது பிறருடைய நன்மைக்கோ அவசியமாயிருக்கும் போது. உதாரணமாக; பிள்ளைகளுக்குள்ளே, யாரேனும் ஒருவன் தன் உரையாடல்களாலோ, செயல்களாலோ, மற்றவர்களுக்குக் கனமான பாவத்துக்குக் காரணமாயிருக்கும் போது. அவன் மேல் அதிகாரமுள்ளவர்களிடம் மட்டும் அவனுடைய நடத்தையைப்பற்றி அறிவிக்கக் கடமையுண்டு.
94. பிறருடைய இரகசியமான குற்றத்தைத் தக்க முகாந்தரமின்றி அறிவித்தவன் செய்ய வேண்டியதென்ன?
அவனுக்கு விளைவித்த நஷ்டத்தை தன்னால் கூடிய மட்டும் பரிகரித்து அவனுடைய கீர்த்தியை விளங்கப் பண்ண வேண்டும்.
95. பிறர் செய்த குற்றம் எல்லோருக்கும் தெரிந்ததாயிருந்தால் அதை வெளிப்படுத்துவது புறணியாகுமா?
அது புறணியல்ல. அப்படிப்பேசுவது நீதிக்கு விரோதமான பாவமாயிருக்கலாம்.
96. புறணி பேசுவதற்கு உடந்தையாயிருக்கிறவர்கள் யார்?
(1) புறணி பேச ஒருவனைத் தூண்டுகிறவனும்,
(2) அவன் தைரியம் கொள்ளுவதற்குக் காரணமாக இருக்கிறவனும்,
(3) புறணியை நிறுத்தக் கடமைப்பட்டிருந்து அதை நிறுத்தாமல் இருக்கிறவனும்,
(4) அவன் சொல்வதை மகிழ்ச்சியுடன் கேட்கிறவனும் புறணி பேசுவதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
97. அவர்கள் கட்டிக்கொள்ளும் பாவம் என்ன?
கனமான காரியத்தில் அவர்கள் நீதிக்கும், பிறர் சிநேகத்துக்கும் விரோதமான கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள் என்று சொல்லலாம்.
98. புறணியைக் கேட்கிறவர்கள் செய்ய வேண்டியதென்ன?
தங்களால் கூடிய மட்டும் அதை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், இவ்விதமான பேச்சை மாற்றி வேறொரு விஷயத்தைக் குறித்துப் பேசத் துவக்கவேண்டும். அல்லது தன்னுடைய மௌனத்தாலும், முகக் குறியினாலும், இத்தகைய பேச்சை தனக்கு இஷ்ட மில்லை என்று காட்ட வேண்டும்.
99. ஒருவன்மீது விரோதமாகச் சொல்லப்பட்டதை அவனிடத்தில் போய் அறிவிக்கலாமா?
புறணி பேசுவதைவிட இது அதிக அருவருப்புக் குரியது ஏனெனில், இதனால் மக்களுக்குள் பகை, சண்டை சச்சரவு. பிரிவினை, சமாதானக் குறைவு முதலான கேடுகள் விளையும். சகோதரர்களுக்குள்ளே பிரிவினை உண்டாக்குகிறவர்களை கடவுளை வெறுக்கிறார். 'சமாதானமுள்ள அநேகரைக் கலகப்படுத்துகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.
100. அப்படி கலகம் விளைவிக்கிறவன் எவ்விதமான பாவம் கட்டிக்கொள்ளுகிறான்?
சாதாரணமாய் இப்படிப்பட்ட புறணி பொறாமையால் உண்டாகிறதினால், அப்படிப் பேசுகிறவன் வாயால் கட்டிக் கொள்ளும் பாவங்களில் காய்மகாரம் என்னும் பாவம் கொள்ளுகிறான்.
101. இரகசியம் ஆவது என்ன?
ஒரு காரியம் அதன் தன்மையினிமித்தமோ (உதாரணமாக: ஆலோசனை கேட்கும் பொருட்டு தனக்கு அறிவிக்கப் பட்டவைகள்) அல்லது அதைப்பற்றிச் செய்திருக்கும் ஒப்பந்தத்தினிமித்தமோ, வெளியிடப்படக் கூடாததாயிருந்தால் இரகசியமாகும். மேலும், பிறருக்குள்ளே நடந்த பேச்சுவார்த்தைகளைக் கேட்பதினாலும், அவனுடைய பெட்டியில் உள்ளவைகளை ஆராய்வதினாலும், அவனுடைய கடிதங்களை வாசிப்பதாலும், இரகசியம் ஏற்படக்கூடும்.
102. இரகசியத்தை வெளிப்படுத்துவது பாவமா?
ஆம் அது பிறர் சிநேகத்துக்கும், நீதிக்கும் விரோதமான பாவமாகும்.
(1) தன் தன்மையினிமித்தம் வெளியிடக்கூடாத காரியம் கனமானதாயிருந்தால், அதை வெளிப் படுத்துவது கனமான பாவமாகும்.
(2) ஒரு காரியத்தை வெளியிட மாட்டேனென்று ஒருவன் வாக்குக் கொடுத்திருப்பானேயாகில், அந்த காரியத்தின் தன்மையினிமித்தமாகிலும், கொடுத்த வாக்கின் தன்மையினிமித்தமாகிலும் அற்ப அல்லது கனமான பாவ மாகும்.
103. பிறருக்குச் சொந்தமான கடிதங்களைத் திறந்து வாசிக்கிறது பாவமா?
அதிகாரம் அல்லது உத்தரவு இன்றி, அல்லது தக்க முகாந்தரமில்லாமல் அப்படி வாசிப்பது தன்னில் தானே கனமான பாவமாகும்.
104. இரகசியத்தை எப்போது வெளியிடலாம் ?
(1) இரகசியம் சொன்னவன் அதை வெளியிடுவதற்கு உத்தரவு கொடுப்பானென்று எண்ணுவதற்குத் தக்க முகாந்தரம் இருக்கும் போதும்,
(2) தற்செயலாய் அல்லது வேறே வழியாய் இரகசியம் வெளிப்படுத்தப் பட்டிருக்கும் போதும்,
(3) பொது நன்மையினிமித்தமாகவும் அல்லது பிறருக்குக் கெடுதி நேரிடாதபடியும் இரகசியத்தை வெளிப்படுத்தலாம்.