122. (60) பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?
சர்வேசுரனை ஒருக்காலும் காணாமல், ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அநுபவிக் கிறார்கள்.
1. நரகமானது வேதாகமத்தில் இன்னும் என்னமாய் அழைக்கப் பட்டிருக்கிறது?
பாதாளக் குழி (அரு. காட்சி. 9:1), சர்வேசுரனுடைய கோபாக்கினை என்னும் பெரிய ஆலைத் தொட்டி (அரு. காட்சி. 14:19), அக்கினித் தடாகம் (அரு. காட்சி. 20:9), அக்கினிச் சூளை (மத். 13:42).
2. நரகம் ஆவதென்ன?
நரகம் என்பது நித்திய ஆக்கினைக்குத் தீர்வையிடப்பட்டவர்கள் சர்வேசுரனை ஒருபோதும் காணாமல், அவியாத அக்கினியில் பசாசுகளோடு ஊழியுள்ள காலம் வேகிற வேதனை நிறைந்த ஸ்தலமாம்.
3. ஊழியுள்ள காலம் என்றால் என்ன?
நித்திய காலம் என்பதாம். சமுத்திரத்தில் எத்தனை கோடானுகோடி தண்ணீர்த்துளி இருக்குமோ, கடலைக் கண்ணீ ரால் நிரப்ப எத்தனை கோடிக்கணக்கான வருஷமாகுமோ, கடலோரத்தில் எத்தனை கோடாகோடி சிறு மணல் இருக்குமோ, மரங்களில் எத்தனை கோடாகோடி இலைகள் இருக்குமோ, அத்தனை கோடாகோடி வருஷகாலமாய் பாவிகள் நரகத்திலே வெந்த பிற்பாடு முதலாய் அவர்களுடைய நிற்பாக்கியம் முடியாது. அப்போதுதான் துவக்கினது போலிருக்கும்.
4. நரகமுண்டென்பதும், அதின் ஆக்கினை முடிவற்றதென்பதும் நிச்சயமா?
இது (1) வேதாகமத்தில் போதிக்கப்பட்ட வேதசத்தியம் மட்டுமின்றி, (2) பாரம்பரியமாய்த் திருச்சபை விசுவசித்து வந்த சத்தியமுமாம். (3) மேலும் இச்சத்தியம் புத்தி நியாயத்துக்கு முழுதும் ஒத்திருக்கிறது.
5. பழைய ஏற்பாட்டில் நரகத்தைப் பற்றி எழுதப்பட்டிருக் கிறதென்ன?
(1) தீர்க்கதரிசியான இசையாஸ் பாவிகளைப் பற்றிப் பேசும்போது, “அவர்களைக் கடிக்கும் புழு ஒருபோதும் சாகாது, அவர்களை உள்ளும் புறமும் சுடுகிற தீ ஒருபோதும் அவியாது; நித்திய நெருப்பின் மத்தியில் சீவிக்கக்கூடியவர்கள் யார்? ” என்றார் (இசை. 33:14).
(2) தானியேல் என்பவர், “தூசியோடு தூசியாய்த் தூங்குகிறவர்களின் திரளான கூட்டம் திரும்பவும் உயிர்க்கும். சிலர் நித்திய சீவியத்தையும், சிலர் நித்திய நிர்ப்பாக்கியத்தையும் அடைவார்கள்” என்றார் (தானி. 12:2).
(3) யோபு என்பவர், நரகமானது “நித்திய காலத் துக்கும் எவ்வளவோ பயங்கரமும், அவலட்சணமும், கலக்கமும், அலங்கோலையும் நிறைந்துள்ள இடம்” என்று சொல்லியிருக்கிறார் (யோப். 10:22).
6. புதிய ஏற்பாட்டில் நரகம் உண்டென்றும், அதன் வேதனை முடிவற்றதென்றும் எப்படித் தெளிவாகக் காட்டியிருக்கிறது?
(1) பற்பல சமயத்தில் நரகம் உண்டென்று சேசுநாதர் சொல்லியிருக்கிறார். ஒரே அதிகாரத்தில்தானே சேசுநாதர் மூன்று தடவை “ஓயாமல் அரிக்கும் புழுப்போல் சபிக்கப்பட்டவர்களைக் குத்தும் மனோவேதனை ஒருபோதும் சாகாது, அக்கினியும் அவியாது” என்று திருவுளம்பற்றியிருக்கிறார் (மாற்.9:42-49).
(2) ஆண்டவர் பொதுத் தீர்வையின் முடிவிலே பாவிகளை நோக்கி, “சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டு அகன்று, பசாசுக்கும் அதன் தூதர்களுக்கம் ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குப் போங்கள்” என்று சொல்லுவார் (மத்.25:41).
(3) சுவிசேஷத்தின் போதனைப்படி நடவாதவர்கள் “மரித்த பிற்பாடு நித்திய தண்டனைக்குள்ளாவார்கள்” என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (2 தெச. 1:9).
7. திருச்சபையின் பாரம்பரை போதிக்கிறதென்ன?
நரகம் உண்டென்பதும், அதின் தண்டனை நித்தியமென்றும், எப்போதும் திருச்சபை விசுவசித்து வந்திருக்கிறது. கொன்ஸ்தாந்தினோப்புள் பட்டணத்து இரண்டாம் பொதுச் சங்கம் நரகவாசிகளின் தண்டனைக்கு முடிவுண்டு என்று சொல்லத் துணிந்தவர்களைத் திருச்சபைக்குப் புறம்பாக்குகிறது.
8. நரக தண்டனை முடிவற்றதாயிருப்பது புத்தி நியாயத்துக்கு ஒத்ததா?
இது புத்தி நியாயத்துக்கு முழுதும் ஒத்திருக்கிறது மல்லாமல், தேவ நீதியினிமித்தமும், தேவ ஞானத்தினிமித்தமும் அவசியமாயிருக்கிறது. மேலும் நரக வேதனை முடிந்து போகுமானால் இது புத்திக்கு முழுவதும் ஒவ்வாததாயிருக்கும்.
9. நரக ஆக்கினை முடிவற்றதாயிருப்பது எப்படிப் புத்தி நியாயத்துக்கு முழுதும் ஒத்திருக்கிறது?
பாவமானது அளவில்லாத சர்வேசுரனுக்கு விரோத மாயிருப்பதால், அது அளவில்லாத தோஷமும் துரோகமுமாயிருக் கிறது. அளவில்லாத துரோகத்துக்கு அளவில்லாத தண்டனையே உரியது. ஏனெனில் அளவுள்ள தண்டனை எவ்வளவு அகோரமாயிருந்தபோதிலும், அளவில்லாத துரோகத்துக்கு ஏற்றதாயிருக்க முடியாது. ஆதலால் அது நித்திய காலத்துக்கும் நீடித்திருக்க வேண்டும்.
10. தேவ நீதியினிமித்தம் நரகம் முடிவில்லாதிருப்பது அவசியமா?
மனது பொருந்திச் செய்த ஓர் பாவம் எவ்வளவு காலத்துக்கு முழுதும் விமோசனமாகவில்லையோ, அவ்வளவு காலமும் பாவியானவன் தண்டிக்கப்படுவது தேவ நீதிக்கு ஒத்ததே. பாவி தன் பாவத்தின்மேல் கொண்ட பற்றுதலோடு செத்துப் போனதி னாலே, அந்தப் பற்றுதல் எப்போதும் அவனிடத்தில் நீடித்திருக் கிறது. ஏனெனில் சாவுக்குப் பின் பாவியானவன் மனந்திரும்ப முடியாது. பாவத்துக்காக மனஸ்தாபப்பட முடியாது. இவ்விதம் அவனிடத்தில் பாவம் எப்போதும் இருக்கும் என்பதினிமித்தம், அவனுடைய தண்டனையும் முடிவில்லாதிருக்க வேண்டும்.
11. நரக வேதனை முடிவில்லாதிருப்பது தேவ ஞானத்தினிமித்தம் அவசியமாயிருக்கிறதெப்படி?
மன்னிப்புக் கேட்க மனதில்லாதவர்களுக்கு சர்வேசுரன் மன்னிப்புத் தர முடியாது. ஆகையால் அவர் புண்ணியத்துக்குக் கொடுக்கும் சம்பாவனையைப் பாவத்துக்கும் கொடுத்தால் அது அவருடைய ஞானத்திற்கு ஒவ்வாதிருக்கிறது. நரகத்திலுள்ள பாவிக்கு ஒருபோதும் மன்னிப்புக் கேட்க மனது வராது. ஆதலால் அவனுடைய பாவத்துக்கு ஒருபோதும் மன்னிப்பிராது.
12. நரக வேதனை முடிந்துபோகுமானால் ஏன் புத்திக்கு ஒவ்வாததாயிருக்கும்?
ஏனெனில், சர்வேசுரனுடைய மன்னிப்பைக் கேட்காமல் பாவத்தின்மேல் கொண்ட பற்றுதலோடு செத்துப்போன பாவியானவன் கடைசியில் புண்ணியாத்துமாக்களின் பாக்கியத்துக்குப் பங்காளியாகிறது புத்திக்கு ஒவ்வாததாயிருக்கிறது.
13. நரகம் எங்கேயிருக்கிறது?
இதைப்பற்றி நிச்சயமாய் நமக்குத் தெரியாது. அது பூமி நடுவில் இருப்பதாக வேதசாஸ்திரிகள் எண்ணுகிறார்கள்.
சரித்திரம்
(1) 1812-ம் ஆண்டில் பிரெஞ்சுகாரருக்கும் ரஷ்யருக்கும் பெரிய சண்டை நடக்கப் போகையில், ரஷ்யர்களின் இரண்டு இராணுவ உத்தியோகஸ்தர் மறுவுலகம் எப்படியிருக்கும்? நரகம் உண்டென்பது மெய்தானா என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கையில், ஒருவன் “நாளைய தினச் சண்டையில் நமது இருவரில் ஒருவன் மரிப்பானாகில், அவன் மற்றவனிடத்தில் வந்து, நரகம் உண்டு அல்லது இல்லையென்று அவனை நிச்சயப்படுத்த வேண்டும்” என, மற்றவன் அப்படியே ஆகட்டும் என்று சம்மதிக்கப் பிரிந்து போனார்கள். மறுநாள் நடந்த சண்டையில் அவ்விருவரில் ஒருவன் சுடப்பட்டுச் செத்தான். செத்துப் போன பிற்பாடு சுவாமியுடைய சித்தத்தின்படியே சிநேகிதனுக்குத் தன்னைக் காண்பித்து, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றினான். எப்படி யென்றால், இவன் தன் வீட்டில் இருக்கையில் திடீரென சொல்லப்படாத கஸ்தியுடனும், நெருப்பு வேஷத்துடனும் தன் சிநேகிதன் கிட்ட வருகிற தைக் கண்டு: “இதென்ன, எங்கே வந்தாய்! உனக்கு வந்த நிர்ப்பாக்கியமென்ன?” என்று பிரமித்துக் கேட்க, மற்றவன்: “நண்பனே! நரகம் உண்டென்பது மெய். அதிலே விழுந்து விட்டேன்” என்று பெருமூச்சு விட்டு மறைந்தான்.
(2) நேப்பில்ஸ் என்னும் பட்டணத்தில் அர்ச். பிரான்சிஸ்கு பத்து நாள் பிரசங்கம் வைத்திருந்தார். ஊரார் எல்லாரும் அவரைக் கேட்க வந்தாலும், கத்தரீனம்மாள் என்னும் ஒரு கெட்ட பெண் பிரசங்கத்துக்கு வராமல், பெரும் சத்தம் செய்து, பிரசங்கத்தைக் கெடுக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டு வந்தாள். ஒருநாள் அந்த சத்தம் கேட்காமலிருந்ததற்குக் காரணம் என்ன என்று அர்ச். பிரான்சிஸ்கு விசாரிக்க, கத்தரீனம்மாள் செத்துப் போனதாக அவருக்குத் தெரிவித்தார்கள். அப்போது அவர் கத்தரீனாள் வீட்டுக்குப் போய் பிரேதத்துக்கு முன் நின்று கொண்டு, “ஓ கத்தரினாளே! இப்போது நீ எங்கே இருக்கிறாய்? சர்வேசுரனுடைய நாமத்தினாலே நீ அதை வெளியிட உனக்குக் கட்டளை யிடுகிறேன்” என்றார். அப்போது பிரேதம் வாய்திறந்து: “நரகத்திலே இருக்கிறேன்” என்றது.
14. நரகவாசிகள் படும் தண்டனைகள் பயங்கரமானவைகளா?
சபிக்கப்பட்டவர்களைத் தண்டிக்கிறவர் அளவற்ற நீதி யுள்ள சர்வேசுரன் என்பதால், அவர் அவர்களுக்கு இடும் தண்டனை பயங்கரத்துக்குரியதாயிருக்குமென்பது நிச்சயம் (எபி. 10:31).
15. நரகத்தில் சபிக்கப்பட்டவர்கள் படும் பிரதான வேதனைகள் எவை?
நரகத்தில் இரண்டு வித பிரதான வேதனைகள் உண்டு.
1-வது. சர்வேசுரனை இழந்து போனதால் படும் சாபத்தின் வேதனை. ஆதலால், அவர்களுக்குச் சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்கும் பேரின்ப பாக்கியம் ஒருபோதும் கிடையாது.
2-வது. ஐம்புலன்களின் வேதனை.
16. சபிக்கப்பட்டவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் சகல ஆக்கினைகளிலும் அதிக அகோரமான தண்டனை எது?
சர்வேசுரனைக் கண்டு தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து போவதுதான். ஏனென்றால் வாக்குக்கெட்டாத நன்மைத் தனம் நிறைந்தவராயிருக்கிற சர்வேசுரனைத் தரிசித்து, நேசிப்பது மனிதருடைய கடைசிக் கதியாகையால் அவரை நித்திய காலமாய் இழப்பது அதிக அகோரமான வேதனைதான்.
17. இரண்டாம் வேதனையாகிய ஐம்புலன்களின் வேதனை யானது விசேஷமாய் எதில் அடங்கியிருக்கிறது?
அவியாத நெருப்பு, காரிருள், துக்கம், மனக்கலக்கம், அவநம்பிக்கை, மனச்சாட்சியின் கண்டனம், பசாசுகளுடன் சஞ்சாரம், சபிக்கப்பட்டவர்களின் சகவாசம் ஆகிய இவைகள்தான்.
18. நரகத்தில் மெய்யான அவியாத நெருப்புண்டா?
உண்டென்று நமதாண்டவர் பல முறை வசனித்திருக் கிறார். மேற்சொன்னபடி, அதே பிரசங்கத்தில்தான் சேசுநாதர் மூன்று தடவை “அக்கினி அவியாது” என்று சொல்லியிருக்கிறார் (மாற். 11:43-47). அந்த நெருப்பு சரீரத்தை மாத்திரமல்ல, ஆத்துமத்தையும் கூட உபாதிக்கும்.
19. நரக நெருப்புக்கும், நம்முடைய நெருப்புக்கும் வித்தியாசம் உண்டா?
பாரதூர வித்தியாசம் உண்டு. ஏனெனில் நரக நெருப்பு, நம்முடைய நெருப்பைவிட மகா கொடூரமானதுமல்லாமல் அதில் மூழ்கியிருக்கும் சரீரங்களை அழிக்காது.
20. கண்டிப்புள்ள வஸ்துவாகிய நெருப்பானது எவ்விதமாக அரூபியான ஆத்துமத்தை ஊடுருவி உபாதிக்கக் கூடும்?
இவ்வுலகத்தில் ஆத்துமம் அரூபியாயிருந்தபோதிலும், சரீரத்தின் வழியாக உணருகிறதும், வேதனை அனுபவிக்கிறதும் எப்படியோ அப்படியே நரகத்திலும் சரீரத்தின் வழியாக நெருப்பின் அகோரத்தை அனுபவிக்கக்கூடும்.
21. நரகமானது காரிருள் நிறைந்த ஸ்தலம் என்று எப்படி நமக்குத் தெரியும்?
அது வேதாகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. “இவனுடைய கால்களைக் கட்டி இவனை வெளியே இருளில் தள்ளுங்கள்” என்று சேசுநாதர் வசனித்திருக்கிறார் (மத். 22:13, 25:30).
22. எப்படி மனவுறுத்தல் நரகவாசிகளை உபாதிக்கும்?
மனச்சாட்சி எப்போதும் புழுப்போல் அரித்துக் கொண்டிருக்கும் என்று சுவிசேஷத்தில் வாசித்துப் பார்க்கலாம். இந்த மனக்குத்து ஓய்வு ஒழிவின்றி நரகவாசிகளை வாதிக்கும். அதெப்படியென்றால், சபிக்கப்பட்டவன் தன்னுடைய நித்திய நிர்ப்பாக்கியத்துக்குத் தான்தானே காரணமென்றும், சர்வேசுரன் இரக்கமாய்க் கொடுத்த வரப்பிரசாதத்துக்கு இணங்கி நடந்திருந் தால் இலேசாய் இரட்சணியமடைந்திருக்கலாமென்றும் யோசித்து, சொல்லமுடியாத வியாகுலம் அனுபவிப்பான்.
23. அவநம்பிக்கை எப்படி உண்டாகும்?
பாவ ஆத்துமம் தான் படும் நரக வேதனை ஒருக்காலும் முடியாதென்றும், குறைவு பெறாதென்றும், எவ்வகையான ஆறுதலு மின்றி எப்போதும் வேதனைக்குள்ளாகி, எப்போதும் நெருப்பில் வேக வேண்டியிருக்குமென்றும் இடைவிடாமல் நினைத்து வருவதால் சொல்லப்படாத அவநம்பிக்கை அதற்கு உண்டாகும்.
24. நரகவாசிகள் பசாசுகளின் சகவாசத்தினால் என்ன அநுபவிப்பார்கள்?
நரகவாசிகள் பயங்கரமான அவலட்சணமுள்ள பசாசுகளைக் கண்டு, இடைவிடாமல் நடுநடுங்கிப் பயப்படு வார்கள். மேலும் அந்தப் பசாசுகள் அவர்களை ஓயாமல் நிந்தித்து, சபித்து, அடித்து, கொடூரமாய் உபாதித்து வருகிறதினால், பாவிகள் சொல்லிலடங்காத வேதனை அனுபவிப்பார்கள். நரகப் பாவிகளை உபத்திரவப்படுத்துகிறது பசாசுகளுக்கு உரிய தொழிலென்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது (சர். பிர. 39:33,34).
ஒரு பசாசைக் கண்ட அர்ச். சியென்னா கத்தரினம் மாள், “அந்தச் சமயத்தில் சர்வேசுரன் அற்புதமாய் என் உயிரைக் காப்பாற்றியிராவிட்டால், நான் பயத்தினால் தவறாமல் இறந்து போயிருப்பேன்” என்றெழுதினாள்.
25. பாவிகள் சபிக்கப்பட்ட மற்றவர்களின் சகவாசத்தால் அநுபவிக்கும் வேதனையென்ன?
நரகப் பாவிகள் ஒருவர் ஒருவரால் மகா நிர்ப்பாக்கியப் படுவார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக் குள்ளே சண்டையும், தீராத பகையும் இருக்குமொழிய ஒற்றுமை, சமாதானம் இராது. தங்களுடைய துர்மாதிரிகையாலும், கெட்ட புத்திமதிகளாலும் கெட்டுப் போன ஆத்துமாக்கள் அவர்களுக்கு விசேஷமாய்ச் செய்யாத நிஷ்டூரமெல்லாம் செய்வார்கள்.
26. மேற்கூறிய பொதுவான வேதனையைத் தவிர நரகவாசிகள் வேறே விசேஷ வேதனை அநுபவிக்க மாட்டார்களா?
இவற்றுடன் ஒவ்வொருவனும் தான் கட்டிக் கொண்ட பாவத்துக்குத் தக்கதுபோல் விசேஷ வேதனை அனுபவிப்பான். இப்படியே, ஒருவன் கெட்ட வேடிக்கையே வேண்டுமென்று பார்த்தான் என்றால், அவன் நரகத்தில் கண்ணாலே விசேஷ வேதனைப்படுவான். “நரக நெருப்பானது சரீரத்தின் சகல அவயவங்களிலும் பிரவேசித்து, அதிகக் குற்றமுள்ளது எது என்று தேடி, அதற்கு அதிகமாய் வேதனை வருத்துவிக்கக் கூடிய அக்கினி” என்று அர்ச். அகுஸ்தீன் சொல்லுகிறார்.
27. நரகவாசிகள் எல்லோரும் ஒரே அளவான வேதனை அநுபவிக்கிறார்களா?
சர்வேசுரனை இழந்ததால் வரும் வேதனை எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் மற்ற வேதனைகள் அப்படியல்ல. ஏனென்றால் ஒவ்வொருவனுடைய வேதனை அவனவன் கட்டிக் கொண்ட பாவங்களின் கனத்துக்கும், தொகைக்கும் தக்கவாறு இருக்கும். “அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கபடியே சர்வேசுரன் அவனவனுக்குப் பதிலளிப்பார்” என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (உரோ. 2:6).
28. நாளாவட்டத்தில் நரக வேதனை குறையாதா?
கோடானுகோடி வருஷங்களுக்கு மேல் கோடானு கோடி வருஷங்கள் சென்றுபோனபிறகு முதலாய் நரகத்தில் உள்ளவர்களின் வேதனை குறையாமல், அப்போதுதான் துவக்குவது போலாகும். ஏனெனில் நரகத்தில் இரக்கம் ஒன்றுமில்லை.
29. நரகத்தில் விழாதபடி என்ன செய்யலாம்?
உருக்கத்துடன் வேண்டிக் கொள்ளுகிறதும், பாவத்துக்கு ஏதுவானதெல்லாம் விலக்குகிறதும், தன் பாவங்களுக்கு அடிக்கடி மனஸ்தாபப்படுகிறதும், நரக வேதனைகளை நினைக்கிறதும், தேவமாதா பேரில் பக்தியாயிருக்கிறதும், இதெல்லாம் நரகத்திற்குத் தப்பித்துக் கொள்ள நல்ல உபாயங்களாம்.
சரித்திரம்
1634-ஆம் ஆண்டில் லுடன் பட்டணத்தில் ஒரு குருவானவர் பேய்பிடித்தவர்களை மந்திரித்து பேயோட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு பசாசைப் பார்த்து, “நீ நரகத்தில் படும் பெரும் வேதனையென்ன?” என்று வினவினார். அதற்குப் பசாசு, “நாங்கள் நரகத்தில் ஒருபோதும் அவியாத நெருப்பில் இடைவிடாமல் சொல்ல முடியாத வேதனைப்பட்டு வருகிறோம். அதிலும் கொடிய வேதனை வேறொன்றுண்டு. அது சர்வேசுரனைத் தரிசியாத வேதனையே பெரும் வேதனையாம். உலகத்திலிருந்து மோட்சத்தை எட்டும் ஓர் உயர்ந்த ஸ்தம்பத்தை நட்டு, அந்தத் தூணில் கூர்மையான ஊசிகளை நெருக்கமாய்க் குத்தி வைத்து, அதிலேறிப் போய் ஒரே நிமிஷம் சர்வேசுரனைத் தரிசிக்க உத்தரவு கிடைத்தால், மிக்க சந்தோஷத்துடன் அநேகாயிரம் ஆண்டுகளாய்த் துன்பப்பட்டு அந்தத் தூணின் மேலேறப் பிரயாசைப்படுவோம்” என்றது.