அர்ச். சாமிநாதர் இரவு முழுவதையும் திவ்விய சற்பிரசாதத்திற்கு முன்பாக செலவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். காலையில் ஒரு பக்திச்சுவாலகரின் பக்திப் பற்றுதலோடு அவர் பூசை நிறைவேற்றுவார். சில சமயங்களில் அவர் எந்த அளவுக்கு தேவசிநேகத்தாலும், மகிழ்ச்சியாலும் நிரப்பப்படுவார் என்றால், அவருடைய சரீரம் அந்தரத்தில் உயர்ந்து நிற்கும், அவருடைய முகம் சுபாவத்திற்கு மேலான ஒரு தெய்வீக ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அர்ச். சிலுவை அருளப்பர் அசாதாரணமான அன்போடும், பக்தியோடும் திவ்விய பலிபூசை நிறை வேற்றுவார்.
ஒருமுறை, தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில் அவருடைய முகம் எவ்வளவு பிரகாசமாய் ஒளி வீசியது என்றால், அப்போது கோவிலில் இருந்தவர்கள் பீடத்தைச் சுற்றி வந்து, அந்த அதிசயமான பிரகாசத்தை உற்றுப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
பூசை முடிந்த பிறகு, என்ன நடந்தது என்று சொல் லும்படி மடத்து சிரேஷ்டர் அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ''தேவ வசீகரத்தின்போது கடவுள் எப்பேர்ப் பட்ட மகத்துவத்திலும், மகிமையிலும் எனக்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்றால், தொடர்ந்து என்னால் பூசை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்று நான் பயந்து போனேன்" என்று அவர் பதிலளித்தார்.
முத். அல் வெர்ன் ஜான் என்பவரும் இதே போன்ற பக்திப் பற்றுதலோடு பூசை நிறைவேற்றுவார். தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபணமான திருநாளன்று, அவரது ஆத்துமம் பரிசுத்த தெய்வ பயத்தாலும், உணர்ச்சியாலும் எந்த அளவுக்கு நிரப்பப்பட்டது என்றால், தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்க அவர் முயன்றும் பயனில்லாமல் போயிற்று. அவர் அவற்றை உச்சரிக்கத் தொடங்குவார், பாதியில் நிறுத்தி விடுவார், அதன்பின் மீண்டும் தொடங்கு வார், மீண்டும் நிறுத்தி விடுவார். அவருடைய மடத்து சிரேஷ்டர் அவர் படும் பாட்டைக் கண்டு, முழுமையான வசீகர வார்த்தைகளைச் சொல்ல அவருக்கு உதவி செய்தார்.
முத். ஜான் இந்த அதிசயமான வார்த்தைகளைச் சொல்லி முடித்த மாத்திரத்தில், இதோ தேவ அப்பமானது, பரிசுத்த கன்னிகையின் தேவ பாலனாக மறுரூபமானதை அவர் கண்டார். அவரது வாக்குக் கெட்டாத பரலோக அழகால் ஜான் எவ்வளவு ஆழமாக மேற்கொள்ளப்பட்டார் என்றால், இரண்டு குருக்களின் உதவியுடன் மட்டுமே அவரால் முழுப் பூசையையும் நிறைவேற்றி முடிக்க முடிந்தது!
பூசை முடிந்ததும், அன்பின் பரவச நிலையில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்!
காண்டிம்பர் தாமஸ் என்ற அர்ச். சாமிநாதர் சபையின் புகழ்பெற்ற மேற்றிராணியார், தம் ஆழ்ந்த கல்வியறி விற்கும், ஆழ்ந்த பக்திக்கும் பெயர் பெற்றவராக இருந்தார். இவர் இன்னும் பலரோடு சேர்ந்து தம் சொந்தக் கண்களால் கண்டு வியந்த ஒரு புதுமையை இங்கே விளக்குகிறார்:
நம் திவ்விய ஆண்டவர் துவே பட்டணத்திலுள்ள அர்ச். ஆமாந்த் தேவாலயத்தில் தேவ வசீகரம் செய்யப் பட்ட அப்பத்தில் காணக்கூடிய விதமாய்த் தோன்றினார் என்பதைக் கேள்விப்பட்டு, இந்த மேற்றிராணியார் அங்கே விரைந்து சென்று, தேவ நற்கருணைப் பேழையைத் திறந்து, புதுமையான அந்த தேவ அப்பத்தை ஸ்தாபகம் செய்து வைக்கும்படி அங்கிருந்த பங்குக் குருவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். மேற்றிராணியார் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட மக்கள் ஏராளமாகத் திரண்டு கோவிலுக்கு வந்தார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை நம் திவ்விய ஆண்டவரைக் காணும் பாக்கியம் பெற்றார்கள்.
தாம் கண்ணாரக் கண்டதை மேற்றிராணியாரே நமக்கு விளக்கிக் கூறுகிறார்: "நான் நம் ஆண்டவரை முகமுகமாய் தரிசித்தேன். அவருடைய கண்கள் தெளிந் தவையாயிருந்தன. அவருடைய முகத்தில் அதிசயத்திற்குரிய நேசத்தின் பாவனை இருந்தது. அவருடைய தலைமுடி ஏராளமாக வளர்ந்து, அவருடைய திருத்தோள்களின் மீது மிதந்து கொண்டிருந்தது. அவருடைய தாடி நீளமாக இருந்தது. அவருடைய நெற்றி அகலமாகவும், உயர்ந்தும் இருந்தது. அவருடைய கன்னங்கள் வெளிறியிருந்தன. அவருடைய திருச்சிரசு ஒரு பக்கமாக இலேசாக சாய்ந் திருந்தது. என் அன்புள்ள ஆண்டவரின் இந்தக் காட்சியைக் கண்டு, என் இருதயம் கிட்டத்தட்ட மகிழ்ச்சியாலும், நேசத்தாலும் வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது!
சற்று நேரத்திற்குப் பிறகு, நம் ஆண்டவரின் திருமுகம் ஆழ்ந்த துயரமுள்ள பாவனைக்கு மாறியது. திருப்பாடுகளின் போது தாம் இருந்த பரிதாபத் தோற்றத்தை அவர் எடுத்துக்கொண்டார். என் தேவன் முள்முடி சூட்டப் பட்டிருந்தார், அவருடைய திருமுகம் இரத்தத்தில் குளித் திருந்தது.
இப்படி மாறிவிட்ட என் இனிய இரட்சகரின் திருமுகத்தைக் கண்டபோது, என் இருதயம் ஆழ்ந்த துக்கத்தால் ஊடுருவப்பட்டது. என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. என் சிரசில் முட்களின் முனைகள் குத்தித் துளைப்பது போல நான் உணர்வதாக எனக்குத் தோன்றியது.''
அர்ச். அகுஸ்தீனார் சபைத் துறவியாகிய அர்ச். அருளப்பர் பூசையின்போது எத்தகைய நேசத்தால் சுட்டெரிக்கப் பட்டார் என்றால், முடிந்த வரை சீக்கிரமாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற தமக்கிருந்த வேகமுள்ள ஆசையைத் தணித்துக் கொள்ளும்படி, மிக அதிகாலையிலேயே எழுந்து விடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது. உண்மையில் அவரது பக்தி வியப்புக்குரியதாக இருந்தது. அவரது ஆன்மா பூசையின்போதும், விசேஷமாக தேவ வசீகரத்தின் போதும், ஒரு பரவச நிலையால் எப்போதும் நிரப்பப்பட்டது.
அவருடைய பூசைக்கு உதவி செய்தவர்கள், இந்த நல்ல குரு பூசை வைக்க அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிறார் என்றும், அதனால் தங்கள் மற்ற கடமைகளைச் செய்ய முடியாமல் போகிறது என்றும் மடத்து சிரேஷ்டரிடம் முறையிட்டார்கள். ஆகவே அவர் மடத்திலுள்ள மற்ற துறவிகளைப் போல, பூசையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று சிரேஷ்டர் அவருக்குக் கட்டளையிட்டார்.
இந்த நல்ல குருவும் தமக்கு இடப்பட்ட இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார். ஆனால் சில நாட்கள் முடிந்ததும், அவர் சிரேஷ்டரின் பாதங்களில் விழுந்து, பூசை வைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள தம்மை அனுமதிக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கத்துக்கு மாறான பக்திக்கு என்ன காரணம் என்று சிரேஷ்டர் அவரை வற்புறுத்திக் கேட்கவே, சுவாமி ஜான் தாம் பெற்றுக்கொண்ட தேவ உபகாரங் களைப் பற்றி அவருக்கு வெளிப்படுத்தினார். மேலும் தாம் எப்படி சேசுக்கிறிஸ்துநாதரை பீடத்தின் மீது கண்டு வந்தார் என்பதையும் எடுத்துக் கூறினார். அவர் கூறிய நுணுக்கமான விவரங்கள் எப்பேர்ப்பட்ட கடும் அச்சத்தாலும், உணர்ச்சி யாலும் சிரேஷ்டரை நிரப்பின் என்றால், அவர் இவற்றைத் தாங்கமுடியாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டார்.
சுவாமி ஜான் கூறிய விவரங்கள் சிரேஷ்டரின் எஞ்சிய வாழ்நாட்களின் போது, பூசையில் ஒரு புதிய பக்தியையும், ஆசைப் பற்றுதலையும் அவருக்குக் கொடுத்தன.
பெனஃபோர்ட்டின் அர்ச். ரேமண்ட், அர்ச். சாமி நாதர் சபையின் அதிசிரேஷ்டராக இருந்தார். அவர் சம்மனசுக்களுக்குரிய நேச ஆர்வத்தோடு பூசை நிறை வேற்றுவார். ஒரு முறை, அவருடைய பூசையின்போது தேவ வசீகர நேரம் தொடங்கி, திவ்விய நன்மை வழங்கும் நேரம் வரைக்கும் ஒரு நெருப்புப் பந்து, ஒரு மகிமையுள்ள ஒளி வட்டத்தைப் போல, அவருடைய சிரசையும், தோள் களையும் மூடியிருந்தது.
இவ்விஷயத்தில் போஸ்ஸாதாஸின் முத். பிரான்சிஸ் என்ற அதே சபையைச் சேர்ந்த துறவற குரு அர்ச். ரேமண்டைப் போன்றவர்தான். பூசை வைக்கும் போது அவருடைய முகம் ஓர் அசாதாரண மகிமையொளியோடு பிரகாசிக்கத் தொடங்கி விடும், அவர் ஏதோ ஒரு புதிய ஜீவியத்தைப் பெற்றுக் கொண்டது போல், அவருடைய முகம் மிக அழகானதாக மாறி விடும். ஒரு நாள் அவர் சுவிசேஷம் வாசித்தபோது, அவருடைய வாயினின்று ஒரு மிகப் பிரகாசமான ஒளி வெளிப்பட்டு, பூசைப் புத்தகத்தைப் பிரகாசிக்கச் செய்தது! பெந்தேகோஸ்தே திருநாளின்போது இரண்டு சந்தர்ப்பங்களில், இதே போன்றதொரு மகிமைப் பிரகாசம் அவரது உடல் முழுவதிலுமிருந்து கசிந்து, பீடத்தை ஒளிர்வித்தது.
அவர் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தபோது, நம் ஆண்டவர் அளவற்ற சிநேகத் தோடு அவரிடம்: ''என் மகனே, நாமே இருக்கிறவர்" என்று மொழிந்தார்! திவ்விய அப்பத்தை உட்கொண்ட பின், முத். பிரான்சிஸ் உயர எழுப்பப்பட்டு, வெகு நேரமாக அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தார்!
அர்ச். இஞ்ஞாசியார் தெய்வீகப் பரவச பக்தியோடு பூசை நிறைவேற்றுவது வழக்கம். ஒரு நாள் அவருடைய உதவியாளர் அவருடைய சிரசைச் சுற்றி ஒரு பிரகாசமான நெருப்பு வளையத்தைக் கண்டு, அதை அணைக்க விரைந் தார். அதன் பிறகுதான் அர்ச்சியசிஷ்டவரின் சிரசைச் சூழ்ந்திருந்தது சுபாவத்திற்கு மேலான ஒரு மகிமையொளி என்பதை அவர் கண்டுபிடித்தார்.
அர்ச். சாமிநாதரின் போதக குருக்கள் சபையைச் சேர்ந்த முத். பிரான்சிஸ் என்பவர் பல ஆண்டுகளாக தம் கால்களில் மிகக் கொடூரமான வேதனைகளை அனுபவித்து வந்தார். இவை எவ்வளவு அதிகமாக அவரை வாதித்தன என்றால், சிறு அசைவும் கூட, அவருக்கு மிகத் தீவிரமான துன்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால் பூசையின் மீது அவருக்கிருந்த பக்தி எவ்வளவு பெரிதாயிருந்தது என்றால், இந்த எல்லா வருடங்களிலும், அவர் முழு விசுவாசத்தோடு, காலையில் அவர்தம் படுக்கையிலிருந்து எழுந்து, அற்ப வலியும், அசெளகரியமும் இன்றி திவ்விய பலிபூசை நிறைவேற்றி வந்தார். ஆனால் பூசை முடிந்ததும், இந்த வேதனைகள் மீண்டும் அவரை வாதிக்கத் தொடங்கி விடும்.
ராவென்னாவின் அர்ச். சாமிநாதர் சபைத் துறவியான முத். அருளப்பர் பூசையின்போது அடிக்கடி ஒரு பரலோகப் பிரகாசத்தால் சூழப்பட்டார்.
அர்ச்சியசிஷ்டவர்களுடைய சரித்திரங்களில் இது போன்ற அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனாலும் இதில் நாம் மனதில் இருத்த வேண்டிய காரியம் என்ன வெனில், நாம் காணும் ஒவ்வொரு பூசையிலும், அதை நிறைவேற்றும் குரு எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும், அங்கு நிறைவேறும் பரம இரகசியங்கள் ஒன்றுதான். அர்ச். பொன வெந்தூர் கூறுவதுபோல, அவை எண்ணிலடங்காதவை. அதே அளவற்றவரும், சர்வ வல்லபரும், நித்தியருமான சர்வேசுரன்தான் பீடத்தில் வந்து பிறக்கிறார். அவரே, தாம் கல்வாரியின் மீது செய்தது போல், பூசையில் பங்கு பெறுபவர்களுக்காக அவர் மெய்யாகவே தம்மை பலியாக ஒப்புக்கொடுக்கிறார்.