அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம்

26. அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம் ஆவதென்ன?

பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்று தேவ ஆட்கள் ஒரே சர்வேசுரனாயிருக்கிறார்கள் என்பதாம்.


1. பரம இரகசியம் ஆவதென்ன?

தேவ அறிவிப்பினால் அன்றி சிருஷ்டிக்கப்பட்ட எந்தப் புத்தியும் சுயசக்தியினால் அறிய முடியாத சுபாவத்துக்கு மேற்பட்ட வேதசத்தியமே. மேலும் அச்சத்தியத்தை மோட்சத்திலே முதலாய் நம்மால் ஒருக்காலும் சரிவர கண்டுபிடிக்க முடியாது.


2. இந்த விடையில் எத்தனை விசே­ங்கள் குறிக்கப்பட்டுள்ளன?

நான்கு:  பரம இரகசியமானது:

(1)  சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு வேதசத்தியம்.

(2)  சர்வேசுரனால் அறிவிக்கப்பட்ட சத்தியம்.

(3) சர்வேசுரன் அதை அறிவிக்காவிட்டால், எந்த சிருஷ்டிக்கப்பட்ட புத்தியும் சுயசக்தியினால் அறியவே முடியாது.

(4)  மோட்சத்தில் முதலாய், ஒருக்காலும் அச்சத்தியத் தைச் சரிவர கண்டுபிடிக்க முடியாது.


3. சர்வேசுரன் உண்டென்கிற வேதசத்தியம் பரம இரகசியமா?

இல்லை.  ஏனென்றால், சர்வேசுரன் உண்டென்பதை நாம் புத்தியின் சுயசக்தியினால் அறியவும், கண்டுபிடிக்கவும் கூடும்.


4. ஒரே சர்வேசுரன் மூன்றாட்களாயிருக்கிறார் என்னும் சத்தியத் தைப் பரம இரகசியம் என்று அழைப்பானேன்?

அச்சத்தியம் மனித புத்திக்கு எட்டாதது. அதை சேசுநாதர் நமக்கு வெளிப்படுத்தாதிருந்தால் நம்மாலே அறியவே முடியாது.  மேலும் சேசுநாதர் நமக்கு அதை அறிவித்தபின் கண்டு பிடிக்கவே முடியாது.  ஏனெனில், சர்வேசுரன் மாத்திரம் தமது தேவ சுபாவத்தைச் சரியாய் உணர்ந்து கண்டுபிடிக்கக் கூடும்.

சரித்திரம்

ஹிப்போன் பட்டணத்து மேற்றிராணியாரான அர்ச். அகுஸ்தீன் ஒரு நாள் கடலோரத்தில் உலாவிக் கொண்டு அர்ச். தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தைக் கண்டுபிடிக்கும்படி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது சிறு பையனொருவன் மணலில் சிறு குழி தோண்டி ஒரு சங்கினால் கடல் நீரை அள்ளி அந்தக் குழியில் ஊற்றுகிறதைக் கண்டார்.  மேற்றிராணியார் சிறுவனைப் பார்த்து: “மகனே, என்ன செய்கிறாய்?” என்று கேட்க, பையன் சொல்லுவான்: “கடல் நீரை யயல்லாம் இந்தக் குழியில் ஊற்றும்படி பிரயாசைப்படுகிறேன்.” அதற்கு மேற்றிராணியார், “என்ன? இந்த சிறு குழியில் கடல் நீரெல்லாம் அடங்காது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொல்ல, பையன் மறுமொழியாக,: “நீங்கள் அர்ச். தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தைக் கண்டுபிடிக்கிறதற்கு முன், நான் இந்தக் குழியில் கடல்நீரையயல்லாம் ஊற்றி விடுவேன்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனான்.  சிருஷ்டிகளினால் அர்ச். தமத்திரித்துவத்தின் பரம இரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாதென்று காண்பிக்கும்படி சிறு பையன் உருவமாய்த் தோன்றின சம்மனசானவர் இவ்விதம் செய்தார். (ச.சி.2.)


5. வேதத்தில் வேறு பரம இரகசியங்கள் உண்டா?

உண்டு. இப்படியே மனுஷாவதாரம், மனித இரட்சணியம், தேவநற்கருணை, தேவ வரப்பிரசாதம் முதலியவைகள்.


6. வேதத்தில் நமது புத்தியால் அறியவும், கண்டுபிடிக்கவும் முடியாத பரம இரகசியங்களைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டுமா?

இவ்வுலக விஷயங்களில், நமது புத்திக்குத் தெரியாததும், நாம் கண்டுபிடிக்க முடியாததுமான இரகசியங்கள் அநேகமுண்டு;  அவைகளால் நாம் சூழப்பட்டுள்ளோம் என்று நாம் சொல்ல வேண்டும்.  ஒன்றுமில்லாமையிலிருந்து பூலோகமும், பரலோகமும் அதிலுள்ள சகல வஸ்துக்களும் உண்டான விதம் நமது புத்திக்கு எட்டுமா?  மின்சாரம், வெளிச்சம், ரேடியோ முதலிய வற்றின் தன்மையை யார் அறிந்திருக்கிறது?  காந்தம் எப்படி இரும்பை இழக்கிறதென்று நம்மால் கண்டுபிடிக்கக் கூடுமா?  நிலத்தில் விழுந்த சிறு விதை அழுகி முளைத்து எண்ணிறந்த தானியத்தைக் கொடுக்கும் விதமும் நமது புத்தியில் அடங்குமா?  நாம் தினந்தோறும் சாப்பிடும் போசனமும், மிருகங்கள் தின்னும் புல்லும் எப்படி உயிரை வளரச் செய்கிறதென்று அறிய நமது புத்தியால் ஆகுமோ?  இதைப்போல இன்னும் நமது புத்தியால் அறியவும், கண்டுபிடிக்கவும் கூடாத பூலோக இரகசியங்கள் அநேகமுண்டு.

நாம் காண்கிற இவ்வுலகக் காரியங்களில் நம்மால் கண்டுபிடிக்கக்கூடாத அநேக இரகசியங்கள் இருக்கும் பட்சத்தில், வேதத்தில் நமது புத்தியால் கண்டுபிடிக்கக்கூடாத பரம இரகசியங்கள் இருப்பதைப் பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


7. வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்களை நாம் கண்டுபிடிக்கக் கூடுமாயில்லை என்னும் காரணத்தால் அவைகளைத் தள்ளிவிடுகிறது நியாயமா?

இவ்வுலகத்தில் நாம் கண்டுபிடியாத இரகசியங்கள் பலவற்றை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், வேத சத்தியங்களில் நமது சுய புத்தியால் கண்டுபிடிக்கக் கூடாத சத்தியங்களைத் தள்ளிவிடுவது முற்றும் நியாய விரோதமாகும்.  ஏனென்றால், வேத இரகசியங்களை நியாயமாய் விசுவசிக்கும்பொருட்டு, அவைகளை நிச்சயமாய் அறிகிறது போதும்;  அவைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை.  தானும் ஏமாறவும், நம்மை ஏமாற்றவும் கூடாத சர்வேசுரன் நமக்கு வேத இரகசியங்களை அறிவிக்கிறபடியால், அவைகளை விசுவசிப்பது நியாயமாயிருக்கிறது, அவை களைத் தள்ளிவிடுவது நியாய விரோதமாகும்.


8. அப்படியானால் அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியத்தை விசுவசிப்பது நியாயமா?

அளவில்லாத சத்திய சுரூபியாயிருக்கிற சர்வேசுரன் அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியத்தை நமக்கு அறிவித்ததினால் அதைச் சிறிதும் தத்தளிக்காமல் விசுவசிப்பது நியாயம்தான்.


9. இந்தப் பரம இரகசியம் வெகு முக்கியமானதா?

ஆம். அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம் நாம் இரட்சணியமடைய அவசியமாய் விசுவசிக்க வேண்டிய நான்கு சத்தியங்களில் இரண்டாவதாயும், வேதத்தின் அஸ்திவாரமுமா யிருக்கிறபடியினால், அச்சத்தியம் வெகு முக்கியம் என்று சொல்ல வேண்டும்.


10. அர்ச். தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தை நமது புத்தியால் கண்டுபிடிக்கக் கூடாத போதிலும் அதைக் கொஞ்சமாகிலும் விளக்கிக் காட்ட உதவும் சில ஒப்பனைகள் உண்டா?

உண்டு.

(1)  நமது ஆத்துமத்தில் புத்தி, மனது, ஞாபகம் ஆகிய வெவ்வேறு சத்துவங்களிருந்த போதிலும், ஆத்துமம் ஒன்றே.  அவ்வித மாகச் சர்வேசுரனிடத்தில் பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து இம்மூன்று பேர்களிருந்தாலும், அம்மூவரும் ஒரே ஒரு சர்வேசுரன்தான்.

(2)  ஒரு மரத்தில் அடிமரம், நடுமரம், நுனிமரம் வெவ்வெறாயிருந்து ஒவ்வொன்றுக்கும் மர சுபாவம் முழுதும் இருந்தாலும், அவைகள் ஒரே மரம்தான்.  அப்படியே பிதாவுக்குத் தேவ சுபாவம் முழுதும், சுதனுக்குத் தேவசுபாவம் முழுதும், இஸ்பிரீத்துசாந்துவுக்குத் தேவ சுபாவம் முழுதும் இருந்தாலும் அவர்கள் மூன்று சர்வேசுரர் ஆகாமல் ஒரே ஒரு சர்வேசுரனாயிருக் கிறார்கள்.

(3)  சூரியனிடத்தில் தீ, தீயினின்று புறப்படும் கதிர், தீ கதிரினினறு புறப்படுகிற உஷ்ணம் ஆகிய மூன்று காரியங்கள் உண்டு.  இம்மூன்றும் வெவ்வேறாயிருந்தபோதிலும், சூரியன் ஒன்றே.  அதுபோல், அர்ச். தமதிரித்துவத்தில் ஜெனிப்பிக்கிற பிதா, பிதாவினிடத்தினின்று ஜெனிப்பிக்கப்படுகிற சுதன், பிதா சுதனிடத்தினின்று புறப்படுகிற இஸ்பிரீத்து சாந்து ஆகிய இம்மூன்று ஆட்களிருந்தாலும் ஒரே ஒரு சர்வேசுரன்தான்.


11. அந்த ஒப்பனைகள் அர்ச். திரித்துவத்திற்குச் சரியொத்ததா யிருக்கின்றனவா?

இல்லை.  ஏனென்றால் நமது ஆத்துமத்தில் புத்தி, மனது, ஞாபகம் ஆகிய வெவ்வேறான சக்திகள் இருந்தாலும், நமது ஆத்துமம்ஒன்றே என்று சொன்னாலும், நமது ஆத்துமத்தின ஒவவொரு சக்தியும் ஓர் ஆத்துமம் என்று சொல்லக் கூடாது.  அர்ச். திரித்துவத்திலோவென்றால் ஒவ்வொரு ஆளும் சர்வேசுரன். இவ்வகையான ஒப்பனைகள் தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தைச் சரியாய்த் தெரிவிக்கக் கூடாதானாலும், நாம் கொஞ்சமாகிலும் அதை அறிகிறதற்கு அவைகள் உதவும்.