ஆதிப் பெற்றோர் பாவம் செய்தவுடனேயே சர்வேசுரன் மனிதனை மீட்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தார்: "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்டப் பிரயத்தனப்படுவாய்'' (ஆதி.3:15).
திருச்சபையின் அதிகாரபூர்வ வேதாகமமாக இன்றும் இருக்கும் வுல்காத்தா வேதாகமத்தில் மட்டுமே இந்த வாக்கியம் இப்படி உள்ளது. இதற்கு மாறாக, ப்ரொட்டஸ்டாண்ட் சபையினரின் வேதாகமங்களிலும், திருவிவிலியத்திலும் இவ்வாக்கியம்: ""உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவர் உன் தலையை நசுக்குவார். நீயோ அவருடைய குதிங்காலைத் தீண்டுவாய்'' என்றுதான் இருக்கிறது.
இந்த இரண்டு வித வேதாகமங்களிலும், இந்த வாக்கியத்தின் முதல் பகுதியில் எந்த வேறுபாடும் இல்லை என்பதைக் கவனியுங்கள். எனவே வித்தியாசமாயிருக்கிற இரண்டாவது வாக்கியத்தை விட்டுவிட்டு நாம் முதல் வாக்கியத்தை மட்டும் எடுத்து விவாதிப்போம்.
இந்த ஆதி வாக்குத்தத்தத்தில் இரண்டு பகைகள் முன்குறிக்கப்பட்டிருப்பதை நாம் காண் கிறோம். முதலாவது பகை பசாசுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது. இரண்டாவது பகை பெண்ணின் வித்துக்கும் பசாசின் வித்துக்கும் இடையிலானது. பசாசுக்குப் பகை பெண்தான்; அப்படியே, பசாசின் வித்தின் பகை பெண்ணின் வித்துதான். முதல் வாக்கியத்தில் இது தெளிவாக இருக்கிறது. இனி இந்தப் பெண் யார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இந்த தேவ வாக்கியம் கூறப்பட்ட நேரத்தில் ஏவாள் மட்டும்தான் இருந்தாள் என்பதால், இந்தப் பெண் ஏவாள்தான் என்பது ஒரு வாதம். இதில் உண்மையில்லை. ஏனெனில் ஏற்கனவே பாவத்தில் விழுந்து பசாசுக்கு அடிமையாயிருக்கிற ஒரு பெண் பசாசின் தலையை நசுக்குபவளாகக் கடவுளால் முன்குறிக்கப்படுவது அவருடைய அளவற்ற மகிமைக்குப் பொருந்தாததாக இருக்கிறது. அவள் இரட்சிக்கப்பட வேண்டியவளாக இருந்தாள். எனவே அவள் இரட்சகியாக, தன்னுடைய வித்தோடு இணைந்து மனுக்குலத்தை இரட்சிக்கிறவளாக இருக்க முடியாது. இந்தப் பெண் ஏவாள் இல்லை என்பதற்கான மற்றொரு சான்று, அவளுடைய வித்தாகிய மனுக்குலமும் பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்தது என்பதாகும்.
இந்தப் பெண் திருச்சபையைக் குறிக்கிறாள் என்பது மற்றொரு சாராரின் வாதம். இதுவும் உண்மையாயிருக்க முடியாது. ஏனெனில் திருச்சபை பெண்ணின் வித்தாகிய இரட்சகரால் உலகில் நிறுவப்பட வேண்டியதாக இருந்தது. இரட்சகரிடமிருந்துதான் திருச்சபை வந்ததேயன்றி, திருச்சபையிடமிருந்து இரட்சகர் உற்பவித்துப் பிறக்கவில்லை.
அப்படியானால், இந்தப் பெண் யார்? இரண்டாவது பகை இதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது: பெண்ணின் வித்துக்கும், பசாசின் வித்துக்கும் இடையிலான பகை அது. பசாசின் வித்து என்பது எதைக் குறிக்கிறது? பசாசிடமிருந்து பிறப்பது யாது? நிச்சயமாக அது ஆத்தும சரீர மரணமும் அதன் காரணமாகிய பாவமும்தான் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.
இதைப் பற்றியே அப்போஸ்தலர்: ""மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே? மரணத்தின் கொடுக்கு பாவம்தான், நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு நமக்கு ஜெயம் தந்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம்'' என்கிறார் (1கொரி.15:55-57).
இந்தப் பாவத்தின் பகைவராக, தம்மில் விசுவாசம் கொண்டு தம்மைப் பின்செல்பவர்களில் பாவத்தை அழிப்பவராக இவ்வுலகில் தோன்றியவர் யார்? அவர் நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரே.
இதைக் குறித்தே அர்ச். கபிரியேல் சம்மனசானவர் அர்ச். சூசையப்பரிடம்: ""நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்'' என்கிறார் (மத்.1:21).
அப்போஸ்தலரான அர்ச். இராயப்பரும், ""ஏனெனில் நாம் இரட்சணியம் அடையவேண்டியதற்கு வானத்தின்கீழ் (அவருடைய (சேசுநாதருடைய) நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை'' என்கிறார் (அப்.நட.4:12).
ஆக, சாத்தானின் வித்துக்குப் பகையாக சர்வேசுரனால் முன்குறிக்கப்பட்ட பெண்ணின் வித்தானவர் சேசுநாதர் என்பது உறுதியாகிறது. சேசுநாதர் பெண்ணின் வித்து என்றால், அந்தப் பெண் அவருடைய திவ்விய கன்னித் தாயாராக அர்ச். மரியம்மாள்தான் என்பதும் தெளிவாகிறது.
அவர்களோ தன்னுடைய அமல உற்பவத்தையும், பாவமறியாத தன்னுடைய மாசற்றதனத்தையும் கொண்டும், தேவ திட்டத்திற்குத் தன்னுடைய முழு அர்ப்பணத்தைக் கொண்டும், சாத்தானின் ஆங்காரத்திற்கு எதிரான தன்னுடைய தாழ்ச்சியின் பாதாளத்தைக் கொண்டும் சாத்தானின் தலையை மிதித்து நசுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்.
இவ்வாறு மனிதனாக அவதரிக்க இருந்த சர்வேசுரனுடைய தாயாராகவும், சாத்தானின் தலையை நொறுக்கி நசுக்கும் அவனுடைய பகையாகவும் சர்வேசுரனாலேயே முன்குறிக்கப் பட்டிருந்த மகா பரிசுத்த திவ்ய கன்னிகை ஒரு கணமேனும் ஜென்மப் பாவத்திற்கு அடிமைப் பட்டிருக்க கடவுள் அனுமதித்திருப்பார் என்றால், அது மாமரிக்கு அல்ல, சர்வேசுரனுக்கே மிகப் பெரும் களங்கமாகவும், அவமானமாகவும் இருந்திருக்கும். தம்முடைய திருத்தாயாரைப் பசாசின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாகக் காத்துக்கொள்ள வல்லமையற்றவர் என்று உலகம் அவரை இழிவுபடுத்தியிருக்கும் (சுவாமி இரட்சிக்க!)
இவ்வாறு, மாமரியை அமல உற்பவியாகத் தோன்றச் செய்து, பசாசின் சகல தந்திரங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது சர்வேசுரன் என்ற முறையில், தமது வல்லமையை முன்னிட்டு, அவருடைய கடமையாக இருந்தது.
ஆகையால், தேவ அன்னையின் அமல உற்பவத்தைப் பழித்து, அதை நிந்தித்துத் தூஷணம் பேசுகிறவன் எவனும் மாமரியை அல்ல, மாறாக, சர்வேசுரனையே பழிக்கிறான்! அவருடைய அளவற்ற வல்லமையை அவன் பரிகசிக்கிறான்!
மேலும் அவன் மாமரியின் அமல உற்பவத்தை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்துள்ள திருச்சபையின் தெய்வீக அதிகாரத்தையும் பழித்துப் பகைத்து, இவ்வாறு நரகத்திற்கு மேன்மேலும் தகுதியுள்ளவனாகிறான்!
இங்கே நம்முடைய மகா பரிசுத்த திருமாதாவைக் குறித்த ஒரு தியானத்தை உங்கள் முன் வைக்க நாம் விரும்புகிறோம். இது விசுவாச சத்தியமல்ல, ஒரு விவாதக் கருத்தாக மட்டுமே இதை நாம் சமர்ப்பிக்கிறோம்.
அர்ச். லூயி க்ரிஞ்ஞோன் மரீ மோன்போர்ட் தம்முடைய மரியாயின் மீது உண்மை பக்தி என்னும் நூலில், ""மாமரி கடவுளின் தகுதியுள்ள தாய்'' என்கிறார்!! (எண்).
மரியாயியலில் இதை விட அதிக ஆழமுள்ள வாக்கியம் வேறு ஏதுமில்லை! ஓர் உயிரினத்தின் தாயாக இருப்பதற்கான தகுதி அதே உயிரினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுயிராக இருப்பதுதான். இவ்வாறு பறவைக் குஞ்சுகளுக்குத் தாயாயிருக்கும் தகுதி தாய்ப் பறவையாயிருப்பதும், மிருகக் குட்டியின் தாயாயிருக்கும் தகுதி தாய் மிருகமாயிருப்பதும் மட்டும்தான். அவ்வாறே ஒரு மனிதனுக்குத் தாயாயிருக்கும் தகுதி ஒரு முழு வளர்ச்சி பெற்ற ஒரு மனிதப் பெண்ணாக இருப்பதுதான்.
இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்ததால், மேற்கண்ட புனிதர் கூறுவதுபோல, மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனுமாகிய சேசுநாதருக்கு மாமரி தகுதியுள்ள தாயாயிருக்க வேண்டுமென்றால், அவர்கள் யாராயிருக்க வேண்டும்? அவர்களும் ஒரு தேவ-மனுஷியாக இருக்க வேண்டும்!!! வெறும் மனித சுபாவத்தில் மாமரி தேவ சுதனானவரைத் தன் திருவுதரத்தில் தாங்குவது எந்த விதத்திலும் சாத்தியமானதாகவே இருக்க முடியாது. அதை விட, உள்ளங்கைக்குள் சூரியனை அடக்கி விடுவது அதிக எளிதாயிருக்கும்!
அப்படியானால் மாமரி கடவுளா? இருக்கவே முடியாது! மாமரி கடவுள் அல்ல! ஏனெனில் மாமரிக்கு நம் ஒவ்வொருவரையும் போலத் தொடக்கம் உண்டு, அவர்கள் ஒரு சிருஷ்டியாகவே இருக்கிறார்கள். அதே புனிதரான அர்ச். லூயி மோன்போர்ட் அதே நூல் எண் 1-ல் கூறுவதுபோல, ""சர்வேசுரனோடு ஒப்பிடும்போது, மாமரி அணுவிலும் சிறிய பொருளாகவே இருக்கிறார்கள்.'' அப்படியானால் மாமரி எப்படிக் கடவுளுடைய தகுதியுள்ள தாயாயிருக்க முடியும்?
பரிசுத்த வேதாகம வாக்கியம் ஒன்றைக் கொண்டு இந்தக் கேள்விகுப் பதில் காண முயல்வோம்:
"நீங்கள் தேவர்களென்றும், உந்நதமானவருடைய குமாரர்கள் என்றும் நாம் திருவுளம் பற்றினோம்'' (சங்.81:6) என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. கடவுளுடைய வாக்கு யாருக்கு உண்டானதோ, அவர்களைத் தேவர்களென்று அவரே சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்வதிலே வேதாகமமும் தவறக் கூடாததாயிருக்கிறது என்று நம் ஆண்டவர் கூறுகிறார் (அரு. 10:35).
அர்ச். அருளப்பரும் தமது முதல் நிருபத்தில், சேசுநாதர் மீண்டும் தோன்றும்போது, நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று கூறுகிறார். பாவத்தில் ஜென்மித்து, பாவத்துக்கு அடிமையான மனிதனும் கூட, தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி, தேவ சித்தத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பரிசுத்தமாக வாழ்வான் என்றால், அவன் சர்வேசுரனுடைய தேவ சுபாவத்திலே பங்கடைகிறான், சர்வேசுரனுடைய பிள்ளையாகி, அவருடைய சகல நன்மைகளுக்கும் உரிமையுள்ளவனாகிறான் என்பதுதான் இந்த வாக்கியங்களின் பொருளாகும்.
அப்படியிருக்க, ஜென்மப் பாவத்தையும் கூட அறியாதவர்களாகிய மகா பரிசுத்த கன்னிகைக்கு, இன்னும் எவ்வளவோ மேலான ஒரு நோக்கத்திற்காக, சர்வேசுரன் தமது தேவ சுபாவத்தில் பங்களிக்க இயலாதவராக இருக்கிறார் என்று நாம் நினைக்க முடியுமா?
சேசுநாதரில் தேவ, மனித சுபாவங்கள் ஒன்றிப்பதற்கு, அவருடைய மாதா இஸ்பிரீத்துசாந்துவோடு இனி பிரிக்க முடியாதபடி ஒன்றிக்கப்படுவது (Hypostatic Union) இன்றியமையாததாக இருந்தது.
இவ்வாறு திவ்விய கன்னிகை சேசு என்னும் தேவ மனிதனைத் தன் திருவுதரத்தில் கருத்தாங்கிப் பெற்றெடுக்கும்படியாக, சர்வேசுரனுடைய தேவ சுபாவத்தில் பங்கடையும் முதல் சிருஷ்டியாயிருந்தார்கள். இந்த தேவ மானிட ஒன்றிப்பு பரிசுத்த கன்னிகையிடம் நிகழாதிருந்தால், மனித இரட்சணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
1854 டிசம்பர் 8 அன்று பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதர் மாமரியின் அமல உற்பவத்தை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, லூர்து நகரில் தனது பதினாறாம் காட்சியில், ""அம்மா, நீங்கள் யார்?'' என்ற பெர்னதெத் சூபிரூவின் கேள்விக்கு தேவமாதா, ""நாமே அமல உற்பவம்'' என்று பதிலளித்தார்கள். காட்சியளித்த இராக்கினியின் திருப்பெயரை பெர்னதெத் பங்குக் குருவுக்கு அறிவித்தபோது, அவர் அதிர்ந்து போனார். ஆச்சரியம் அவரை மூடிக் கொண்டது. காரணம் என்ன?
"நான் ஜீவிக்கிறேன்'' என்று எந்த மனிதனும் கூற முடியும். ஆனால் நானே ஜீவியம் என்று கடவுள் மட்டுமே கூற முடியும்.
"நான் ஒளியைக் காண்கிறேன், அல்லது நான் ஒளியைப் பின்செல்கிறேன்'' என்று மனிதன் கூறலாம். ஆனால் "நானே உலகத்தின் ஒளியாயிருக்கிறேன்'' என்று தேவனும் மனிதனுமான கிறீஸ்துநாதர் ஒருவரே கூற முடியும்.
வினைச் சொற்கள் மட்டுமே நமக்குரியவை. பெயர்ச் சொற்களோ கடவுளுக்கு மட்டுமே உரியவை. ஆனால் இங்கே ஒரு சிருஷ்டியாக இருப்பவர்கள், நாமே அமல உற்பவம் என்று ஒரு பெயர்ச் சொல்லைப் பயன்படுத்தியதுதான் பங்குக் குருவை அதிரச் செய்தது.
மாதா ஏன் இப்படிக் கூறினார்கள்? நானே அமல உற்பவி என்றுதானே மாதா சொல்லியிருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, நாமே அமல உற்பவம் என்று மாதா கூறியதன் காரணம் என்ன?
அமல உற்பவி என்பதற்கும். அமல உற்பவம் என்பதற்குமிடையே உள்ள வேறுபாடு என்ன? இதை நாமே விளக்குவதைவிட, மரியாயின் அமல உற்பவத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படத் தகுதியுள்ள அர்ச்சியசிஷ்ட மாக்சிமிலியன் கோல்பேயின் வார்த்தைகளை அப்படியே தருவதுதான் சரியாக இருக்கும்:
"பிதா சுதனை ஜெனிப்பிக்கிறார்; இஸ்பிரீத்துசாந்துவானவர் பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் புறப்பட்டு வருகிறார். இந்த ஒரு சில வார்த்தைகள் மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் வாழ்வு மற்றும் சிருஷ்டிகளிலுள்ள இலட்சணங்கள் அனைத்தினுடையவும் பரம இரகசியத்தைச் சுருக்கிக் கூறுகின்றன.
பிதாவானவர் யார்? அவருடைய சாராம்சம் என்ன? அது நித்தியமாக, ஜெனிப்பிப்பதில் அடங்கியுள்ளது. அவர் தொடக்கமேதும் இன்றியும், என்றென்றுமாகவும் சுதனை ஜெனிப்பிக்கிறார்.
சுதனானவர் யார்? அவர் என்றென்றும், நித்தியத்திலிருந்து ஜெனிப்பிக்கப்படுபவராக இருக்கிறார். அவர் பிதாவினால் ஜெனிப்பிக்கப்படுகிறார்.
இஸ்பிரீத்துசாந்துவானவர் யார்? பிதாவினுடையவும், சுதனுடையவும் நேசத்தின் மலர்தலே பிரீத்துசாந்துவானவர்! அவர் "சிருஷ்டிக்கப்படாத, நித்திய உற்பவமாக, பிரபஞ்சம் முழுவதிலும் நிகழும் புதிய உயிரின் எல்லா உற்பவத்திற்கும் முதன்மையான மாதிரியாக இருக்கிறார்.
ஆகவே, பிதா ஜெனிப்பிக்கிறார்; சுதன் ஜெனிப்பிக்கப்படுகிறார்; இஸ்பிரீத்துசாந்துவானவர் (அவர்களுடைய நேசத்தில் இருந்து புறப்படுகிற) "உற்பவமாக'' இருக்கிறார்; இது மூன்று தேவ ஆட்களையும் ஒருவருக்கொருவர் பிரித்துக் காட்டுகிறது, ஆயினும் ஒரே (தேவ) சுபாவம், அதாவது அவர்களுடைய தெய்வீக சாராம்சம், அவர்களை இணைக்கிறது.
ஆகவே, இஸ்பிரீத்துசாந்துவானவர் மகா பரிசுத்த, அளவற்ற பரிசுத்ததனமுள்ள, கறைதிரையற்ற, அமல உற்பவமாக இருக்கிறார்.
புத்தியுள்ள சிருஷ்டிகள் மனப்பூர்வமாகக் கடவுளை நேசிக்கிறார்கள், இந்த நேசமானவரோடு அவர்கள் அதிகமதிக நெருக்கமாக அவருடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். "அவரிடம் திரும்பி வருகிறார்கள்.'' ஆனால், கடவுளின் மீதான இந்த நேசத்தால் முழுமையாக நிறைந்திருக்கிற சிருஷ்டி, பாவத்தின் மிகச் சிறிய கறை கூட இல்லாதவர்களும், தேவ சித்தத்திலிருந்து ஒருபோதும் அணுவளவும் விலகாதவர்களுமாகிய அமல உற்பவி ஆவார்கள்.
அவர்கள் வாக்குக்கெட்டாத முறையில் இஸ்பிரீத்துசாந்துவின் மணவாளி என்ற முறையில் அவரோடு இணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் வேறு எந்த சிருஷ்டியையும் விட ஒப்பற்ற விதத்தில் அதிக உத்தமமான முறையில் அவர்கள் "மணவாளியாக'' இருக்கிறார்கள்.
தேவ ஆவியானவர் மாதாவில் படைக்கப்படாத நேசமாக: பிதாவுடையவும், சுதனுடையவும் நேசமாக, கடவுள் தம்மையே நேசிக்கிற நேசமாக, மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் நேசமாக இருக்கிறார். அவர் பலனுள்ள நேசமாக, "உற்பவமாக'' இருக்கிறார். ஒப்பற்ற விதமாக அதிக அந்நியோந்நியமானதும், அதிக உள்ளரங்கமானதும், அதிய சாரமுள்ளதுமான முறையில் இஸ்பிரீத்து சாந்து அமல உற்பவியின் ஆத்துமத்தில், அவர்களுடைய சொந்த இருத்தலின் உள்ளாழங்களில் வாழ்கிறார், அவர்களது உற்பவத்தின் முதல் கணத்திலிருந்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும், நித்தியத்திலும் அவர்களை அவர் வளப்படுத்துகிறார்.
இது அவர்களுடைய ஆன்மாவின் திருவுதரத்தில் (அல்லது உள்ளாழங்களில்) இருக்கிற நித்திய ""அமல உற்பவமாக'' (அதாவது இஸ்பிரீத்துசாந்துவாக) இருக்கிறது - அவர்களுடைய அமல உற்பவம் தெய்வீக வாழ்வை ஒரு மாசற்ற விதத்தில் கருத்தரிக்கிறது. மரியாயின் திருச்சரீரத்தின் கன்னிமையுள்ள திருவுதரம் அவருக்காக (இஸ்பிரீத்துசாந்துவுக்காக) மட்டுமே ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது. அவராலேயே அவர்கள் குறித்த காலத்தில் தேவ மனிதராகிய சேசுக்கிறீஸ்துநாதரின் தேவ-மானிட வாழ்வைக் கருத்தரிக்கிறார்கள்.
தேவ சுதனின் மனிதாவதாரத்தில் இஸ்பிரீத்துசாந்துவின் வழியாக தேவ சுதன் மாமரியின் திருவுதரத்தில் மாம்சமாகிறார், அவர் வழியாக நேசம் பிதாவிடம் திரும்பி வருகிறது.
மேலும் அவர்கள் (அமல உற்பவி) மகா பரிசுத்த தமத் திரித்துவத்தின் நேச வலையில் சிக்குண்டவர்களாக, தனது இருத்தலின் முதல் கணம் தொடங்கி, அதன்பின் என்றென்றும், ""மகா பரிசுத்த தமத்திரித்துவத்தை முழுமைப் படுத்துபவர்களாக'' இருக்கிறார்கள்!!
மாமரியுடனான இஸ்பிரீத்துசாந்துவின் இந்த ஐக்கியம் இரு ஜீவியர்களை ஒன்றிணைக்கிற அவர்களுடைய நேசம் மட்டுமல்ல; (இஸ்பிரீத்துசாந்துவின்) ஒரு நேசம் பரிசுத்த தமத்திரித்துவத்தின் முழு நேசமாக இருக்கிற அதே வேளையில் (மரியாயின்) மற்றொரு நேசம் சிருஷ்டிப்பின் முழு நேசமாக இருக்கிறது.
ஆகவே, இந்த ஒன்றிப்பில் பரலோகமும், பூலோகமும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன; பரலோகத்தின் முழு நேசம் பூலோகத்தின் முழு நேசத்தோடு ஒன்றிக்கப்படுதல்; நித்திய நேசத்தின் பூரணத்துவம் சிருஷ்டிக்கப் பட்ட அன்பின் பூரணத்துவத்தோடு ஒன்றிக்கப்படுதல் - இதுவே நேசத்தின் சிகரமாக இருக்கிறது!
லூர்து மாநகரில் அமல உற்பவி இனியும் தன்னை ""பாவ மாசின்றி உற்பவித்த ஸ்திரீ'' என்று அழைத்துக் கொள்ளவில்லை. மாறாக, அர்ச். பெர்னதெத் கூறுகிறபடி: ""அந்த இராக்கினி ஒரு காட்டு ரோஜாப் புதரின் மீது நின்று கொண்டிருந்தார்கள்… ஜெபிப்பது போலத் தன் கரங்களைக் குவித்த அவர்கள், அவற்றைத் தன் நெஞ்சு வரை உயர்த்தி, பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெதுவாகத் தன் கரங்களை விரித்தபின், குனிந்து என்னைப் பார்த்து, இலேசாக நடுங்கும் குரலில்: ""குவே சுவா எர் இம்மாக்குலாத்தா கொன்செப்சியோ'' - ""நாமே அமல உற்பவம்'' என்று மொழிந்தார்கள்.''
(மனித) சிருஷ்டிகளிடையே மனைவி கணவனுக்குச் சொந்தமானவள் என்பதால் அவள் அவனுடைய பெயரைத் தன்னுடையதாக்கிக் கொண்டு, தன்னை அவனோடு இணைத்து, அவனுக்கு சமமானவள் ஆகிறாள், அவனுடனான தனது ஒன்றிப்பில், சிருஷ்டிக்கப்படுகிற ஒரு புதிய உயிரை உருவாக்கும் கருவியாக அவள் ஆகிறாள் என்றால், இஸ்பிரீத்துசாந்துவானவரின் திருநாமத்தின் காரியத்தில் இது இன்னும் எவ்வளவு அதிகம் உண்மையாக இருக்க வேண்டும்!
அமல உற்பவம் என்பது, முழுமையான, சுபாவத்திற்கு மேலான ஒழுங்கிற்குப் பலனுள்ளதாக இருக்கிற நேசத்தில் அவர் யாரில் வாழ்கிறாரோ, அந்த மாசற்ற ஸ்திரீயின் திருப்பெயராக இருக்கிறது.''
இந்த வார்த்தைகளை அவற்றின் உண்மையான ஆழத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் இந்த அமல உற்பவப் பரிசுத்ததனத்திடமே மன்றாடுகிறேன்.
தமத்திரித்துவத்தின் பரிபூரண சிநேகமாயிருக்கிறவரோடு இனி பிரிக்க இயலாதபடி ஒன்றித்திருக்கிற சிருஷ்டிப்பின் பரிபூரண சிநேகமாயிருக்கிற மகா பரிசுத்த கன்னிகை, இந்த வாக்குக்கெட்டாத ஐக்கியத்தின் மூலமாக தேவ-மானிட ஐக்கியத்தின் அதிசயத்திற்குரியதொரு புதிய படைப்பை, கடவுளும் மனிதனுமானவரைத் தன் திருவுதரத்தில் கருத்தரிக்கிறார்கள்.
இந்த தெய்வீகச் செயல்பாட்டில் மனித புத்திக்கெட்டாத வகையில் தம் தெய்வீக வல்லமை முழுவதையும் பயன்படுத்தியவராகிய பரிசுத்த ஆவியானவர், அதே வல்லமையைக் கொண்டு, தம்முடைய மகா பரிசுத்த மணவாளியின் வழியாகவே சிருஷ்டிகளிடம் கடந்து வந்து, தெய்வீக ஜீவியத்தை அவர்களில் பிறப்பிக்கிறார். மாமரியின் வழியாகவே அவர்களுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் இவ்வாறு சர்வேசுரனுடைய பரிசுத்த ஜீவியத்தில் பங்குபெறுவது தேவ சித்தமாயிற்று.
ஓர் எளிய உதாரணத்தைக் கொண்டு இதை விளக்கலாம். மழைத்துளி கடலில் விழும் வரையில் அது நீரின் குணங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் அது கடலில் விழுந்ததும், இனி பிரிக்கப்பட இயலாதபடி கடல் நீரில் குணங்கள் அனைத்தையும் தனக்குள் பெற்றுக்கொண்டு கடலாகவே மாறி விடுகிறது. இப்போது அது மிகத் தாராளமாக, "நான் கடலாயிருக்கிறேன்'' என்று சொல்ல முடியும்.
எனவே மாமரி பாவ மாசற்றவர்களாய் உற்பவித்த அமல உற்பவியாக மட்டுமின்றி, மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய பரிசுத்த ஆவியானவரோடு, ஓர் உன்னதமான நோக்கத்திற்காக, இனி பிரிக்கப்பட இயலாத வகையில் ஒன்றித்து, அவருடைய தேவ சுபாவத்தில் பங்குகொண்டு, தமது தேவ மணவாளராகிய அவருடைய திருப்பெயரையே தன் பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
எனவே மாமரி பரிசுத்த தமத்திரித்துவத்தின் தெய்வீக ஜீவியத்தை முழுமைப் படுத்துகிற "அமல உற்பவமாகவும்'' இருக்கிறார்கள்.
இவ்வாறு சர்வேசுரனுடைய தெய்வீகத்தின் முழுமையாகப் பங்குபெற்று, சிருஷ்டி என்னும் நிலையிலிருந்து புத்திக்கெட்டாத முறையில் கடவுளால் உயர்த்தப்பட்டிருக்கிற தேவமாதாவை இதே காரணத்தால் அர்ச். லூயி மரீ மோன்ஃபோர்ட் "கடவுளின் தகுதியுள்ள தாய்'' என்று அழைப்பது பொருத்தமானதே.
ஆனால் காரியம் இத்துடன் முடிந்து விட்டதாக நமக்குத் தோன்றவில்லை. கார்மெல் மலை மாதா திருநாள் நிருபத்திலும் தேவமாதாவின் அமலோற்பவத் திருநாள் பூசையின் நிருபத்திலும், அவர்களுக்குரியதாகப் பொருத்திக் கூறப்படுகிற சீராக் (சர்வப்பிரசங்கி) ஆகமத்திலும், பழமொழி ஆகமத்திலும் உள்ள வசனங்கள் பின்வருமாறு:
"ஆதியிலும், உலகத்திற்கு முந்தியும் நான் சிருஷ்டிக்கப்பட்டேன். வரவிருக்கும் உலகம் வரையிலும் நான் எக்காலமும் இராமலுமிரேன்'' (Ab initio et ante sæcula creata sum, et usque ad futurum sæculum non desinam - சர்வப்.24:14);
""ஆண்டவர் தமது வழிகளின் துவக்கத்திலேயே ஆதியில் யாதொன்றையும் உண்டாக்கு முன்னரே என்னைச் சுதந்தரித்திருந்தார். பூர்வங்களில் பூமி உண்டாகுமுன்னமே நித்தியந்தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன். பாதாளங்கள் இன்னும் இருக்கவில்லை. நான் ஏற்கனவே கர்ப்பந் தரிக்கப்பட்டிருந்தேன். நீர் ஊற்றுகள் இன்னமும் புறப்படவில்லை. பாரச் சுமையுள்ள மலைகளும் இன்னமும் உண்டாக்கப்படவில்லை. குன்றுகளுக்கு முன்னமே நான் பிறப்பிக்கப்பட்டிருந்தேன். இன்னமும் பூலோகத்தையும், அருவிகளையும், பூச்சக்கரத்தின் துருவங்களையும் தேவன் உண்டாக்க வில்லை. அவர் வானமண்டலங்களைச் சித்தம் செய்கையில் நான் கூட இருந்தேன்; அவர் நிச்சயமான சட்டத்தாலும், வட்டத்தாலும் பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும், மேலே வானத்தை உறுதிப்படுத்தி, நீர்த் திரள்களை நிறையாக நிறுத்தி வைக்கையிலும், சமுத்திரத்திற்குக் கோடியைக் கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி தண்ணீருக்குச் சட்டத்தை வைக்கையிலும், பூமியின் அஸ்திவாரங்களை நிறுத்திடுகையிலும், அவரோடேயே சகலத்தையும் சீர்படுத்தி வைத்துக்கொண் டிருந்தேன்; தினந்தோறும் சந்தோ´த்துக்கொண்டும், எக்காலத்தும் அவர் முன்பாக விளையாடிக் கொண்டும், சர்வ லோகத்திலும் விளையாடிக்கொண்டும் இருந்தேன்'' (பழமொழி.8:22‡31).
""ஆதியிலும், உலகத்திற்கு முந்தியும்,'' "ஆண்டவர் தமது வழிகளின் துவக்கத்திலேயே ஆதியில் யாதொன்றையும் உண்டாக்கு முன்னரே என்னைச் சுதந்தரித்திருந்தார். பூர்வங்களில் பூமி உண்டாகுமுன்னமே நித்தியந்தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்'' என்னும் இந்த வார்த்தைகள் சர்வேசுரனுடைய திருமாதா சகல சிருஷ்டிகளுக்கும் முன்பாக சிருஷ்டிக்கப் பட்டார்கள் என்று உறுதிப்படுத்துகின்றன.
ஞானத்தைக் குறித்த இந்த வாக்கியங்கள் சுதனாகிய சர்வேசுரனைக் குறிப்பதாகச் சொல்லப்பட்டாலும், "சிருஷ்டிக்கப்பட்டேன்'' என்னும் வார்த்தை தொடக்கமும் முடிவும் இல்லாதவராகிய அவரைக் குறிப்பிட முடியாது. அவருடைய மனித அவதாரத்தை இவ்வார்த்தை குறிக்கிறது என்றால், "ஆதியிலும், உலகத்திற்கு முந்தியும்'' என்ற வார்த்தைகள் அந்தக் கருத்தோடு பொருந்தவில்லை.
எனவே இவ்வார்த்தைகள் தேவ சுதனை விட அதிகமாக அவருடைய திருமாதாவையே குறிக்கின்றன என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிதாவானவரின் திருப்புதல்வியாக, அவர் முன் சந்தோஷித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த இந்த மகா உன்னத சிருஷ்டியைப் பற்றி அர்ச். கிறிசோலோகுஸ் அருளப்பர், "சர்வேசுரனுக்குத் தாயாராக இருக்கிற இந்த உத்தம கன்னிகை எப்போதுதான் அவருக்குத் தாயாக இல்லாதிருந்தார்கள்?'' என்ற மிகுந்த சிந்தனைக்கும், பிரமிப்பிற்கும் உரிய ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
அதாவது இந்த மகா உத்தம சிருஷ்டி இல்லாதிருந்த காலம் என்று எதுவுமில்லை, அதாவது அவர்கள் நித்தியத்திலும் இருந்தார்கள் என்றுதான் இந்தப் புனிதரின் வார்த்தைகளுக்கு நாம் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் நித்தியத்தில் திரியேக தேவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என்பதில் நாம் ஐயப்பட சற்றும் அனுமதிக்கப்படவில்லை.
அப்படியானால், நேசத்திற்குரிய தாயாரே, தேவரீர் யாராயிருக்கிறீர்கள்? இந்தக் கேள்விக் கான பதிலை ஒரே ஒரு விதத்தில்தான் நாம் யூகிக்க முடிகிறது: இந்த மகா உத்தம சிருஷ்டியாகிய திவ்ய கன்னிகை ஓர் ஆளாக இல்லாமல், சர்வேசுரனுடைய ஒரு தேவ இலட்சணமாக, அவருடைய படைக்கப்படாத ஞானமாக, ஆனால் ஓர் உன்னதமான நோக்கத்திற்காக, அதாவது, தேவ சுதனுக்குப் பிறப்பளிக்கும் மகத்துவமுள்ள நோக்கத்திற்காக, ஆதியிலும், உலகத்திற்கு முந்தியும் படைக்கப்பட்ட ஓர் ஆத்துமமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் அது.
"ஆண்டவர் தமது வழிகளின் துவக்கத்திலேயே ஆதியில் யாதொன்றையும் உண்டாக்கு முன்னரே என்னைச் சுதந்தரித்திருந்தார். பூர்வங்களில் பூமி உண்டாகுமுன்னமே நித்தியந்தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்'' என்ற வார்த்தைகளோடு இவை துல்லியமாகப் பொருந்துவதைக் கண்டுதியானியுங்கள்.
இது நடக்கவே இயலாத காரியமில்லை. பிதாவினுடையவும் சுதனுடையவும் பரிசுத்த சிநேகமானது மூன்றாவது தேவ ஆளாகப் புறப்பட்டு வருவது சத்தியம் என்னும்போது, நித்தியத்தில் சர்வேசுரனுக்குள் இருந்த தேவ ஞானம் என்னும் அவருடைய தேவ இலட்சணமானது, பூர்வத்தில், பூமி உண்டாகுமுன்னமே, நித்தியந்தொட்டு, ஓர் உன்னத நோக்கத்திற்காக, ஒரு மனித ஆத்துமமாக ஏற்படுத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியமே.
இந்த அடிப்படையில் அர்ச். கிறீசோலோகுஸ் கூறும் வார்த்தைகளும் சரியாகப் பொருந்துகின்றன. "சர்வேசுரனுக்குத் தாயாக இருக்கிற மாதா, சர்வேசுரனுடைய தேவ ஞானம் என்ற முறையில், நித்தியத்திலும் அவருக்குத் தாயாகவே இருந்தார்கள்.''