கள்ளப்போதகர்களுடைய அக்கிரமத்தையும், அதனால் அவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களுக்கும் உண்டாகும் தண்டனையையும் விவரித்துக் காண்பிக்கிறார்.
1. கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேது வான பதித மார்க்கங்களை நுழையப் பண்ணித் தங்களைக் கிரயத்துக்கு வாங் கின ஆண்டவரை மறுதலித்துத் தங்க ளுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்ளுவார்கள். (மத். 24:11; யூதா. 4; 1 தீமோ. 4:1.)
2. அநேகர் அவர்களுடைய துர் நடக்கைகளைப் பின்பற்றுவார்கள். அவர்களால் சத்திய நெறி தூஷிணிக்கப்படும். (இசை. 52:5.)
3. பொருளாசையை முன்னிட்டுத் தந்திரமான வார்த்தைகளால் உங்களைக்கொண்டு இலாபம் சம்பாதிப்பார்கள். ஏற்கனவே அவர்களுக்கு நிய மிக்கப்பட்டிருக்கிற தீர்ப்பு அயராது, அவர்களுடைய அழிவும் உறங்காது. (தீத்து. 1:11; உரோ. 16:18; 1 தெச. 2:5.)
4. எப்படியெனில், பாவஞ்செய்த தூதர்களைச் சர்வேசுரன் மன்னியாமல், நரகச்சங்கிலிகளால் அவர்களைக் கட்டி, உபாதைப்படும்படி பாதாளத்தில் தள்ளி, நடுத்தீர்ப்புக்கு வைத்திருக்கிறாரே. (யோப். 4:18; யூதா. 6.)
5. பூர்வ உலகத்தையும் அவர் மன்னியாமல், நீதியைப் பிரசங்கித்த எட்டாவது ஆளாகிய நோயனைக் காப்பாற்றி, பாவிகள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினாரே. (ஆதி. 7:1; 8:18.)
6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கி, அவைகள் தகர்ந்து அழிந்துபோகும் படி ஆக்கினையிட்டு, இனி அக்கிரமஞ் செய்பவர்களுக்கு அவைகளை ஓர் திருஷ்டாந்தமாக வைத்தார். (ஆதி. 19:25; யூதா. 4, 7.)
7. அக்கிரமிகளுடைய கொடுமையையும், அவர்களுடைய காம விகார நடக்கைகளையுங் கண்டு, துயரப்பட் டிருந்த லோத்தென்னும் நீதிமானை அவர் இரட்சித்தார்.
8. ஏனெனில் தங்கள் அக்கிரம செய்கைகளால் புண்ணிய ஆத்துமத்தை நாள்தோறும் உபாதித்துவந்த அந்தப் பொல்லாதவர்கள் நடுவில் அவர் வசித்து இருந்தும், தமது பார்வையிலும் கேள்வியிலும் நீதிமானாயிருந்தார்.
9. இப்படியிருக்க, ஆண்டவர் பக்தி மான்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமிகள் உபாதிக்கப்படும்படி அவர்களை நடுத்தீர்வை நாளுக்கு நிறுத்திவைக்கவும் அறிந்திருக்கிறார்.
10. விசேஷமாய் அசுசியான தங்கள் சரீர இச்சையைப் பின்பற்றுகிறவர்களையும், அதிகாரத்தைப் புறக்கணிக்கிறவர்களையும், கர்வமுள்ளவர்களையும், தற்பிரியரையும், தூஷணிக்கிற பதிதத்தனங்களை உள்ளே நுழையப்பண்ணுவதற்கு அஞ்சாதவர்களையும் அப்படிச் செய்வார்.
11. மேலான வல்லபமும், பலமுமுள்ள தேவதூதர்கள் முதலாய்த் தங்களுக்குள்ளே சாபத் தீர்ப்புச் சொல்லத் துணியமாட்டார்களே.
* 11. நல்ல சம்மனசுகள் கெட்டுப்போன சம்மனசுகளிலும் மேன்மையும் வல்லமையும் உள்ளவர்களாயிருந்தும், கெட்டுப்போன அந்தச் சம்மனசுகளைத் தாங்களே சபிக்கவும் தூஷணிக்கவுந் துணியமாட்டார்கள். அப்படியிருக்க அதிகாரத்தைப் புறக்கணித்து, நிந்திக்கிற அக்கிரமிகள் எவ்வளவு ஆக்கினைக்குப் பாத்திரமாயிருக்கிறார்களென்று அறியவும்.
12. இவர்களோ சுபாவமாய்ப் பிடிபட்டு, அழிக்கப்படவேண்டிய புத்தியற்ற மிருக ஜீவன்களைப்போல் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷணித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிவார்கள்.
13. இவர்கள் ஒருநாள் சுகத்தை இன்பமென்று எண்ணி, தங்கள் அநீதத்தின் கூலியைக் கைக்கொள்ளுகிறவர்கள்; அசுத்தமுள்ளவர்கள், சிற்றின்பத்தில் மிகுந்தவர்கள், தங்கள் விருந்துகளில் உங்களோடு களியாடுகிறவர்கள்.
14. விபசாரமும், ஓயாத அக்கிரமமும் நிறைந்த கண்களையுடையவர்கள்; நிலையற்ற ஆத்துமாக்களை மயக்கி வசப்படுத்துகிறவர்கள், பேராசையில் பழகின இருதயம் உடையவர்கள் சாபத்தின் புத்திரர்கள்.
15. இவர்கள் நேர்மையான வழியை விட்டுத் தவறி, அக்கிரமத்தின் சம்பளத்தை விரும்பின போசோரின் குமாரனாகிய பாலாமின் வழியைப் பின்பற்றினவர்கள். (யூதா. 11.)
16. ஆனால் அவன் தன் மதியீனத்துக்காகக் கண்டிக்கப்பட்டான். வாய் பேசாத பொதிமிருகம் மனுஷ பேச்சைப் பேசி, தீர்க்கதரிசியின் புத்தியீனத்தை விலக்கினது. (எண். 22:28.)
* 16. எண்ணாகமம் 22-ம் அதி. 28-ம் வசனத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம் பாலாம் என்கிற தீர்க்கதரிசி பாலாக் என்ற இராஜாவுடைய வெகுமானத்துக்கு ஆசைப்பட்டு இஸ்ராயேல் பிரஜைகளைச் சபிக்கப்போகும்போது, அவன் ஏறிப்போன கழுதை அற்புதமாய் வாய்திறந்து, அவனுள்ளத்திலிருந்த கெட்ட கருத்தை நிறைவேற்றாதபடிக்கு அவனைக் கடிந்துகொண்டது என்றறிக.
17. இவர்கள் நீரில்லா ஊற்றுகள். சுழல்காற்றினால் அடிபட்டோடும் மேகங்கள். இவர்களுக்கு அந்தகார இருளே நியமிக்கப்பட்டிருக்கிறது. (யூதா. 12.)
18. தவறுதலாய் நடக்கிறவர்களை விட்டுத் தப்பிவந்தும் வராதிருக்கிறவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண் வார்த்தைகளைப் பேசி, காம விகாரத்துக்குரிய மாம்ச இச்சைகளுக்குள் அவர்களைத் தந்திரமாய் இழுக்கிறார்கள். (யூதா. 16.)
* 18. தவறுதலாய் நடக்கிறவர்களைவிட்டுத் தப்பிவந்தும் வராதிருக்கிறவர்கள், என்பது அஞ்ஞானத்தினின்று புதிதாய் மனந்திரும்பினவர்களாம். அப்படிப்பட்டவர்கள் இன்னும் விசுவாசத்தில் ஊன்றிநில்லாதவர்களாயிருக்க, அந்நாள் பதிதர் அவர்களைச் சரீரத் துர் ஆசாபாச இச்சைகளுக்குள் இழுத்துக்கெடுக்கத் தேடினார்கள் என்றறிக.
19. ஆயினும் இவர்கள் தாங்களே துர்க்குணத்துக்கு அடிமைகளாயிருக்க, அவர்களுக்குச் சுவாதீனத்தை வாக்குத் தத்தம் பண்ணுகிறார்கள். ஆனாலும் அவனவன் எவனாலே ஜெயிக்கப்பட் டிருக்கிறானோ, அவனுக்கே அடிமைப் பட்டிருக்கிறான். (அரு. 8:34; உரோ. 6:16.)
* 19. இன்னும் அந்தப் பதிதர் போதித்ததேதெனில்: கிறீஸ்துநாதர் நமக்காகப் பாடுபட்டு நம்மை இரட்சித்தார். ஆகையால் கிறீஸ்துவனுக்கு உலக சட்டமும் தேவசட்டமும் இல்லையென்றும், எதேச்சையாய் நடக்கலாமென்றும் பிதற்றி, இதைக் கிறீஸ்துவ சுயாதீனம் என்று படிப்பித்தார்கள்.
20. நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துவை அறியும் அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறு படியும் அவைகளில் சிக்குண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய முன்நிலைமையிலும் பின் நிலைமையானது அதிகக் கேடுள்ளதாகும். (எபி. 6:4; மத். 12:45.)
21. அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்பிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும், அதை அவர்கள் அறியாதிருந்தால், அவர்களுக்கு நலமாயிருக்கும்.
22. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி திரும்பச் சேற்றில் புரளவும் போனதென்று சொல்லப்படுகிற மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவிக்கின்றது. (பழ. 26:11.)