கிறீஸ்துநாதர் பிதாவினிடத்தில் நமக்காக மன்றாடுகிறவராகையால், நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, ஒருவரொருவரைச் சிநேகிக்கவேண்டும் என்று புத்திசொல்லுகிறார்.
1. என் பாலகரே, நீங்கள் பாவஞ் செய்யாதிருக்கும்படிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஆகிலும் யாதொருவன் பாவஞ்செய்தால், நீதிபரனாகிய சேசுக்கிறீஸ்துநாதர் பிதாவினிடத்தில் நமக்கு மனுப்பேசுகிறவராயிருக்கிறார்.
2. நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப்பலியாய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக மாத்திர மல்ல, சர்வலோக பாவங்களுக்காகவும் அவர் பிராயச்சித்தப்பலியாமே.
3. நாம் அவருடைய கற்பனைகளை அநுசரித்தால், அதன் வழியாகவே, அவரை அறிந்திருக்கிறோமென்பது நமக்குத் தெரியும்.
4. நான் அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் காக்காதவன் பொய்யன். சத்தியமும் அவனிடத்தில் இல்லை.
5. அவருடைய வார்த்தையை அநுசரிக்கிறவனிடத்தில் தேவசிநேகம் மெய் யாகவே உத்தமமாய் இருக்கின்றது. நாம் அவருக்குள் இருக்கிறோமென்ப தையும் இதனால் அறிந்துகொள்ளுகிறோம். ( அரு. 13:35.)
6. அவருக்குள் இருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டியது.
7. எனக்கு மிகவும் பிரியமானவர்களே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதுக் கற்பனையைப்பற்றி அல்ல; ஆதிமுதல் நீங்கள் கைக்கொண்டிருக்கிற பழைய கற்பனையைப்பற்றியே எழுதுகிறேன். அந்தப் பழைய கற்பனை நீங்கள் கேட்டிருக்கிற வார்த்தைதான்.
8. இன்னொருவகையில் ஒரு புதுக்கற்பனையைப்பற்றியே உங்களுக்கு எழுதுகிறேன். இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் புதிதென்பது உண்மையாமே. ஏனெனில் இருள் ஒழிந்து, இப்போது மெய்யான ஒளிவீசுகின்றது. (அரு. 13:34; 15:12.)
* 8. எல்லாவற்றையும்பார்க்கச் சர்வேசுரனையும், தன்னைத்தான் சிநேகிக்குமாப் போல் பிறனையும் சிநேகிக்கவேண்டுமென்கிற கற்பனை உலக ஆரம்பமுதல் உண்டாயிருந்த பழைய கற்பனைதான். ஆனால் புதிய ஏற்பாட்டில் அதிக உத்தமமான மேரையாக அதை அநுசரிக்கவேண்டியதென்று சேசுநாதர் கற்பித்தபடியால், அவரைப்பற்றியும் சுவிசேஷ வெளிச்சமாகிய போதனையைப்பற்றியும் அது புதுக்கற்பனையாயிருக்கிறது.
9. வெளிச்சத்தில் இருக்கிறேனென்று சொல்லியும், தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளில் இருக்கிறவன்தான்.
10. தன் சகோதரனைச் சிநேகிக்கிறவன் வெளிச்சத்திலிருக்கிறான். அவன் இடறிவிழுவதற்கேதுவில்லை.
11. தன் சகோதரனைப் பகைக்கிறவனோ இருளில் வசித்து, இருளில் நடக்கிறான். இருள் அவன் கண்களைக் குருடாக்கினபடியால், தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். (1 அரு. 3:14.)
12. பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால், உங்களுக்கு எழுதுகிறேன்.
13. தந்தையர்களே, ஆதிமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால், உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் துர்ச்சனனை ஜெயித்ததினால், உங்களுக்கு எழுதுகிறேன்.
14. குழந்தைகளே பிதாவானவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால், உங்க ளுக்கு எழுதுகிறேன். வாலிபரே, நீங்கள் வீரர்களாயிருக்கிறதினாலும், தேவ வாக்கியம் உங்களிடத்தில் நிலைத் திருக்கிறதினாலும் துர்ச்சனனை நீங்கள் ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுது கிறேன்.
15. உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் சிநேகியாதேயுங்கள். ஒருவன் உலகத்தைச் சிநேகித்தால், அவனிடத்தில் பிதாவின் சிநேகமிராது.
16. ஏனெனில் உலகத்திலுள்ள யாவும் சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாயிருக்கின்றது. அவைகள் பிதாவினிடத்தினின்று வராமல் உலகத்தினின்றே வருகின்றது.
17. ஆயினும் உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம். தெய்வ சித்தத்தை நிறைவேற்றுகிறவனோ என்றென்றைக்கும் நிலைநிற்பான்.
18. பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கின்றது. அந்திக்கிறீஸ்து வரவேண்டியதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களே. அப்படியே இப்போது அந்திக்கிறீஸ்துகள் அநேகர் உண்டா யிருக்கிறார்கள். அதனாலே இது கடை சிக்காலமென்று அறிகிறோம்.
* 18. உலகத்தின் முடிவிலே வரவேண்டிய அந்திக்கிறீஸ்துவைக்குறித்து 2 தெசலோனிக்கர் 2-ம் அதி. 3-ம் வசனத்தின் வியாக்கியானத்தைக் காண்க. இப்போது அநேக அந்திக் கிறீஸ்துகள் உண்டாயிருக்கிறார்கள் என்பதனால் அவர்கள் சேசுநாதருடைய திருப் போதகத்துக்கு விரோதமாய் அப்போஸ்தலருடைய காலந்துவக்கி உலகம் முடியும் மட்டும் திருச்சபையினின்று பிரிந்துபோகிற பதிதர்கள்தான் என்றறிக. ஏனெனில், இவர்களும் கடைசிக்காலத்தில் தோன்றும் அந்திக்கிறீஸ்துவைப்போல் சாத்தானால் ஏவப்பட்டு, சேசுநாதருடைய திருச்சபையைப் பகைத்து அதைக் கெடுக்க வேண்டு மென்று இடைவிடாமல் பிரயாசைப்படுகிறார்கள்.
19. அவர்கள் நம்மிடத்திலிருந்து வெளியேறினவர்கள். ஆயினும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாயிருந்தால், சந்தேகமின்றி நம்முடனே நிலைத்திருப்பார்கள். ஆயினும் எல்லாரும் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கு அவர்கள் (பிரிந்துபோனார்கள்).
* 19. நம்முடையவர்களாயிருக்கவில்லை: - அதாவது அவர்கள் ஸ்திரமும் நிலையாயுமுள்ள கிறீஸ்தவர்கள் அல்ல. அப்படியிருந்தால், நம்மோடுகூட திருச்சபையில் நிலைத்திருப்பார்கள்.
20. நீங்களோ பரிசுத்தரால் அபிஷேகம்பெற்று யாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
* 20. நீங்கள் இஸ்பிரீத்துசாந்துவின் இஷ்டப்பிரசாதத்தினாலும், திருச்சபையின் போதகத்தினாலும், விசுவசிக்கவேண்டிய சத்தியங்களையும், அநுசரிக்கவேண்டிய கற்பனைகளையும், அதாவது, உங்கள் கரையேற்றத்துக்கு அவசியமான சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். அதனாலே திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்களிடத்தில் யாதொன்றையும் கற்றுக்கொள்ளுவது உங்களுக்கு அவசரமில்லையென்று அர்த்தமாம்.
21. சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, சத்தியத்தை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினின்று பொய்யொன்றும் வராதென்பதை நீங்கள் உணர்ந்திருப்பதினாலும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
22. சேசுநாதரைக் கிறீஸ்து அல்லவென்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் சுதனையும் மறுதலிக்கிறவனே அந்திக் கிறீஸ்து.
23. ஏனெனில் சுதனை மறுதலிக்கிற எவனும் பிதாவை உடையவனல்ல. சுதனை ஒத்துக்கொள்ளுகிறவன் பிதா வையும் உடையவனாயிருக்கிறான். (அரு. 15:23.)
24. ஆகையால் நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்டது உங்களுக்குள் நிலைத்திருப்பதாக. ஆதிமுதல் நீங்கள் கேள்விப் பட்டது உங்களுக்குள் நிலைக்கொள்ளு மாகில், நீங்கள் சுதனிலும் பிதாவிலும் நிலைக்கொள்வீர்கள்.
25. அவர் நமக்குச் செய்தருளிய வாக்குத்தத்தம் நித்திய ஜீவியமாமே.
26. உங்களை மயக்குகிறவர்களைப் பற்றி இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
27. அவராலே நீங்கள் பெற்றுக் கொண்ட அபிஷேகம் உங்களிடத்தில் நிலைத்திருப்பதாக. அப்பொழுது ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை. அவருடைய அபிஷேகம் சகலத்தையும் பற்றி உங்களைப் படிப்பிப்பதி னாலே, அந்தப் படிப்பினை உண்மையுள் ளதும் பொய்யற்றதுமாயிருக்கின்றது. அது உங்களைப் படிப்பித்தபடியே அவரிடத்தில் நிலைக்கொள்வீர்களாக.
28. ஆதலால் பிள்ளைகளே, அவர் வருங்காலத்தில் அவரால் நாம் வெட்கமடையாமல், அவருடைய வருகையில் நம்பிக்கையாயிருக்கும்படி அவரிடத்தில் நிலைத்திருங்கள்.
* 28. அவரால் வெட்கம் அடையாமல் என்பதற்கு, அவர் உங்கள்மேல் குற்றம் சுமத்தி உங்களுக்கு அவல தீர்வையிட்டால், வெட்கமடைவீர்களே. அப்படியாகாமல் அவர் உங்களுக்கு நல்ல தீர்வையிடும்படி அவரிடத்தில் நிலைத்து நன்மையைச் செய்யுங்கள் என்பது கருத்து.
29. அவர் நீதியுள்ளவரென்று அறிவீர்களாகில், நீதியைச் செய்கிறவனெவனும் அவரிடத்திலிருந்து பிறந்தவனென்று அறிந்துகொள்ளுங்கள்.