புனித சூசையப்பர் பிறந்ததை தியானிப்போம்.
தியானம்.
தாவீது குலத்தில் புனித சூசையப்பர் பிறந்தார். அபிரகாம், ஈசாக்கு , யாக்கோபு, சூசை போன்ற ஞான தந்தையர்களும், சாலமன், எசேக்கியால், யோசியாஸ் போன்ற பேரரசர்களின் வழித்தோன்றல் தான் புனித சூசையப்பர். அவர் மரபுப்படி அரசராக இருந்திருக்க வேண்டியவர். யூதர்களும் அவர்களின் அரசர்கள் சிலரும் இறைவனுக்கு எதிராக செயல்பட்டதால் தாவீது குலத்தில் உள்ளவர்கள் அரசாட்சியிலிருந்து ஏழை குடிமக்களாக வாழ்ந்து வந்தனர் . அரச வம்சத்தில் தோன்றிய பெற்றோருக்கு மகவாய்ப் பிறந்த புனித சூசையப்பர், தன்னுடைய முன்னோர்களின் தன்மைக்குத்தக்க வாழந்து அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கச் செய்தார். அவர் ஒருபோதும் செல்வத்தை விரும்பவில்லை. தாழ்ச்சி, பொறுமை, அமைதி என்ற நற்குணங்களில் ஊறி போயிருந்தார்.
அவர் பிறந்தபோது அதற்குரிய பெரியவிழா பூவுலகில் நடைபெறவில்லை. ஆனால் வானுலகில் வானதூதர்கள் இவரது பிறப்பினை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இறைவனோ தன்னுடைய மகன் இயேசுகிறிஸ்துவை இவர் பரிசுத்தமாய் பேணி வளர்ப்பார் என்றும், இயேசுகிறிஸ்து தனக்கு இவர் வளர்ப்பு தந்தையாக இருப்பாரென்றும், தூய ஆவியானவரோ, இவர் தூய கன்னிமரிக்கு பரிசுத்த கணவராக இருப்பார் எனறும வானுலகில் மகிழ்ச்சியடைந்தனர். உலகில் உள்ள அனைதது சுகங்களையும் இவருக்கு அளிக்காமல் பக்தியையும், ஞானத்தையுமே இவருக்கு இறைவன் அபரிமிதமாக அளித்தார்.
வேத வல்லுநர்கள் கூறியதுபோல் இவர் ஜென்மப்பாவத்தோடு தாய் வயிற்றில் ஜெனித்தாலும், அவர் தாய் வயிற்றில் இருக்கும்போதே ஆசீர்வதிக்கப்பட்டார்.
பாவத்தினால் வருகின்ற துர்இச்சைகளிலிருந்து இவரைக் காத்தார் இறைவன். அருள் வழங்கப்பட்ட இவர் வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையவராக இருந்தார். அதனால் பெருமை கொள்ளாது மேன்மேலும் புண்ணிய வாழ்வில் ஈடுபட்டார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் புனித சூசையப்பரின் பிறப்பு எத்தகையது என அறிந்தோமோ அதுபோல் நாமும் ஞான வாழ்வு வாழ வேண்டும். பிதா, சுதன், தூய ஆவி இவர்மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தபோதும் உலக செல்வ சுகத்தை இவருக்கு மறுத்து வான் வீட்டிற்குரிய செல்வங்களை மட்டுமே அளித்தார்கள். நாமும் உலக இன்பங்களை மறந்து வானுலக இன்பத்தைத் தேடுவோம். செல்வத்தால் ஊதாரித்தனமும், ஆங்காரமும், உடலின் இச்சைகளால் மோகபாவமும் உண்டாகிறது. எனவே, இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கிறவர்கள் மோட்சத்தில் நுழைவது கடினமென்றும், பூவுலகில் துன்பப்படுகிறவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.
புனித சூசையப்பர் தனது குலப் பெருமையைப் பாராட்டாமல், ஆங்காரப்படாமல், தான் பிறந்த ஏழ்மை நிலையிலே சந்தோசமடைந்தார். அப்படியே நாமும் தாழ்ச்சியுடன் நமது சாதி, மத, செல்வ உயர்வுகளைப் பாராட்டாமல், ஆங்காரமின்றி பிறரிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய நிலைக்கு தக்கவாறு நாம் புண்ணிய வழியில் நடக்க வேண்டும். நடுத்தீர்வை நாளில் இயேசு நம்மிடம் நமது இனத்தைப் பற்றியோ, செல்வத்தைப்பற்றியோ, அந்தஸ்த்தைப் பற்றியோ விசாரிக்க மாட்டார். மாறாக எளியோருக்கு உதவி செய்தோமா என்பதை அறிந்து மோட்சம் அல்லது நரகத்தை அளிக்கிறார். இரக்கமில்லா செல்வந்தன் நெருப்பில் வேகும்போது ஏழை லாசர் இயேசுவின் மடியில் அமர்ந்திருக்கவில்லையா? இவர்களில் யார் மேலானவர் என்பதை நாம் தெரிந்து கொண்டு அதன்படி நாம் நடப்போம். தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும், செல்வந்தர்களாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டுமென்று விரும்புவர், அதற்காக செபிப்பர். நேர்ச்சை காணிக்கை செய்து கொள்வர். ஆனால் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகவும், புண்ணிய நெறி வழுவாமல் நடக்க வேண்டுமென்றும் கடவுளிடம் கேட்டு கொள்வதில்லை.
புனித ஞானப்பிரகாச அரசரின் தாய் பிளங்கம்மாள் தன்னுடைய மகன் சாவான பாவம் செய்வதைவிட செத்துப் போவதே மேல் என்று சொன்னார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் பிள்ளைகளை உலக விஷயங்களில் தவறான ஆர்வம் காட்டாமல் வானுலக புண்ணியங்களில் அதிக ஈடுபாடு காட்டுமாறு வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு மனக்கஷ்டத்தினைக் கொடுக்காமல் உண்மையான மகிழ்ச்சியும், புகழ்ச்சியும் கிடைக்கும்படி வாழ்வார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
புதுமை
சுமார் 270 ஆண்டுகளுக்குமுன் இயேசு சபை துறவியான இராயப்பர் கோத்தோனியூஸ் வாழ்ந்து வந்தார். அவர் ஹென்றிக்குள் என்ற அரசர்க்கு ஆத்ம குருவாகவும், உற்ற நண்பனாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர் வசிக்கும் இடத்தில் துணிவோடு துறவற இல்லங்களை நிறுவி நற்செயல்களை செய்து வந்தார். அவர் புனித சூசையப்பரை தனக்கு ஆதரவாகவும் பாதுகாவலராகவும் தெரிந்து கொண்டு, அவரிடம் ஆழ்ந்த பக்தியோடு செபித்ததுமல்லாமல் பிரான்ஸ் நாடு முழுவதும் அவரது புகழைப் பரப்ப தன்னாலான முயற்சிகளை செய்து வந்தார். அவர் அந்நாட்டில் செய்த மறையுரைகளிலும், உரையாடல்களிலும், தான் எழுதிய நூலிலும் புனித சூசையப்பரை வாழ்த்தி, அனைவரும் அவரை வணங்கி அவரிடம் பக்தி நம்பிக்கை வைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
அதனால் அந்நாட்டிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் புனித சூசையப்பரின் புகழ் பரவியது. மேலும் புனித சூசையப்பருக்கு மிக பிரபலமான பெரிய ஆலயம் ஒன்றினை நிறுவி, அதனை அழகுபடுத்தி, புனித சூசையப்பருக்கு திருவிழாவினை ஆடம்பரமாக நடத்தினார். புனித சூசையப்பரோ அக்குருவுக்கு தம் அருள் வரங்களை வழங்கி, அவருடைய துன்ப வேளைகளில் அவரை காத்து, அவரது நற்செயல்களில் ஆசீர்வதித்தார்.
இறுதியாக "தன்னுடைய நாளான மார்ச் 19-ஆம் தேதி இறப்பார்" என்று அக்குருவின் மரணத்தை முன்னறிவித்தார். மரண நேரத்தில் தூய மரியன்னை அவருக்குத் தோன்றி, தம் இரக்கத்தைக் காட்டி, "நீர் எனது கணவராகிய புனித சூசையப்பரிடம் கொண்டிருந்த பக்தியும், அவரது புகழை பரப்பியதற்காகவும் நான் உமக்கு உதவி செய்யவும் உம்மை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லவும் வந்தேன் என்றார். அவ்வாறு அவர் மரியன்னையின் கரங்களில் தன் உயிரைவிட்டு வானுலகம் சென்றார்.
புனித சூசையப்பரிடம் அதிக ஈடுபாடும் இத்தனையான பக்தியும் வைத்திருந்ததால் வாழ்நாளிலும், மரணவேளையிலும் அவர் நமக்கு உதவி செய்வார் என அறிந்துகொள்வோம். (3 பர, அரு, பிதா)
செபம்
அரச குலத்தில் பிறந்த தந்தையர்க்கு தந்தையே புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். தேவரீர் பூவுலக செல்வங்களை விரும்பாமல் ஏழ்மையான நிலையில் இறை சித்தத்திற்கு பணிந்து வாழ்ந்த புண்ணியங்களைப் பார்த்து உமக்குச் சீடர்களாக இருக்கிற நாங்கள் அழிந்துபோகும் உலக இன்பங்களில் ஆர்வங்காட்டாமல் அழியாத ஞான நன்மைகளை மட்டுமே தேடுவதற்கு உதவி செய்யும். வறுமைப் படுகிறவர்களுக்கு ஆதரவும், முன்மாதிரிகையாயிருக்கிற நீர் அவர்களைத் தேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்க உதவும். இவ்வுலகில் செல்வம் நிறைய கிடைக்கப் பெற்றவர்கள் அகங்காரமடையாமல் (செருக்குறாமல்) தான தர்மங்கள் செய்து நித்திய வாழ்வை அடைய உதவி செய்தருளும். நாங்கள் எல்லோரும் உம்மை பின்பற்றி புண்ணிய நெறியிலிருந்து தவறாது மோட்ச இன்பத்தை அடைய உதவி செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
இன்று சொல்ல வேண்டிய செபம்
அரச குலத்தில் பிறந்த புனித சூசையப்பரே உமக்கு புகழ். உம்முடைய தாயின் வயிற்றிலிருக்கும்போதே ஆசி கிடைக்கப் பெற்றவரே உமக்கு புகழ். புண்ணிய நெறி பிறழாது வாழும் வரம் பெற்ற புனித சூசையப்பரே உமக்கு புகழ்.
செய்ய வேண்டிய நற்செயல்
புனித சூசையப்பர் சுரூபத்தின் முன் மெழுகுதிரி அல்லது விளக்கினை ஏற்றி வைப்பது.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 02
Posted by
Christopher