சகல நன்மையும் கிறீஸ்துநாதரால் நமக்கு வருகிறதென்பதும், அவரே நம்முடைய சமாதானமென்பதும்.
1. நீங்கள் உங்கள் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்தபோது (அவரே உங்களைப் பிழைப்பித்தார்). (கொலோ. 2:13.)
2. அவைகளில் நீங்களும் ஒரு காலத் திலே இவ்வுலகத்தின் வழக்கத்துக்கேற்ற படியாகவும், நம்பிக்கையற்ற புத்திரரை இப்பொழுது ஆட்கொள்ளுகிற இந்த ஆகாய அதிகாரப் பிரபுவாகிய அரூபிக் கேற்றபடியாகவும் நடந்துவந்தீர்கள்.
3. அவைகளுக்குள் நாமெல்லாரும் ஒருகாலத்தில் உட்பட்டு, நமது மாம்ச இச்சைகளின்படி நடந்து, நம்முடைய மாம்சமும், மனசும் விரும்பினவைகளைச் செய்து, மற்றவர்களைப்போலவே நாமும் சுபாவமாய்த் (தேவ) முனிவின் புத்திரராய் இருந்தோம்.
* 3. தேவ முனிவின் புத்திரர். ஜென்மப்பாவத்தால் பிறந்ததினால் தேவ முனிவுக்குப் பாத்திரமான புத்திரரென்று அர்த்தமாம்.
4. ஆனால் இரக்கத்தில் ஐசுவரியராகிய சர்வேசுரன் நம்மைச் சிநேகித்த தம்முடைய அன்பின் பெருக்கத்தினால்,
5. நாம் பாவத்தால் மரித்தவர்களாயிருக்கும்போதே, கிறீஸ்துநாதரோடு கூட நம்மை உயிர்ப்பித்தார். (அவருடைய வரப்பிரசாதத்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்). (லூக். 15:24, 32.)
6. இன்னும் அவர் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் நம்மை ஒருமிக்க எழுப்பி, உன்னதத்திலே அவரோடேகூட உட்காரவுஞ்செய்தார்.
7. ஏனெனில் கிறீஸ்து சேசுவினிடத் தில், அவர் நமதுபேரில் வைத்த தயவி னாலே தமது வரப்பிரசாதத்தின் ஏராள மான திரவியத்தைப் பின்வரும் காலங் களில் வெளிப்படுத்தத்தக்கதாக இவ் விதஞ் செய்தார்.
8. ஏனென்றால் வரப்பிரசாதத்தால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களாலாகாமல், சர்வேசுரனுடைய நன்கொடையாயிருக்கிறது. (உரோ. 3:24; கலாத். 2:16.)
9. எவனும் மேன்மைபாராட்டாதபடிக்கு, இது கிரியைகளினால் உண்டானதல்ல.
* 9. கிரியைகள்: அதாவது நம்முடைய சொந்தப் பலத்தினாலே நாம் செய்த செய்கைகளால் ஆகாமல் சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தால் உண்டானதாம்.
10. ஏனெனில் நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறீஸ்து சேசு வுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுத் தேவனுடைய கைவேலையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.
* 10. கைவேலை: நீதிமானாக்கப்பட்டவன் மெய்யாகவே இஷ்டப்பிரசாதத்தால் புது உயிர் அடைந்தவனாயிருப்பதால், சர்வேசுரனுடைய கைவேலை எனப்படுகிறான்.
11. ஆகையால் முன்னே மாம்சத்தின்படி அஞ்ஞானிகளாயிருந்து, மாம்சத்தில் கையினால் செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்று சொல்லப்பட்ட நீங்கள்,
12. அந்தக் காலத்திலே கிறீஸ்துநாதரற்றவர்களும், இஸ்ராயேலருடைய பாத்தியத்துக்குப் புறம்பாக்கப்பட்ட வர்களும், உடன்படிக்கைக்கு அந்நிய ரும், வாக்குத்தத்தத்தில் நம்பிக்கையடை யாதவர்களும், இவ்வுலகத்தில் தேவன் இல்லாதவர்களுமாய் இருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
* 12. நீங்கள் முன்பு தேவனில்லாதவர்களாயிருந்தீர்கள். எண்ணிக்கையில்லாத தேவர்களை வணங்குகிற அஞ்ஞானிகள் தேவனில்லாதிருக்கிறார்களென்று சொல்லுவது எப்படி? அந்த எண்ணிக்கையில்லாத தேவர்களில் ஒருவனாகிலும் மெய்யான தேவனல்லவென்கிறதினால், அவைகளை ஆராதிக்கிறவர்கள் தேவனில்லாதவர்கள்தான். மெய்யான சர்வேசுரனை ஆராதிக்கிறவன்மாத்திரம் தேவனுள்ளவன் என்றறிக.
13. முன் ஒருகாலத்திலே தூரமாயிருந்த நீங்கள் இப்போது கிறீஸ்து சேசுவுக்குள்ளானவர்களாய் இருப்பதால், அவருடைய இரத்தத்தினாலே (சர்வேசுரனுக்குக்) கிட்டினவர்களானீர்கள்.
14. எப்படியெனில் அவரே நமக்குச் சமாதான காரணமாயிருந்து இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தம்முடைய சரீரத்திலே தகர்த்து,
15. இருதிறத்தாரையும் தமக்குள்ளே ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டிக்கும்படிக்கு கற்பனைகளாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சட்டங்களால் ஒழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தி,
16. பகையைச் சிலுவையினாலே கொன்று, அதனால் இருதிறத்தாரையும் ஒரே சரீரத்தில் சர்வேசுரனோடு உறவாக்கினார்.
17. அன்றியும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும் சமாதானத்தைச் சுவிசேஷமாகப் பிரசங்கித்தார்.
18. ஆகையால் நம்மிருதிறத்தாருக்கும் ஒரே இஸ்பிரீத்துவுக்குள் அவர் மூலமாகவே பிதாவினிடத்தில் அண்டிப்போகத் கிடைத்திருக்கிறது. (உரோ. 5:2; எபே. 3:12.)
19. ஆகையால் நீங்கள் இனி அந்நியரும், பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களுடைய நகரத்தாரும், சர் வேசுரனுடைய வீட்டாருமாயிருந்து,
20. அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் எனப்பட்ட அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அதற்குக் கிறீஸ்து சேசுநாதர் தாமே ஆதிமூலைக்கல்லாயிருக்கிறார்.
21. அவர்மேல் கட்டப்பட்ட எல்லாக் கட்டிடமும் ஆண்டவருடைய பரிசுத்த தேவாலயமாக எழும்புகிறது.
22. அவரில் நீங்களும் இஸ்பிரீத்துசாந்துவினால் சர்வேசுரனுடைய வாசஸ்தலமாகச் சேர்த்துக் கட்டப் பட்டவர்களாய் இருக்கிறீர்கள்.
* 21-22. இந்த அதிகாரத்தில் அர்ச். சின்னப்பர் எபேசியரைப் பார்த்து: முன்னே நீங்கள் அஞ்ஞானிகளாயிருக்கும்போது எல்லாப் பாவங்களினும் அமிழ்ந்தினவர்களாய் ஆத்துமத்தில் மரித்தவர்களாயிருந்தீர்கள். அன்றியும் நீங்கள் இரட்சகரில்லாமலும், தேவ பிரஜைகளோடு பங்கில்லாமலும், சர்வேசுரன் அவர்களுக்குச் செய்தருளிய வாக்குத் தத்தங்களுக்கு அந்நியருமாயிருந்தீர்கள். மேலும் இந்த நன்மைகளையெல்லாங் கொண்டிருந்த இஸ்ராயேல் பிரஜைகளுக்கும் உங்களுக்கும் தீராப்பகையும் விரோதமுமாயிருந்தது. ஆகிலும் சர்வேசுரனுடைய இலவசமான கிருபையினாலே நீங்கள் கிறீஸ்துநாதரை விசுவசித்தவுடனே, அவர் தம்முடைய திரு இரத்தத்தினால் உங்கள் பாவங்களினின்று உங்களை மீட்டு, உங்களுக்கும் இஸ்ராயேல் பிரஜைகளுக்கும் உண்டாயிருந்த பகையாகிய நடுச்சுவரைத் தம்முடைய மாம்சத்திலே அதாவது: தமது பாடுகளினாலே தகர்த்துவிட்டு, இஸ்ராயேல் பிரஜைகளுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட சகல நன்மைகளுக்கும் உங்களையும் பங்காளிகளாக்கி, உங்களையும் அவர் களையும் ஒரே தேவபிரஜைகளாக்கினார். ஆகையால் நீங்களும் அவர்களும் இனி ஒருவருக்கொருவர் அந்நியராயிராமல் கிறீஸ்துநாதராகிய அடி அஸ்திவார மூலைக் கல்லின்மேலும், மேலஸ்திவாரமாகிய அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள்மேலும் இஸ்பிரீத்துசாந்துவினால் கட்டப்பட்ட தேவாலயமாயிருக்கிறீர்கள் என்று விவரிக்கிறார்.