கிறீஸ்துநாதருக்கு எதிரிகளாகிய கள்ளப் போதகர்கள், தத்துவ சாஸ்திரிகள் முதலியவர்கள்மேல் எச்சரிக்கையாயிருக்கக் கற்பிக்கிறார்.
1. உங்கள்மட்டிலும், இலவோதிக்கேயாவிலிருக்கிறவர்கள் மட்டிலும், இன்னும் என் முகத்தைக் கண்ணால் காணாதிருக்கிற மற்றெல்லோர் மட்டிலும் நான் கொண்டிருக்கிற கவலை எவ்வளவென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.
* 1. இலவோதிக்கேயா:- இது பிரிஜியாவில் லீக்குஸ் என்னும் நதியோரத்திலிருந்த பட்டணமாம். இதில் இருந்த திருச்சபை கொலோசாவிலுள்ள திருச்சபையோடு அந்நியோந்நியமாயிருந்தது.
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்படவும், அவர்கள் பரம அன்பால் ஒன்றாயிணைக்கப்பட்டு, பிதாவாகிய சர்வேசுரனையும், சேசுக்கிறீஸ்து நாதரையும்பற்றிய பரம இரகசியங்களை அறிந்துகொள்ளும்படி பூரண நிச்சயமாகிய எல்லா ஐசுவரியத்தாலும் நிரப்பப்படவேண்டுமென்றே (கவலைப்படுகிறேன்).
* 2. சர்வேசுரனையும், சேசுக்கிறீஸ்துவையும்பற்றிய பரம இரகசியம்:- பிதாவாகிய சர்வேசுரனால் நித்திய காலமாய்த் தீர்மானிக்கப்பட்டு சேசுநாதரால் இவ்வுலகத்தில் நிறைவேற்றப்பட்ட இரட்சண்யத்தின் வேலையே இந்தப் பரம இரகசியமாம்.
3. இவருக்குள் ஞானம், அறிவு என் பவைகளின் பொக்கிஷங்கள் யாவும் அடங்கியிருக்கின்றன.
4. நுட்ப வாக்கியங்களால் உங்களைஒருவனும் ஏய்க்காதபடிக்கு நான்இதைச் சொல்லுகிறேன்.
5. ஏனெனில், சரீரத்தினால் உங்களுக்கு நான் தூரமாயிருந்தாலும், மனதினால் உங்களுடனேகூட இருந்து, உங்களுடைய நல்லொழுக்கத்தையும், கிறீஸ்துநாதர்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையுங் கண்டு சந்தோஷப்படுகிறேன். (1 கொரி. 5:3.)
6. ஆகையால் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரை நீங்கள் ஏற்றுக் கொண்டபடியே அவருக்குள் நடந்து வருவீர்களாக.
7. நீங்கள் கற்றுக்கொண்டபடியே அவருக்குள் வேரூன்றினவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி யறிந்த ஸ்தோத்திரத்தோடு அவரி டத்தில் வளர்ந்தேறுவீர்களாக.
8. மனிதர்களுடைய பாரம்பரியங்களுக்கும், உலகநூல் கோட்பாடுகளுக்கும் பொருந்தினதும், கிறீஸ்துநாதருக்குப் பொருந்தாததுமான தத்துவ சாஸ்தி ரத்தாலும், மாயமான தந்திர நியாயங்க ளாலும் ஒருவனும் உங்களை ஏய்க்காத படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்.
* 8. தந்திர நியாயங்கள் என்பதால் கொலோசியரிடத்தில் பிரவேசித்திருந்த இரண்டு வகை தப்பறைப் போதகங்களைக் குறிக்கிறார். அதாவது: சேசுநாதரல்ல, சம்மனசுகள் தான் நம்முடைய இரட்சணியத்தின் காரணமென்பதும், சுவிசேஷத்தோடு பழைய ஏற் பாட்டின் முறைமைகளையும் அவசியம் அநுசரிக்கவேண்டுமென்பதுமான போதகங்களாம்.
பாரம்பரியம்: - சம்மனசுகள் நம்முடைய இரட்சகர்கள் என்பது சர்வேசுரனாலல்ல, மனிதராலுண்டான போதகமானதால், மனுஷ பாரம்பரியமென்கிறார். சர்வேசுரனால் உண்டான பாரம்பரிய வழக்கங்களுக்கு விரோதமாய் அப்போஸ்தலர் இங்கே போதிக்கிறதில்லை.
உலகநூல் கோட்பாடுகள்: - திவ்விய கர்த்தருடைய காலத்துக்கு முன்னிருந்த உலக ஞானிகளும் இலெளகீகரான சில யூத ஞானிகளும் கற்றுக்கொடுத்த ஞானம் இப்போது அர்ச். சின்னப்பர் போதிக்கிற கிறீஸ்துநாதருடைய ஞானத்துக்கு ஒவ்வாததும், இத்தோடு அதை ஒப்பிட்டால், பாடசாலைகளில் ஆரம்பப் பாடம் படிக்கிற பிள்ளைகளுடைய ஞானத்துக்கு ஒத்ததாயிருக்குமென்றும் அர்த்தமாம்.
9. ஏனெனில் தெய்வத்துவத்தின் சம்பூரணமெல்லாம் அவரிடத்தில் சரீரப் பிரகாரமாய்க் குடிகொண்டிருக்கிறது.
* 9. மனுஷ சுபாவம் தேவ சுபாவத்தோடு சேசுக்கிறீஸ்துநாதரில் ஒன்றித்தபடியால் தெய்வீக மகத்துவமெல்லாம் அவரிடத்தில் வசித்திருந்ததென்று அர்த்தமேயொழிய தெய்வீகம் மனுஷரூபமாய் மாறிப்போனதென்று அர்த்தமில்லை. ஆகையால் உலக போதகங்களையும் யூதர் போதகங்களையும் புறக்கணித்து, திவ்விய கர்த்தரைப் பின்சென்றால் நாம் தவறிப்போகமாட்டோம்.
10. மேலும் எல்லாத் துரைத்தனத் துக்கும், அதிகாரத்துக்கும் தலைவரா யிருக்கிற அவரிடத்தில் நீங்கள் சம்பூரண மாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
11. அன்றியும் நீங்கள் பாவ மாம் சத்தைக் களைந்துவிடுவதாகிய கிறீஸ்து வின் விருத்தசேதனத்தை அவரிடத்தில் பெற்றுக்கொண்டீர்களேயொழிய, கையாலாகும் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
* 11. கிறீஸ்துவின் விருத்தசேதனம்: - மாம்சத்தைத் துண்டிக்கிறதல்ல, மனுஷசுபாவத்தின் கெட்ட பாசங்களை அறுத்துத் தள்ளுவதென்பதாம்.
12. மேலும் நீங்கள் ஞானஸ்நானத்தில் அவரோடு அடக்கம்பண்ணப்பட்டு, அவரை மரித்தோரினின்று எழுப்பின கடவுளின் (வல்லப) செய்கையின் மேலுள்ள விசுவாசத்தைக்கொண்டு அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந் திருக்கிறீர்கள்.
13. உங்கள் பாவங்களாலும், மாம்ச விருத்தசேதனமில்லாமையாலும் நீங்கள் மரித்தவர்களாயிருந்தபோது, அவ ருடனேகூட உங்களை உயிர்ப்பித்து, சகல அக்கிரமங்களையும் உங்களுக்குப் பொறுத்து,
14. நமக்கு எதிரிடையாயும், நமக்கு விரோதமாயுமிருந்த தீர்ப்பின் கையெ ழுத்தை அழித்து, அதைச் சிலுவையில் அறைந்து, முழுதும் ஒழித்துப்போட்டார்.
15. மேலும் துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து தள்ளி, மகா தைரியத்தோடு அவைகளைப் பிரசித்தமாய்க் காட்டி, தம்மில்தாமே அவைகளின்மேல் வெற்றிகொண்டாடினார்.
* 15. நாமெல்லோரும் ஜென்மப்பாவத்தினாலும் கர்மப்பாவங்களினாலும் நரக நித்திய மரணத்துக்குத் தீர்வையிடப்பட்டவர்களாய்ப் பசாசுகளுக்கு அடிமைப்பட்டு இருந்தோம். ஆனால் சேசுநாதர் தம்முடைய திரு இரத்தத்தினால் நம்முடைய பாவங்களைக் கழுவி, நமக்கு விரோதமாயிருந்த நித்திய மரணத்தீர்ப்பைத் தம்முடைய மரணத்தினாலே அழித்து, அந்தத் தீர்ப்பின் சாதனத்தைத் தம்முடைய சிலுவையில் அறைந்து நிர்மூலமாக்கினார். அன்றியும் நம்மை அடிமைப்படுத்தியிருந்த பசாசுகளின் அதிகாரத்தையும் ஆளுகையையும் பிடுங்கிக்கொண்டு அவைகளை வெறுமையாக்கி, அந்த ஆளுகையைத் தாமே எடுத்துக்கொண்டு, மரணத்தையும் பசாசையும் ஜெயித்த ஜெய சீலராய்க் கல்லறையைவிட்டு எழுந்தருளினார். அவர் ஏற்படுத்திய ஞானஸ்நானத்திலே நாமும் அவரோடேகூடப் பாவத்துக்கு மரித்து, அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டு அவரோடேகூட நித்திய ஜீவியத்திற்கு உயிர்த்தவர்களானோமென்று அர்த்தமாம். துரைத்தனங்கள், அதிகாரங்கள் என்பது மனுஷர்மேல் ஜென்மப்பாவத்தினால் அதிகாரம்பெற்றிருந்த தீய அரூபிகள்.
16. ஆதலால் போஜனபானத்தைப் பற்றியாவது, பண்டிகைநாள், அமாவாசை, ஓய்வுநாள் இவைகளைப்பற்றியாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. (உரோ. 14:3-5.)
17. இவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்தன: இவைகளுக்கு உடலோ கிறீஸ்துநாதராமே.
18. தாழ்மையிலும், சம்மனசுகளு டைய வணக்கத்திலும் விருப்பமுற்று காணாதவைகளில் பிரவேசித்து, மாம்ச சிந்தையில் வீணான கர்வங்கொண்ட எவனும் உங்களை ஏய்க்காதிருப்பானாக. (மத். 24:4; எபே. 5:6.)
* 18. பொய்யான தாழ்ச்சியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு மாம்சத்துக்குரிய சிந்தனைகளில் ஆங்காரிகளாகித் தாங்கள் அறியாத காரியங்களைப் பிதற்றி திருச்சபைக்கு உயிரும் வளர்ச்சியும் கொடுக்கிற சேசுநாதரை விட்டுவிட்டு, ஒருவிதமான சம்மனசுகளின் வேதத்தைப் போதிக்கத் துணிகிற கள்ளப் போதகரால் ஏய்க்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்களென்பது இதன் பொருளாம். இதிலே அர்ச்.சின்னப்பர் குறிக்கிற கள்ளப் போதகர்கள் யாரென்றால்: அந்நாட்களிலே யூதர்களுக்குள்ளே தோன்றின நோஸ்திக்கர் என்கிற பதிதர்களாம். அந்தப் பதிதர்கள் சேசுநாதர் அர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாகிய சர்வேசுரன் அல்ல, மோயீசனைப் போல ஒரு வெறுந் தீர்க்கத்தரிசியென்றும், சர்வேசுரன் மோயீசனுக்குச் சம்மனசுகளைக்கொண்டு பேசினதுபோல் சேசுநாதருக்கும் சம்மனசுகளைக்கொண்டு பேசினாரென்றும், அந்தச் சம்மனசுகள் தான் சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரென்றும் இதுமுதலான அபத்தங்களைப் பிதற்றிக்கொண்டுவந்தார்கள்.
19. இப்பேர்ப்பட்டவன் தலையோடு ஒன்றித்திராதவன்; அந்தத் தலையிலிருந்தே சரீரமுழுவதும் கணுக்களாலும் மூட்டுகளாலும் உதவிபெற்று, இணைக் கப்பட்டுத் தெய்வ வளர்ச்சியாய் வளரு கிறது.
* 19. தலையோடு ஒன்றித்திராதவன்: - சம்மனசுகளுக்கும் மனுஷர்களுக்கும் தலைவ ராகிய சேசுநாதரைவிட்டுச் சம்மனசுகளை ஆராதிக்கிறவர்களைக் கண்டிக்கிறாரே யொழிய சம்மனசுகளுடைய வணக்கம் வேண்டாமென்று சொல்லுகிறதில்லை.
20. ஆகையால் நீங்கள் கிறீஸ்துநாதரோடேகூட உலகநூல் கோட்பாடுகளுக்கு மரித்தவர்களானால், இன்னும் உலகத்திற்கேற்க நடக்கிறவர்களைப்போல,
21. இதைத் தொடாதேயுங்கள், இதைப் புசியாதேயுங்கள், இதைத் தீண்டாதேயுங்கள் என்பவைகளுக்கு உட்பட்டிருப்பதேன்?
22. இவையெல்லாம் உபயோகிக்கப்படுவதில் அழிந்துபோகிறவைகளும், மனிதர்களுடைய கற்பனைகளுக்கும், போதகத்துக்கும் இசைந்தவைகளுமா யிருக்கின்றன.
23. இவைகள் சுய இஷ்ட ஆராதனையையும், தாழ்மையையும், சரீரப் புறக்கணிப்பையும்பற்றி ஞானத்தின் வேஷத்தைக் கொண்டிருந்தாலும், மாம்சத் திருப்திக்கு உதவுகிறவைகளேயன்றி உண்மையான பிரயோசன முள்ளவைகளல்ல.