ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்!
1. தேவதாய் பிறந்த வேளையில் அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் எவ்வளவு முக்கியமானது என்று ஆராய்ந்து பார்க்கிறது.
சர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களெல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த வரமே! மற்ற மனிதர்களோடு கூடப் பிறக்கிற ஜென்மப் பாவத்தை அன்னையிடத்திலே நீக்கி அந்த மகத்தான தன்மையை அன்னைக்கு மாத்திரம் வழங்கினார்.
பரிசுத்த கன்னிமாமரியாள் தேவதாயாராவதற்கு நியமிக்கப்பட்டதாலும், சர்வேசுரன் அன்னை பேரில் தமது பிரியத்தை வைத்திருந்ததாலும், நரக பாதாளத்தின் பாம்பாகிய பசாசின் தலையை நசுக்குகிறவர்களானதாலும் ஓர் நொடியாயினும் பசாசுக்கு அடிமையாயிருக்கவும் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கவும் கூடவில்லை. அத்தகைய பொல்லாப்பு தேவ நீதிக்கும் தெய்வீக பரிசுத்தத்தனத்துக்கும் பொருந்தாது. ஆகையால் பரிசுத்த கன்னிமாமரியாள் உற்பவித்த முதல் நொடி துவக்கி எப்போதும் மாசில்லாதவர்களென்றும், அன்னையுடைய திரு ஆத்துமம் சகல வரப்பிரசாதங்களினாலும் புண்ணியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததென்றும், தெய்வீகத்துக்குத் தேவாலயமாகிய அன்னை உள்ளத்தில் அற்பப் பாவ முதலாய்ப் பிரவேசித்ததில்லையென்றும் திருச்சபையில் வழங்கி வரும் சத்தியம் நமக்குத் தெளிவிக்கின்றது. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தது, விசுவாச சத்தியமென்று பரிசுத்த பிதா ஒன்பதாம் பத்திநாதர் 1854-ஆம் ஆண்டு வரையறுத்துக் கூறினார். இதுவே தேவமாதாவின் பிரதானமான மகிமை. நாமும் இந்த மேலான மகிமையை மதித்து ஸ்துதித்து அப்படியே மரண, பரியந்தம் விசுவசிப்போமென்று உறுதியான பிரதிக்கினை செய்வோமாக.
2. அன்னை அந்த வரப்பிரசாதத்தை எவ்வளவு அருமையாய் மதித்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கிறது.
பரிசுத்த கன்னிமாமரியாள் சர்வேசுரனுடைய மாதாவானபடியால், மனிதர்களுக்கும் சம்மனசுகளுக்கும் இராக்கினியும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளுமாய் இருக்கிறது நியாயமே. ஆனால் தேவதாய் என்னும் இந்த உன்னதமான மகிமையைவிடப் பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் மாசில்லாமலிருக்கிறதே அன்னைக்குப் பிரியமாயிருந்தது. ஏனெனில் இதனால் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியினால், முன் சொல்லப்பட்ட இரண்டு மகிமையில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சர்வேசுரன் கட்டளையிட்டால், விவேகமுள்ள அந்தக் கன்னிகையானவர்கள் தேவதாயாக இருக்கிறதைவிட ஜென்மப் பாவமில்லாமல் இருக்கிறதே மேல் என எண்ணி இதையே தெரிந்து கொள்வார்களென வேதபாரகர் உறுதியாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நொடியாகிலும் அற்பப் பாவத்தோடிருக்கிறதும் அதனால் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதும் பெரிய நிர்ப்பாக்கியத்துடன் தனக்கு எந்த நன்மை வந்தாலும் எவ்வித சந்தோஷமும் இல்லையென்று நினைப்பார்கள்.
மனிதர் அப்படி நினைப்பார்களோ? ஐயையோ? பாவத்தில் விழுந்து அதில் அநேக நாள் அநேக மாதம் கிடந்து, உத்தம மனஸ்தாபப்படாமலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் இருக்கிறார்கள். ஆனால் தேவமாதா நினைத்தது போலவே சகல பொல்லாப்புக்களையும்விட பாவமானது பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்றும் அதற்கு மாத்திரமே பயப்பட வேண்டுமென்றும் அறிந்து உலகத்துக்கடுத்த புத்தி சாமர்த்திய முதலான நன்மைகளைவிட இஷ்டப்பிரசாதம், புண்ணியம், பரிசுத்தத்தனம் முதலான ஆத்தும நன்மைகள் மேலானவை என்று கண்டுணருவோமாக.
3. அந்த வரப்பிரசாதத்தைக் காப்பாற்றுகிறதற்காக அன்னை பட்ட பிரயாசை எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.
பரிசுத்த கன்னிமாமரியாள் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து பாவத்துக்குச் சார்புள்ள குணமில்லாமல், இஷ்டப்பிரசாதத்தில் நிலைபெற்றவர்களாயிருந்தாலும், பாவத்தில் விழாதபடிக்குச் சர்வேசுரன், அன்னைக்கு உதவி செய்திருந்தாலும், பாவத்துக்குப் பயந்து ஐம்பொறிகளை அடக்கி மிகுந்த விவேகத்துடனே நடந்தார்கள். சோம்பலை நீக்கித் தனது அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி சரீரத்தை ஒறுத்துத் தபசு செய்து நாள்தோறும் அதிகம் அதிகமாய்ச் சுகிர்த புண்ணியங்களைச் செய்யப் பிரயாசைப்படுவார்கள்; நாமோவெனில் இஷ்டப்பிரசாதத்தில் நிலைகொள்ளாமல், ஜென்மப் பாவத்தோடும் துர்க்குணத்தோடும் பிறந்திருப்பதினாலும், பாவத்துக்கு மனச்சார்புள்ளவர்களாய் இருப்பதினாலும், புண்ணியத்தைச் செய்யாமல் அநேக பாவங்களில் விழுந்தவர்களாய் இருப்பதினாலும் தேவமாதா நமக்குக் காண்பிக்கிற சுகிர்தமாதிரிகையைப் பின்பற்றாது அசமந்தமாயிருக்கிறோம். ஆகையால் அன்னையை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக்கொள்வோமாக.
செபம்.
கல்வாரி நாதருடைய மாதாவே! ஆதிமனிதன் பாவம் செய்த பிறகு பாம்பினுடைய தலையை நசுக்க சர்வேசுரனால் குறிக்கப்பட்டவர்கள் நீரே, பசாசின் கபட தந்திரத்தில் ஒருக்காலும் அகப்படாமல் பசாசை செயித்தவர்கள் நீரே, பசாசானது உமது திருப்பாதத்தின் கீழிருக்கிறதைக் கண்டு நான் சந்தோஷப்படுகிறேன். மிகுந்த இரக்கமுள்ள கன்னி மரியாயே, என் மாற்றானாகிய பசாசு எனக்குச் செய்த தந்திரங்களை பாரும். உம்முடைய உதவியைக் கேட்டு உம்மை பக்தியோடு வேண்டிக் கொண்டிருந்தால் பசாசு என் ஆத்துமத்தில் இத்தனை கேடுகளை வருவித்திருக்க மாட்டாது. இனிமேல் எனக்கு வருகிற தந்திரங்களில் தாழ்ச்சியான நம்பிக்கையோடு உம்மை மன்றாடுவேன்.
நேசத்துக்குரிய தாயாரே ! வல்லபம் பொருந்திய கன்னிகையே என் துர்க்குணங்களை அடக்கி என் சத்துருக்களை ஜெயிக்கும்படியாகவும் நீர் என்பேரில் இரங்கி எனக்கு இந்த உலகத்தில் உதவி செய்து மோட்ச இராச்சியத்தில் உம்மோடுகூட எனக்கு இடம் கிடைக்கும்படியாகவும் மன்றாடுவீரென்று நம்பிக்கையாய் இருக்கிறேன்.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
உம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.
இரண்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
தேவமாதாவைக் குறித்து ஓர் ஏழைக்கு தருமம் கொடுக்கிறது.
புதுமை!
கர்த்தர் பிறந்த 1621-ஆம் ஆண்டில் ஜெர்மானிய தேசத்தின் இரண்டாம் பெர்தினாந்து என்னும் அரசன் பதிதர்களான சுவேது என்பவர்களால் தமக்குப் பெரிய தீங்கு நேரிட்டிருக்கிறதைக் கண்டு பரிசுத்த கன்னிகையின் அடைக்கலத்தை அண்டி வந்தார். தம்முடைய இராட்சிய தலைநகரான லியென்னா நகரத்துக்கு நடுவில் தேவமாதாவின் பேரால் அதிசயமான ஸ்தம்பம் ஒன்றை ஸ்தாபித்தார். இந்த ஸ்தம்பம் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரம இராக்கினியின் பற்பல அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் உச்சியில் பசாசாகிய நரகப் பாம்பின் தலையை நசுக்கின பரிசுத்த கன்னிகையின் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அடியில் எழுதியிருந்த வாக்கியமாவது: "அரசர்களை ஆளச் செய்கிறவரும் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் ஆண்டவருமாகிய சர்வ ஜீவதயாபர் சர்வேசுரனுக்கும், ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளுமாய் இராஜாக்களுக்கு அதிகாரம் கொடுக்கிறவளுமாய் இருக்கிற தேவமாதாவுக்கும் தோத்திரமாக, அரசன் தம் அன்னையை இந்நாளில் தமது இராட்சியத்துக்கு ஆண்டவளாகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு அன்னைக்குத் தம்மையும் தம் பிரஜைகளையும் படைகளையும் இராட்சியங்களையும் ஒப்புக்கொடுத்திருக்கிற நித்திய ஞாபகத்துக்காக இந்த ஸ்தம்பத்தை கட்டி வைத்தார்"
இந்த ஸ்தம்பத்தை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணும்போது மிகுந்த ஆரவாரத்தோடு ஓர் திருநாளைக் கொண்டாடினார். எப்படி சகலமும் தயாரானபின் அந்தப் பக்தியுள்ள அரசன் தம் பிள்ளைகள் மந்திரிகள் பிரபுக்கள் சூழ கோவிலுக்குப்போய் அங்கு நடக்கும் திருப்பலி காணும் நேரத்தில் தமது சிம்மாசனத்தினின்றும் இறங்கிப் பீடத்தண்டையில் வந்து முழங்காலிலிருந்து தேவமாதாவைத் தமக்கும் தம்முடைய இராட்சியங்களுக்கும் பிரதானமான ஆண்டவளாகத் தெரிந்து கொண்டு பரிசுத்த கன்னிகை மாசில்லாமல் உற்பவித்த திருநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடச் செய்வேனென்று தாம் பண்ணின உடன்படிக்கையைப் பிரசித்தமாய் வெளிப்படுத்தினார்.
திருப்பலிக்குப் பிறகு அரசன் தம்முடைய அதிகாரிகளோடும் ஆயரோடும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் பேரால் ஸ்தாபிக்கப்பட்ட பீடத்துக்குப் போனார். அப்போது ஜனங்கள் தேவ மாதாவின் பிரார்த்தனை சொல்ல, எக்காளங்களும் மேளதாளங்களும் முழங்க, பீரங்கி வெடியதிர, ஆயர் அந்த அதிசயமான ஸ்தம்பத்தை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணினார். இரவு நேரத்தில் வீடுகளில் எங்கும் பல வர்ண தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. எண்ணிக்கையில்லாத மெழுகு திரிகளால் செய்யப்பட்ட பச்சை வில் ஒன்று தேவமாதா சுரூபத்திற்குச் சுற்றிலும் அற்புதமான வெளிச்சம் கொடுத்தது. அப்போது இரண்டு மணி நேரம் சுகிர்த செபங்கள் பக்தியோடு நடந்தபின் ஆயர் அனைவருக்கும் ஆசீரளித்து ஜனங்களை சந்தோஷமாய் வீட்டுக்கு அனுப்பினார்.
பரிசுத்த கன்னிகையானவள் இந்தப் பக்தியுள்ள அரசனுக்கு நேரிட்ட இக்கட்டுகளை நீக்கினதுமன்றி அவர் அநேக வெற்றிகளை அடையச் செய்து அவரை இடைவிடாத அன்புடன் காப்பாற்றினாள்.
1683-ஆம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் தாங்கள் அடைந்த வெற்றிகளைப்பற்றி பெருமை கொண்டு மேற்சொன்ன வியென்னா நகரைப் பிடிக்க வந்தார்கள். அந்த நகரை முற்றுகையாய்ச் சூழ்ந்து மிகுந்த கோபத்துடனும் பராக்கிரமத்துடனும் போர்புரிந்து, நகருக்குள் நுழையப் பீரங்கிப் பிரயோகம் செய்ததினால், நகரிலே தீப்பற்ற வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றினால் தங்களுக்கு எப்படியும் அபாயம் நேரிடுமென்று எண்ணிப் பயந்து நகரிலுள்ள ஜனங்கள் தேவமாதாவைத் தங்களுக்கு அடைக்கலமாகத் தெரிந்துகொண்டு அன்னையுடைய உதவியை மன்றாடினார்கள். உடனே அகோரமாய் எரிந்து கொண்டிருந்த அக்கினி அற்புதமாய் அவிந்தது.
இது இவ்வாறாக முஸ்லீம் மக்கள் அதிகமான கொடுமையோடு போராடிச் சண்டை செய்து பட்டணத்தை நெருங்கி அதைப் பிடித்து நிர்மூலமாக்க திட்டமிட்டிருந்தனர். கிறிஸ்தவர்களோவெனில் தேவமாதா பிறந்த திருநாளிலே மிகுந்த பக்தி நம்பிக்கையுடன் தங்களுடைய பரம இராக்கினியின் உதவியைக் கெஞ்சிக் கேட்ட அதே நாள் மாலையில் தங்களுக்கு உதவி செய்ய வருகிற ஓர் பெரிய தலைவனுடைய படைகள் அடுத்த மலையில் பரம்புகிறதைக் கண்டார்கள். இந்தத் தலைவனோடு கொஞ்சம் சேவகர்களிருந்தபோதிலும் இவர் அதிக சாமார்த்தியமுள்ளவரும் பக்தி மிகுந்தவருமாய் இருந்ததால் அவர் வந்ததின் நிமித்தமாக ஜனங்களுக்கு அதிக ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாயிற்று. திருநாளுக்குப் பிறகு நான்காம் நாள் காலையில் இந்தத் தலைவன் திருப்பலி கண்டு திவ்விய நற்கருணை வாங்கித் தம்மையும் தம்முடைய படைகளையும் தேவமாதாவின் அடைக்கலத்தில் வைத்து, இப்போது மாசில்லாத கன்னிகை நமது பாரிசமாய் இருக்கிறாள், அதனால் நமக்கு வெற்றி வருமென்பதற்குச் சந்தேகமில்லை. பகைவர்களுக்கு எதிராக இப்போது வாருங்களென்று சொல்லித் தம் போர்ச் சேவகர்களோடு புறப்பட்டுப் போனார். அவர்கள் கொஞ்சம் பேர்களாயிருந்த போதிலும் தேவ உதவியை நம்பி, எண்ணிக்கையில்லாதிருந்த பகைவர்கள்மேல் பாய்ந்து அவர்களை வெட்டிச் சிதறடித்து, தலைவர்களை சங்கரித்துக் கணக்கில்லாத போர் வீரர்களைக் கொன்று போட்டு அதிசயிக்கத்தக்க வெற்றி கண்டார்கள். தனக்கு அடைக்கலமாயிருந்த தேவமாதாவின் ஒத்தாசையினால் வியென்னா நகரமே பாதுகாக்கப்பட்டது.
நமக்கு ஆன்ம எதிரிகளாயிருந்த உலகம், பசாசு, சரீரத்தினால் நேரிடுகிற பொல்லாப்புகளிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் உதவி சகாயங்களை இடைவிடாமல் கேட்கக்கடவோம்.