தேவமாதாவின் வணக்கமாதம் - மே 03

தேவமாதா பிறந்ததின் பேரில்!

1. தேவமாதா பிறந்த நாளில் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிற்று.

பரிசுத்த கன்னிமரியாள் குழந்தையாய்ப் பிறந்த நேரத்தில், மற்றப் பெண்களைவிட அன்னை மேற்பட்டவர்களானதினால், திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா சுதன், பரிசுத்த ஆவியானவர் அன்னையை மிகுந்த அன்போடு நேசித்தார்கள். பிதாவாகிய சர்வேசுரன் தமது மிகுதியான அன்புக்குரிய குமாரத்தியாகவும், சுதனாகிய சர்வேசுரன் தாம் மனித அவதாரம் பண்ணும் தேவதாயாராகவும், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தமது இஷ்டப்பிரசாதத்துக்குப் பாத்திரமான தேவாலயமாகவும் கிருபைக் கண்கொண்டு அன்னையை நோக்கினார்கள். சம்மனசுக்களோவெனில், பிறந்திருக்கும் பரிசுத்த குழந்தை தங்களுக்கு இராக்கினியாய் இருப்பாளென்று சந்தோஷப்பட்டு, அன்னை பிறந்த நேரத்தில் அன்னைக்குக் கீழ்ப்படிதலான மேரையாய் அன்னையை ஸ்துதித்து நமஸ்கரிக்கவும் பாராட்டவும் திரளாய் வந்தார்கள். நாமோவென்றால் சர்வேசுரன் இந்தக் குழந்தையின் மேல் வைத்த நேசத்தை வணக்கத்தோடு அனுசரித்து பிறந்த வேளையில் அன்னைக்குக் கையளிக்கப்பட்ட வரப்பிரசாத மிகுதியைக் கண்டு சம்மனசுக்களோடுகூட சந்தோஷித்து இன்று முதல் மரண பரியந்தம் அன்னையின் அடைக்கலத்தில் இருக்க வேண்டுமென மன்றாடக் கடவோம்.

2. தேவமாதா பிறந்த நாளில் பூலோகத்தில் நம்பிக்கை உண்டாயிற்று.

சர்வேசுரன் ஆதி மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படியே மனிதர்களை மீட்க ஒரு இரட்சகர் வருவாரென்று 4000 ஆண்டுகளாக மக்களெல்லாரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். பாவத்தினாலே பசாசின் கொடூர அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்த நிர்ப்பாக்கியமான மனிதர்களை இரட்சிக்கிற நேரம் நெருங்கிய பொழுது, பூமியில் பிரகாசத்தையும் செழிப்பையும் பொழிகிற சூரியன் உதிக்கிறதற்கு முன்னர் உதயகாலம் வருகிறது போல பாவத்தின் இருளை நீக்கிச் சகல உயிர்களுக்கும் ஞான ஒளி வீசுகிற நீதியின் சூரியனாகிய சேசுநாதர் பிறக்கிறதற்கு முன்னர் விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய அன்னை கன்னிமரியாள் பிறந்தார்கள். நேசத்துக்குரிய தேவமாதா பிறந்த நாளை நினைத்து நம் ஆண்டவளுக்கான வணக்கத்தையும் நம்முடைய தாயாருக்கான அன்பையும் காண்பித்து அவர்களுடைய உதவியையும் ஆதரவையும் மன்றாடுவோமாக.

3. தேவமாதா பிறந்த நாளில் நரகத்தில் பயம் உண்டாயிற்று.

பசாசின் தலையை நசுக்க முன்னர் குறிக்கப்பட்ட கன்னிகை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து இந்த நாளில் பிறந்திருக்கிறார்கள். பிறந்த தேவமாதாவுக்குக் கிடைத்த இஷ்டப் பிரசாதங்களையும் வரங்களையும் பசாசு அறிந்திருந்தால் அதற்கு எவ்வளவு காய்மகாரம் உண்டாகியிருக்கும். மனுமக்களின் எதிரியான பசாசு தான் அடைந்த நிர்ப்பாக்கியத்தில் மனிதரை அமிழ்த்தித் தனக்கு அடிமையாக்கி அவர்கள் நரகத்தில் விழும்படிக்கு வெகு பிரயாசைப் படுகின்றது. ஆனால் மனிதரை இரட்சிக்க வருகிற சேசுக்கிறிஸ்துநாதரின் நேச அன்னை இந்த பசாசின் தலையை நசுக்கியிருக்கிறதினால் அதற்கு மகா பலவீனம் வந்தது சரியே. ஆகவே நாமெல்லாரும் பலவீனப்பட்ட பசாசுக்குப் பயப்படாமல், சோதனை வேளையில் அதை நாம் வெல்லும்படியாக மகா பரிசுத்த கன்னிகையிடம் மிகுந்த நம்பிக்கையோடு வேண்டிக்கொள்வோம்.

செபம்.

நேசத்துக்குரியவர்களாய்ப் பிறந்த கன்னிமரியாயே வாழ்க! நீதி சூரியனுக்கு முன் உதிக்கிற விடியற்காலத்து நட்சத்திரமே வாழ்க, நீர் பிறந்த நேரத்தில் உம்முடைய திருப்பாதத்தைத் தாள் பணிந்து வணக்கத்தோடு உம்மை ஸ்துதித்து என்னை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். எங்களுக்குப் பூரண ஞானபாக்கியத்தைக் கொடுக்கப் பிறந்தவர்கள் நீரே: துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவும் பலவீனர்களுக்கு வல்லமையும், பாவிகளுக்கு அடைக்கலமும் சகல நிர்ப்பாக்கியர்களுக்குத் தஞ்சமும் நீரே. சர்வேசுரன் என் பாவங்களின் பாரத்தைப் போக்கி, என் ஆத்துமத்தின் ஞான அந்தகாரத்தை நீக்கி, என் துர்க்குணங்களையெல்லாம் சீர்ப்படுத்தி, என் சத்துருக்கள் கையில் நின்று என்னை இரட்சிக்கும்படிக்கு நீர் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அப்போது உம்முடைய ஆதரவை அடைந்து தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு இந்த உலகில் நல்வழியில் நடந்து மோட்ச இராட்சியத்தில் சேருவேன் என நம்பிக்கையாய் இருக்கிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க! இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.

மூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது : 

தேவமாதாவைக் குறித்து ஓர் பிணியாளனைச் சந்தித்து ஆறுதல் சொல்லுகிறது.

புதுமை!

1830-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் பக்தியுள்ள கன்னிகை இருந்தாள். அவள் நெடுநாள் சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுக்கு ஏற்ற வண்ணம் செபித்துக்கொண்டிருந்ததுமல்லாமல், பிச்சைக்காரருக்கும் வியாதியஸ்தருக்கும் நிர்ப்பாக்கியருக்கும் தர்மம் கொடுத்து, உதவி செய்து ஆறுதல் சொல்லி வந்தாள். ஓர் நாள் அன்னைக்கு தியானம் செய்யும் வேளையில், ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மாதாவின் பிரகாசம் பொருந்திய ஓர் படம் வானத்திலிருந்து தரிசன மேரையாய் காணப்பட்டது. அத்தருணத்தில் பரமநாயகியின் கைகளினின்று ஜோதிக்கதிர் வீசவே, இந்நேரத்தில் அன்னை தன்னிடம் பேசுவதுபோல் ஓர் குரல் கேட்டது. இந்தக் கதிர்கள் தேவமாதா மனிதருக்குப் பெறுவிக்கிற ஞான வரங்களுடைய அடையாளமென ஒலித்தது.

அப்பொழுது அந்தப் படத்தைச்சுற்றி தங்க எழுத்துக்களால் எழுதியிருந்த வாக்கியமாவது: "ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே! உம்முடைய அடைக்கலத்தை அண்டி வருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்". இதைக் கன்னிகை வாசித்து முடிந்தபின் அந்தப் படம் திருப்பப்பட்டது. திருப்பின பக்கத்தில் தேவமாதாவின் உன்னத நாமத்துக்கு முதலெழுத்தான ஓர் அட்சரமும், அதற்குமேல் ஓர் சிலுவையும் அதன் அடியில் இயேசுகிறிஸ்துநாதருடைய திருஇருதயமும் தேவமாதாவினுடைய மாசற்ற திருஇருதயமும் பதிந்திருந்தன. இந்தக் கன்னிகை இவைகளையெல்லாம் வணக்கத்தோடு உற்றுப் பார்க்கும் பொழுது அன்னைக்கு மறுபடியும் ஓர் குரல் கேட்டது. அதாவது "இப்படத்தின் மாதிரியால் ஓர் படம் செய்ய வேண்டியது யாராகிலும் ஆசீர்வதிக்கப்பட்ட இந்தச் சுரூபத்தை யாரேனும் தன் பேரில் தரித்துக்கொண்டு, இதில் எழுதியிருக்கிற சிறு செபத்தை செபித்தால் தேவமாதாவின் விசேஷ உதவியைப் பெறுவார்கள். இதற்குப்பின், அந்தக் காட்சி மறைந்ததாம்.

தான் கண்டதையும் கேட்டதையும் இந்தக் கன்னிகை தன் ஞானத் தந்தையாகிய குருவானவருக்கு விவரமாய் அறிவித்தாள். ஆனால் அவர் அதில் ஏதாகிலும் வஞ்சகம் இருக்கக்கூடும் என்று பயந்து ஒன்றும் செய்யாமலிருக்கும்போது, மீண்டும் மீண்டும் முன் சொன்னதுபோல திருப்படம் அன்னைக்குக் காட்சியளித்து கடைசியாக இந்தச் சுரூபத்தைச் செய்யத் தாமதம் செய்வதே தேவமாதாவுக்குப் பொருந்தாத காரியமாயிருக்கிறது என்று ஓர் குரலொலி கேட்டது. இந்தக் கன்னிகை இதை மேற்சொல்லிய குருவானவருக்கு மறுபடியும் அறிவித்தபின் அவர் மேற்றிராணியாரின் உத்தரவு பெற்று இந்த அற்புதமான சுரூபத்தை நேர்த்தியாக செய்வித்தார்.

சில மாதங்களுக்குள்ளே அத்திருச்சுரூபம் அநேக இலட்சமாகச் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது. அதன் மூலமாய் எத்தேசத்திலும் எக்குலத்திலும் எவ்வகையிலும் எண்ணிக்கையில்லாத அற்புதங்கள் நடந்தன. பாவச்சேற்றில் அமிழ்ந்தின் அநேகம் பாவிகள் தங்கள் மூர்க்கத்தை விடமாட்டாதவர்களா யிருந்தபோதிலும் இந்த சுரூபத்தை வாங்கினவுடனே மனந்திரும்பிப் பாவத்தைவிட்டு விலகி நல்லவர்களானார்கள். எவ்வித பரிகாரத்திற்கும் குணமாகாத வியாதிகள் இந்தச் சுரூபத்தின் வழியாகத் தீர்ந்தது. போர்ச் சண்டைகளில் நெடுநாளிருந்த சேவகர் இந்தச் சுரூபத்தை தாங்கள் பக்தியோடு அணிந்திருந்ததினால் எந்த விதமான மோசமுமின்றிக் காயமுமின்றிப் போர்க்களத்தில் நின்று தப்பிப் பிழைத்தார்கள். அநேகம் புண்ணியாத்துமாக்கள் பாவத்துக்கு ஏதுவான சமயங்களில், அகப்பட்டு உலகம், சரீரம், பசாசு ஆகிய இம்மூன்று எதிரிகளால் அதிக வருத்தப்பட்டபோது இந்தத் திருச் சுரூபத்தைத் தாங்கள் பயபக்தியுடன் அணிந்திருந்ததினால் பாவத்தில் விழாமல் இருந்தார்கள்.

நீங்களும் கிறிஸ்தவர்களே, இந்த அற்புதமான சுரூபத்தினால் மற்றவர்களுக்கு வந்த ஞான நன்மைகள் உங்களுக்கும் வரும் வண்ணம் இந்தச் சுரூபத்தை நீங்கள் அணியக்கடவீர்கள்.