எவராலும் திறக்கமுடியாதிருந்த ஏழு முத்திரையுள்ள புஸ்தகத்தைப் பலியான செம்மறிப்புருவையானவர் திறந்ததினாலே, நான்கு ஜீவஜெந்துக்களாலும், இருபத்து நான்கு வயோதிகராலும், மற்றச் சகல படைப்புகளினாலும் கொண்டாடப்படுகிறார்.
1. அல்லாமலும், சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறவருடைய வலது கரத்தில் உள்ளும் புறமும் எழுதப்பட்டு, ஏழு முத்திரை பதிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைக் கண்டேன்.
2. அப்போது புஸ்தகத்தைத் திறக்கவும், அதின் முத்திரைகளை உடைக் கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையும் கண்டேன்.
3. ஆனால், வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவாவது அதைப் பார்க்கவாவது எவனாலும் கூடாதிருந்தது.
* 1-2-3. அந்தப் புஸ்தகம் இதுமுதற்கொண்டு காட்சியில் அர்ச். அருளப்பர் காணப் போகிறவைகள் அடங்கியிருந்த தேவ இரகசியங்களுள்ள புஸ்தகமாம். ஏழு முத்திரைகளால் அந்தப் புஸ்தகத்தில் அடங்கிய ஏழு பிரதான தேவ இரகசியங்கள் குறிக்கப்படுகிறது. அந்த முத்திரைகளை உடைத்துப் புஸ்தகத்தைத் திறக்க ஒருவனாலும் கூடாதென்கிறது அந்த இரகசியங்களை சர்வேசுரன் தம்முடைய திருக்குமாரனுக்கேயன்றி வேறொருவனுக்கும் அறிவிக்கச் சித்தமில்லாதிருக்கிறாரென்று அர்த்தமாம். சேசுநாதர் மனுஷசுபாவத்தின்படி யூதா கோத்திரத்தில் பிறந்ததினாலேயும், பசாசையும் மரணத்தையும் ஜெயித்து, ஜெயங்கொண்டதினாலேயும், ஆதியாகமம் 49-ம் அதி. 9-ம் வசனத்தில் பிதாப்பிதாவாகிய யாக்கோபு உரைத்த தீர்க்கதரிசனத்தின்படியே யூதா கோத்திரத்தின் சிங்கம் என்றும், தாவீதின் பிதிர்வழியில் பிறந்ததினாலே தாவீது இராஜாவின் வேரென்றும் சொல்லப்படுகிறார். அவர் சிலுவையில் பலியானதினால் கொலையுண்ட செம்மறிப்புருவையென்று சொல்லப்படுகிறார். அவர் உயிர்த்தபிற்பாடு உயிருள்ளவராயிருந்தாலும், தம்முடைய திருமேனியில் ஐந்து திருக்காயங்களை வைத்திருக்கிறபடியினாலே கொலையுண்ட தன்மை யாய் நிற்கிறாரென்று சொல்லப்படுகிறது.
4. நானோ, அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும் பார்க்கவும் பாத்திரவான் ஒருவனும் காணப்படவில்லையே என்று மிகவும் அழுதேன்.
5. அப்போது வயோதிகர்களில் ஒருவர் என்னை நோக்கி: நீ அழாதே; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும் அதன் ஏழு முத்திரைகளை உடைக்கவும் வெற்றியடைந் திருக்கிறார் என்றார். (ஆதி. 49:9.)
6. அப்பொழுது நான் கண்டதாவது: இதோ, சிங்காசனத்திற்கும் நான்கு ஜீவஜெந்துக்களுக்கும் நடுவிலும் வயோ திகர்களுக்கு நடுவிலும் ஒரு செம்மறிப் புருவை கொலையுண்ட தன்மையாய் நிற்கிறதைக் கண்டேன். அதற்கு ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் இருந் தன. அவைகள் பூமி எங்கும் அனுப் பப்படும் சர்வேசுரனுடைய ஏழு அரூபிகளாம்.
* 6. ஏழு கொம்புகள் பராக்கிரம வல்லமையும், ஏழு கண்கள் அயராத கவனமுள்ள விசாரணையையுங் குறிக்கிறது. இவைகளால் குறிக்கப்பட்ட ஏழு அரூபிகள் 1-ம் அதி. 4-ம் வசனத்தில் சொல்லப்பட்டதுபோல் திருச்சபைக்குப் பாதுகாவலான ஏழு தூதர்களாம்.
7. அவர் வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்தி லிருந்த புஸ்தகத்தை வாங்கி,
8. அந்தப் புஸ்தகத்தை அவர் திறந்த மாத்திரத்தில் அந்த நான்கு ஜீவ ஜெந்துக்களும், இருபத்துநான்கு வயோ திகரும் தங்கள் தங்கள் சுரமண்டலங் களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்பாத்திரங்களையும் பிடித்துக்கொண்டு, செம்மறிப்புருவை யானவருக்கு முன்பாக (சாஷ்டாங்க மாய்) விழுந்து:
* 8. மோட்சவாசிகள் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களைப் பொற்பாத்திரத்தில் ஏந்திச் சுகந்த வாசனையாகத் தேவசமுகத்திலே ஒப்புக்கொடுக்கிறார்களென்று இந்த வாக்கியத்தால் தெளிவாயிருக்கையில், நாம் மோட்சவாசிகளை நோக்கி வேண்டிக்கொள்ளுகிற விஷயத்திலே சிலர் இன்னும் குறை காண்பதேனோ?
9. ஆண்டவரே, தேவரீர் புஸ்தகத் தை வாங்கவும், அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர். ஏனெனில் தேவரீர் கொலையுண்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் தேசத்தாரிலுமிருந்து எங்களை உம்முடைய இரத்தத்தினாலே சர்வேசுரனுக்காக மீட்டுக்கொண்டீர்.
10. எங்கள் சர்வேசுரனுக்கு முன்பாக எங்களை இராஜாக்களும் குருக்களுமாக்கினீர்; நாங்களும் பூமியில் அரசாளுவோம் என்று சொல்லி, ஒரு புதிய பாட்டைப் பாடினார்கள்.
11. மேலும் நான் பார்த்தபோது சிங் காசனத்தையும் ஜீவஜெந்துக்களையும், வயோதிகர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன். அவர்களுடைய தொகை அநேக ஆயிரமா யிருந்தது. ( தானி. 7:10.)
12. அவர்கள் மிகுந்த சத்தமிட்டு: கொலையுண்ட செம்மறிப்புருவையானவர் வல்லமையையும், தெய்வத்துவத்தையும், ஞானத்தையும், பலத்தையும், வணக்கத்தையும், மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள் ளப் பாத்திரராயிருக்கிறார் என்றார்கள்.
13. அப்போது வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள சகல சிருஷ்டிகளும், சமுத்திரத்திலும் அதிலடங்கிலும் உள்ளவைகளுமாகிய யாவும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், செம்மறிப்புருவையானவருக்கும் ஸ்தோத்திரமும், வணக்கமும், மகிமை யும், வல்லபமும், காலாகாலங்களுக்கும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்.
14. அதற்கு நான்கு ஜீவஜெந்துக்களும்: ஆமென் என்றன. இருபத்து நான்கு வயோதிகரும் தங்கள் முகங்குப்புற விழுந்து, சதாகால ஜீவியரை ஆராதித்தார்கள்.