கிறீஸ்துநாதரைப் பின்பற்றும்படி புத்திசொல்லி, சம்சாரிகளுடைய கடமைகளை விவரித்துக் காட்டுகிறார்.
1. ஆகையால் நீங்கள் மிகவும் பிரியமான பிள்ளைகளைப்போல், சர்வேசுரனைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
2. கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாச னையுள்ள காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, நம்மைச் சிநேகித்ததுபோல நீங்களும் சிநேகத்தில் நடந்துவருவீர்களாக. (அரு.13:34; 15:12; 1 அரு. 4:21.)
3. மேலும் அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு யோக்கியமானபடி எவ்வித வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (கொலோ. 3:5.)
4. இன்னமும் வெட்கங்கெட்டதனமும், மூடப்பேச்சும், சரசபரியாசமும் உங்கள் வாயில் வராதிருப்பதாக. இவை களெல்லாம் நம்முடைய அழைப்புக்கு அடாதவைகள். ஆனால் நன்றியறிந்த ஸ்தோத்திர வசனமே தகும்.
5. ஏனெனில் எவ்வித விபசாரக்கார னும், அசுத்தனும், விக்கிரகங்களுக்கு ஊழியனாகிய பொருளாசைக்காரனும், கிறீஸ்துநாதருடையவும், சர்வேசுரனு டையவும் இராச்சியத்திலே பங்கு சுதந் திரம் அடையமாட்டானென்று அறிந்து உணர்ந்துகொள்ளுங்கள். (கலாத். 5:21.)
* 5. பொருளாசை விக்கிரகங்களுக்கு ஊழியமென்று சொல்வதெப்படி? உன் திரவியமெங்கேயோ அங்கே உன் இருதயமும் இருக்குமென்று சேசுநாதர் திருவுளம்பற்றினதுபோல, மிதமிஞ்சின பொருளாசைக்காரன் தன் திரவியங்களை ஒரு தெய்வம் போல் எண்ணி, அவைகளின்பேரில் தன் நம்பிக்கையெல்லாம் வைத்து, அவைகளுக்குத் தன் இருதயத்தையும், மனதையும், ஆத்துமத்தையும் அடிமையாக்கி, அவைகளுக்கு மெய்யாகவே ஆராதனைபண்ணுகிறான் என்கிறதினாலே அந்தப் பொருளாசை விக்கிரகங்களுக்கு ஊழியமென்று சொல்லப்படும்.
6. வீண் வார்த்தைகளால் ஒருவனும் உங்களை மயக்க இடங்கொடாதிருங்கள். ஏனெனில் இப்படிப்பட்டவைகளின் நிமித்தமே சர்வேசுரனுடைய கோபம் அவநம்பிக்கையின் புத்திரர்மேல் வருகின்றது. (மத். 24:4; மாற். 13:5; லூக். 21:8; 2 தெச. 2:3.)
7. ஆகையால் அப்படிப்பட்டவர்களோடே உங்களுக்குச் சம்பந்தம் வேண்டாம்.
8. இதற்குமுன் நீங்கள் இருளாயிருந்தீர்கள். இப்பொழுதோ கர்த்தருக்குள் ஒளியாயிருக்கிறீர்கள். ஒளியின் புத்திரராக நடந்துகொள்ளுங்கள்.
9. ஒளியின் கனியோ சகலவித நன்மைத்தனத்திலும், நீதியிலும், சத்தி யத்திலும் விளங்குகிறது.
10. சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளது இன்னதென்று நீங்கள் ஆராய்ந்து பார்த்து,
11. பலனில்லாத இருள்களின் கிரியைகளோடு நீங்கள் கலவாதிருப்பதன்றியே, அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்.
12. ஏனெனில் அவர்களால் இரகசியத்தில் செய்யப்படுகிறவைகளைச் சொல்லுகிறதும் வெட்கக்கேடாயிருக்கின்றது.
13. கண்டிக்கப்படுகிற அவைகளெல்லாம் வெளிச்சத்தில் வெளியாக்கப்படுகின்றன. ஏனெனில் சகலத்தையும் வெளியாக்குவது வெளிச்சமாயிருக்கிறது.
* 11-12-13. கெட்டவர்களுடைய இரகசியமான துர்க்கிரியைகளுக்கு நீங்கள் எவ்விதத்திலும் உடன்படாதிருப்பதுமன்றி, அறிவாகிய ஒளியின் புத்திரராகிய நீங்கள் அப்படிப்பட்ட கெட்ட கிரியைகளை அருவெறுத்து தைரியமாய்க் கண்டிக்கக் கடவீர்கள். அந்தக் கெட்ட கிரியைகள் இன்னதென்று இங்கே சொல்லமாட்டேன். ஏனெனில், அவைகளைச் சொல்லுகிறதுமுதலாய் வெட்கக்கேடாயிருக்கிறது. கெட்டவர்கள் இரகசியமாய்ச் செய்கிற அந்தக் கிரியைகளை நீங்கள் கண்டிக்கும்போது அவைகளைச் செய்கிறவர்கள் வெளியாக்கப்பட்டு வெட்கப்படுவார்கள். நீங்களோ ஒளியின் புத்திரரென்று விளங்குவீர்களென்று அர்த்தமாம். வெளிச்சத்தால் நல்லது பொல்லாதது தெரியவருவதுபோல், ஞான வெளிச்சமாகிய சுவிசேஷ போதகத்தால் தீமையெல்லாம் வெளியாகிறது.
14. இதன் நிமித்தமே: நித்திரை செய்கிறவனே, நீ எழுந்து, மரித்தோரைவிட்டுப் புறப்படு; அப்போது கிறீஸ்துநாதர் உன்னைப் பிரகாசிப்பார் என்று சொல்லியிருக்கின்றது.
15. ஆதலால் சகோதரரே, நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடக்க வேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். புத்தியீனரைப்போல் நடவாமல், (கொலோ. 4:5.)
16. காலம் கெட்டுப்போயிருக்கிறபடியால், போன காலத்தை மீட்டு, ஞானிகளைப்போல் நடங்கள்.
* 16. காலத்தை மீட்டுக்கொள்ளுங்கள் என்பதின் கருத்தாவது: இக்காலங்கள் கெட்டவைகளாயிருக்கிறபடியினாலே எச்சரிக்கையோடும், விமரிசையோடும், விழிப் போடுமிருந்து எவ்விதத்திலும் காலத்தைப் புண்ணிய வளர்ச்சிக்குப் பிரயோசன மாக்கிக்கொள்ளுங்கள். அவனவன் இதுவரையில் ஜீவித்த ஜீவியத்தை இப்போது யோசித்துப்பார்த்தால், அதில் அநேககாலம் வீணாய்க் கெட்டுப்போயிற்றென்று காண்பான். அவன் இவ்விதமாய் நஷ்டமாக்கின காலத்துக்குப் பரிகாரஞ்செய்து அந்தக் காலத்தை மீட்கும்படி சுறுசுறுப்போடு புண்ணிய சம்பத்துக்களை அதிகமாய்த் தேடிக்கொள்ள வேண்டுமென்பது கருத்து.
17. ஆகையால் நீங்கள் மதியற்ற வர்களாயிராமல், சர்வேசுரனுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள் ளுங்கள். (உரோ. 12:2; 1 தெச. 4:3.)
18. காம விகாரத்துக்கு ஏதுவான மதுபானத்தால் லாகிரிகொள்ளா திருங்கள். ஆனால் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு,
19. சங்கீதங்களிலும், கீர்த்தனைகளிலும், ஞானப்பாட்டுகளிலும் உங்களுக்குள் சம்பாஷித்து, உங்கள் இருதயங்களில் ஆண்டவருக்குக் கீர்த்தனைகளும் சங்கீதங்களும் பாடுங்கள்.
20. எல்லாருக்காகவும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே பிதாவாகிய சர்வேசுரனுக்கு இடைவிடாமல் நன்றியறிந்த ஸ்தோத்திரம்பண்ணி,
21. கிறீஸ்துநாதருடைய பயத்தில் ஒருவருக்கொருவர் கீழ்ப்பட்டிருப்பீர்களாக.
22. மனைவிகள் கர்த்தருக்கென்றாற்போல் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படியக்கடவார்கள். (ஆதி. 3:16; கொலோ. 3:18.)
23. ஏனெனில் கிறீஸ்துநாதர் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறதுபோல புருஷனானவன் தன் மனைவிக்குத் தலைவனாயிருக்கிறான். அவர் தம்முடைய சரீரத்தின் இரட்சகராய் இருக்கிறாரல்லோ. (1 கொரி. 11:3; கொலோ. 1:18.)
24. ஆனால் திருச்சபை கிறீஸ்துநாதருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதுபோல, சகலத்திலும் மனைவிகள் புருஷர்களுக் குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
* 24. ‘திருச்சபை கிறீஸ்துநாதருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதுபோல்’ என்பதினால் அர்ச். சின்னப்பர் சத்திய திருச்சபை எந்நாளும் கிறீஸ்துநாதருக்குக் கீழ்ப்படிந்திருக் கிறதென்றும், சத்தியத்தைவிட்டுத் தவறாமல், உலகமுடியுமட்டும் மாசுபடாமலும், வேறுபடாமலும் அவருக்குப் பிரமாணிக்கமா யிருக்குமென்றும் காட்டுகிறார்.
25. புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்ததுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.)
26. கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு ஜல ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும்,
27. கறைதிரை இவை முதலியவைகள் ஒன்றுமில்லாமல், அர்ச்சிக்கப்பட்டதும், மாசற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் துலங்கப்பண்ணவும் தம்மைத்தாம் கையளித்தாரே.
28. அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சரீரத்தைப் போல் நேசிக்கக்கடவார்கள். தன் மனைவியை நேசிக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
29. எவனானாலும் தன் மாம்சத்தை ஒருபோதும் பகைத்ததில்லை. ஆனால் கிறீஸ்துநாதர் திருச்சபைக்குச் செய்கிறதுபோல அவனவன் தன் சரீரத்தைப் போஷித்துப் பேணிக்கொண்டு வருகிறான்.
30. ஏனெனில் நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களும், மாம்சத்தில் மாம்சமும், எலும்பில் எலும்புமாயிருக்கிறோம்.
31. இதனிமித்தம் மனுஷனானவன் தன் தந்தை தாயைவிட்டு, தன் மனைவி யோடே சார்ந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதி.2:24; மத். 19:5; மாற். 10:7.)
32. இது பெரிய தேவதிரவிய அநுமானமாயிருக்கின்றது. கிறீஸ்துநாதரிலும் திருச்சபையிலும் என்று சொல்லு கிறேன்.
33. அன்றியும் உங்களில் ஒவ்வொருவனும் தன் மனைவியைத் தன்னைப் போல் நேசிப்பானாக. மனைவியோ தன் புருஷனுக்குப் பயந்து நடப்பாளாக.
* 33. சத்திய விசுவாசமுள்ள கிறீஸ்தவர்களே, அர்ச். சின்னப்பருடைய வாக்கியங்களி னாலே உங்கள் அந்தஸ்தின் மேன்மையையும் உங்களுக்குண்டான கடமைகளையும் நன்றாய் உணர்ந்து அறிந்துகொள்ளக்கடவீர்கள். கிறீஸ்தவர்களுடைய விவாகபந்தன மானது கிறீஸ்துநாதருக்கும், திருச்சபைக்குமுள்ள ஞானப் பந்தனத்துக்கு அடையாளமா யிருக்கிறது. அதெப்படியென்றால்: நீங்கள் அறிந்திருக்கிறபடியே ஆதித்தகப்ப னாகிய ஆதாமுக்குச் சர்வேசுரன் ஆழ்ந்த நித்திரையை அனுப்பி, அவனுடைய விலாவி லிருந்து ஓர் எலும்பை எடுத்து, அதை ஒரு ஸ்திரீயாகச் சிருஷ்டித்து, அவளை ஆதாமுக்கு மனைவியாகக் கொடுத்தார். மேலும் அவர்களது விவாகத்தை ஆசீர்வதித்து, அதுமுதல் மனிதன் தன் தந்தை தாயைவிட்டுத் தன் மனைவியுடன் இசைந்து இருவரும் ஒரே சரீரமாக இருக்கக்கடவார்களென்று அருளிச்செய்தார். அப்படியே சேசுநாதர் தாம் சிலுவையில் அறையுண்டு மரண நித்திரையடைந்தபோது ஈட்டியினால் திறக்கப் பட்ட தம்முடைய திரு விலாவிலே நின்று புறப்பட்ட திரு இரத்தத்தினாலும் தண்ணீ ராலும் குறிக்கப்பட்ட ஞானஸ்நானத்தின் வழியாகத் திருச்சபையைக் கழுவி, கறைதிரை யில்லாததும், மாசற்றதுமான பத்தினியாகத் தமக்குமுன் நிறுத்திக்கொண்டார். ஆகையால் கிறீஸ்தவர்களுடைய விவாகமானது கிறீஸ்துநாதருக்கும் திருச்சபைக்கும் உண்டான இந்த ஞான ஐக்கியத்துக்கு அடையாளமாயிருக்கிறதினாலே இது பெரிய தேவதிரவிய அநுமானமென்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார். ஆகையால் திருச்சபையானது தன் பத்தாவாகிய கிறீஸ்துநாதரைச் சங்கித்து, நேசித்து, வணங்கிக் கீழ்ப்படிவதுபோல், மனைவியானவள் தன் பத்தாவைக் கிறீஸ்துநாதருடைய பிரதிநிதியென்று பாவித்து, அவனைச் சங்கித்து, நேசித்து, வணங்கி அவனுக்குக் கீழ்ப்படிவாளாக. அன்றியும் கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, ஆதரித்துப் போஷித்துப் பேணி, இடைவிடாமல் காப்பாற்றிக்கொண்டு வருவதுபோல், புருஷனானவன் தன் மனைவியை நேசித்துப் பேணி, நடத்தி, அவளை இடைவிடாமல் காப்பாற்றிக்கொண்டு வரக்கடவானென்று அறிவீர்களாக.