தேவமாதா தம்மைக் காணிக்கையாக சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்ததின் பேரில்!
1. பரிசுத்த கன்னிமரியாள் சிறு வயதில் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
தேவமாதா செய்ததானது சுகிர்த பக்தி முயற்சிகளால் நிறைந்திருக்கிறது மல்லாமல், சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாகவும் இருக்கிறது. அவர்கள் குழந்தையாயிருக்கும் போது, இதோ! அதிசயமான வர்த்தமானம் அவர்களிடத்தில் நடந்தது. அதென்னவென்றால், மூன்று வயதில் அவர்கள் சர்வேசுரனுடைய தேவாலயத்துக்குச் சென்று தேவ ஊழியம் செய்வதற்குத் தன்னை கொடுக்கப்போகிற வார்த்தைப்பாட்டையும் வேண்டிய வருத்தத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தன்னை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற காரணத்தினால் தேவபக்தியினாலும் தூண்டப்பட்டு தாமதப்படாமல் தடங்கல் எல்லாவற்றையும் நீக்கி தான் நினைத்ததை நிறைவேற்றத் துணிந்தார்கள். அப்படியே மூன்று வயதில் தேவமாதா தன்னைச் சர்வேசுரனுக்கும் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கத் துணிந்ததைப் பார்க்கும்பொழுது, தேவ கற்பனைகளை அனுசரிக்கிறதில் உங்களுக்குள் சோம்பலும் தேவ சித்தத்தின்படி நடக்கிறதில் நீங்கள் செய்யும் தாமதமும் சர்வேசுரனுக்கு எவ்வளவு அருவருப்பாயிருக்குமென்று அறிந்து, ஆண்டவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கிறதற்கு நேரிடும் சகல விக்கினங்களையும் தவிர்க்கும்படியாக விவேகமுள்ள கன்னிமரியாயைப் பார்த்து வேண்டிக் கொள்வீர்களாக.
2. முழுவதும் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
தேவமாதா பாலவயதில் சர்வேசுரனுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிற சமயத்தில் முழுதும் உத்தம விதமாய் ஒப்புக்கொடுத்துத் தன்னிடத்தில் உள்ள அனைத்தையும் தானம் செய்து தனது சரீரத்தையும் ஆத்துமத்தையும் சர்வேசுரனுக்குக் கையளித்தார்கள். ஆயினும் அவர்களுக்குண்டானவைகள் எல்லாவற்றையும் அளிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் ஓர் மனதைக் கொண்டிருப்பதால் அதைக் கொடுக்கிற வேளையில் அவர்கள் அனுபவித்த சந்தோஷமும் பக்திப் பற்றுதலுள்ள உணர்ச்சியும் இவ்வளவென்று சொல்லவும் கருதவும் முடியாது. நீங்கள் அதை நினைக்கிற பொழுது ஓர் காரியம் அறிய வேண்டியது அவசியம். ஒருவன் சர்வேசுரனுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறதில் அரைகுறையாய்க் கொடுத்தால் அவருக்கு அவ்வளவு பிரியப்படாமல் இருக்கிறதும் தவிர, தனக்கு வரக்கூடிய ஞானப் பலனையும் குறைத்துக் கொள்வான். சர்வேசுரன் நமது இருதயத்தின் முழு சிநேகத்துக்கும் உரியவராக இருக்கிறதினால் நமது முழு இருதயத்தையும் முழு சிநேகத்தையும் அவருக்குக் கொடுக்க வேண்டும்.
3. தேவமாதா தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
தன்னை எப்பொழுதும் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார்கள். அதெப்படியென்றால்: மனிதரிடத்தில் காணப்படுகிற நிலையற்ற தன்மையும் சமயத்துக்கு சமயம் ஏற்படும் மாறுங்குணமும் கன்னிமரியாயிடத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை. அவர்கள் நன்னெறியில் நடக்கத் தொடங்கின நாள் முதற் கொண்டு ஒரு போதும் பின் வாங்காமல் நாளுக்கு நாள் ஞான சுறுசுறுப்போடும் பக்திப் பற்றுதலோடும் பிரமாணிக்கத்தோடும் நடக்கப் பிரயாசைப்பட்டார்கள். மனிதரோவெனில் தேவமாதா காட்டின புண்ணிய மாதிரிகையைக் கண்டு பாவியாகாமல், நன்னெறியில் ஒரு நாள் நடந்து மறு நாள் விட்டுவிட்டு, பாவம் செய்யமாட்டோமென்று அன்று பண்ணின பிரதிக்கினையை அன்றுதானே மறந்து, தினந்தினம் சர்வேசுரனுக்குத் துரோகிகளாய் நடப்பது அவர்களுக்கு வழக்கமாயிருந்தது. இத்தகைய வழக்கம் சர்வேசுரனுக்கு ஏற்காதென்று நீங்கள் நிச்சயித்து அவருக்குச் செய்த துரோகங்களை வெறுத்து உறுதியான பிரதிக்கினை செய்து புண்ணிய வழியில் கெட்டியான மனதோடு நடக்கப் பிரயாசைப் படுவீர்களாக.
செபம்.
பரிசுத்த கன்னிமாமரியாயே, மூன்று வயதில் தேவாலயத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு உம்மை ஒப்புக்கொடுத்தீரே. நான் உம்மைச் சிநேகித்து உமக்கு ஊழியம் செய்வதற்கு என்னை உமக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற ஆசையை ஏற்றுக்கொள்ளும்.
திவ்விய கன்னிகையே! சர்வேசுரனுக்குப்பிறகு உம்மையன்றி எனக்கு வேறு தஞ்சமும் அடைக்கலமும் நம்பிக்கையுமில்லை என அறிந்து இன்று முதல் எப்பொழுதும் என் தாயாகவும், என்னை இரட்சிக்கிறவர்களாகவும் நான் உம்மை தெரிந்து கொண்டு என்னை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் மனது, புத்தி, நினைவு, கிரிகை, ஜீவியம் முதலானவைகளையும் என்னிடத்திலுள்ள யாவையும் உமக்குக் கையளிக்கிறேன். நீர் இராக்கினியாக இருந்து என் ஆத்துமத்தை நடத்தியருளும்.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
உம்முடைய தயாபமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்
ஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
இன்றைக்கு அல்லது இந்த மாத முதல் சனிக்கிழமையில் ஒருசந்தியாயிருக்கிறது.
புதுமை!
எத்தேசங்களிலும் எக்காலங்களிலும் தேவமாதாவின் வேண்டுதலினால் மாபெரும் அற்புதங்களும் சுகிர்த நன்மைகளும் நடந்து வந்திருக்கின்றன என்பது நிச்சயம். இந்தப் பரமநாயகி பசாசின் தலையை மிதித்தவளும் பாவிகளுக்கு அடைக்கலமுமாய் இருக்கிறதினால், எக்காலத்திலும் அன்னையுடைய தயையைக் கொண்டு அரோகம் பாவிகள் தங்களுடைய அக்கிரம வழிகளை விட்டுத் தபசு செய்து புண்ணியவான்களானார்கள். ஆயினும் தேவமாதாவின் மாசற்ற இருதயச்சபைவழியாக இந்தப் பரம இராக்கினியின் தயையும் மகிமையும் இரக்கமும் தனிச்சோபையுடன் இந்நாட்களில் விளங்க சர்வேசுரன் சித்தமானார் என்கிறதற்குச் சந்தேகமில்லை.
அது எவ்வாறெனில், கர்த்தர் பிறந்த 1836 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஜெயமாதா கோவில் விசாரணைக் குருவானவர் தம் அதிகாரத்துக்குட்பட்ட ஜனங்கள் தேவபக்தியில்லாமல் இருக்கிறதைக் கண்டு, பாவிகளுக்கு அடைக்கலமாகிய தேவமாதாவின் மாசற்ற இருதயத்துக்குத் தம்மையும் தமது விசாரணைக்குள் அடங்கிய ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து இந்தப் பரமநாயகியின் மாசில்லாத திரு இருதயத்தின் பெயரால் ஓர் சபையை ஏற்படுத்த விரும்பினார். இந்தச் சபையின் ஒழுங்குகளையும், பிரமாணங்களையும், கட்டளைகளையும், பாரீஸ் நகர அதிமேற்றிராணியாரின் அங்கீகாரத்திற்குப்பின் இந்தச் சபை தொடங்கியது.
சிறிது காலத்துக்குப் பிறகு தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட சபையானது சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் பிரியப்பட்டிருக்கிறதென்று குருவானவர் அற்புதமாக அறிந்து மரியாயின் மாசற்ற இருதய சபையை உறுதிப்படுத்தவும் அனைத்துலகிலும் பரப்பவும் பிரயாசைப்பட்டார். அவர் நினைத்தபடி இச்சபையில் திரளான ஜனங்கள் சேர்ந்து பெயர் எழுதிக் கொடுத்துத் தேவதாயாருடைய திருஇருதயத்துக்குரிய வணக்கம் செலுத்தி பாவிகள் மனந்திரும்புவதற்காக வேண்டிக்கொண்டு வருகிறார்கள். இந்த வேண்டுதலுக்கு இரங்கின சர்வ ஜீவ தயாபர சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தினாலும் தேவமாதாவினுடைய உதவியினாலும் கணக்கற்ற பாவிகள் மனந்திரும்பி நல்லவர்களானார்கள். ஆகையால் இந்தச் சபைக்கு பெரும் கீர்த்தியும் மகிமையும் கிடைத்ததுமன்றி, நாடெங்கும் இச்சபையைச் சேர்ந்த மற்ற அநேகம் கிளைச் சபைகள் நிறுவப்பட்டன. இச்சபையில் சேர்ந்த அநேக இலட்சம் ஜனங்கள் தேவமாதாவின் மாசில்லாத திரு இருதயத்தை வணங்கி வருவதுமன்றி, பாவிகள் எல்லோரும் மனந்திரும்பும்படியாக மிகுந்த பக்தியுடன் வேண்டிக்கொள்ளுகிறார்கள். திருச்சபைக்கு அஸ்திவாரமும் தலைவருமாகிய பாப்பானவர் இந்தப் பரிசுத்த இருதய சபை வழியாகச் சர்வேசுரன் அளித்த ஞான நன்மைகளை அறிந்து இந்தச் சபையின் சட்ட திட்டங்களையெல்லாம் சரியென்று அங்கீகரித்து இந்தச் சபையில் சகல கிறிஸ்தவர்களும் சேரும்படியாக புத்தி சொல்லி இந்தச் சபையாருக்கு அநேக பலன்களை வழங்கினார்.
இந்த சபையின் மூலமாக பரம நாயகி செய்த அதிசயமான அற்புதங்களையும், பெரிய பாவிகளை மனந்திருப்பின வரலாறுகளையும், நோயாளிகளுக்கு அற்புதமாய் அளித்த ஆரோக்கியங்களையும், கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்கு வருவித்த ஆறுதலையும், தேவதாய் செய்த மற்றும் அநேக உதவிகளையும் இங்கு எடுத்துக் கூறுவது சுலபமல்ல.
ஆகையால் கிறிஸ்தவர்களே, நீங்கள் எல்லோரும் இந்த உத்தம சபையில் சேர்ந்து மீட்புப்பெற உங்களால் இயன்ற அளவு பாவிகளை மனந்திருப்ப பிரயாசைப்படக்கடவீர்கள்.