அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 05

புனித சூசையப்பர் கன்னிமரியை திருமணம் செய்ததை தியானிப்போம்.

தியானம்.

ஜென்மபாவமில்லாமல் பிறந்த மரியன்னை மூன்று வயதில் ஆலயத்தில் வைக்கப்பட்டு புண்ணிய நெறியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினான்கு வயதாகும்போது திருமணம் செய்துவைக்க விரும்பினார். பரிசுத்த தன்மை கெடாமல் இயேசுகிறிஸ்துவை பெற்றெடுக்க வேண்டும் என்று இருந்தது. தனிமையாக இருந்து இயேசுவைப் பெற்றெடுத்தால் யூதர்கள் தேவனுடைய சித்தத்தினை அறியாமல் தவறாகப் பேசுவர். அதனால் மரியாளுக்கு ஒருவரை கணவராக நியமிக்க வேண்டியிருந்தது. மேலும் சிறு குழந்தையாகப் பிறக்கப்போகும் இயேசுவுக்கு பாதுகாவலாக ஒரு வளர்ப்பு தந்தையும் தேவையாக இருந்தது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புனித சூசையப்பர்.

மறைநூல் வல்லுநர்கள் மரியன்னைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பின்னர், தாவீது அரசகுலத்தில் பிறந்து திருமணமாகாத திருமண வயதில் உள்ள இளைஞர்களை வரவழைத்து ஒரு கோலினைக் கொடுத்து யார் கையில் இந்தக் கோல் மலருமோ அவருக்குத் தான் மரியன்னையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. புனித சூசையப்பர் கையில் இருந்த கோல் மலர்ந்தது. மறைநூல் வல்லுநர்கள் மகிழ்ந்து மறைநூல்படி அவருக்கு கன்னிமரியாளை மணமுடித்து வைத்தனர். அந்த கோலானது இன்றும் நேயாய் பொலி என்ற நகரத்தில் மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வழக்கப்படி திருமணத்தின்போது புனித சூசையப்பர் கன்னிமரியாளுக்கு அணிவித்த மோதிரம் இன்றும் பெரூசியா நாட்டில் வைத்து வணங்குகின்றனர்.

திருமணம் நடந்தபிறகு புனித சூசையப்பர் கன்னி மரியாளை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து மரியாதையோடும், அதிக கவனத்தோடும் மரியாளுக்கு வேண்டியவைகளை அளித்து வந்தார். கன்னிமரியாளோ தனது கணவரைப்போல் நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார். திருமணம் என்றதும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதற்கு இடமின்றி அப்பழுக்கின்றி இருவரும் பரிசுத்தமாய் இருந்தார்கள் என நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். திருமணத்திற்கு முன்னே இருவரும் தனித்தனியே இறைவனிடம் தாங்கள் கன்னிமை கெடாமல் வாழப்போவதாக வாக்கு கொடுத்திருந்தனர். இதற்கு திருமணம் தடையாக இருக்கலாகாதென்பதை கடவுளின் ஆசியால் முன்னே அறிந்த பின்தான் திருமணத்தை முடித்தார்கள். மரணம் வரை கடைப்பிடித்தார்கள்.

நாம் புனித சூசையப்பரை கன்னிமரியாளுக்கு கணவனாகத் தெரிந்து கொண்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வுலகில் துறவறத்திற்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் திருச்சபைக்கு மாணிக்கமாகவும், வைரமாகவும் இருந்தாலும் அவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. குடும்பத்தவர்களாக இருக்க இறைவன் அழைத்தவர்கள் எண்ணிக்கையே மிக அதிகம். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு புனித சூசையப்பர் திருமணம் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். தூய எண்ணத்தோடு கடவுளின் எண்ணத்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் வைத்து மறைநூல் வல்லுநர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதுபோல நாமும் செய்தால் இறையருள் கிடைக்கும்.

எனவே, திருமணத்திற்கு முன்னர் சகுனம், ஜாதகம், நல்ல நாள், நல்ல நேரம், பொருத்தம் பார்ப்பதும், திருமணத்தின் போது பிற மதத்தவர் செய்யும் சடங்குகள் நிறைவேற்றுவது பாவமும் இறையன்புக்கு எதிரானதும் ஆகும். அப்படி செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

புனித சூசையப்பர், கன்னிமரியாளை அன்போடும், மரியாதையோடும் நடத்தினார். மரியாளும் தன் கணவருக்கு மேற்பட்டவராக இருந்தபோதும் கீழ்ப்படிந்து நடந்தார். அதனால்தான் பூமியிலே அதிக பலனும் மகிமையும் கிடைக்கப்பெற்றது. கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு பின்னர் குடும்பங்களிலே பொறாமை, அகங்காரம் இவற்றால் மனவேறுபாடு ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

திருமணங்களிலே அவ்வாறு நடைபெறா வண்ணம் புனித சூசையப்பரிடமும் கன்னிமரியாளிடமும் செபிக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகளை இறைவன் அருட்கொடை என எண்ணி இறைவனுக்கு நன்றிகூற வேண்டும். புனித சூசையப்பர் எவ்விதம் இயேசு கிறிஸ்துவை அன்புடன் வளர்த்தாரோ அவ்விதமே நாமும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இளமையிலே இறைபக்தி, பயம், கீழ்ப்படிதல் ஆகியவை இருக்கும்படி வளர்க்க வேண்டும். இதற்கு இறை ஆசீர் தேவையானதால் நமது குடும்பங்களை இயேசு, மரி, சூசைக்கு காணிக்கையாக்க வேண்டும்.

புதுமை

இஸ்பானியா நாட்டில் உயர்ந்த குலத்தில் புனித அவிலா தெரசம்மாள் பிறந்தார். அவளது பதினெட்டு வயதில் துறவற சபையில் சேர்ந்தாள். மடத்தில் இருக்கும்போது குறைவான சாப்பாடு, அதிகமான ஜெபம், தவம் இவற்றால் உடல் மெலிந்தார். மருந்தினை மாற்றி சாப்பிட்டதால் நான்கு நாட்கள் எந்த உணர்ச்சியும் இன்றி இருந்தார். அவள் இறந்துவிட்டாள் என குருக்கள் அவஸ்தை திருப்பலி நிறைவேற்றி அடக்கம் செய்ய குழியும் வெட்டப்பட்டது. பின்னர் அவளுக்கு உணர்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் உறுப்புகள் சரிவர இயங்காமல் இருந்தது. அத்தோடு உடல் உறுப்புகள் அனைத்திலும் பயங்கரமான வலி இருந்தது. இவ்வாறு மூன்றரை ஆண்டுகள் கடுமையான வேதனையிருந்தாலும் அவர், கடவுளின் திரு சித்தத்திற்கு பணிந்து பொறுமையோடு நடந்துகொண்டார். என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும் நோய் குறையப் போவதில்லை என மருத்துவர்கள் கூறினர்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு புனித சூசையப்பரிடம் விசுவாசத்தோடு செபித்தால் நோய் குணமாகும் என விசுவாசத்தோடு செபித்ததால் நோய் குணமானது. இதனைப் பார்த்தவர்கள் புனித சூசையப்பரை மகிமைபடுத்தினார்கள். புனித தெரசம்மாள், புனித சூசையப்பரின் புகழ் எல்லா இடமும் பரவ செபித்தார்கள். தான் நிறுவிய கார்மல் சபைக்கு பாதுகாவலராகவும், தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்பவராகவும் கொண்டு தம் மரணம் வரை அவருக்கு வணக்கம் செலுத்தி வந்தார்கள்.

புனித சூசையப்பரும் இவருக்கு பலமுறை காட்சியளித்து தனக்குள்ள அன்பைத் தெரியப்படுத்தி, பல துன்ப நேரங்களிலும் இவருக்கு காவலாக இருந்து காத்துவந்தார். "எனக்கு புனித சூசையப்பர் செய்த உதவிகள் எவ்வளவு என சொல்ல முடியாது. நான் உதவி கேட்டு ஒருபோதும் கிடைக்காமலிருந்ததில்லை. தூயவர்கள் அவர்களது பக்தர்கள் உதவி கேட்கும்போதெல்லாம் உதவி வழங்கும்படியான சிறப்பான ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். அதனால் புனித சூசையப்பரை தங்களுக்கு ஆதரவாகவும், பாதுகாவலராகவும் அனைவரும் வாழ்வில் கொள்ள வேண்டும்" இவ்வாறு புனித அவிலா தெரசம்மாள் எழுதி வைத்துள்ளார்கள். எனவே, புனித சூசையப்பரை பக்தி விசுவாசத்தோடு வேண்டிக் கொண்டால் நாம் கேட்பது கிடைக்கும் என அறிவோம். (3 பர, அரு, பிதா)

செபம்

இறைவனால் பரலோக பூலோக அரசியான மரியன்னையை திருமணம் செய்துகொள்ள தேர்ந்து எடுக்கப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை அன்புசெய்து, வணங்கி புகழ்கிறோம். நீர் சகல ஆண்களுக்கும், மரியன்னை சகல பெண்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நம்புகிறோம். இல்லறத்தாரை ஆசீர்வதித்து அவர்கள் நல்வழியில் செல்ல உதவும். உம்முடைய திருமணத்தை நினைத்து எப்போதும் மரியன்னைமேல் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள உதவி செய்யும் என உம்மிடம் வேண்டுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இல்லறத்தாருக்கு பாதுகாவலரான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம். இல்லறத்தாருக்கு முன்மாதிரிகையான புனித சூசையப்பரே உம்மை மன்றாடுகிறோம். இல்லறத்தாருக்கு பாதுகாவலான புனித சூசையப்பரே உம்மை புகழ்கிறோம்.

செய்ய வேண்டிய நற்செயல்

ஒரு ஏழை குடும்பத்திற்கு முடிந்தளவு உதவியைச் செய்வது.