தாங்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதத்தை வீணாக்கப்படாதென்றும், அவிசுவாசிகளுடைய சகவாசத்தை விலக்கி நடக்கவேண்டுமென்றும் கொரிந்தியருக்குக் கற்பிக்கிறார்.
1. ஆகையால், தேவ வரப்பிரசாதத்தை நீங்கள் வீணாகப் பெறாதபடி உதவி வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2. ஏனென்றால், அனுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்தேன்; இரட்சணிய நாளிலே உனக்கு உதவியாயிருந்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அந்த அனுக்கிரக காலம். இதோ, இப்பொழுதே இரட்சணியத்தின் நாள். (இசை. 49:8.)
3. எங்கள் உத்தியோகத்தை யாரும் பழிக்காதபடி ஒருவருக்கும் நாங்கள் இடறலாய் இராததுமன்றி, (1 கொரி. 10:32.)
4. சகலத்திலும் எங்களைத் தேவ ஊழியர்களாகக் காண்பிக்கும் பொருட்டு மிகுந்த பொறுமையிலும், துன்பங்களிலும், இக்கட்டுகளிலும் நெருக்கிடைகளிலும், (1 கொரி. 4:1.)
5. அடிகளிலும், சிறைச்சாலைகளிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6. கற்பிலும், கல்வியிலும், நீடிய சாந்தத்திலும் இனிமையிலும், இஸ்பிரீத்துசாந்துவிலும், பாசாங்கற்ற நேசத்திலும்,
7. சத்தியவாக்கிலும், தேவ வல்லமையிலும், வலத்திலும் இடத்திலும் நீதியின் ஆயுதங்களைக் கொண்டிருப்பதிலும்,
8. மகிமையிலும் இழிவிலும், அபகீர்த்தி சுபகீர்த்தியிலும், வஞ்சகரென்னப்பட்டாலும் எதார்த்தவாதிகளாகவும், அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் அறியப்பட்டவர்களாகவும் இருக்கிறோம்.
9. இன்னமும் செத்தவர்கள் என்னப்பட்டாலும், இதோ, உயிரோடிருக்கிறவர்களாகவும், அடிபட்டவர்களாக எண்ணப்பட்டாலும், கொல்லப்படாதவர்களாகவும்,
10. துக்கிக்கிறவர்கள் என்னப்பட் டாலும், எப்போதும் மகிழ்ச்சியுள்ள வர்களாகவும், தரித்திரர் என்னப்பட் டாலும், அநேகம்பேர்களைச் சம்பன்ன ராக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாத வர்களாக எண்ணப்பட்டாலும், எல்லாம் உடையவர்களாகவும் இருக்கிறோம்.
11. ஓ கொரிந்தியரே, உங்கள் முகமாய் எங்கள் வாய் திறந்திருக்கின்றது; எங்கள் இருதயமும் மலர்ந்து விரிந்திருக்கின்றது.
12. உங்கள்மட்டில் எங்கள் மனம் சுருங்கிப் போவதில்லை. உங்கள் மனமே சுருங்கிப் போகின்றது.
13. ஆகையால் சரிக்குச் சரியான கைம்மாறாகும்படி, உங்கள் உள்ளமும் மலர்ந்து விரியக்கடவதென்று பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் உங்களுக்கும் சொல்லுகிறேன்.
* 13. ஓ! கொரிந்தியரே, உங்களுக்குப் பிரசித்தமாகவும் தைரியமாகவும் பேசுகிறேன். ஏனெனில் என் இருதயத்தின் பட்சம் உங்கள்பேரில் மிகுதியாயிருக்கிறது. உங்கள் இருதயப் பட்சமோ என்பேரில் அத்தனை மிகுதியாயிருக்கிறதில்லை. ஆகையால் என் மக்களே, என் இருதயம் உங்களிடமாய் விசாலமான பட்சம் வைத்திருப்பதுபோல நீங்கள் கைம்மாறாக என்பேரில் அன்புள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன் என்றர்த்தமாகும்.
14. அவிசுவாசிகளோடு ஒரு நுகத்தில் இணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் கூட்டேது?
15. கிறீஸ்துநாதருக்கும் பெலியாலுக்கும் ஒப்பந்தமென்ன? விசுவாசியுடனே அவிசுவாசிக்குப் பங்கேது? (1 கொரி. 10:20.)
16. சர்வேசுரனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் பொருத்தமேது? ஏனெனில்: நான் அவர்களுக்குள் வாசம்பண்ணுவேன்; அவர்கள் நடுவில் உலாவுவேன்; நான் அவர்களுடைய தெய்வமாயிருப்பேன்; அவர்கள் என்னுடைய ஜனமாயிருப்பார்கள் என்று சர்வேசுரன் உரைத்ததுக்கொத்த வண்ணம் நீங்கள் சுயஞ்சீவிய கடவுளின் ஆலயமாயிருக்கிறீர்கள். (1 கொரி. 3:17; 6:19; லேவி. 26:12.)
17. ஆனபடியினாலே நீங்கள் அவர்கள் மத்தியிலிருந்து பிரிந்து, புறப்பட்டுப்போவதுமன்றி, அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (இசை. 52:11.)
18. அப்போது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லவரான கர்த்தர் சொல்லுகிறார். (எரே. 31:9.)