சிநேகம், தாழ்ச்சி முதலியவைகளைப் பற்றிப் போதித்து, தாம் சேசுநாதருடைய சிலுவையில் மாத்திரம் மகிமை பாராட்டுவதாகச் சொல்லி நிருபத்தை முடிக்கிறார்.
1. சகோதரரே, ஒரு மனிதன் நினையாமல் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஞானவான்களாகிய நீங்கள் சாந்தகுணத்தோடு அப்படிப்பட்டவனுக்குப் புத்தி சொல்லுங்கள். ஆனால் சோதனையில் நீயும் அகப்படாதபடிக்கு உன்மட்டில் கண்ணுண்டாயிரு.
2. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள். இவ்விதமாய் கிறீஸ்துநாதருடைய கட்டளையை நிறைவேற்றுவீர்கள்.
3. ஆகிலும் ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருக்கையிலே தன்னை ஒரு பொருட்டாய் எண்ணினால், தன்னைத் தானே மயக்கிக் கெடுக்கிறான்.
4. அவனவன் தன் தன் கிரியைகளைப் பரிசோதித்துப் பார்க்கக்கடவான். அப்போது அவனுக்கு மற்றவர்களைப் பார்ப்பதினாலல்ல, தன்னைத்தான் பார்ப்பதினால் மகிமையுண்டாகும்.
5. ஏனெனில் ஒவ்வொருவனும் தன் தன் பாரத்தைச் சுமந்துகொள்வான். (1 கொரி. 3:8.)
6. இதன்றியே, வேத உபதேசம் கேட்கிறவன் தனக்கு உபதேசஞ் செய்கிறவனுக்குத் தனக்குள்ள நன்மை களில் பங்களிப்பானாக.
7. மோசம்போகாதேயுங்கள். சர்வேசுரன் நகைக்கப் படுகிறவரல்ல.
8. மனுஷன் எதை விதைத்திருப்பானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்தில் விதைக்கிறவன் மாம்சத்திலிருந்து அழிவை அறுப்பான். ஞானத்தில் விதைக்கிறவன் ஞானத்திலிருந்து நித்திய ஜீவியத்தை அறுப்பான்.
9. ஆகையால் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போமாக. ஏனெ னில் நாம் சோர்ந்துபோகாதிருந்தால், தக்க காலத்திலே பலனையறுப்போம். (2 தெச. 3:13.)
10. ஆனதால் நமக்குக் காலமிருக்கும்போதே, எல்லாருக்கும், விசேஷமாய் விசுவாசக் குடும்பத்தாருக்கும் நன்மை செய்வோமாக.
11. என் கையினால் எப்படிப்பட்ட நிருபம் உங்களுக்கு எழுதினேனென்று பாருங்கள்.
12. மாம்சத்தின்படி மற்றவர்களுக்குப் பிரியப்படத்தேடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் கிறீஸ்துநாதருடைய சிலுவையினிமித்தம் வரும் துன்பத்தை அநுபவியாதபடிக்கே நீங்கள் விருத்த சேதனம் பண்ணிக்கொள்ளவேண்டு மென்று உங்களைக் கட்டாயம் பண்ணு கிறார்கள்.
13. ஏனெனில் விருத்தசேதனம் பெற்றிருக்கிறவர்களும் நியாயப்பிரமாணத்தை அநுசரியாதிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் மாம்சத்தில் மகிமை பாராட்டும்பொருட்டு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். (உரோ. 2:23.)
14. நானோ நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய சிலுவையிலன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவர் வழியாய் உலகம் எனக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறது. நானும் உலகத்துக்குச் சிலுவையில் அறையுண் டிருக்கிறேன்.
15. சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் விருத்தசேதனத்தினாலும் காரிய மில்லை: விருத்தசேதனமில்லாமையினாலும் காரியமில்லை. நவமான சிருஷ்டியினாலே காரியமாகிறது. (2 கொரி. 5:17.)
16. இந்தப் பிரமாணத்தின்படி நடக் கிறவர்கள் எவர்களோ அவர்களுக் கும், கடவுளுடைய இஸ்ராயேலருக்கும் சமாதானமும், கிருபையும் உண்டாவதாக.
* 16. கடவுளுடைய இஸ்ராயேல் என்பது அபிரகாமின் சுபாவ புத்திரர்களாகிய யூதர்களல்ல. ஆனால் விசுவாசத்தினால் அவருடைய புத்திரர்களாகிய கிறீஸ்தவர்களாம்.
17. இனிமேல் ஒருவனும் என்னைத் துன்பப்படுத்தவேண்டாம். ஏனெனில் ஆண்டவராகிய சேசுவினுடைய அடை யாளங்களை நான் என் சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறேன். (2 கொரி. 4:10.)
* 17. சேசுநாதருடைய (திருக்காயங்களின்) அடையாளங்களை என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேனென்று அர்ச். சின்னப்பர் சொல்லும்போது 2 கொரிந்தியர் 11-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறதுபோல, அவர் சேசுநாதரைப்பற்றிக் கல்லால் எறியப்பட்டும், வாரினால் அடிபட்டும் அடைந்த காயங்களைப்பற்றியாவது, சேசுநாதரைக்குறித்துத் தாம்தாமே தம்முடைய சரீரத்தை ஒறுத்துக்கொண்டுவருகிற தவக்கிரியையைக் குறித்தாவது பேசுகிறாரென்றறியவும்.
18. சகோதரரே, நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடுகூட இருக்கக்கடவதாக. ஆமென்.
கலாத்தியர் நிருபம் முற்றிற்று.