பிள்ளைகள், பெற்றோர், எஜமான்கள், ஊழியர் இவர்களுடைய கடமைகளும், கிறீஸ்தவனுடைய யுத்த ஆயுதங்களும்.
1. பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு ஆண்டவரிடத்தில் கீழ்ப்படியுங்கள். இது நியாயமாமே.
* 1. ‘ஆண்டவரிடத்தில் கீழ்ப்படியுங்கள்’ என்கும்போது ஆண்டவரைக் குறித்தும், ஆண்டவருடைய கற்பனைகளுக்கு விரோதமில்லாத காரியங்களிலும் என்று அர்த்தமாம். ஏனெனில் தாய் தகப்பன் தங்கள் பிள்ளைகளுக்குச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கும், கற்பனைகளுக்கும் விரோதமான காரியங்களைக் கற்பித்தால், அப்படிப்பட்ட சமயங்களில் அவர்களுக்குக் கீழ்ப்படியக்கூடாதென்றறிக.
2. உன் பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப்பாயாக. (யாத். 20:12; மத். 15:4.)
3. இது, நீ நன்றாயிருப்பதற்கும், பூமியிலே நீ நீண்ட ஆயுசுள்ளவனாயிருப்பதற்கும் என்கிற வாக்குத்தத்தத்தையுடைய முதல் கற்பனையாயிருக்கின்றது.
4. தகப்பன்மார்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கோபமூட்டாதிருங்கள். ஆனால் அவர்களை ஆண்டவருக்கேற்க ஒழுக்கத்திலும், கண்டிப்பிலும் வளர்ப்பீர்களாக.
5. ஊழியரே, கிறீஸ்துநாதருக் குக் கீழ்ப்படிகிறது போல், உங்கள் இலெளகீக எஜமான்களுக்கு அச்ச நடுக்கத்தோடும், இருதய நேர்மை யோடும் கீழ்ப்படியுங்கள். (கொலோ. 3:22-25; தீத்து. 2:9; 1 இரா. 2:18.)
6. மனிதருக்குப் பிரியப்படுகிறவர்களைப்போல் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறீஸ்துவின் ஊழியக்காரரைப்போல் மனப்பூர்வமாய்ச் சர்வேசுரனுடைய சித்தத்தை நிறை வேற்றுங்கள்.
7. மனிதர்களுக்கென்றாற்போலல்ல, ஆண்டவருக்கென்றே நல்ல மனதோடு ஊழியஞ்செய்யுங்கள்.
8. ஏனெனில் அடிமையானாலுஞ் சரி, சுயாதீனனானாலுஞ்சரி, அவனவன் என்ன நன்மை செய்திருப்பானோ, அதற்குத்தக்கது ஆண்டவரிடத்தில் பிரதிபலன் அடைவான் என்று அறிந்துகொள்ளுங்கள்.
9. எஜமான்களே, நீங்களும் உங்கள் மிரட்டல்களை அடக்கி, அவர்களுக்கு அவ்விதமே செய்யக்கடவீர்கள். அவர் களுக்கும், உங்களுக்கும் எஜமானா னவர் மோட்சத்திலிருக்கிறாரென்றும், அவரிடத்தில் பாரபட்சமில்லையென் றும் அறிந்துகொள்ளுங்கள். (கலாத். 2:6.)
10. கடைசியாய், சகோதரரே, கர்த்தரிடத்திலும், அவருடைய சர்வ வல்லப சக்தியிலும் திடங்கொள்ளுங்கள்.
11. நீங்கள் பசாசின் தந்திர சற்பனைகளுக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாய் இருக்கும்படிக்குச் சர்வேசுரனுடைய போராயுதங்களை அணிந்துகொள்ளுங்கள். ( உரோ. 13:12.)
12. ஏனெனில் நமக்குள்ள போராட்டம் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல; துரைத்தனங்களோடும் வல்லமைகளோடும் இந்த அந்தகார உலகாதி பதிகளோடும், ஆகாசமண்டலங்களி லுள்ள அக்கிரம அரூபிகளோடும் நாம் போராடவேண்டியிருக்கிறது.
* 12. ஆகாச மண்டலம் என்பது வானமண்டலங்களின் கீழ்ப்பாகங்களாம். இவைகளில் சர்வேசுரன் தமது திருவுளத்தின்படிக்கு கெட்ட அரூபிகளை உலாவும்படி சிலவிசைகளில் உத்தரவு தருகிறார். நமது ஞான யுத்தம் மனிதரோடு அல்ல, கெட்ட அரூபிகளோடுதான்.
13. இதனிமித்தம் பொல்லாத நாளிலே அவைகளை எதிர்த்து நிற்கவும், எல்லாக் காரியங்களிலும், நீங்கள் உத்தமராய் நிலைநிற்கவும் திராணியுள் ளவர்களாயிருக்கும்படிக்குச் சர்வேசுரனுடைய போராயுதங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
14. ஆதலால் நிலைமையாய் நின்று, சத்தியத்தில் உங்கள் இடையை வரிந்து கட்டுங்கள்; நீதியின் மார்க்கவசத்தைப் பூண்டுகொள்ளுங்கள்.
15. சமாதான சுவிசேஷத்துக்கு ஆயத்தமாகி பாதரக்ஷையை உங்கள் கால்களில் தொடுத்துக்கொள்ளுங்கள்.
16. கொடுங்கொடியோன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடுவதற்கு வல்லவர்களாயிருக்கும்படிக்கு எல்லாக் காரியங்களிலும் விசுவாசக் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
17. இரட்சணியத்தின் தலைச்சீராவையும், தேவ வாக்கியமாகிய ஞான வாளையும் எடுத்துக்கொள்ளுங்கள். (இசை. 59:17; 1 தெச. 5:8.)
18. இடைவிடாமல் எவ்வித ஜெபமும், வேண்டுதலுஞ்செய்து, உள்ளரங் கத்தில் மன்றாடுங்கள். அவ்விதமே விழித்திருந்து இடையறாத நிலைமை யோடு அர்ச்சிக்கப்பட்ட சகலருக்காக வும் வேண்டிக்கொள்ளுங்கள். (அப்.12:5; கொலோ. 4:2.)
19. அன்றியும் சுவிசேஷத்தின் பரம இரகசியத்தை அறிவிப்பதற்கு நான் என் வாயைத் திறந்து திடாரிக்கத் தோடு பேசும் வரம் எனக்குத் தந்தருளப்படும்படிக்கு எனக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். (கொலோ. 4:3; 2 தெச. 3:1.)
20. அந்தச் சுவிசேஷத்துக்காக நான் சங்கிலியால் கட்டுண்டு, என் ஸ்தானாதி பத்தியத்தை நிறைவேற்றி வருகிறேன். இதிலும் நான் பேசவேண்டியதுபோல பேசுவதற்கு எனக்குத் துணிவுண்டாகும்படியாகப் பிரார்த்தித்துக்கொள் ளுங்கள்.
* 18-20. கிறீஸ்தவர்களே, இவ்வுலகமானது ஓர் போர்க்களமாயிருக்கிறது. உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களோடு மரணபரியந்தம் இடைவிடாமல் போராடி ஜெயங் கொண்டு நமது மேல்வீடாகிய பரலோகத்தில் சேரக்கடவோம். இந்த அதிகாரத்திலே அர்ச். சின்னப்பர் இந்த ஞான யுத்தத்துக்கு உங்களை அழைத்து உற்சாகப்படுத்தி, நீங்கள் வீரியமாய்ப் போராடும்படிக்கு வேண்டிய ஆயுதவர்க்கங்களை உங்கள் கண்ணுக்கு முன்பாக விரித்துக்காட்டி, அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளக் கற்பிக்கிறார். அவைகளாவன: எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தலைவரும், இராஜாவுமாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கு நீங்கள் ஞானஸ்நானத்திலே கொடுத்த வார்த்தைப்பாட்டில் பிரமாணிக்கமென்கிற இடைக்கச்சையும், இருதயப் பரிசுத்ததனமாகிய மார்க்கவசமும், சர்வேசுரனோடும் பிறரோடும் தன்னோடும் சமாதானத்தைப் பெறுவிக்கிற சுவிசேஷத்தின் கற்பனைகளையும், சாங்கோபாங்கத்தையும் அநுசரிப்பதற்கும், மற்றவர்களுக்கு அதைப் பிரசங்கிக்கும்படி எங்கும் போவதற்கும் வேண்டிய தைரியமென்கிற பாதரட்சையும், உலகம், பசாசு, சரீரம் என்கிற மூன்று சத்துருக்களும் ஓயாமல் எய்யும் சோதனைகளாகிய அக்கினியாஸ்திரங்களை அவைகளின்பேரில்தானே திருப்பிவிடத் தக்க கேடயமென்கிற விசுவாசமும், அந்த அருமையான யுத்தத்தில் நம்முடைய தலைவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் உங்களுக்குத் தப்பாமல் ஜெயத்தைப் பெறுவிப்பாரென்னும் முழு நம்பிக்கையாகிய தலைச்சீராவும், சத்துருக்களைத் தாக்கி வெட்டி ஜெயிக்கும்படி தேவ வாக்கியமாகிய பட்டயமுமாமே. இவ்விதமாய்ப் பாதாதிகேசபரியந்தம் ஆயுதமணிந்தவர்களாய் எல்லா ஜெபத்தோடும் வேண்டுதலோடும் விழித்திருந்து, உங்களுக்காகவும், உங்கள் தோழர்களாகிய சகல விசுவாசிகளுக்காகவும் இடைவிடாமல் பிரார்த்தித்து இந்த ஞானப் போராட்டத்தை நடத்திவரக்கடவீர்கள் என்றர்த்தமாம்.
21. கடைசியாய் என்னைப்பற்றிய காரியங்களும், நான் செய்துகொண்டு வருகிறவைகளும் உங்களுக்குத் தெரிய வரும்படிக்கு அவைகளையெல்லாம் நமக்கு மிகவும் பிரியமான சகோதரனும், ஆண்டவருக்குள் உண்மையான ஊழியனுமாகிய தீகிக்கு என்பவன் உங்களுக்கு வெளிப்படுத்துவான்.
22. நீங்கள் எங்களைப்பற்றிய செய்தி களை அறியவும், உங்கள் இருதயங் களுக்கு ஆறுதல் செய்யவும் அவனை உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்.
23. பிதாவாகிய சர்வேசுரனாலும், ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதராலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்தோடுகூடிய பரம அன்பும் உண்டாவதாக.
24. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர்மேல் பழுதற்ற அன்பு வைத்திருக்கிற சகலருக்கும் இஷ்டப்பிரசாதம் உண்டாகக்கடவது. ஆமென்.
எபேசியர் நிருபம் முற்றிற்று.