அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 08

புனித சூசையப்பர் குழந்தையாய் பிறந்த இயேசுவை ஆராதித்ததை தியானிப்போம்.

தியானம்.

அகஸ்துஸ் அரசரின் கட்டளைக்கிணங்க மரியன்னை கருவுற்று ஒன்பதாவது மாதத்தில் தங்கள் சொந்த ஊரான நாசரேத் ஊரினைவிட்டு தாவீது அரசரின் நகரமாகிய பெத்லேகம் நகரத்துக்கு குடி பெயர்ந்து சென்றபோது பேறுகாலம் வந்தது. புனித சூசையப்பர் தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தங்க இடம் கேட்டு கிடைக்கவில்லை. ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் இருந்த மட்டுத் தொழுவத்தில் தங்கினர். அது மார்கழி மாதமாகையால் கடுங்குளிராய் இருந்தது. எந்தவித வசதியும் இல்லாத இடமாக இருந்தபோதும் சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்கள் வருவதுபோல் எந்தவித சிரமமுமின்றி இயேசுகிறிஸ்து சிறு குழந்தையாக பிறந்தார். அரசர்க்கு அரசரான அவருக்கு மாட்டுத்தொழுவம் அரண்மனையாகவும், வைக்கோல் சிம்மாசன அரியணையாகவும், கிழிந்த ஆடைகளே அரசப் போர்வையாகவும் கிடைத்தது. இயேசுபாலன் படும் துயரைப் பார்த்து புனித சூசையப்பரும், அன்னை கன்னிமரியும் மிகவும் மனம் வருந்தினர். இருப்பினும் அரசர்க்கு அரசரும், உலக மீட்பர் சிறு குழந்தையாய் தன் கண்ணெதிரே இருப்பதைப் பார்த்து மிகவும் இன்பமடைந்தனர்.

வானதூதர்களும் வானுலகினரும் அகமகிழ்ந்தனர். வானதூதர்களின் அறிவிப்பால் ஆடு மேய்ப்பவர்களும், மூன்று அரசர்களும் திருக்குழந்தையை வணங்க வந்ததையும் கண்ட புனித சூசையப்பருடன் அன்னையும் அளவிடமுடியாத ஆனந்தம் அடைந்தனர். பிறந்த இந்த குழந்தை மூன்று உலதையும் ஆளும் ஆற்றல் பெற்றது. வானுலகில் அனைவருக்கும்  ஆனந்தத்தையும், பூவுலகில் அனைவருக்கும் மீட்பையும் அளிக்கவல்ல குழந்தை; கந்தலாடைகளால் மூடப்பட்ட குழந்தை - நவரத்தினங்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர். தீய ஆவி, நரகம், பாவம் இவற்றை வென்று நல்லவர்களையும் தீயவர்களையும் நடுத்தீர்க்கக்கூடியவர் என்பதையும் அறிந்து பயபக்தியோடு அவரை வணங்கினர்.

இவர் கன்னிமரியாயின் மகனாகவும், தனது வளர்ப்பு குழந்தையாக தனது அரவணைப்பில் வீட்டில் வளரும் இயேசுகிறிஸ்து என்றும் தனக்கு நன்மரணத்தை அளிக்ககூடியவர் என்பதையும் உணர்ந்து, மகிழ்ந்து முத்தமிட்டு பாசத்தினை காட்டினார். நாமும் நம்மை மீட்க வந்த இயேசுகிறிஸ்துவில் மகிழ்ந்து நமது ஆன்மாவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்து தன்னையே தாழ்த்தி ஏழ்மையிலும், வறுமையிலும் சிறுகுழந்தையாய் பிறந்தார். நம்மை அத்தகைய நிலையில் பிறக்க செய்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோமா? அப்படி அவரின் மகிமையை ஏற்றுக் கொண்டால் நாம் அவருடைய சீடர்கள் என சொல்லலாம். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான அவர், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் பிறந்தார். நாமோ இவ்வுலகச் செல்வங்களைச் சேர்ப்பதற்காக பொய், திருட்டுப் புரட்டுகளில் ஈடுபடுகிறோம். செல்வந்தர்களாக இருந்து செல்வத்தை துறந்து எளிமையாய் துறவறத்தில் ஈடுபட்டு வருகிறவர்களும் இருக்கிறார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் உலக செல்வங்களை நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்.

இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்து உணவிற்கும் சிரமப்படும் பெற்றோரோடு அமைந்து வாழ்வில் துன்பப்பட்டு இறுதியில் சிலுவை யில் இறந்தார். நாமோ இவ்வுலகில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து ஆடம்பரமாய் உடுத்தி, எந்த துன்பமும் அடையாமல் இருந்தும் எந்தவொரு தவச் செயல்களும் செய்யாமல் இருப்பது சரியாகுமா? அது விண்ணகத்திற்குச் செல்லும் வழியன்று, மாறாக நரகத்திற்குச் செல்லும் வழியே. அதனால் தாழ்ச்சி, மன எளிமை, துன்பங்களை சகித்தல் போன்றவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புதுமை

1559-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த லால்மான் என்பவர் தனது பதினெட்டாம் வயதில் உலக செல்வங்களை துறந்து செசுசபையில் சேர்ந்து குருவானார். இவர் புண்ணியவானாகவும் புனித சூசையப்பர்பால் மிகுந்த பக்தி உள்ளவராகவும் இருந்தார். அவர் இயேசு மரி சூசையிடம் அதிக பக்தி கொண்டு தனிப்பட்ட முறையில் விசேஷமாக செபித்து வந்தார். புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டால் அனைத்து புண்ணியங்களையும் அடையலாம் எனக்கருதி அவரைப்போல் நடந்தார். அதனால் அவர் நல்ல அருட்பணியாளர், பக்திமான் என பெயரெடுத்தார்.

தான் பக்தியில் திளைத்ததுமல்லாமல் பிறரையும் புனித சூசையப்பரை வணங்க செய்தார். புனித சூசையப்பரும் இக்குருவுக்கு தேவையான வரம் அருளி அவரை பாதுகாத்தார். ஒருவருடம் புனித சூசையப்பருடைய திருவிழாவுக்கு முன்னர் தான் தலைமை குருவாயிருந்த இல்லத்தில் உள்ள இரு அருட்பணியாளர்களை அழைத்து அவர்கள் கற்றுக்கொடுக்கும் குழநதைகளை வைத்து புனித சூசையப்பர் திருவிழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடும்பக் கேட்டுக்கொண்டார். அப்படி செய்தால் (புனித சூசையப்பர் திருவிழாவன்று) அவரிடம் என்ன கேட்பீர்களோ அது நிச்சயமாக நடக்கும் என்றார். அக்குழந்தைகள் அனைவரும் ஒப்புரவு அருட்சாதனத்தினைப் பெற்று வெகு சிறப்பாக கொண்டாட நீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் மரியன்னையின் சிறப்புகளைப்பற்றியும் அழகிய நூலினை எழுதினார். வேறொருவர் வெளிநாடு போய் அங்கு கிறிஸ்தவ மதத்திற்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து பிற மதத்தினரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் இருவருமே புனித சூசையப்பரின் மீது அதிக பக்தி கொண்டவர்கள். லால்மான் என்ற அருட்பணியாளர் புனித சூசையப்பர் பக்தியை உலகமுழுவதும் பரப்புவதிலேயே அக்கறை கொண்டார். தனனுடைய கல்லறையிலே புனித சூசையப்பர் படத்தினை பொறிக்கச் செய்தார்.

இத்தகைய அருஞ்செயல்களை செய்ய வல்லவர் புனித சூசையப்பர் என நாம் அறிய வேண்டும். (3பர, அரு, பிதா)

செபம்

குழந்தை இயேசுவை ஆராதித்து பாசமழை பொழிந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். பாலகன் செல்வ சுகங்களை துறந்து அனைவராலும் புறக்கணிக்கப் பட்டு ஒதுக்கப்பட்ட மிருக ஜீவன்களுக்கெனவுள்ள தொழுவத்தில் பிறக்க விரும்பினாரே! நாங்களும் இயேசுவுக்கு பிடிக்காத மோசமான செயல்களை விலக்கி அவரைப் பின்பற்றி இவ்வுலக செல்வசுகங்களை தவிர்த்து அவரைப் பின் தொடரச் செய்தருளும், இயேசுவே உமது தந்தை புனித சூசையப்பர் உம்மை மகனாக ஏற்றுக் கொண்டது போல் எங்களையும் நீர் ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இயேசுகிறிஸ்து ஏழ்மையில் பிறந்தபோது மிகுந்த மனவருத்தம் அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க! இயேசுகிறிஸ்து பிறந்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த புனித சூசையப்பரே! வாழ்க. இயேசுகிறிஸ்து பிறந்தபோது அன்பினால், பண்பினால் உருகிய புனித சூசையப்பரே! வாழ்க!

செய்ய வேண்டிய நற்செயல்

வறுமையில் வாழும் முதியவர் ஒருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் சிறுமிக்கும் உணவு அளித்தல்.