அர்ச். ஜூலியானும், பஸிலிஸம்மாளும் - வேதசாட்சிகள் (கி.பி.313).
ஜூலியான் என்பவர் எஜிப்து தேசத்தில் தனவான்களான தாய் தந்தையரிடமிருந்து பிறந்தார். தன் பெற்றோருடைய நன் மாதிரிகையைப் பின்பற்றி, இளம் வயதில் உத்தம கிறீஸ்தவனாய் வாழ்ந்து தன் ஜீவிய காலம் முழுவதும் விரத்தராயிருக்க விரும்பினார்.
ஆனால் தாய் தகப்பனுடைய கட்டாயத்தினால் இவர் பஸிலிஸா என்பவளை மணமுடித்துக்கொண்டு தன் கருத்தை அவளுக்கு வெளியிட்டபோது, அவளும் அதற்குச் சம்மதித்து, இருவரும் கூடப்பிறந்தவர்களைப்போல் விரத்தராய் வாழ்ந்துவந்தார்கள்.
இவர்களுடைய நல்ல படிப்பினையால் அநேக கெட்ட கிறிஸ்தவர்கள் நல்லவர்களாகி திரளான அஞ்ஞானிகளும் சத்திய வேதத்தில் சேர்ந்து வேதசாட்சிகளாய் மரித்தார்கள்.
இவ்விருவரும் தங்கள் மாளிகையை மருத்துவமனையாக மாற்றி அதில் ஏழைகளையும் நோயாளிகளையும் சேர்த்து அன்புடன் ஆதரித்து வந்தார்கள். சில சமயங்களில் 1000 பேர் வரையில் அவ்விடத்தில் உதவி பெற்றுவந்தார்கள்.
ஜூலியான் ஆண் பிள்ளைகளையும் பஸிலிஸா பெண் பிள்ளைகளையும் கவனித்து வந்தார்கள். பஸிலிஸா 7 வேதக் கலாபனைகளில் உறுதியாய் நின்று புண்ணியவதியாக மரித்தாள்.
ஜூலியானும் வேதத்திற்காகப் பிடிபட்டு ஸெல்ஸஸ், அந்தோணி, அனஸ்தாஸியா, மார்சியனில்லா முதலியவர்களுடன் வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
நமது தகுதிக்கேற்றபடி ஏழைகளுக்கு உதவி புரிவதுடன், சத்திய வேதத்தில் சேர விரும்பும் அஞ்ஞானிகளுக்கு நற்புத்தி சொல்லி, தேவைப் பட்டால் பொருளுதவியும் செய்யவேண்டும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். இராயப்பர், மே.
அர்ச். மார்சியானா, க.வே.
அர்ச். பிரித்வால்ட், ம.மே.
அர்ச். பிலான், ம.
அர்ச். ஆதிரியன், மே.
அர்ச். வானெக், து.