நவம்பர் 10

எண்ணிறந்த ஆத்துமாக்கள்  உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற  விளக்கமாவது.

தியானம்.

தினந்தினம் எண்பதினாயிரம் மனுஷர் சாகிறார் களென்று  சாஸ்திரிகள் கணக்கேற்றி ஒப்பித்துக்கொண்டு வருகிறார்களாம். இந்த எண்பதினாயிரம் மனுஷருக்குள்ளே இருபத்தையாயிரம் பேர்கள் மெய்யான  சத்திய வேதக் கிறிஸ்துவர்களாயிருக்கிறார்களென்று உத்தேசித்துச் சொல்லலாம். இந்த எண்ணிக்கையின்படியே பத்து நாளுக்குள்ளாக இரண்டு இலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் செத்திருப்பார்களே. ஒருமாதங் கணக்குப்பார்த்தால் ஏழுலட்சத்து ஐம்பதனாயிரம் பேர்கள் மடிந்திருப்பார்களே!

ஒரு வருஷத்துக்குள்ளே தொண்ணுாறு லட்சங்கணக்காகும். பத்து வருஷத்துக்குப் பிற்பாடு ஏறக்குறைய ஒன்பது கோடி கிறிஸ்துவர்கள் செத்திருப்பார்களே. இந்தக் கணக்கதிகமாய்ப் பெருக்காமல் ஒரு நாளிலே சாகிற இருபத்தையாயிரம் கிறிஸ்துவருக்குள்ளே எத்தனை ஆத்துமாக்கள் நேரே மோட்சத்துக்குப் போகப் பிராப்தியாயிருப்பார்களென்று நினைக்கிறீர்கள். மிகவுங் கொஞ்சம் பேர்கள் முற்றும் பரிசுத்தராயிருந்து அப்படி தாமதமில்லாமல் மோட்சத்தை அடைவார்களென்று சொல்லத்தக்கதாயிருக்கிறது.

அதெப்படியென்றால் முன் தியானங்களிலே காண்பித்தாற் போல சாகிறவர்களெல்லோரும் ஏறக்குறைய அநேகர் சொற்பப் பாவங்களோடும், மன்னிக்கப்பட்ட சாவான பாவங்களுக்குச் செலுத்தவேண்டிய அபராதக் கடனோடும் திரிக்கிறார்களல்லவோ? அதல்லாமலும் ஒவ்வொருவன் செத்தப்பிற்பாடு வெகு நாள் வெகு வருஷ காலம் உத்தரிக்க வேண்டியதென்று முன்னே சொல்லிவிட்டோமே. இதிலும் செத்தவர்களுக்கு ஆறுதலையும் உதவியையும்  வருவிக்கப் பிரயாசைப்படுகிறவர்கள் மிகவுங் கொஞ்சம் பேர்கள்தான். இதிப்படியிருக்க நாளொன்றுக்கு இருபத்தையாயிரம் கிறிஸ்துவர்கள் சாகிறபோது, எத்தனை லட்சம், எத்தனை கோடி ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கொடிய வேதனைகளில் உபாதிக்கப்படுவார் களென்று நினைத்துப் பாருங்கள்.

பேர்பெற்ற மேற்றிராணியாரான அர்ச் அமிர்த நாதர், புண் ணியவான்கள் முதலாய்த் தேவ ஊழியத்தில் அசட்டையும், தவக்கிரியைகளில் சோம்பலும், தர்மஞ் செய்வதில் கஞ் சத்தன முமாயிருக்கிற தை கண் டு மோட்சத்துக்கு நியமிக்கப்பட்டவர்களெல்லோரும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு வழியாகத்தான்   ஈடேறுவார்களென்றார். அர்ச் வித்தாலியானம் மாளும், கணக்கில்லாத அற்புதங்களைப்  பண்ணின  அர்ச் செவேரியானுசென் கிறவரும், அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்ற அநேக புண்ணிய ஆத்துமாக்களும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்பட்டபின்னரே மோட்சத்துக்கு போனதாக அறிந்திருக்கிறோம். ஒர் அர்ச்சியசிஷ்டவர் தான் கண்ட காட்சியினால் ஒரு நாளிலே செத்தவர்களுக்குள்ளே ஒருத்தன்மாத்திரம் நேரே மோட்சத்துக்குப் போனானென்றும், வேறு இரண்டு ஆத்துமாக்கள் கொஞ்சநேரமட்டும் உத்தரிக்கிறஸ்தலத் திலிருந்து ஈடேறினார்களென்றும் வசனித்தார். அப்படி யிருக்கையில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்பட்டுக் கிடக்கிறார் களென்பது விளங்கும் சத்தியந்தானல்லவா?

கிறிஸ்துவர்களுக்குள்ளே திரளான பேர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறதாகச் சில சாஸ்திரிகள் நிச்சயித்தாலும், எந்தப் பாவியையுங்குறித்து அவன் கெட்டானென்று நிச்சயமாகச் சொல்லக் கூடாது .

எதனாலேயென்றால் அநேகர் பாவசங்கிர்த்தனமில்லாமல் திடீரென மரித்து அவலமாய் செத்தார்களென்று காணப்பட்டாலும், சர்வேசுரனுடைய
மட்டற்ற கிருபையினாலே ஆத்துமம் பிரியுஞ் சமயத்தில் ஒருவேளை தங்களுடைய பாவங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டு நரகத்துக்குத் தப்பினார்களென்று நினைக்கத்தக்கதாயிருக்கிறது. மீண்டும் சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையைப் பாராட்டி அர்ச். லிகோரியூஸ். அர்ச். லேயோநார்துஸ், சாஸ்திரிகளுக்குள்ளே பெரிய சாஸ்திரியான சுவாரேசியூஸ் முதலான பேர்பெற்ற சாஸ்திரிகள் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் மிகுதியான பேர்கள் நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டாவது ஈடேறுவார்களென்று சொல்லுகிறார்கள்.

இப்பேர்ப்பட்ட அர்சிஷ்டவர்களும் சாஸ்திரிகளும் சொல்லும் இந்தச் சத்தியம் யாவருது ஆறுதலாயிருந்தாலும், அதனால் தேவ ஊழியத்தில் அசட்டையாயிருக்கக்கூடாது. பாவவழியிலே    மூர்க்கமாய் நடக்கக் கூடாது . ஏனென்றால் , அப்படி நடப்பீர்களேயானால்  உத்தரிக்கிற ஸ்தலத்தில் அகோர வேதனைகளைச் சம்பாதித்துக்கொள்வீர்களல்லாமல் நித்திய நரகத்துக்குப்போகிற மகா ஆபத்திலிருப்பீர்களென்பதற்கும் சந்தேகமில்லை.
இதுவுமல்லாமல் பதிதரும் பிரிவினைக்காரரும் எல்லோரும் ஒருங்குடன் நரகத்துக்குப் போகிறார்களென்று சொல்லக்கூடுமோ? அதுவும் சொல்லக்கூடாது. ஏனெனில், அவர்களில் அநேகர் மெய்யான இரட்சகரான சேசுகிறிஸ்துநாதரை விசுவசித்து நம்பி ஞானஸ்நானம் பெற்றுக் கூடின மட்டும் பாவங்களை விலக்கி செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டுத் தாங்களிருக்கிற மார்க்கம் துர்மார்க்கமென்று அறியாமல் செத்தால் அவர்கள் ஈடேறுவார்கள் என்பது சத்திய விசுவாசமாம்.

ஆயினும் அப்படி உத்தமமனஸ்தாபத்தோடு சாகிற   பதிதர் திரளான பேர்களோ கொஞ்சம்பேர்களோ என்று சர்வேசுரனுக்கு மாத்திரம் தான் தெரியும். அது எப்படி இருந்தாலும் அவர்களில் ஈடேறிப்போகிறவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மகாவேதனைப்படுவார்களென்பது யாவரும் எளிதில் உணரக் கூடியதாகும்.

புறமதத்தாருக்கும் துலுக்கருக்கும் என்ன சம்பவிக்கு மோவென்று கேட்டால், அவர்கள் ஏக இரட்சகரான சேசுகிறீஸ்துநாதரை அறியாததினாலேயும், மோட்சத்தின் ஏக வாசலாயிருக்கிற ஞானஸ்நானத்தைப் பெறாதிருக் கிறதினாலேயும், அவர்களில் ஒருவரும் ஈடேறமாட்டார் களென்பது நிச்சயந்தான். ஆகையினாலே அவர்களில் ஒருவரும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கப்போகிறதில்லை.

இப்போது சொன்ன  நியாயங்களினால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் எத்தனை வென்று சொல்லிலும் கணக்கிலும் அடங்குந் தன்மை அல்லவே. ஆயினும் தினந்தோறும் திருச்சபையிலே எங்கும் செய்யப்படுகிற செபதப தான தர்மங்களினாலும், ஒப்புக்கொடுக்கப்படுகிற திவ்விய பூசைகளினாலும் திரண்ட ஆத்துமாக்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப் பட்டு மோட்சகரை ஏறுவார்களென்று சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுகிறது மெய்யாயினும், பத்துப் பணங் கொடுத்துப் பதினாயிரம் ரூபாய்க் கடன் தீருமோவென்ன? பத்துப் பேருக்குச் செல்லுமான தண்ணிரால் பதினாயிரம் பேர்களுடைய தாகம் தீருமோ வென்ன சொல்லுங்கள். அப்படிப்போல், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வருத்தப்படுகிற கனக்கில்லாத ஆத்துமாக்களுக்கும் அந்த ஆத்துமாக்கள் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன்களுக்கும் அந்தச் செபதப தானதர்ம பூசை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப்பார்த்தால் வெகு கொஞ்சமென்று தோன்றுமல்லவோ? எவராலும் கைவிடப்பட்ட ஆத்துமாக்கள் எத்தனையோ பரதேசிகளுடைய ஆத்துமாக்கள் எத்தனையோ? சொந்தக்காரராலே முதலாய் மறக்கப்பட்ட ஆத்துமாக்கள் எத்தனையோவென்று பாருங்கள்.

கிறிஸ்தவர்களே! ஒரு தேசத்தில் அநேகாயிரம் ஜனங்கள் பஞ்சத்தினாலே சாகிறார்களென்று கேள்விப் பட்டால் என்ன செய்வீர்கள்? அவர்களுக்கிரங்கி வருத்தப் பட்டாவது உங்களாலே கூடியமட்டும் அவர்களுக்கு உதவியாக தாராளமாய்த் தர்மம் செய்வீர்களல்லவோ? அப்படித்தான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் எண்ணிக்கை இல்லாத ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதைக்கண்டு ஏராளமாய் அவர்களுக்கு உதவ வேணும்; ஏராளமாய் அவர்களைக் குறித்துப் பிச்சைகொடுக்கவேனும், ஜெபம் பண்ணவேனும், திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கச் செய்யவேணும். பெரும்பாவிகளும் பதிதரும் பிரிவினைக்காரரும் முதலாய் மட்டில்லாத தேவகிருபையினால் ஒருவேளை நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருப்பார்கள் என்கிறதினாலே அவர்களுக்காகக்கூட வேண்டிக்கொள்ளவேணும்.

தினந்தோறும் எண்பதினாயிரம் மனுஷர் செத்துத் தீர்வையிடப்படுகிறார்கள் என்று அறிந்து அவர்களுக்கு கிருபை நிறைந்த சேசுகிறீஸ்துநாதர் சுவாமி இரங்கும்படிக்கு, அவஸ்தைப்படுகிற அவருடைய திவ்விய இருதயத்தைக் குறித்து: "கருணாம்பர சேசுவே! ஆத்துமாக்களை நேசிக்கிறவரே" என்கிற சுகிர்த மந்திரத்தை அடிக்கடி சொல்லுவார்களாக. இந்தச் செபத்தினாலே அநேகம் பேர்கள் நல்லமரணத்தை அடைவார்களென்று அறியக் கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லயச் செபம்:

யேசுவே! எங்கள்பேரில் தயவாயிரும்.

செபம்

கிருபை நிறைந்த கர்த்தாவே! எங்கள் தாய் தகப்பன் மார்களுடையவும் சகோதரர்களுடையவும் ஆத்துமாக்களை மறவாமல் அவர்கள் சத்திய விசுவாசத்தில் செத்தார்களென்று நினைத்தருளும். அவர்களை மோட்சத்துக்குத் தூரமாய் நிறுத்துகிற கட்டுகளை அவிழ்த்துப் பாவங்களை மன்னித்து அபராதக் கடனெல்லாம் தீர்த்து மகா தயவுசெய்து உம்மிடத்திலே சேர்த்துக்கொள்ள வேணுமென்று உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

பத்தாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது: 

ஆத்துமாக்களின்பேரில் பக்தியாயிருக்கவேணுமென்று சிலபேர்களைத் தூண்டிவிடுகிறது.

புதுமை 

 இத்தாலியா இராஜ்ஜியத்தில் ஒரு பட்டணத்தில் மரியா என்றொரு பெண் பிள்ளை இருந்தாள். அவள் இளமையிலே யாதொரு பயமும் அச்சமும் இன்றி எவ்வித துன்மார்க்கமான பாவங்களையும் பண்ணிக் கொண்டு வந்ததுமல்லாமல் வயது வர வர அதிக பாவியானாள்.
அவள் கிழவியானபோது மேரை மரியாதையுமின்றி, தேவபயமுமின்றி, நரகத்தின் பேரில் அச்சமுமின்றி யாவருக்கும் துர்புத்தி சொல்லிக்கொண்டு வந்தாள் என்பதைப்பற்றி, அவள் இருந்தப் பட்டணத்தார் அவளைத் துரத்தி விட்டார்கள். அவளுக்கு விடு வாசல் இல்லிடம் இல்லாததினாலே அடுத்த மலையிலிருந்த ஒரு கெபியிலே வெகு வருத்தப்பட்டு யாதொரு உதவியில்லாமல் கிடந்து அவளுடைய சரீரம் புழுத்து நாறி யாதோர் நற்புத்தியைக் காண்பிக்காமல் ஒருவருக்குந் தெரியாதபடிக்கு நிற்பாக்கிய மாய்ச் செத்தாள். அவள் மிருகம்போல் செத்தாளென்று கிறிஸ்துவர்களுடைய கல்லறையிலே அவளுடைய பிரேதத்தை

அடக்கம்பண்ணாமல் ஒரு காட்டிலே புதைத்தார்கள் . அந்தப் பட்டன மத்தியிலேதான் கத்தரீனம்மாள்
என்னும் பேர்கொண்ட பக்தியுள்ள ஒரு கன்னியாஸ்திரி இருந்தாள். அந்தப் புண்ணியவதி யாருடைய மரணத்தையும் கேட்ட கடினத்திலே அவர்களுடைய ஆத்துமத்தைக் குறித்து மிகுந்த பக்தியோடு ஜெபங்களைப் பொழிவாள். அப்படியிருந் தாலும் மேற்சொன்ன பாவியான மரியம்மாள் என்கிறவள் செத்தாளென்று கேள்விப்பட்டிருந்தும், அவள் நிச்சமாய் நரகத்துக்குப் போயிருப்பாளென்று நினைத்து அவளுடைய ஆத்துமத்துக்காக ஒரு ஜெபமாவது பண்ணினதில்லை.

நாலு மாதமானபின்னர் அவள் தியானத்தில் இருக்கும் போது ஒர் ஆத்துமம் அவளுக்குக் காணப்பட்டுச் சொன்னதாவது" சகோதரியான கத்திரினம்மாளே என் நிர்ப்பாக்கியம் மகாப் பெரிது. அதேனென்றால், நீர் எல்லா ஆத்துமாக்களுக்காகவும் செபித்தாலும் என் ஆத்துமத்தை முழுமையும் மறந்து என்பேரில் இரக்கமில்லாமல் இருக்கிறீரே "என்றது. "நீ யார் "என்று அந்தப் புண்ணியவதி கேட்க," கெபியிலே நிர்ப்பாக்கியமாய்ச் செத்த மரியம்மாள் நான்தான் "என்றதற்கு, "நீ நரகத்துக்கு தப்பினது எப்படி" என்று விசாரித்தாள். அதற்கு அந்த ஆத்துமம் "தேவ கிருபையினாலேயும், பரிசுத்த கன்னிகையின் வேண்டு தலினாலேயும் தப்பித்துக்கொண்டேன். எவராலும் கைவிடப்பட்டுச் சாகப்போகிற தருணத்திலேதான் என் பாவங்களின் மிகுதியைக்கண்டு மிகவும் பயந்து ஐயோ! கெட்டுப்போனேனே என்று நான் பேர்கொண்டிருக்கிற தேவமாதாவை நினைத்து அவளை நோக்கி பரிசுத்த கன்னிகையே யாதொரு உதவியில்லாதவர்களுக்கு நீரே தஞ்சம் , பெரும்பாவியான என்னை எல்லோரும் இகழ்ந்திருந்தாலும் நீர் என்னைக் கைவிட மாட்டீரென்று நம்பியிருக்கிறேன் . எனக்கும் உதவியாய் இரும் , என் பேரில் தயவாயிரும் ஆண்டவளே "என்று மன்றாடினேன் .

"இந்த என் மன்றாட்டுக்கு இரங்கி தேவமாதாவானவள் நான் என் பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப் படும்படியாய் எனக்கு அனுக்கிரகம் பெறுவித்தாள்  .அப்படி  உத்தம மனஸ்தாபப்பட்டு இஷ்டப்பிராசத்தோடே செத்து  நித்திய நரகத்துக்குத்  தப்பினேன். ஆனால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனைப்படுகிறேன். என் நல்ல சகோதரியானவளே, என் ஆத்துமத்துக்காகச் சில பூசைகளைப் பண்ணுவிப்பீராகில் என் உத்தரிப்பு காலம் குறைந்து மோட்சத்துக்குப் போவேன். இந்தக்கிருபை எனக்குப் பண்ணினால் உமக்காக எப்போதும் சர்வேசுரனையும், தேவமாதாவையும் வேண்டிக்  கொள்ளுவேன்" என்று சொல்லி, அது ஆததுமம மறைந்து போனது.

அந்தப்படிக்கு பக்தியுள்ள கத்தரினம்மாள் இந்தப் பூசைகளைப் பண்னுவிக்கக் சிலநாளைக்குப் பிற்பாடு அந்த ஆத்துமம் மகா பிரதாபத்தோடு காணப்பட்டு "சகோதரியான கத்தரினம்மாளே, நீர் எனக்குப் பெரிய உபகாரம் பண்ணினிரே நீர் செய்வித்த பூசைகளினாலே என்னுடைய உத்தரிப்புக் கடன் தீர்ந்து சர்வேசுரனுடைய கிருபைகளை வாழ்த்தவும் உமக்காக வேண்டிக்கொள்ளவும் மோட்சத்துக்குப் போகிறேன்" என்று சொன்னபிறகு, அந்த ஆத்துமம் பரமண்டலத்துக்குச் சூரியனை மங்கச்செய்யும் பிரகாசத்தோடு எழுந்தருளிப்போகிறதாகக் கன்னியாஸ்திரி யானவள் கண்டாள் . கிறிஸ்துவர்களே மேற்சொன்ன பாவியானவள் நித்திய நரகத்துக்குத் தப்பி மோட்சத்துக்குப் போகிறதைக் கண்டு எந்தப் பாவியின்பேரிலும் அவநம்பிக்கையாய் இராமல், எல்லா ஆத்துமாக்களுக்காகவும் வேண்டிக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.