அக்டோபர் 10

தேவ இரகசியங்கள்.

மூவகை தேவ இரகசியங்கள் உண்டென யாவருக்கும் தெரியும் . சந்தோஷ தேவ இரகசியங்கள் ; துக்க தேவ இரகசியங்கள் ; மகிமையின் தேவ இரகசியங்கள் . செபமாலையில் தியானிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு வகையையும் பொதுவில் எடுத்துக் கொண்டு தான் தியானித்து வந்தனர். 2003 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 'ஒளியின் தேவ இரகசியம் ' என்ற நான்காவது வகை தேவ இரகசியத்தைத் தந்தார்.

எத்தகைய வாழ்க்கை நடை மனிதனுக்குப் பொருந்தியது என்று சந்தோஷ தேவ இரகசியங்கள் காட்டுகின்றன. சேசுநாதர் தெரிந்து கொண்ட வாழ்க்கை என்ன ? எளிய வாழ்க்கை, உழைப்பு மிகுந்த வாழ்க்கை. தொழிலாளியின் வாழ்க்கையும் அத்தோடு சம்பந்தப்பட்ட புண்ணியங்களும் நமக்கேற்றவை . தரித்திரம் என்னும் புண்ணியம், வருந்தி உழைக்கும் புண்ணியம். உழைத்தால் போதாது; திறம்பட உழைக்க வேண்டும் .சுத்தமான வேலை, நல்ல வேலையாய் இருக்க வேண்டும் . ஏனோ தானோ என்ற வேலையை நமதாண்டவர் ஒரு பொழுதாவது செய்திருப்பார் என்று நாம் கனவிலும் கருதக் கூடுமா ? அடுப்பெரிக்கும் சமயம் உட்காரும் முக்காலியாயிருந்தாலும், எவ்வளவு திறமையோடு யேசு அதைச் செய்து முடித்தார் ! எப்பொழுதும் எந்நாளும் எவ்விடத்திலும் அவர் செய்வன திருந்தச் செய்தார் . சேசுவின் வாழ்க்கையை நாம் மறைந்த வாழ்க்கை என்கிறோம் . தாழ்ச்சியும் , நேர்மையும் , பகட்டையும் படாடோபத்தையும் தேடாத் தன்மையும் பெருங்குணங்களாக  விளங்கின . இந்த இரகசியங்களைச் சந்தோஷ தேவ இரகசியங்கள் என்கிறோம். நாம் அவைகளைக் கண்டு பாவிப்போமாகில் இவ்வுலகிலேயே, இவ்வாழ்நாளிலேயே நாம் சந்தோசத்தைக் கண்டடைவோம் .

தற்கால சமூக பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டுமேயாகில் நாசரேத்தூர் வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றார் 13 ஆம் சிங்கராயர் . திருக்குடும்பம் வருவாயைப் பெருக்கத் தேடவில்லை . ஏனெனில் அவர்கள் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கத் தேடவில்லை . தங்கள் தேவையைக் குறைத்துக் கொண்டனர். காலை முதல் மாலை வரை கஷ்டப்பட்டு உழைத்தனர் . நசரேத்தூரை கவனித்துப் பார்த்தால், இத்தொழில் அத்தொழில் நலமென்று சிந்தித்து கைகட்டி வேலையில்லாத திண்டாட்டத்தை மனிதர் பெருக்க மாட்டார்கள் . எத்தகைய வாழ்க்கை எனக்கு ஏற்றது என்று அலையாமல் கடவுள் எனக்கு வகுத்த வழி என்ன என்று அறிய ஆசிப்பார்கள் . உணவு, உடை , உறைவிடம் முதலானவைகளில்  'போதுமென்ற மனதே பொன் செய்யும் மருந்து " என்று எண்ணி திருப்திப்பட்டுக் கொள்வார்கள் . நாசரேத்தை நாடிப் போக வேண்டும் .

இயேசுவின் பகிரங்க வாழ்க்கையை விட்டுவிட்டு அவரது மறைந்த வாழ்க்கையிலிருந்து பாடுகளின் வாழ்க்கையை காண செபமாலை நம்மை அழைத்துச் செல்கிறது . எனினும் பகிரங்க வாழ்க்கையின் முதலும் முடிவும் தானே பாடுகள் . பகிரங்க வாழ்க்கையின் சுருக்கம் " அவர் நன்மை செய்து கொண்டே போனார் " . நமக்காக உயிரைக் கொடுத்த அவரது மரணம் , அவரது நன்மைத் தனத்தின் மணிமுடி அன்றோ ? இவ்வுலகில் நாம் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவைகள் துக்க தேவ இரகசியங்கள் . ஆண்டவர் நமக்கு அனுப்பும் துன்பங்களையும் ஆண்டவருடைய சம்மதத்தால் நமக்கு வரும் சிறுமை , சில்லறை வருத்தம் , வாதனைகளையும் பொறுமையாய் ஏற்றுக் கொண்டு அவருடைய வாதனைகளோடு அவைகளை ஒன்றித்து மனுக்குலத்தின் ஈடேற்றத்துக்காக ஒப்புக் கொடுப்போமாக . இதில் நமக்கு எவ்வளவு மகிமை ! துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்பதால் இவைகளைத் தாங்க நமக்குத் தைரியம் வரும்

துக்கத் தேவ இரகசியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் மேலான பாடம் நமக்கு ஒன்று உண்டு . ஏசுநாதர் வேதனையைத் தெரிந்து கொண்டவர் . ஆதலால் வாதனைப்படுவோர் , துக்கப்படுவோர்களில் நாம் அவரைக் கனப்படுத்த வேண்டும் . அவரது ஞான சரீரத்தில் அவர் இன்னும் வாதனைப்படுகிறார் . நாம் ஞான சரீரத்தின் அங்கமானபடியால் நாம் வாதனைப்பட வேண்டும் . " சவுலே , சவுலே , ஏன் என்னை வதைக்கிறாய் ?" " ஆண்டவரே , நீர் யார் ?" " நீ வதைக்கும் இயேசு நான் தான் "  நாள் கணக்காய் ஆண்டுக்கணக்காய் இதை அலசி ஆராய்ந்து பார்த்து , சேசுவின் ஞான சரீரத்தின் சத்தியத்தின் நன்மையைக் கோருகிறவன் நாசரேத்தில் துவங்கி கல்வாரியிலே ஏற வேண்டும் . சமூக சேவை தேவ அன்பை ஊட்டி வளர்க்கும் . இது கை மேல் கண்ட பலன் . மறு உலகத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லை.

இவ்வுலகிலேயே நம் மேல் வெற்றி கொள்ள வேண்டுமென்று மகிமைத் தேவ இரகசியங்கள் நமக்கு கற்பிக்கின்றன . " கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்திருந்தால் மேலுள்ள காரியங்களைத் தேடுங்கள்  அங்கு இறைவனின் வலது பக்கத்தில் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் "

இயேசுவின் உத்தானத்தின் மகிமையை உலகில் பரப்ப நாம் பிரயாசைப்பட வேண்டும் . மற்ற மக்களும் இதில் பங்கடைய உழைக்க வேண்டும் . நாம் இயேசுவைத் தேட வேண்டும் . மோட்ச பாதை அவர் . மோட்ச பாதையை நாம் தேட வேண்டும் . ஆகிலும் தினந்தோறும் இவ்வுலக பாதையில் நாம் நடக்க வேண்டியவர்கள் . இப்பாதையில் அருளும் , அயரா ஊக்கமும் நமக்குத் தேவை . செபமாலை சொல்வதனால் தேவ தாய் நடந்த பாதையில் நாமும் நடந்து சந்தோஷிப்போம், துக்கிப்போம் , வெற்றி கண்டு மகிழ்வோம் .

இயேசு போதித்தார் , புதுமைகளைச் செய்தார் , நற்கருணையை ஸ்தாபித்தார் என்ற இயேசுவின் மறைப்பணியை எடுத்தியம்புகின்றன இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் . இப்பணிக்கு இயேசு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அருளப்பரிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்று , தனது முதற் புதுமையைக் கானாவூரில் செய்து மலைப்பொழிவின் மூலம் தன் போதனையின் சுருக்கத்தை தந்து , தனது தெய்வீகத்தை தாபோர் மலையில் வெளிப்படுத்தி , நற்கருணையின் மூலம் உலகம் முடிவு மட்டும் நம்மோடும் இருப்பதாக நமக்கு இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன

சரிதை.

ஜான் ஆமத் என்னும் சாமிநாதர் சபைத் துறவி ஸ்பெயின் தேசத்தில் ஓராண்டு தபசுகாலப் பிரசங்கங்கள் செய்துக் களைப்பாயிருந்தார். அப்போது பேய் பிடித்த ஒரு சிறுமியை அவரிடம் கொண்டு வந்தார்கள் . பற்பல பேயோட்டும் சடங்கைச் செய்தும் பயன் இல்லாததைக் கண்டு , தன் செபமாலையை எடுத்து அக்குழந்தையின் கழுத்தில் போட்டார் . உடனே " அதை எடுத்து விடுங்கள் . அதை அகற்றுங்கள் ; செபமாலை என்னை வாதிக்கிறது " என்று அக்குழந்தை அலறினாள் . வீணாக இறங்கிக் குருவானவர் செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் இருந்து நீக்கி விட்டார். அடுத்த இரவு அக்குருவானவர் படுத்திருந்த போது குழந்தையைப் பிடித்திருந்த பேய்கள் ஆறாக் கோபத்தால் சீறி விழுந்து அவரைக் கொல்ல வந்தன . அவர் தன் கையால் செபமாலையை இறுக்கிப் பிடித்திருந்தார் . அப்பேய்கள் என்ன பிரயாசைப்பட்டும் அதைப் பறிக்க அவைகளால் இயலவில்லை . அதைக்கொண்டு அவைகளை நன்றாய் அடித்து , " பரிசுத்த மாமரியே , பரிசுத்த செபமாலையின் மாதாவே , என் உதவிக்கு வாரும் " என்று கூறி அவைகளை விரட்டி விட்டார்

மறுநாள் குருவானவர் கோயிலுக்குப் போனபோது மறுபடியும் அக்குழந்தையைக் கண்டார் . பேய்கள் அவளை விட்டு இன்னும் போகவில்லை . ஒரு பேய் சிரிக்கத் தொடங்கி தமாஷாய்க் கேட்டது, " சகோதரரே , நேற்றிரவு செபமாலை இல்லாமல் இருந்திருப்பீரேயாகில் உம்மை தொலைத்திருப்போம் " . பக்தியுள்ள அக்குருவானவர் உடனே செபமாலையைக் குழந்தையின் கழுத்தில் போட்டுச் சொன்னார் : " இச்சிறுமியின் உடலை விட்டு ஓடும்படி இயேசுவின் திருநாமத்தைக் கொண்டும் , அவருடைய திருத்தாயாரான மரியின் நாமத்தைக் கொண்டும் , மகா பரிசுத்த செபமாலையின் வல்லமையைக் கொண்டும் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன் " அப்பேய்கள் பயந்து அண்டு ஓடிவிட்டன

16 ஆம் நூற்றாண்டில் அர்ச். சவேரியார் தமிழ்நாட்டில் போதித்துக்கொண்டிருக்கும் போது பற்பல சமயத்தில் மக்கள் வந்து தங்கள் வீட்டில் பேய் பிடித்தவர்கள் கத்துகிறார்கள் , வருந்துகிறார்கள் என்பர் . சவேரியார் ஞானோபதேசம் கற்றுக்கொடுக்கும் அலுவலை நிறுத்தாமல் தன் செபமாலையை எடுத்து ஒரு குழந்தையின் கையில் கொடுத்து பேய் பிடித்தவள் மேல் கொண்டு வைத்து வரும்படி சொல்லுவார் . செபமாலை உடலில் பட்டவுடனே பேய்கள் உருண்டடித்துதோடி விடும் . பற்பல சமயங்களில் இது நடந்தது.

செபம்.

செபமாலை இராக்கினியே ! இரக்கமுள்ள தாயே ! நரகத்தின் வேதனையை நீர் எங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய அவசியம் விசனத்துக்குரியது . பாத்திமா சிறுவர்களுக்கு நீர் காட்டிய நரகத்தின் காட்சி , எங்களுக்காகவே காட்டினீர். எங்கள் உள்ளத்தில் உயிருள்ள விசுவாசத்தை எழுப்பி  , நரகத்தின் பயங்கரமான சத்தியத்தை உணரும்படிச் செய்தருளும் . நித்திய ஆக்கினையைக் கொடுக்கும் நீதித் தீர்வையிலிருந்து எங்களை இரட்சியும் . பாவத்தின் தோஷம் நரகத்தில் முடியும் என்று வேதாகமம் எங்களுக்குக் கற்பிக்கிறது . ஏக திரித்துவமாகிய கடவுள் அளவில்லாத நீதியுள்ளவரென்று நான் விசுவசிக்கிறேன் . இயேசுவின் உதவியைக் கொண்டு இவ்வுலகில் நேர்மையாய் வாழ்ந்து பரகதியில் பாக்கியமாய் வாழும் கிருபையை இயேசுவின் திரு இருதயம் எனக்கு அளிப்பதாக . இக்கிருபையை என்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் கேட்கிறேன் . செபமாலை இராக்கினியே பாத்திமா மாதாவே என்மேல் இரங்கியருளும்.

ஆமென்.