மண்ணா அல்ல நம் மன்னன்
பழைய வேத முறைமைகளில் (பழைய ஏற்பாடு காலத்தில்) வெகு ஆடம்பரமான உந்நத சடங்குகளிலிருந்தன. அவை யாவும் புது முறைமையச் சேர்ந்த பரம இரகசியங்களுக்கு (திவ்ய திருப்பலி மற்றும் திவ்ய நற்கருணை) சொற்ப நிழலைப் போலிருந்தனவே தவிர மற்றபடியல்ல. உடன்படிக்கைப் பெட்டியை ஜெருசலேமுக்குக் கொண்டு வந்தபோது தாவீதரசர் பெரியதோர் திருவிழா கொண்டாடினார். ஆனால் அந்தப்பெட்டியில் ஒன்றிமிருக்கவில்லை. அதாவது உ;லக இரட்சகர் அதில் இருக்கவில்லை. சாலமோன் ஒரு சிறந்த ஆலயத்தைக் கட்டினார். ஆச்சரிய வணக்கம் நிறைந்த ஜனங்களுக்கு முன்பாக வெகு ஆடம்பரத்தோடு அதில் அபிஷேகம் நடத்தினார். ஆயிரமாயிரமான பலிகளை ஒப்புக்கொடுத்தார். ஆயினும் அந்தப் பலிகள் எல்லாம் என்ன? வெறும் மிருகங்கள். அவைகளின் இரத்தம் தேவனுடைய நீதிக்குப் பரிகாரம் செய்ய வல்லதோ?
உலகம் தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்டிருந்த இரட்சகருக்கு ஆவலோடு காத்திருந்தது. பிதாப்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் நெருங்கி வந்தது. அப்பொழுது இதோ மனுமக்களால் ஆசீர்வதிக்கப்பட்டவரும், வல்லபரும் உடன்படிக்கையின் தூதரும் ‘ யாவே ’ எனும் பெயர் கொண்டவருமானவர், இதோ நமது ஆலயத்திற்குள்ளாக பிரவேசிக்கிறார். உவமையாக மாத்திரமிருந்த பலிகளுக்கு பதிலாக மெய்யான பரிகாரப்பலி நடக்கிறது. தேவ நற்கருணைப் பெட்டிக்குள் திரையால் மூடப்பட்டு என்றும் உயிருள்ள அப்பம் வீற்றிருக்கிறது. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுவரனுடைய செம்மறிப் புருவையும், “ நித்திய பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறவருமானவர் “ இந்தப்பெட்டிக்குள் இருக்கிறார். நம் எல்லோரையும் அன்போடு அழைத்து,
“ இதை எடுத்துப் புசியுங்கள். இது என் சரீரமாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் இரத்தம். ஓ ! என் சிநேகிதரே ! பானம் செய்யுங்கள்; சந்தோசப் பரவசம் கொள்ளுங்கள்; எனக்கு மிகவும் பிரியமானவர்களே ! தாகமாய் இருக்கிற நீங்கள் நித்திய ஜீவியத்தினின்று ஓடிவரும் தண்ணீரின் ஊற்றண்டையில் வந்து சேருங்கள் “ என்றார்.
இந்தப் பரிசுத்த ஊற்றில் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ள மனமில்லாதவர்கள் வேறிடங்கள் ( பிரிவினை சபைகள் ) சென்று “ உதவாத தண்ணீரைப் பானம் செய்கிறார்கள் “. சர்வேசுவரன் தூக்க மயக்கத்தைக் கொடுக்கும் பானத்தை அவர்கள் பானம் (குடிக்கும்படி) செய்யும்படி விட்டுவிடுகிறார். அவர்கள் கண்கள் மூடிப்போகின்றன. இந்த நித்திரையுள் நாங்கள் பசியாயிருந்து போஜனம் செய்ததாக அவர்களுக்கு தோற்றமுண்டாகின்றது.; அவர்கள் விழிக்கின்றபோது தங்கள் ஆத்துமத்தில் ஒன்றையும் காணமாட்டார்கள்.. தாகமாயிருந்து தாங்கள் பானம் செய்கிறதாக கனவு காண்பார்கள்; ஆயினும் தங்கள் களைப்பினால் வருந்தி விழிக்கிறார்கள், இன்னும் தாகம் தனியவில்லை. அவர்களுடைய ஆத்துமத்தில் ஒன்றையும் காணோம்.
“ நம்மிடம் வாருங்கள் நாம் ஜீவியத்தின் அப்பமாயிருக்கிறோம்.; நம்மையண்டி வருகிறவன் ஒருபோதும் பசியாயிருக்க மாட்டான். நமது மாமிசத்தைப் புசித்து, நமது இரத்தத்தைப் பானம் செய்கிறவன் நித்திய ஜீவியமடைவான். நாம் கடைசி நாளில் அவனை விடுவிப்போம்”.
“ ஆண்டவரே ! நான் உம்மை நம்புகிறேன், உம்மை ஆராதிக்கிறேன், என் ஆத்துமம் ஆசையின் மிகுதியினால் உம்மை நோக்கித் தாவுகின்றது. ஆனால் பெருத்த பயங்கரம் என்னை தடுத்துப்போடுகின்றது. ஏனெனில் என் சர்வேசுவரனிடத்தில் அண்டிப்போக நான் யார்?. என் பாவங்களையும், என் நீசத்தனத்தையும், என் பெரிய நிர்பாக்கியத்தையும் நான் பார்க்கும் போது “என்னை விட்டு அகன்று போய்விடும்” என்று சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன்.
ஆயினும், நல்ல சேசுவே ! புண்ணியவான்களை அல்ல பாவிகளைத்தானே நீர் அழைக்க வந்தீர். ஆனதால் மனஸ்தாபப்பட்டு என் மார்பில் தட்டிக்கொண்டு உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடி “ எழுந்திருப்பேன் என் தந்தையை நோக்கி போவேன் “ உயிருள்ள விசுவாசத்தோடும், உருக்கமான நேசத்தோடும், சுதனை நோக்கிப் போவேன். நித்திய வார்த்தையும், சர்வேசுவருடைய மகிமையின் ஒளியும், என் பாவங்களிலிருந்து என்னைச் சுத்திகரிக்கின்ற இரட்சகரும், சிருஷ்டியை தம்மட்டும் உயர்த்துவதற்காக அதனுடன் ஒரே சரீரமாயிருக்கிறவருமாகிய சேசுவை அண்டிப்போவேன். போய் அவரை நோக்கி :
“ ஆண்டவரே ! நீர் என் உள்ளத்தில் வர நான் தகுதியுடையவனல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்வீரானால், என் ஆத்துமம் ஆரோக்கியமடையும் “ என்று கூறுவேன்.
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
சிந்தனை : பழைய உடன்படிக்கைப்பேழையினுள் ஆரோனின் கோல், மன்னா, பத்துக்கட்டளைகள் அடங்கிய மரப்பலகை மட்டும் தானே இருந்தது. அதில் ஆண்டவர் இல்லை. திவ்ய நற்கருணை ஆண்டவர் இல்லை. ஆனால் ஆண்டவருடைய அருள் இருந்தது. ஆனடவருடைய அருள் இருந்த உடன்படிக்கைப் பேழைக்கே தாவீதரசரும், சால மோனும் எத்தகைய புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்து எத்தனை நாட்கள் பரிசுத்தம் அனுசரித்து விழாக் கொண்டாடினார்கள்..
ஆனால் பழைய உடன்படிக்கைப் பேழையில் இருந்த பக்திபொருட்களை விட பல ஆயிரம் மடங்கு அல்ல அதற்கும் மேல் ஒப்பிடப்படவே முடியாத நம் ஆண்டவரே திவ்ய நற்கருணையாக நம் உள்ளத்தில் வருகிறார். இப்போது நம் உள்ளம்தான் உடன்படிக்கைப்பேழை.. நாம் ஆண்டவரை எப்படி ஆராதிக்கிறோம்… தாவீதரசைப்போலா… அல்லது சாலமோனைப்போலா…
1. அரை நொடியில் ஒரு பிதா சுதன் போட்டுவிட்டு அமர்வோரும் உண்டு
2. கரங்களைக் குவித்து அரை நிமிசம் கண்களை மூடிவிட்டு எழுந்து உட்கார்ந்து அடுத்தவற்றை கவனிக்க ஆரம்பிப்போரும் உண்டு..
3. தகுந்த தயாரிப்பின்றி பக்தியற்ற முறையில் ஏதோ ஒரு சடங்காக ஒரு வழக்கமாக பார்மாலிட்டிக்காக ஆண்டவரை வாங்குவோரும் உண்டு..
4. ஆண்டவரை வாங்கிவிட்டு ஏதோ ஒரு முக்கியமான வேலை இருக்கிறது ( ஆண்டவரை விடவா..) என்று சொல்லி உடனே ஆலயத்தை விட்டு வெளியே செல்பவர்களும் உண்டு..
5. பாவத்தோடு ஆண்டவரை வாங்குவோரும் உண்டு…
ஆண்டவர் இல்லாத உடன்படிக்கைப்பேழைக்கு அளவு கடந்து மரியாதை செய்த தாவீதரசர் எங்கே? ஆண்டவரே வந்தாலும் அசட்டையாக ஆண்டவரை வாங்கும் நாம் எங்கே ?
(தாவீதரசர் செய்ததைப் போல சிலர் நற்கருணை ஆண்டவர் முன் நடனமாடத் துணிகிறார்கள். இது செய்யத்தகாத செயல். அது தேவையும் இல்லை. மவுனமாக பக்தியாக ஆராதிக்கப்பட வேண்டியவர் நம் நற்கருணை ஆண்டவர். தாவீதரசர் உடன்படிக்கைப்பேழைக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கே அவர் உதாரணமாக வருகிறார். நடனமாடிய தாவீது மறு நாளே பாவத்தில் விழுந்தது அனைவருக்கும் தெறிந்த ஒன்று)
பரலோக சம்மனசுகளும், பரலோக அத்தனைப் புனிதர்களும் (மாதா உட்பட) சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரை தகுந்த தயாரிப்போடு பாவமின்றி முழங்காலில் நின்று நாவில் பெற்று, நம்மிடம் வந்த ஆண்டவரிடம் ஒரு பத்து நிமிடமாவது செலவழிப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !